ந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) எவ்வளவு மற்றும் அது எந்த வேகத்தில் வளர்ச்சி  அல்லது வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பது குறித்த விஷயம் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. கடந்த ஆகஸ்ட் 31 அன்று இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 7.8% என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக பொருளாதார வல்லுனர்களும் மற்றும் பிற நிபுணர்களும் இந்த விகிதம் தவறு என விமர்சித்தனர்.

முன்வைக்கப்படும் வாதங்கள்!

காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளில் “வேறுபாடு”(discrepancy) என்று ஒரு வகை உள்ளது என விமர்சகர்கள் கூறுகின்றனர். முந்தைய ஆண்டின் (2022 – 23) எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், ஜிடிபி-யில் அதன் பங்கு 6.2% உயர்ந்துள்ளது. ஆனால் மற்ற அனைத்து வகைகளின் பங்குகளும் சரிந்துள்ளன. எனவே 7.8% என்ற ஜிடிபி வளர்ச்சியில் கணிசமான பிழைகள் இருப்பதை இது தெளிவாக்குகிறது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால் அரசுத் தரப்பு அதிகாரிகள் இந்த “வேறுபாடு” என்பது அசாதாரணமானதோ, கவலைக்குரியதோ அல்ல. காலப்போக்கில் இது சரி செய்யப்படும் என்கின்றனர். மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிட இரண்டு வழிகள் உள்ளன. அவை வரவு மற்றும் செலவு முறைகள் ஆகும். வரவை அடிப்படையாகக் கொண்ட முறை மிகவும் துல்லியமான மற்றும் நம்பகமானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே இங்கு ‘வேறுபாடு” என்பது இரண்டு முறைகளில் இருந்தும் பெறப்பட்ட புள்ளி விபரங்களுக்கு இடையேயான வேறுபாட்டை குறிக்கிறது என விளக்குகின்றனர். இந்த விளக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஐ.நா சபை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் பல சர்வதேச வங்கிகள் இந்தப் புள்ளி விபரங்களை ஏற்றுக் கொள்கின்றன என கூறுகின்றனர்.

காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளில் “வேறுபாடு”(discrepancy) என்று ஒரு வகை உள்ளது என விமர்சகர்கள் கூறுகின்றனர். முந்தைய ஆண்டின் (2022 – 23) எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், ஜிடிபி – யில் அதன் பங்கு 6.2% உயர்ந்துள்ளது.

அதிகாரப்பூர்வ வழிமுறை!

ஜிடிபி அளவீட்டின் அடிப்படைகளுக்கு செல்வதன் மூலம் மட்டுமே இந்த முரண்பட்ட பார்வைகளை சரி செய்ய முடியும். காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிடுவதற்கான அதிகாரப்பூர்வ வழிமுறைதான் இந்த சிக்கலை தீர்க்க உதவும். அதாவது ஒவ்வொரு காலாண்டிலும் வெளியிடப்படும் உற்பத்தி அணுகுமுறை மூலம் தொகுக்கப்பட்ட ஜிடிபி மதிப்பீடுகள் மற்றும் செலவின அணுகுமுறை மூலம் தொகுக்கப்பட்ட ஜிடிபி மதிப்பீடுகள் ஆகியவற்றை சேர்த்து கணக்கிட வேண்டும் என்பதுதான் அந்த வழி முறையாகும்.

உற்பத்தி அடிப்படையிலான மதிப்பீடுகள், அடிப்படை விலைகளில் தயாரிப்புகள் மீதான வரியையும் உள்ளடக்கியதாகும். செலவின அடிப்படையிலான மதிப்பீடுகளுக்கும், உற்பத்தி அடிப்படையிலான மதிப்பீடுகளுக்கும் இடையிலான வித்தியாசமே “வேறுபாடு” என காட்டப்படுகிறது. அரசு தரப்பிலான அதிகாரபூர்வ ஆவணமானது, உற்பத்தி அடிப்படையிலான அணுகுமுறையே நம்பகமானது எனக் கூறுகிறது.

ஆனால் இதற்கானத் தரவுகள் முழுமையாக கிடைப்பதில்லை. எனவே முந்தைய ஆண்டின் தரவுகளை வைத்தே இதைக் கணக்கிடுகிறார்கள். தற்போதைய நிலை குறித்த ஆய்வுகள் இல்லாமல் இதை எப்படி நம்பகமானதாக ஏற்க முடியும்? சில சந்தர்ப்பங்களில் வருடாந்திரக் கணிப்புகளை உருவாக்கி, காலாண்டு புள்ளி விபரங்களுக்காக அதை நான்கால் வகுத்துக் கொள்ளும் முறை பின்பற்றப்படுகிறது. இதில் முந்தைய ஆண்டின் பிழைகள் தொடரவே செய்யும்.

பொருளாதாரத்தை பாதிக்கும் அதிர்ச்சிகள்!

மேலே குறிப்பிட்ட முறையானது எதிர்பாராத மாற்றங்களுக்கு உட்படாத சீராக செயல்படும் பொருளாதாரத்தையே நம்பியுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பொருளாதார அதிர்ச்சி இல்லாத போது மட்டுமே அது சரியாக இருக்கும். அதிர்ச்சி ஏற்பட்டால் கடந்த காலத்தை மேற்கோள் காட்டி தொடர்வதோ, முக்கிய குறியீடுகள் செல்லுபடி ஆவதோ சாத்தியமல்ல.

இதையும் படியுங்கள்

இந்தியப் பொருளாதாரம் 2016-ல் இருந்து அடுத்தடுத்த அதிர்ச்சிகளை சந்தித்து வருகிறது. முதலில் பண மதிப்பிழப்பு, அடுத்த ஆண்டு தவறாக கட்டமைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி ( GST), அதற்கடுத்து 2018-ல் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நெருக்கடி, இறுதியாக 2020-ல் திடீரென அமலாக்கப்பட்ட முழு முடக்கம் (Lock down).

இத்தகைய அதிர்ச்சிகள் முந்தைய முக்கிய குறியீடுகளை பாதித்து, அவற்றின் பயன்பாட்டை செல்லாததாக்கி விடுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட துறையுடன் ஒப்பிடும்போது, அமைப்புசாரா துறையையே அதிக அளவில் பாதித்து, அதன் மூலம் அவற்றின் விகிதங்களையும் மாற்றுகிறது.

புதிய கணக்கீட்டு முறை தேவையாக உள்ளது!

2015-ல் இருந்து அமைப்பு சாரா துறையின் புதிய கணக்கெடுப்புகள் எதுவும் நடத்தப்படவே இல்லை. அதேபோல, 2021-ல் நடத்தப்பட்டு இருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பும் இதுவரை நடக்கவில்லை. இந்த நிலையில், இவர்கள் பயன்படுத்தும் முறையானது மிகவும் தவறானதாகத்தான் இருக்க முடியும்.

அடுத்து, கடந்த ஆண்டின் எண்களை நான்கால் வகுத்து காலாண்டு அறிக்கையை கணக்கிடும் முறையானது, அந்த ஆண்டின் ஒரு கட்டத்தில் பொருளாதாரப் பேரதிர்ச்சி ஏற்பட்டு இருந்தால் எப்படி சரியானதாக இருக்க முடியும்?

எனவே அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப் பட்டதைப் போல செலவினப்பக்கம் மட்டும் பிழையானது அல்ல. உற்பத்தி அணுகுமுறை மதிப்பீடு கூட குறைபாடானதுதான். இத்தகையச் சூழலில் “வேறுபாட்டை”க் கணக்கிடுவதற்கு உற்பத்தி அணுகுமுறையை எப்படிப் பயன்படுத்த  முடியும்? இரண்டு முறைகளிலும் கணக்கிடுவது தீவிரமான குறைபாடுகளோடுதான் உள்ளது. ஏனெனில் பல்வேறு பொருளாதார அதிர்ச்சிகளின் தன்மை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொன்றின் தாக்கமும் பொருளாதார ரீதியாக வேறுபடுகிறது. எனவே ஒவ்வொன்றும் தனித்தனியாக கணக்கிடப்பட வேண்டும். அதாவது பிழைகள் அதிகரித்து வருவதால் நம்பகமான ஜிடிபி எண்கள் கிடைப்பதில்லை. அதிலும் குறிப்பாக பொருளாதார அதிர்ச்சிகள் நடக்கும்போது காலாண்டு ஜிடிபி-க்கான சரியான எண்ணிக்கை கிடைக்காது என்பதே உண்மை.

வேறு வகையான பரிசீலனைகள்!

மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிடுவதற்கு உற்பத்தி அணுகுமுறையை எடுத்துக் கொண்டால், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் பங்களிப்பை மதிப்பிட வேண்டும். ஒன்பது முக்கியமான துறைகளில், அதன் உட்பிரிவுகளான ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத,  பொதுத்துறை மற்றும் தனியார் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு துறைக்கும் மற்றும் அதன் துணைப் பிரிவுக்கும் தனித்தனி முறைகள் தேவை. எனவே மொத்தமாக 27 வெவ்வேறு வகையான கணக்கீட்டு முறைகள் தேவைப்படுகின்றன. பொது துறையின் தரவுகளை அதிகாரப்பூர்வமாக பெற முடியும். ஆனாலும் பல்வேறுத் தொழில்கள் மற்றும் செயல்பாடுகளாக அவை உள்ளன.

இந்தியாவின் முறையை சர்வதேச ஏஜென்சிகள் ஆதரிக்கின்றன என்ற வாதம் வைக்கப்படுகிறது. ஆனால் சர்வதேச ஏஜென்சிகளோ அல்லது ரிசர்வ் வங்கியோ தனிப்பட்ட வகையில் எந்தத் தரவுகளையும் சேகரிப்பதில்லை. அவை அதிகாரப்பூர்வ தரவுகளையேப் பயன்படுத்துகின்றன. எனவே அதில் உள்ள பிழைகள் மீண்டும் உருவாகின்றன.

இதையும் படியுங்கள்:

உதாரணமாக போக்குவரத்தை எடுத்துக் கொண்டால், இரயில், விமானம், கப்பல், லாரி, ஆட்டோ, தள்ளுவண்டிகள் எனப் பல வழிகளில் அது நடக்கிறது. இவற்றில் பலவற்றின் காலாண்டுத் தரவுகள் கிடைப்பதில்லை. எனவே ஒழுங்கமைக்கப்பட்டத் துறைகளின் மூலமாக கிடைப்பவற்றை வைத்துத்தான் கணக்கீடுகள் நடக்கின்றன.

அமைப்புசாராத் துறையின் தரவுகள் மதிப்பிடப்படாததால் பொருளாதாரம் பற்றிய துல்லியமான கணக்கீடுகளுக்கு வாய்ப்பில்லை.  இறுதியாக ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளின் மூலதனத் தீவிரத்தன்மை காரணமாக, அது சிறிய அளவிலான வேலை வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அதன் வளர்ச்சிதான் மொத்த உள்நாட்டு உற்பத்தியாக பார்க்கப்படுகிறது.

வறுமை மற்றும் சமூகப் பாதுகாப்பின்மை காரணமாகத் தொழிலாளர்கள் சுய தொழிலை நாடவேண்டிய சூழல் ஏற்படுகிறது. பின்னர் அவர்களும் வேலைவாய்ப்புப் பெற்றவர்களாகக் கணக்கிடப்படுகிறார்கள். இந்த அமைப்பு அவர்களுக்கான வேலையை உருவாக்கவில்லை. மேலும், வேலையின்மையின் எதார்த்தத்தையும்  பிரதிபலிப்பதில்லை. எனவே இந்தியாவின் ஜிடிபி என்பது புதிய முறையுடன் மீண்டும் கணக்கிடப்பட வேண்டும்.

மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசு, அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்து, அதில் கிடைக்கும் வருவாயை வைத்து பாஜக எனும் கட்சியின் நிதி வளத்தை பெருமளவில் பெருக்கிக் கொண்டுள்ளது. ஒரு சில கார்ப்பரேட்டுகளின் பொருளாதார வளர்ச்சியை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியாகக் காட்டி, போலியான பிம்பத்தை கட்டமைத்து மக்களை ஏமாற்றி வருகிறது இந்த மோசடி கும்பல். இவர்களின் இத்தகைய வெற்று வாய்ச்சவடால்களை அம்பலப்படுத்தி வீழ்த்துவதே நம்முன் உள்ள பிரதானமானக் கடமையாக உள்ளது.

செய்தி ஆதாரம்: Theleaflet.in

ஆக்கம்: குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here