பாசிச பாஜக கடந்த 2020-ஆம் ஆண்டு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மற்றும் உத்திரபிரதேச விவசாயிகள் போராடினர். ஓராண்டை தாண்டி நீடித்த விவசாயிகளின் தீரமிக்க போராட்டத்தால் அச்சட்டங்களை பாசிச மோடி அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. விடாப்பிடியாக நடந்த வரலாற்று சிறப்புமிக்க அப்போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இன்னுயிர்களை ஈந்தனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்வதுடன் அரிசி, கோதுமை தவிர மேலும் 21 பயிர்களுக்கும் சட்டப்பூர்வமான (legally-binding MSP) குறைந்தபட்ச ஆதாரவிலை (Minimum Support Price) நிர்ணயிக்கவேண்டும் என்பதும் விவசாயிகளின் மிகமுக்கிய கோரிக்கையாக இருந்தது. போராட்டத்திற்கு அடிபணிந்த மோடி கும்பல் அப்போதைக்கு விவசாயிகளின் கோரிக்கைகளை விரைவிலேயே நிறைவேற்றித் தருவதாக உறுதிகூறியது. ஆனால் 3 ஆண்டுகள் கடந்த பின்னும் இத்துரோக கும்பல் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாததால் டெல்லி சலோ 2.0 போராட்டத்தை தொடங்கியுள்ளனர் விவசாயிகள்.
23 பயிர்களுக்கும் சட்டப்பூர்வமான குறைந்தபட்ச ஆதாரவிலை என்பது சாத்தியமில்லாத கோரிக்கை என்று சில வலதுசாரி பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு செய்வது விவசாயத்தை அழிவுக்கே தள்ளும் எனவும், பொருளாதார ரீதியில் அரசுக்கும் மிகப்பெரும் செலவு பிடிக்கும் என்று கூறியுள்ளனர். வேளாண் உற்பத்தி அதிகரிக்கும்போது அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையை விட சந்தைவிலை குறையும். அப்போது எந்த வியாபாரியும் சந்தை விலையைவிட அதிகமாக இருக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையில் பொருட்களை வாங்கமாட்டார்கள் அதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரும் நட்டம் உண்டாகும். குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்படாத பிற விவசாய துறைகளான கோழிப்பண்ணை, மீன் வளர்த்தல், பால் உற்பத்தி போன்றவை தொடர்ந்து வளர்ச்சியுறும்போது பயிர்களுக்கு மட்டும் எதற்கு குறைந்தபட்ச ஆதார விலை தேவை? விவசாயிகள் கேட்பதுபோல் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை கொடுக்கும்போது, அரசுக்கு ஏறக்குறைய 10 லட்சம் கோடிகள் ஒவ்வொரு வருடமும் கூடுதல் செலவாகும். இது அரசின் பட்ஜெட்டில் பிற அடிப்படைத் துறைகளுக்கான ஒதுக்கீட்டை பாதிக்கும். இது தவிர குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்கும்போது விவசாயிகள் மாற்றுப் பயிர்களை பயிரிடவோ, வேறு விவசாயம் சார்ந்த துறைகளில் ஈடுபடவோ முன்வரமாட்டார்கள். அதுமட்டுமல்லாது, விவசாயிகளின் கோரிக்கையான சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையான மொத்த செலவு + 50% என்ற முறையில் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்பட்டால் விளைபொருட்களின் விலை பலமடங்கு அதிகரித்துவிடும் என்றெல்லாம் கூறி மோடியின் மோசடிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.
இந்தியாவில் குறைந்தபட்ச ஆதாரவிலை என்பது சட்டத்தால் பாதுகாக்கப்படாத நிலையில்தான் உள்ளது. தற்போது ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையானது அரிசி, கோதுமை ஆகிய இரண்டு பயிர்களுக்கு மட்டுமே உள்ளது. அதுவும் சட்டபூர்வமான முறையில் இல்லாமல் அரசாணைகளின்மூலம் மட்டுமே அமலில் உள்ளது. விவசாயிகள் கேட்கும் சட்டபூர்வமான குறைந்தபட்ச ஆதாரவிலை என்பது நிலையானதாகவும், சட்டத்தை அமலாக்கவேண்டியது அரசின் கடமையாகவும் மாற்றப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நெருக்கடி தவிர்க்கப்படுகிறது. மிகுஉற்பத்தி ஏற்படும்போது தேவையைவிட எவ்வளவு கூடுதலாக உற்பத்தி உள்ளதோ அதைமட்டும் அரசு வாங்கிக்கொண்டு குறைஉற்பத்தி காலத்தில் இருப்பில் உள்ளவற்றை சந்தைக்கு அளிப்பதன்மூலம் தேவைக்கும் அளிப்புக்கும் இடையே மிகுந்த இடைவெளி இல்லாமல் பராமரிக்க முடியும். இதனால் விவசாயிகளுக்கோ அல்லது அரசுக்கோ எந்தவித நட்டமும் ஏற்படாது.
குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்படாத கோழிப்பண்ணை, மீன் பண்ணை, பால் உற்பத்தி உள்ளிட்டவற்றிற்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயித்தால் அத்துறைகள் இன்னும் வளர்ச்சியுறும். இருந்தபோதிலும் நேரடி வேளாண்மையில் வறட்சி, பூச்சி தாக்குதல், பெருமழை, நோய் தாக்குதல் போன்ற பல்வேறு இடர்பாடுகள் இருப்பதால் நேரடி விவசாயத்துக்கு விசேசமாக குறைந்தபட்ச ஆதாரவிலை தேவைப்படுகிறது.
இதையும் படியுங்கள்:
- வேளாண் விளை பொருட்களுக்குகுறைந்தபட்ச ஆதரவு விலை (MSP)வருங்கால அராஜகத்தை தவிர்க்கும்!
- குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்கக் கோரி ஆர்பாட்டங்கள்!
சட்டப்படியான குறைந்தபட்ச ஆதாரவிலை விலையை அரசு நிர்ணயித்தால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும், மற்ற துறைகளுக்கான ஒதுக்கீடு குறைந்துவிடும் எனும் வாதமும் உண்மையல்ல. குறைந்தபட்ச ஆதாரவிலையில் விவசாய பொருட்களை அரசு வாங்கினாலும் அதை விற்பது சந்தைவிலையில்தான் எனும்போது அரசுக்கு இலாபம்தான் கிடைக்கும். அரசு வேண்டுமென்றே மற்ற துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்தாலன்றி இது சாத்தியமில்லை.
குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்கும்போது விவசாயிகள் மாற்றுப் பயிர்களை பயிரிடவோ, வேறு விவசாயம் சார்ந்த துறைகளில் ஈடுபட முன்வரமாட்டார்கள் என்ற வாதமும் உண்மைக்குப் புறம்பானதே. தாங்கள் விளைவிக்கும் பொருளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைத்துவிடும் எனும் அரசின் உத்திரவாதம் இருக்கும்போதுதான் விவசாயிகள் மாற்றுப் பயிர்களையும் பயிரிட ஊக்கமுடன் முன்வருவார்கள். இதனால் ஒரே பயிரை திரும்பத்திரும்ப பயிரிடுவது தடுக்கப்பட்டு மண்வளம் பாதுகாக்கப்படும்.
சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையான மொத்த செலவு + 50% என்ற முறையில் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்பட்டால் விளைபொருட்களின் விலை பலமடங்கு அதிகரித்துவிடும் என்ற வாதமும் பொய்யே. உண்மையில் அக்கமிட்டியின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படாத காலகட்டத்தில்தான் வெங்காயம், பருப்பு, பூண்டு, எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாய உற்பத்திப் பொருட்களின் விலைகள் பன்மடங்கு அதிகரித்து வந்திருக்கின்றன. குறைந்தபட்ச ஆதாரவிலையை கூடுதலான விளைபொருட்களுக்கு விரிவுபடுத்துவதன்மூலம் இடைத்தரகர்களின் கொள்ளை தடுக்கப்பட்டு விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் கட்டுப்படியான விலையில் வேளாண் பொருட்கள் கிடைக்கும் என்பதுதான் உண்மை.
மோடி தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்கு வாரி வழங்கும் கடன்தள்ளுபடி, வரிச்சலுகை, கடனுதவி போன்றவற்றின்மூலம் லட்சக்கணக்கான கோடிகளை வாரிவழங்கும் மோசடிகளை அம்பலப்படுத்திக் கண்டிக்க வக்கில்லா அசோக் குலாட்டி போன்ற வலதுசாரி பொருளாதார நிபுணர்கள் இந்தியாவின் பரந்துபட்ட விவசாயிகளின் கோரிக்கையான சட்டபூர்வமான குறைந்தபட்ச ஆதாரவிலை சாத்தியமில்லாதது என்று திரித்துக்கூறுகின்றனர். கார்ப்பரேட்-காவி பாசிச கும்பல் விவசாயிகளுக்கு இழைத்துள்ள துரோகத்தை நியாயப்படுத்தும் அவர்களுடைய வாதங்கள் எந்தவித பொருளாதார அடிப்படையையோ அல்லது நியாய உணர்வையோ கொண்டதல்ல என்பதை JNU பேரா. ஹிமான்சு போன்றோர் அம்பலப்படுத்தி வருகின்றனர்.
– ஜூலியஸ்