Home Blog

கார் கண்ணாடி உடைப்பு:   இந்து முன்னணியினரின் கர சேவை !?

கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி நகர இளைஞரணி பொறுப்பாளராக உள்ள ஹரிஷ் -ன் கார் கண்ணாடியை நேற்று நள்ளிரவு ‘மர்ம நபர்கள்’ உடைத்து விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் ஓடோடி வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கண்ணாடியை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால் இந்த சம்பவம் நடந்து இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். இந்து முன்னணியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் தன்னுடன் ஹரிஹரன் என்பவரை அழைத்துக் கொண்டு வந்து கார் கண்ணாடியை உடைத்துள்ளது வெளியில் தெரிய வந்து அம்பலப்பட்டு நாறிப் போய் உள்ளது.

தன்னுடைய இந்து முன்னணியில் உள்ள ஷரிஸ் -ன் கார் கண்ணாடியை ஏன் தமிழ்ச்செல்வன் உடைத்தார்? விநாயகர் சதுர்த்திக்கு யார் சிலை வைப்பது? என்பதில் ஹரிசுக்கும் தமிழ்செல்வனுக்கும் இடையில் போட்டி இருந்துள்ளது. இந்த போட்டியில் ஹரிஷ் வென்று சிலையை வைத்துள்ளார்; ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமான தமிழ்ச்செல்வன் கார் கண்ணாடியை போட்டு உடைத்துள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.

இதையும் படியுங்கள்: பாஜகவினரின் கலவர முயற்சியை முறியடித்த மக்கள்!

இதைப் பார்க்கும் பொழுது சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

கார் கண்ணாடியை உடைப்பதன் மூலம் கலவரத்தை தூண்ட முயற்சி செய்தனரா ? இதை மறைப்பதற்காக சிலை வைப்பதில் ஏற்பட்ட ஆத்திரம் என்று திசை திருப்புகின்றனரா? அல்லது

சிலையை வைத்தால் வசூல் செய்து கல்லா கட்டலாம் என்ற ஆசையில் மண் விழுந்ததால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமா? அல்லது

சிலை வைத்தால் இந்து முன்னணியில் பதவியை பெற்று கல்லா கட்டலாம் என்ற ஆசையில் மண் விழுந்ததால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமா?

இதை கண்டுபிடிக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. தமிழக காவல்துறை என்ன செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது.

இந்தப் பிரச்சனையை ஊதி பெரிதாக்கி தங்களின் கட்சியை வளர்க்க ஆசைப்பட்ட சங்கிகளின் வாயில் மண்ணள்ளி போட்டது போல ஆகிவிட்டது .

மக்கள் விழிப்புடன் இருந்து சங்கிகளின் மக்கள் விரோத செயல்களை முறியடிக்க வேண்டும் என்பது காலத்தின் தேவை.

நாம் முறியடிப்போம்!

  • பாலன்

பெரு நரை பிசிராந்தையார் – புதியவன்

ண்டு சிலவாக முப்பதே வயதில்
முடியெல்லாம் நரைத்திருக்க காரணம் கேட்கிறீர்

வாழ்க்கைக்கு என்மீது காதல் இல்லை
கானல் நீர் அளவேனும் மோகம் இல்லை

விருப்போடு அணைக்க யாருமில்லை
மலைபாம்பாய் அணைக்கத்தான் வாழ்க்கை பாதை

மண் கூடாய் கட்டிய விருப்பக் கோட்டை
வெறுங் கனவுகள் உரசவே இடிந்த யாக்கை

மானுட வரலாற்றில் எம் இலட்சியக் கப்பல்
பந்த உறவுகள் பாறைகளால் சிதைந்த கப்பல்

செடிவிட்டு பிரிந்த மலரின் உயிர்போல்
என் தனித்துவம் கொன்றனர் விருப்ப மாக்கள்

கடல் நீந்தும் ஆமைபோல் தகுதி ஆற்றல்
வெறும் பிழைப்பிற்கு பண மலையில் தவளை தாவல்

மனம் ஒத்த காதலுடன் வானவில் பயணம்
சுயநலவெறி மனையாளுடன் சரிந்தேன் சடலம்

எல்லோர்க்கும் ஒளி செய்யும் சூரியன் நீதான்
உன்னை சான்றோராய் உயர்த்துவேன் செல்லப் பிள்ளை

பொருந்தாத மனையாள் வார்த்த வெறுப்பில்
தந்தையா நீ ச்ச்சீ என ஒதுக்கும் தாயின் பிள்ளை

நதிகளுக்கு ஆதாரம் வான் வியர்க்கும் அருவி
எம் அத்தனைக்கும் ஆதாரம் இலாபவெறி குருடி

உணவுக்கும் உயிருக்கும்
உழைப்புக்கும் மதிப்புக்கும்
மண்ணுக்கும் நீருக்கும்
மருந்துக்கும் கருத்துக்கும்
இருப்புக்கும் இறப்புக்கும்
பிழைப்புக்கும் வாழ்க்கைக்கும்
அரண் செய்யாத அரசு

நெற்றி விளக்கில்
இருட்டு முயலை
கண் கூசி வீழ்த்தும்
வேட்டுவ அரசு

வக்கின்றி பல நாடு பறக்கும் கேடி
ஆண் பெண் பேதத்தில் பீப்பீ ஊதி
மதம் சாதி வெறிகளில் பலூன்கள் ஊதி
அறியாமை வேள்வியில் மக்கள் பீதி

வீண் வார்த்தைகளில் வார்த்த லட்டு
வங்கி கணக்கில் பல இலட்சம்

இருட்டோடு உயர்ந்த வரி
கொலை செய்ய உயர்ந்த வலி
பொருள்கள் விலை உயர்ந்த கதி
அய்யோ! வாழ்க்கை முழுதும் லாப சதி

வாழ்வின் முழுமை
விசம் தோய்ந்த சூனியமெனில்
முப்பதே வயதில் தலை நரைக்க
வேறேது காரணம்

இலக்கியம் கலை அறிவியல்
எம் வனத்தில் வண்ணமிட்ட மலர்கள்
நம் வானில் விளக்கிடும் சுடர்கள்
வருங்காலம் உயர்ந்திட படிகள்
படி தாண்ட பலருண்டு
படிப்பார் யாருண்டு

ச்ச்சீ..
என்ன வாழ்க்கை செத்த வாழ்க்கை
இதிலும் உயிர்த்திருக்க காரணம் யாதெனில்?
உயிரெல்லாம் போற்றும் இயற்கை மீதும்
என்னை எட்டி உதைக்கும் உலகம் மீதும்
வருங்கால உலகின் நலன்கள் மீதும்
எம்மில் கோலமிடும் எண்ணங்களும்
எம்மால் தாளமிடும் செயல்களும்
தாய்மை உணர்வால் அவதியுறுவதால்
இன்னும் உயிர்த்திருக்கிறேன்

புதியவன்

ரணில்-ராஜபக்ச ஆட்சியின் அடக்குமுறைகளுக்கு முடிவு வேண்டும்! அமைப்பாக்கப்பட்ட வெகுஜன எழுச்சியே ஒரே மார்க்கம் பு.ஜ.மா.லெ.கட்சியின் அறிக்கை.

ரச வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் அடக்குமுறைச் சட்ட விதிகளைக் கொண்டுவந்து மக்களின் அமைதியான எதிர்ப்புகளைக் கொடூரமாக ஒடுக்கி வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினதும், ரணில்-ராஜபக்ச ஆட்சியினதும் ஃபாசிச முகங்கள் இன்று நாட்டு மக்களின் முன்னால் வெளிச்சமாகியுள்ளன. அதன் மூலம் அவர்களது ஜனநாயக முகமூடிகள் உடைந்து வீழ்ந்து வேடங்கள் கலைந்துள்ளன. காலிமுகத்திடல் போராட்டத்தைத் தொடர்ந்து இதுவரை மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் மாணவச் செயற்பாட்டாளர்கள் இருவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு ஃபாசிச வழிகளில் செயல்படுவது ரணில்-ராஜபக்சக்களுக்கு இதுதான் முதல்தடவை அல்ல. இவ்வாறு நாளாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் ஃபாசிச அடக்கு முறைகளையும் அவற்றுக்கான சட்டங்களையும் எமது கட்சி வன்மையாகக் கண்டித்து எதிர்த்து நிற்கின்றது. இப்பொழுது பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கர வாதத் தடைச் சட்டம் 1979ம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட மிக மோசமான ஒரு சட்டமாகும்.

இச் சட்டத்தை அன்று ரணில் விக்கிரமசிங்காவும் அமைச்சரவையில் இருந்து ஒப்புதல் அளித்தே அவரது மாமனாரான ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் கொண்டு வரப்பட்டதாகும். இக் கொடூரச் சட்டத்தினால் ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் சிறை சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டதுடன் கொல்லவும் பட்டனர்.

இக் கொடிய சட்டத்தின் கீழ் இன்றும் விடுவிக்கப்படாமல் நூற்றுக்கு உட்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு மேல் சிறைகளில் இருந்து வருகிறார்கள். தமிழர்களை மட்டுமன்றி முஸ்லிம்களையும், மலையக மக்களையும் இச்சட்டம் அவ்வப்போது கொடுமைப் படுத்திக் கொண்டது. எமது கட்சியும் இச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு எமது தோழர்கள் இரண்டு, மூன்று, ஆறு ஆண்டுகள் வரை சிறைகளில் வதைபட்டனர். அத்தகைய கொடூரச் சட்டமானது இப்போது சிங்கள மக்களுக்கும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராகத் திருப்பி விடப்பட்டுள்ளது.

இப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அதன் ஆரம்பத்திலிருந்தே எமது கட்சி கண்டித்து எதிர்த்து அதனை ரத்து செய்யக் கோரி மக்கள் இயக்கங்களை முன்னெடுத்து வந்துள்ளமை குறிப்பிட வேண்டியதாகும். எனவே சட்டத்தின் ஆட்சி எனக்கூறி குறுக்கு வழியாகவும் பணக் கட்டுகளைக் கொண்டும் ஆட்சி நடத்தி வரும் ரணில் – ராஜபக்ச ஆளும் வர்க்கமானது பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் வர்த்தமானி அறித்தல்கள் மூலமான சட்ட விதிகளையும் நடைமுறைப்படுத்தி கொடூரப் ஃபாசிச ஆட்சியாக முன்னெடுக்கப்படுகிறது. இத்தகைய தேசவிரோத, மக்கள் விரோத, தேசிய இனங்கள் விரோத ஆட்சியே கடந்த எழுபத்தைந்து வருடப் பாராளுமன்ற ஆட்சிமுறையாகவும் அதனிடையேயான நாற்பத்திநான்கு வருடகால சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையாகவும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

அதற்கான அரசியல் அமைப்பானது முழு நாட்டையும் அனைத்து மக்களையும் நாசகாரப் பாதையிலேயே வழிநடாத்தி வந்துள்ளன. தேசப்பற்று, இனப்பற்று, மத விசுவாசம் எனக் கூவிக் கொண்டே ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த ஆளும் வர்க்கச் சிங்கள பௌத்த பேரினவாத மேட்டுக் குடிச் சக்திகள் நாட்டை நாசப்படுத்தி வந்துள்ளனர். இன,மொழி, மதப் பிரதேசப் பிளவுகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றிப் பெறப்பட்ட வாக்குகள் மூலம் ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருந்து வந்துள்ளனர்.

இதனையே சுதந்திரம், ஜனநாயகம், வாக்களிக்கும் உரிமை , சட்ட ஆட்சி எனப் பரப்புரை செய்தும் கொண்டனர். இவற்றின் மூலம் நாட்டின் ஏகப் பெரும்பான்மை மக்களான உழைக்கும் மக்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. இன்று உழைக்கும் மக்கள் ஒரு நேரச் சாப்பாட்டிற்கே வழி இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு யார் காரணம் என்பதை மக்கள் பட்டறிவின் மூலம் புரிந்து வருகிறார்கள். ஆனால் கடந்த காலத்தில் சுரண்டலாலும் குறுக்கு வழிகளாலும் அதிகார துஷ்ப்பிரயோகம் ஊழல் முறைகேடுகளாலும் பெரும் சொத்துச் சேகரித்து லட்சாதிபதிகளாக, கோடீஸ்வரர்களாக,வெளிநாடுகளில் முதலீடு செய்வோராக இருந்து வருவது மட்டுமன்றி நாட்டின் தலை விதியைத் தீர்மானிக்கும் அரசியல் தலைவர்களாகவும் வாரிசு அரசியற் குடும்பங்களாகவும் இருந்து வருகிறார்கள் என்பதும் புரியப்பட்டே வருகிறது.

இவர்கள் நாட்டின் வளங்களைக் காலத்திற்குக் காலம் அந்நிய ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கும் பிராந்திய மேலாதிக்க வல்லரசுகளுக்கும் தாரை வார்த்துக் கொடுத்து அதன் மூலம் கோடிக் கணக்கில் தரகுப் பணம் பெற்று தங்களையும் தமது குடும்பங்களையும் வளப்படுத்திக் கொண்டார்கள்.

அதேவேளை ஆட்சி அதிகாரப் பிடியை இன்றுவரை இறுக்கி வைத்து அதிகாரத்தில் இருந்து வருபவர்களும் இவ் ஆளும் வர்க்க சக்திகளாகவே உள்ளனர். இவர்களது நாசகரமான நவதாராள பொருளாதாரக் கொள்கைகளின் ஒட்டுமொத்த எதிர்விளைவுகளையே நாட்டின் அனைத்து மக்களும் மோசமான அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டு நெருக்கடிகளாக அனுபவித்து வருகின்றனர். மக்களின் இத்தகைய நிலைக்கு அடிப்படையாக அமைந்த அரசியலமைப்பும் அதன் கீழான தேசவிரோத, மக்கள் விரோத, தேசிய இனங்கள் விரோத ஆட்சி முறைமைகளும் அவற்றின் பாதுகாவலர்களான ஆளும் வர்க்க சக்திகளும் தூக்கி வீசப்படவேண்டும்.

இதற்கு அனைத்து மக்களினதும் ஐக்கியப்பட்ட வேலைத்திட்டமும், அமைப்பாக்கப்பட்ட வெகுஜன எழுச்சிகளும் அவசியமாகும் என்பதையே எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு மேற்படி கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பி.எப்.ஐ தலைவர்களை விடுதலை செய்! – பத்திரிக்கைச் செய்தி

பத்திரிக்கைச் செய்தி

மனித உரிமை – மாநில உரிமையை பறிக்கும் என்.ஐ.ஏவை கலைத்திடு!
ஆள்தூக்கி ஊபா சட்டத்தை ரத்து செய்!
கைது செய்யப்பட்ட பி.எப்.ஐ தலைவர்களை விடுதலை செய்!

பி.எப்.ஐ அமைப்பின் மீது என்.ஐ.ஏ அமலாக்கத்துறை மூலம் நடத்தப்பட்ட ரெய்டு கைது நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் இதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்தியா முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள், தலைவர்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறையினர் சோதனை என்ற பெயரில் பாசிச நடவடிக்கையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. மொத்தம் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டு உடனடியாக டெல்லி அழைத்து செல்லப்பட்டனர். பாசிச பாஜக. ஒன்றிய அரசின் இந்த பாசிச செயலை எமது மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தனது கார்ப்பரேட் நலன் சார்ந்த மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்கும் சமூக செயற்பாட்டாளர்களையும், இந்து – இந்தி – இந்தியா என்ற பார்ப்பனப் பேரரசை நிறுவும் தனது திட்டத்திற்கு எதிராக உள்ளவர்களையும் ஒடுக்கவே தேசிய புலனாய்வு முகமை என்ற கொலைகார உளவு நிறுவனத்தை பயன்படுத்தி ஊபா சட்டத்தில் விசாரணையின்றி சிறையில் அடைத்து வருகிறது. ஆங்கிலேய ஆட்சியை விட மோசமான இந்த செயலை அனுமதிக்க கூடாது.

ஆர் எஸ் எஸ் – பாஜக பாசிச பயங்கரவாத கும்பல் இந்திய ஒன்றிய ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே சிறுபான்மை மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாற்றும் வேலையை செய்து வருவதுடன் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாய் இருக்கும் அனைத்துக் கட்சிகளையும் ஒடுக்க வேண்டும், ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற அடிப்படையிலே தற்போது என்.ஐ.ஏ ரெய்டுகளை நடத்தி வருகிறது.

இதன் மூலம் தனக்கு எதிரான நிலைப்பாடுகள் கொண்ட ஜனநாயக சக்திகளையும் புரட்சிகர அமைப்புகளையும் தடை செய்வது, மக்களை இந்த அமைப்புகளை நோக்கி நெருங்கிச் செல்ல விடாமல் அச்சுறுத்துவது என்ற நோக்கத்திற்காகவே SDPI மற்றும் PFI மீதான இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. சொல்லிக் கொள்ளப்படும் பெயரளவிலான ஜனநாயகத்தினையும் மறுத்து எதிர்க்கட்சிகளே இல்லாத பாசிச நடைமுறையை அமுலாக்கத்துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

இதற்கு எதிராக வினையாற்ற வில்லை எனில், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நடமாடுவதும், உயிர் வாழ்வதுமே ஆபத்து என்ற நிலையை நோக்கி நகரும்.

இன்று இஸ்லாமியர்கள் மீது தொடங்கியுள்ள இந்த பயங்கரவாத தாக்குதல்கள் அடுத்தடுத்து கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள், பழங்குடிகள் என்ற அனைவரின் மீதும் வரிசையாக பாயக் காத்திருக்கிறது. இதுதான் பாசிசத்தின் பயங்கரவாத முகம். சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்திற்கு கல்லறை! போராடுபவர்களின் மீது அடக்குமுறை என்பதுதான் அதன் தாரக மந்திரம். ஆகவே, ஏறித் தாக்கி வரும் கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என அறை கூவி அழைக்கிறோம்.

கடலூர், திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களில் வருகிற 28-9-2022 அன்று ஒன்றிய அரசை கண்டித்து பல்வேறு ஜனநாயக சக்திகளை இணைத்துக் கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம். அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறோம்.

தோழமையுடன்,

வழக்கறிஞர் சி.ராஜு
மாநிலப் பொதுச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

பெட்ரோல் குண்டு வீச்சுகள்; பிஜேபிக்கு சாதகமானதா? எதிரானதா?

கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், கன்னியாகுமரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன், இந்து மத வெறியர்களின் கடந்த கால வரலாறுகள் நினைவுக்கு வருகின்றன.

சங்கிகளின் கடந்த கால வரலாறு:

பிரச்சனைக்குரிய வகையில் பேசுவதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து, தமிழகத்தில் வளர  பாரதிய ஜனதா கட்சியினர் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே தமிழகத்தின் நிதி அமைச்சரின் மீது செருப்பை வீசியாவது தமிழக மக்களின் கவனத்தை கவர  சங்கிகள் முயன்றனர். ஆனால் அதிலும் மக்கள் மத்தியில் நாறிப்போயினர்.

நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் ஆபத்தில் உள்ளதாகவும், அவர்களை காப்பாற்ற ஆர் எஸ் எஸ் பிஜேபி போன்ற இந்து அமைப்புகள்  போராடிக் கொண்டிருப்பதாகவும் ஒரு பொய்யான  தோற்றத்தை ஏற்படுத்த எப்பொழுதும் முயன்று கொண்டே இருக்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் மாலேகான்:

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக   தாங்களே குண்டு வைத்து கலவரத்தை தூண்ட முயன்ற ( மாலேகான்) வரலாறு இவர்களுக்கு உண்டு. அது மட்டுமல்ல தமது ‘தொழிற் கூடங்களில்’    குண்டு தயாரித்தது குறித்தும்  இந்த நாடு அறியும்.

தமிழகத்தில்;    தென்காசி, கோவையில்,தனக்குத்தானே குண்டு வைத்துக் கொண்ட நிகழ்வுகள்:

தமிழகத்தில் 2008ல் இது போன்ற செயல்களில் ஈடுபட்ட, தென்காசி நகரில் ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் குண்டு வைத்து வெடிக்கச் செய்த சங்கிகள் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.


இதையும் படியுங்கள் : பாசிச ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.கவின் அடியாள் NIA வை கண்டித்து PFI தலைமையில் SDPI , மக்கள் அதிகாரம் இணைந்து ஆம்பூரில் சாலை மறியல்.


சமீபத்தில் , கோவையில் ராமநாதன் என்ற பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் ஒருவர் தனக்கு கட்சியில் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, கூலிப்படையை ஏவி, தனது வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசச் செய்து மாட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

ஆர் எஸ் எஸ்– பி ஜே பி  இந்து மத வெறியர்களின் பயங்கரவாத செயல்கள் அனைத்தையும் பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே செல்லும் என்பதால் ஒன்று இரண்டு சம்பவங்களை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

இதன் பின்னணியில் இருந்து பார்க்கும் பொழுது சங்கிகளே , ஆள் வைத்து,  தங்களுக்குச்  சொந்தமான இடங்களில்  பெட்ரோல் குண்டுகளை வீசியிருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்ற முடிவுக்கு தான் வர முடியும். ஒருவேளை இவர்களுக்கு எதிரானவர்கள் யாராவது இதை செய்திருந்தால், அதுவும் இந்து மத வெறியர்களின் நோக்கத்திற்கு சாதகமாகவே அமையும் என்பதுதான் உண்மை. தமிழக அரசு , இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள உண்மைக் குற்றவாளிகளை விரைந்து அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரும்பான்மை இந்து மக்கள் மத்தியில் பயத்தை விதைத்து அவர்களை தங்கள் பக்கம் அணிதிரட்டிக் கொள்ள வேண்டும் என்பதே ஆர் எஸ் எஸ் பிஜேபி  -யினரின் நோக்கம்.

தமிழகத்தை கலவர காடாக்கி, கால் ஊன்ற முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ் பிஜேபி யின் முயற்சியை முறியடிப்போம்.

பாலன்

பிழைப்புக்காக வளைகுடாவுக்கு செல்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் உண்டா?

ல்லை என்பதைத்தான் அங்கிருந்து வரும் பிணங்கள் முகத்தில் அறைந்து சொல்கின்றன. எனது மகனின், எனது கணவனின் “உடலையாவது கொண்டு வந்து கண்ணில் காட்டுங்கள்” என கதறுவதும் தொடர்கிறது!

துபாயில் ஒட்டகம் மேய்க்க ஏன் போகிறார்கள்?

முதலில் இந்த கேள்விக்கு நாம் பதில் தேட வேண்டும். பொதுவாக  நம்மூரில் பண்ணையார்கள் மிகப்பெரும் ஆட்டுப்பண்ணை மாட்டுப்பண்ணை வைத்து, பண்ணை அடிமைகளை வேலை வாங்கியது நமக்குத் தெரியும். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் இப்படி ஆடு மாடுகளை மேய்ப்பதும், மாட்டுத் தொழுவங்களை சுத்தம் செய்வதும், பால் கறந்து கொடுப்பதும் என கொத்தடிமையாக வேலை செய்து வந்தார்கள். அதன் நீட்சியாகத்தான  துபாயில் ஒட்டகம் மேய்க்கிறார்கள்.

நம்ம ஊர் பண்ணையார்களைப் போல அரபு ஷேக்குகளிடம் ஒட்டகங்கள் கூட்டம் கூட்டமாக உள்ளன. அவற்றை மேய்ப்பது சாதாரண வேலை அல்ல! அது குறித்து துபாய் சென்று கம்பெனியில் வேலை செய்து திரும்பிய எனது நண்பனின் அனுபவத்தை கேட்டேன்.

ஒரு முறை கம்பெனி வண்டியில்  சுற்றிப் பார்த்து வரலாம் என பாலைவனத்தின் நடுவே ,மாலை நேரத்தில் சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்த ஒரு தமிழன் இவர்களைப் பார்த்து ஓடி வந்து பேசி உள்ளான்.

ஒட்டகம் மேய்ப்பது எளிதானதா? அந்த இளைஞனிடம் அவன் பார்க்கும் வேலை குறித்து விசாரித்துள்ளனர். அதன் மூலம்தான் ஒட்டகம் மேய்ப்பது என்பது எவ்வளவு கொடுமையானது என்பது எனது நண்பனுக்கு உரைத்துள்ளது.


இதையும் படியுங்கள்: உரை வீச்சு : கூத்தாநல்லூர் முத்துக்குமார்  குவைத்தில் கொலை: நம் உயிர் உலகச்சந்தையின் கைகளிலா ?


பாலைவனத்தில் பகலில் கடும் வெயிலும், கடும் சூறாவளி காற்றுடன், கூட மணலை வாரி இறைத்த படி வீசும். அதே நேரம் இரவில் கடுமையான பனியுடன், குளிர் காற்றும் வீசும். இந்த தட்பவெப்ப நிலையில் பாலைவன மணற்பரப்பில் ஆங்காங்கே சிறு செடிகள் படர்ந்து பூத்திருக்கும். ஒட்டகங்கள் அதைத்தான் மேயும்.

அரபு ஷேக்குகள் தங்களது ஆட்கள் மூலம் தண்ணீர் லாரியை அனுப்புவார்கள். அது இவர்களைத் தேடிப் பிடித்து இவர்கள் வைத்துள்ள தோல் பையில் தண்ணீரை நிரப்பும். அதைத்தான் ஒட்டகங்களும் குடிக்கும், இவர்களும் குடிக்க வேண்டும். இப்படி திக்குத் தெரியாத பாலைவனத்தில் அலைந்து திரிந்து, பகலில் வெயிலில் கருகியும், இரவில் பனிக்காற்றில் குளிரால் உறைந்தும் அந்த இளைஞன் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்தான்.

உடலை முழுவதுமாக மறைத்துக் கொள்ள நம்மூர் சணல் சாக்கு போன்ற துணியை தந்துள்ளனர். மற்றபடி ஒட்டகத்துடன் அந்த இளைஞனும் திறந்த வெளியில் தான் படுத்துக் கொள்ள வேண்டும். கூடாரம் அமைக்க  உரிமை இல்லை. இப்படியே ஒரு நான்கு மாதம் போனால் அவன் பிணமாகத்தான் மாறுவான் என்பது எனது நண்பனுக்கு புரிந்துள்ளது.

இந்த வேலைக்கு எப்படி வந்தான்?

அவன் தனது கதையை கண்ணீர் விட்டு கதறியபடி சொல்லியுள்ளான். கட்டுமான வேலை என்று காண்ட்ராக்டர்கள், ஏஜென்சிகள் பொய் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். அரபு ஷேக்குகளோ ஒட்டகம் மேய்க்க வைத்துள்ளனர். நாங்கள் அந்த இளைஞன் மீண்டும் உயிருடன் தமிழகத்திற்கு திரும்ப உதவி செய்தோம் என தான் நேரில் கண்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அவருடன் நான் பேசியது 2010இல். அவர் வளைகுடாவுக்கு போனதோ 1995இல். ஆனால் இன்று வரை துபாய்க்கு வேலை தேடி போய் அரபு ஷேக்குகளிடம் அடிமைகளாக மாறி ஒரு கட்டத்தில் தப்பி ஓட முயற்சிக்கும் போது அல்லது அவர்கள் போட்ட உத்தரவுகளை, வேலைகளை செய்யாமல் மறுக்கும்போது ஈவிரக்கம் இல்லாமல் சித்திரவதை செய்து கொன்று வருவது இன்று வரை தொடர்கிறது.

எந்த தைரியத்தில் அரபு ஷேக்குகள் இதை செய்ய முடிகிறது?

இதையெல்லாம் தட்டிக் கேட்கும் துணிவு கொண்ட அல்லது பிழைப்பதற்காக வளைகுடாவுக்கு செல்லும் இளைஞர்கள் மீது அக்கறை கொண்ட அரசுகள் இந்தியாவில் இல்லை என்பது தான் வெளிப்படையான உண்மை!

56 இன்ச் மோடியும் இதை தடுப்பது இல்லையா?

இல்லவே இல்லை. பாசிஸ்ட் மோடிக்கு நம் நாட்டில் உள்ள உழைக்கும் மக்களை பிடிக்கிறதோ இல்லையோ வளைகுடாவின் அரபு ஷேக்குகளை, மன்னர்களை மிகவும் பிடிக்கிறது. நேரில் பார்க்கும் போது ஆரத்தழுவியும் கொள்கிறார்.

எதிர்வினை ஆற்றிய அரபு நாடுகள்... இனி பாஜக புள்ளிகளுக்கு வாய்ப்பூட்டு போடுமா மோடி அரசு?! | Article about Bjp cadres controversial statements and Arab countries reaction

நம் நாட்டிலேயே கார்ப்பரேட்டுகள் FTE , NEEM என்று புதிதாக டிப்ளமோ இன்ஜினியரிங் படித்தவர்களை வேலைக்கு எடுத்து லாபத்தை அள்ளுகிறார்கள்.இதற்காக அனுபவமற்ற இளைஞர்களை நேரடியாக எடுத்து உற்பத்தியில் ஈடுபடுத்தி கை கால்களை ஊனமாக்கி விரட்டுவதும், சிலர் எந்திரத்தில் சிக்கி உயிரையே விடுவதும் கூட நடக்கத்தானே செய்கிறது!

உள்ளூரிலேயே தனது குடிமக்களின் உயிரைப் பாதுகாக்க அக்கறை காட்டாத கேடுகெட்ட கார்ப்பரேட் பாசிஸ்டுகளிடம் நாம் கருணையை, மனிதாபிமானத்தை,  உயிர் வாழும் உரிமையை எதிர்பார்க்க முடியுமா? வளைகுடாவில் சிக்கி கொத்தடிமைகளாக உலர்ந்து வருபவர்களுக்கு என்றாவது விடியுமா?

வளைகுடாவில் இருக்கும் பண்ணையார்களான அரபு ஷேக்குகளால் நடக்கும் சித்திரவதைகள், படுகொலைகளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். அதேபோல் நம் நாட்டில் தொழில் தொடங்கி நம் இளைஞர்களையே ஊனமாக்கும், உயிர்பலி வாங்கும் கார்ப்பரேட்டுகளை தண்டிக்கவும் வேண்டும். இதற்கு நாம் முதலில் அதிகாரத்தில் உள்ள கார்ப்பரேட் பாசிஸ்ட்களை வீழ்த்தியாக வேண்டும்.

இளமாறன்

புதிய ஜனநாயகம் செப்டம்பர் மாத இதழில்….

புதிய ஜனநாயகம்

செப்டம்பர் மாதம்

தலையங்கம்

கவர்ச்சிவாத பேச்சினால் மக்களை ஏய்க்கும் பாசிஸ்டுகள்!
திரை கிழித்துக் காட்டுவோம்

சாவர்க்கரும்
ஆர்.எஸ்.எஸ்-சும்
–விடுதலைப் போராட்ட துரோக வரலாறு!

ஸ்டெர்லைட்: நீதி வேண்டுமா?
மக்கள் போராட்டங்களே தீர்வு!

எங்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்களே!
எமது உரிமையை ‘இலவசங்கள்’ என்று இழிவுபடுத்தாதே!

கொலையாளிகள் விடுதலை!
நிரபராதிகள் சிறைக்குள்!
இதுதான் “இராம ராஜ்ஜியம்”!

அதானியின் வேட்டைக் காடாகிறது தமிழகம்!

உலகை விழுங்கவும், நசுக்கவும் பரவும் பாசிசம்!
தீர்வு கம்யூனிசம் மட்டுமே!

அமெரிக்காவின் பதிலிப் போர் உத்தி!
ரஷ்யாவுக்கு உக்ரைன்; சீனாவுக்கு தைவான்!

விவசாயிகளுக்கு எழுதிக்கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்ற மறுக்கும் வெட்கங்கெட்ட மோடி அரசு!

“இந்தியக் கடற்படைக்குப் ‘பாரம்பரியத் தந்தை’ சத்ரபதி சிவாஜி” என்கிறார் மோடி. வரலாறு அல்ல, இது வரலாற்றுப் புரட்டு !

புதிய ஜனநாயகம்.
செப்டம்பர் மாத இதழ்.

படியுங்கள்!
பரப்புங்கள்!

ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை கொடும் கனவாக்கும் நீட் தேர்வு!

 மீபத்தில் நீட் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வழக்கம் போலவே இந்த ஆண்டும் விடைத்தாள்களிலும், மதிப்பெண் மற்றும் சதவீத கணக்குகளிலும் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்துள்ளன. இந்த நீட் தேர்வு கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு முறைகேடுகள் தொடர்வதும், புதிது புதிதாக மோசடிகள் அரங்கேறுவதும் நடந்து கொண்டுதான் உள்ளன.

 ஆள் மாறாட்டம், விடைத்தாள் திருத்துவதில் மோசடி, வினாத்தாள் பல லட்சங்களுக்கு முன்கூட்டியே விற்பனை, விடைத்தாளையே மாற்றுவது என பல்வேறு மோசடிகள் ஏற்கனவே அம்பலமாயின. சிபிஎஸ்சி கல்வி, கோச்சிங் சென்டரில் பல லட்சங்களை கொட்டிப் பயிற்சி, அதனோடு சேர்த்து இது போன்ற பல்வேறு முறைகேடுகள், மோசடிகளில் ஈடுபடும் பண முதலைகளுடன் சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் மோதி வெல்ல முடியுமா? நீட் வணிக வர்த்தகம் 2015 இல் 45 ஆயிரம் கோடியாக இருந்தது. இப்போது கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

 இந்த லட்சணத்தில்தான் அரசுப் பள்ளியிலும் நீட் தேர்வுக்கான பயிற்சியை நடத்த வேண்டும் என எடப்பாடி, அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகள், அறிவாளிகள் போல பேசுகின்றனர் – இந்த நீட் எனும் தேவை இல்லாத ஆணிக்காக! இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மருத்துவக்கல்லூரிகளைக் கொண்டிருக்கும் தமிழகம், நீட் தேர்வானது மாநில உரிமையைப் பறிக்கிறது என்பதால் எங்கள் மாநிலத்துக்கு  தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் பல மாணவர்களின் உயிரை பறித்து வரும் இத்தேர்வு வேண்டாம் என சட்டமன்றத்தில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், ஆளுநரும், ஒன்றிய அரசும் கள்ள மௌனம் காக்கின்றன(ர்).

 காசு உள்ளவனுக்கே மருத்துவக் கல்வி – நீட் எனும் நவீன தீண்டாமை!

 இந்த ஆண்டு இந்திய அளவில் முதலிடம் பிடித்த ஹரியானாவைச் சேர்ந்த மாணவி தனிஷ்கா, கடந்த இரண்டு ஆண்டுகளாக மூன்று வெவ்வேறு கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படித்துள்ளார். நீட் தேர்வு அறிமுகமானதிலிருந்தே அதில் அதிக மதிப்பெண்கள் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவது பெரும்பாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களும், லட்சங்களை செலவழித்து நீட் தேர்வுக்காக தனியார் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து படிப்பவர்களும்தான். 

 மெட்ரிக், ஸ்டேட் போர்டு, சிபிஎஸ்இ இப்படி வெவ்வேறு வகையான பாடத்திட்டங்கள் உள்ள நிலையில் அனைவருக்கும் பொதுவான ஒரே தேர்வு என்பது மாபெரும் மோசடி அல்லவா? இந்த மோசடிதான் ஏழு ஆண்டுகளாக அரங்கேறிக் கொண்டு உள்ளது அப்படிப் பணத்தைக் கொட்டிப் படிக்க முடியாதவர்களின் மருத்துவக் கனவுகளை பொசுக்குவதுதான் நீட் தேர்வின் தீய விளைவாக உள்ளது.

தகுதியானவர்களை மருத்துவர் ஆக்குவது தான் நீட் தேர்வின் நோக்கமா?

 நீட் தேர்வை புகுத்தும் போது அதை நியாயப்படுத்த பல்வேறு விஷயங்களை கூறினார்கள். அதில்  தனியார் கல்லூரிகளின் கொள்ளையை தடுப்பது மற்றும் தகுதி, திறமை வாய்ந்த மாணவர்களை மருத்துவர் ஆக்குவது என்பவைதான்  முக்கியமானவை. நன்கொடை என்ற பெயரில் வாங்கியதற்கு பதிலாக இப்போது கட்டணம் என்ற வகையிலேயே அதை ஈடுகட்டிக் கொள்கிறார்கள்.  மேலும் நீட் தேர்வில் ஜஸ்ட் பாஸ் செய்த மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள மறைமுக கொள்ளையும் நடக்கிறது.

 மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு, + 2 – வில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிலை முன்பு இருந்தது. இப்போது நீட் தேர்ச்சி மட்டும் போதும். நீட் தேர்வில் 720 க்கு 120 (20 % க்கும் குறைவான மதிப்பெண்) பெற்றிருந்தாலே தேர்ச்சி எனும் போது இதுதான் இவர்கள் சொல்லும் தகுதியா?  மாபெரும் பித்தலாட்டம்தானே இது.

 தேர்வெழுத வருபவர்கள் தீவிரவாதிகளா?

 உலகில் வேறு எங்கும் நடக்காத கொடுமையாக நீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளிடம் – அதிலும் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் – மெட்டல் டிடக்டரை வைத்து தலை முதல் பாதம் வரை தீவிரவாதிகளை சோதனையிடுவது போல சோதிப்பதும், முழுக்கை சட்டையை வெட்டி எறிவதும், பெண்கள் கழுத்தில் அணிந்து வரும் நகைகளை (தாலி உட்பட) கழட்டச் சொல்வதும், தலை முடியை பிரித்து மேய்வதும், உச்சபட்ச கொடுமையாக உள்ளாடையை கூட உருவி சோதனை நடத்துவதும் என மாணவர்களுக்கு பல்வேறு வகையில் மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள். இப்படி எல்லாம் தேர்வை கெடுபிடியாக நடத்திவிட்டு விடைத்தாள்களில் பல்வேறு பித்தலாட்டங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 இந்த ஆண்டு தேர்வெழுதிய சென்னையை சேர்ந்த பவமிர்தினி எனும் மாணவி “எனக்கு 600 க்கு மேல் வர வேண்டும். ஆனால் 132 மதிப்பெண்தான் வந்துள்ளது. நான் 13 கேள்விகளுக்குதான் விடையளிக்கவில்லை. ஆனால் எனக்கு வந்துள்ள இந்த விடைத்தாளில் 60 கேள்விகள் விடை அளிக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த விடைத்தாள் என்னுடையதே அல்ல” என்று குற்றம் சாட்டுகிறார்.

 மதுரையைச் சேர்ந்த ஜெயசித்ரா “நான் வினாக் குறிப்புகளின் அடிப்படையில் 500 மதிப்பெண்களுக்கு மேல் எதிர்பார்த்தேன். ஆனால் 114 மதிப்பெண்கள்தான் வந்துள்ளது. 48% எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படி என்றால் கூட எனக்கு 300 மார்க்குக்கு மேலாவது வந்திருக்க வேண்டும்” என்று இதற்காக அவர் வழக்கு தொடர்ந்ததில் டெல்லி சென்று நேரடியாக விடைத்தாளை பார்க்க, அதை சோதிக்க அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது நீதிமன்றம்.

 நீட் தேர்வு 2022 முடிவுகள் – பல்வேறு அதிர்ச்சிகள்!

 இந்த ஆண்டு நீட் தேர்வை 18.72 லட்சம் பேர் எழுதினர். இதில் தேர்வானவர்கள் 9,93,069. தேர்வான சுமார் பத்து லட்சம் பேரில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ( OBC) 74,458 பேர் ( 10%  கூட இல்லை) SC பிரிவில் 26,087 பேர். ST பிரிவில் 10,565. மீதி உள்ள 8,81,402 ( கிட்டத்தட்ட 90 %) பேர் முற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் மொத்தம் 67 மருத்துவ கல்லூரிகளையும் 9023 மருத்துவ இடங்களையும் கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் தேர்ச்சி பெற்றோர்  1,17, 316 பேர். அதே வேளையில் 70 மருத்துவ கல்லூரிகளையும் 10,725 மருத்துவ இடங்களையும் கொண்டுள்ள தமிழகத்தில் தேர்ச்சி பெற்றோர் வெறும் 67,787 பேர்தான். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் வெறும் 4005 இடங்களை மட்டுமே கொண்டுள்ள ராஜஸ்தானில் 82,548 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் போது இந்த தேர்வு முடிவுகளிலும் ஏராளமான குளறுபடிகள், பித்தலாட்டங்கள் பிராடுத்தனங்கள் நடந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆக பணம் படைத்தவர்களும், முற்பட்ட சாதிப் பிரிவினரும் மட்டுமே பயன்பெறும் வகையில் தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

 முன்பெல்லாம் மருத்துவ மேல் படிப்பு (PG) சேர்க்கைக்கு, கிராமப்புறங்களில் பணிபுரிந்தால் சிறப்பு மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வு முறை வந்த பிறகு பயிற்சி நிறுவனங்களில் பணத்தைக் கொட்டிப் படித்து தேர்வில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலை உருவாகி உள்ளது. இனி கிராமப்புறப் பணிக்கு யார் செல்வார்கள்? ஆக இந்த நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ கனவை மட்டுமல்ல ஒட்டுமொத்த மருத்துவ துறையையுமே சீர்குலைக்கும் வேலையைத்தான் செய்து கொண்டுள்ளது. வெகு மக்களின் போராட்டங்கள் மூலம் மட்டுமே இந்த நீட் எனும் கொடுமையை வேரறுக்க முடியும்!

 ஆக்கம்: குரு

அக்டோபர் 2 ஆம் நாள் தமிழ்நாடெங்கும் சமூக நல்லிணக்கப் பேரணி! – தொல்.திருமாவளவன்

தமிழ்நாட்டைக் குறிவைக்கும் சனாதனப் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
சமய – சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்போம்!
அக்டோபர் 2 ஆம் நாள் தமிழ்நாடெங்கும் சமூக நல்லிணக்கப் பேரணி!

சனநாயக சக்திகளுக்கு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அழைப்பு!

000

சங்க காலம் முதல் ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ என்ற உலகளாவியப் பார்வையோடும், பரந்த மனப்பான்மையோடும் வாழ்ந்து செழித்த சமூகம் தமிழ்ச் சமூகமாகும். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வானளாவிய கோபுரங்கள் கொண்ட திருக்கோயில்கள் நிறைந்த இந்த மண்ணில்தான் சமணமும், பௌத்தமும் நீண்ட நெடுங்காலம் வேரோடித் தழைத்திருந்தன. சமயக் காழ்ப்பு இல்லாமல் அனைவரும் சேர்ந்து வாழும் அமைதியான வாழ்க்கைக்குச் சான்றாக திகழும் நிலம் தமிழ் நிலம் ஆகும்.

சமய சச்சரவுகளுக்கு இங்கே என்றும் இடம் இருந்ததில்லை. தமிழ்ச் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வரும் ஆன்மீகம் என்பது அனைத்து உயிர்களின்மீதும் அன்பு செலுத்துவது, உயர்வு தாழ்வு பார்க்காதது, தமர் – பிறர் எனப் பேதம் பாராட்டாதது. இப்படி அமைதியோடும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்துவரும் இந்த மண்ணில் அரசியல் உள்நோக்கத்தோடு சில பிரிவினைவாத சக்திகள் அண்மைக்காலமாக இந்தியாவின் வட மாநிலங்களில் இருப்பதைப் போல வன்முறையைத் தூண்டி, சாதி, மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் செய்ய முற்படுகின்றன.

வன்முறைக்கும், படுகொலைகளுக்கும் பெயர்போன சீர்குலைவு சக்திகள் தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்கப் பார்க்கின்றன. கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை காவிமயமாக்கிப் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயல்கின்றன.

இது தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுப்பது மட்டுமின்றி வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கான

சதித் திட்டமாகும். இந்தப் பிளவுவாத சக்திகளைத் தடுத்து நிறுத்தித் தமிழ்நாட்டைக் காக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

இன்றைய புதுமை வாய்ந்த ஊடக தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டு பொய்களைப் பரப்புகிற இந்தப் பிரிவினைவாதிகள் தமிழ்நாட்டை வெறுப்பின் விளைநிலமாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். அவர்களது வெறுப்புப் பரப்புரைக்கு எதிராக அன்பை, அமைதியை, நல்லிணக்கத்தை முன்னெடுப்போம்.

அண்ணல் காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2 ஆம் நாள், அன்பையும், அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தித் தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் விதமாகத் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சமூக நல்லிணக்கப் பேரணிகளை நடத்துவது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது. இந்தப் பேரணியில் கட்சி வேறுபாடு பார்க்காமல் சனநாயக சக்திகள அனைவரும் பங்கேற்று தமிழ்ச் சமூகத்தின் தனித்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்ட முன்வரும்படி அன்புடன் அழைக்கிறோம்.

இவண்:

தொல் திருமாவளவன்,
நிறுவனர் – தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

சமூக நல்லிணக்கப் பேரணி மக்கள் அதிகாரம் கலந்துக் கொள்ளும்! | பத்திரிக்கை செய்தி

பத்திரிக்கைச் செய்தி

25-9-2022

அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடத்த இருக்கும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு எதிராக சமூக நல்லிணக்கப் பேரணியை நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர். தொல் திருமாவளவன் அவர்கள் அறிவித்துள்ளார்.

தமிழக மக்கள் அனைவரும் ஆதரித்து பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன் மக்கள் அதிகாரம் அமைப்பு அக் -2 சமூக நல்லிணக்கப் பேரணியில் முழுமையாக ஆதரித்து பங்கேற்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் இதுநாள்வரை இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழர்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் மத நல்லிணக்க சூழலை சீர்குலைத்து மதக்கலவரங்களை திட்டமிட்டு நடத்தும் நோக்கில் ஆர் எஸ் எஸ் அமைப்பு வரும் அக்டோபர் இரண்டாம் தேதி தமிழக முழுவதும் 51 இடங்களில் நடத்த இருக்கும் ஊர்வலத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு இதற்கு எதிராக மேல் முறையீடு செய்து வழங்கபட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோருகிறோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற முறையில் இது போன்ற மதக்கலவரங்களை மத வன்முறைகளை தூண்டும் ஊர்வலங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.

தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் பாஜகவின் காவி பாசிச அரசியலை எதிர்த்து போராடுகின்ற அனைத்து அரசியல் இயக்கங்கள் ஜனநாயக அமைப்புகள் அனைவரும் தோழர் தொல். திருமாவளவன் அறிவித்த அக்டோபர் 2 மத நல்லிணக்க ஊர்வலத்தில் பெருமளவில் பங்கேற்று அதை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் திரு ஆ ராசா அவர்கள் இந்து மதவெறி சனாதன கருத்துக்களை அம்பலப்படுத்தி பேசியதற்கு எதிர் வினை என்கிற பெயரில் ஆர் எஸ் எஸ் இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் தமிழகம் முழுவதும் கலவரங்கள் செய்வது மட்டுமல்லாமல் ஆ.ராசாவிற்கு கொலை மிரட்டல் விடுக்கவும் செய்கின்றனர். இந்த பாசிச பயங்கரவாத கும்பலின் சட்ட விரோத கொலை மிரட்டலுக்கு உரிய நடவடிக்கைகள் எடுத்தால் அதை திசை திருப்பும் நோக்கில் கலவர செயல்களில் ஈடுபடுகின்றனர்.

கடந்த காலத்தில் கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் அவர்களே பெட்ரோல் குண்டுகளைத் தங்கள் வீடுகள் கடைகள் வாகனங்கள் மீது வீசி இஸ்லாமியர்கள் மீது பழிபோடும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டதை தமிழகம் நன்கு அறியும். இப்போதும் அதே வழியில் தமிழகத்தில் பாஜகவினர் தாக்கப்படுகிறார்கள் என்ற ஒரு பொய் கருத்தை பரப்புவதற்கு அவர்களே இத்தகைய இழிவான பெட்ரோல் குண்டுகள் வீசும் செயலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆகவே தமிழக காவல்துறையும் புலனாய்வுப் பிரிவு இத்தகைய பெட்ரோல் குண்டு வீச்சுகளின் பின்னணியில் இருக்கும் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தை வட இந்தியா போல் சாதி மத வெறி மூலம் கலவர பூமியாக்கி கால்பதிக்க ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கூட்டம் பல செயல்களை செய்து வருகிறது. அனைவரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும். அக்டோபர் 2 இது பெரியார் பிறந்த பூமி என்பதை நிருபிக்க ஆர்.எஸ்.எஸ் நடத்த ஊர்வலத்திற்கு எதிராக நடக்க உள்ள சமூக நல்லிணக்க ஊர்வலத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மக்கள் அதிகாரம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்

வழக்கறிஞர் சி.ராஜு
மாநிலப் பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம்