கூட்டமில்லா ரோடுஷோக்கள், முதல்கட்டத் தேர்தலில் பெரிதாக ஒன்றும் தேறாது என்ற நிலை, பத்து வருடங்களாக ஆட்சியிலிருந்து அதானி, அம்பானியின் வளர்ச்சிக்கு மட்டுமே பாடுபட்டதால் மக்களிடம் சாதனைகளை சொல்லி ஓட்டுப்பொறுக்க வழியில்லாத நிலை, பசுக்களுக்கும் கடவுள்களுக்கும் வாக்குரிமை இல்லாததால் நடைபெறும் தேர்தலில் தோற்றுப்போய்விடுவோம் என்று சகல திசைகளிலிருந்தும் வரும் செய்திகள் “விஸ்வகுருவைத்” தூங்கவிடாமல் செய்கிறது.
கல்வி மறுக்கப்பட்டு சாதி, மத போதையில் மூழ்கடிக்கப்பட்ட வடமாநில மக்களை இனிமேலும் ஏய்க்கமுடியாது என்ற உண்மைகள் சுடத் தொடங்கியுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக 18 லட்சரூபாய் கோட்டு, 1,50,000 ரூபாய் கூலிங்கிளாஸ், 1,30,000ரூபாய் பேனா, 5 லட்சரூபாய் காளான், 8400 கோடிரூபாய் தனிவிமானம், தினமும் 1.62 கோடி செலவாகும் SPG அடியாட்கள், உலகம் சுற்றும் சொகுசுப் பயணங்கள், எந்நேரமும் போட்டோஷூட் என்ற தனது ஆடம்பர வாழ்க்கை பறிபோய்விடும் என்ற சுயநலமும் நமது “56 இன்ச்சை” உந்தித்தள்ளுகிறது.
சமூகப் பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு, ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம், NEET, CUET கட்டாயமில்லை, மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு, புதிய GST, நூறு நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாகவும் ஊதியம் ரூ.400 ஆகவும் உயர்வு, தேசியக் கல்விக் கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைகளுக்குப் பிறகே நடைமுறைப்படுத்தப்படும், மாணவர்களுக்கான கல்வி கடன்கள் ரத்து, ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டணச் சலுகை, குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம், கட்சி தாவினால் எம்.எல்.ஏ./எம்.பி. பதவிகள் தானாகவே பறிபோகும் சட்டத்திருத்தம் உள்ளிட்ட பெருவாரியான மக்கள் வரவேற்கும் காங்கிரசின் தேர்தல் அறிக்கையைக்கண்டு பொறுக்கமுடியாத “வளர்ச்சியின் நாயகனை” “பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர மோசடி உள்ளிட்டவை குறித்து விசாரணை” என்ற காங்கிரசின் வாக்குறுதி ரொம்பவே எரிச்சலூட்டிவிட்டது. எல்லாத்தையும் உருவிட்டு ஜெயில்ல போட்டுருவானுகளோ? என்ற பயமும் சேர்ந்துகொள்ள இந்தத் தேர்தலில் எப்பாடுபட்டாவது கட்டாயம் வெற்றிபெற்றுவிடவேண்டும் என்ற பதவிவெறி பிடித்து உலுக்க, ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தாலியைக்கூட பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்துவிடுவார்கள்” என்று அடக்கமாட்டாமல் விஷத்தைக் கக்கிவிட்டார் இந்த பலவேச பாசிசக்கோமாளி.
பாசிச மோடியின் இந்த வெறுப்புப் பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பல்வேறு மாநிலங்களிலும் உள்ள காவல்நிலையங்களில் 20,000- க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் நடத்தைவிதிகளை அப்பட்டமாக மீறி மத வன்முறையைத் தூண்டும் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளன. இந்தப் புகார்களின் மீது இவ்வமைப்புகள் நடவடிக்கை எடுத்துவிட்டால் அது மோடி வாயிலிருந்து வரும் உண்மைக்கு சமானம் என்பதால் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மற்றபடி ஒரு நாட்டின் பிரதமராக இருந்து நாட்டுமக்கள் அனைவருக்கும் பொதுவானவராக இருக்கவேண்டிய ஒருவர் இப்படி அப்பட்டமாக மொத்த மக்கள்தொகையில் 15 சதவீதம் இருக்கும் மண்ணின் மைந்தர்களான ஒரு மக்கள் பிரிவினருக்கு எதிராகப் பேசமுடியுமா என்று நீங்கள் குமுறுகிறீர்களா? ரொம்பவே அப்பாவி சார் நீங்கள். நாங்கள் நினைத்தால் பேசமட்டுமல்ல அந்த 15 சதவீத மக்களுக்கு எதிராக செயல்படவும் முடியும் என்று குஜராத்தில் செய்துகாட்டிய அனுபவம் இந்த நரவேட்டைக்காரருக்கு உண்டு என்பதை அப்பப்போ ஞாபகப் படுத்திக்கோங்க சார்.
இதையும் படியுங்கள்:
குஜராத், மணிப்பூர் என்று மாநிலங்களையே சுடுகாடாக்கிய சங்பரிவார் கும்பலுக்கு இதைப்போன்ற வெறுப்புப் பேச்சுக்கள் ஒன்றும் புதிதல்ல, அவ்வளவு ஏன், மோடியே பல்வேறு சூழ்நிலைகளில் இஸ்லாமியரைக் குறிவைத்து இதற்கு முன் பேசியிருக்கிறார் என்றாலும் தேர்தலில் தோல்விமுகத்தில் இருக்கும் நிலையில் இத்தகைய வெறுப்புப் பேச்சுக்கள் வழமையானவை என்பதைத்தாண்டி இக்கும்பலின் பின்னணித் திட்டத்தையே வெளிப்படுத்துகின்றன. அவசர அவசரமாக CAA அமல்படுத்தப்பட்டதற்கும், பொதுசிவில் சட்டம் அமலுக்குவரும் என்பதற்கும், “INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் கலவரங்கள் நடக்கும்” என்று அமித்ஷா பேசியதற்கும், “தாலியிலிருக்கும் தங்கத்தைக்கூட பிடுங்கி முஸ்லிம்களிடம் கொடுத்துவிடுவார்கள்” என்று மோடி பேசியதற்கும் பின்னே தமக்கு ஓட்டுப்போடுமாறு மக்களை மிரட்டுவதும், அதையும் மீறி தாங்கள் தோற்றுவிட்டால் நாடுமுழுவதும் கலவரத்தை நடத்தும் இக்கும்பலின் சதித்திட்டத்தையும் இந்த பாசிஸ்டுகள் கோடிட்டுக்காட்டியுள்ளனர். அதனால்தான் இந்த மக்கள்விரோத பாசிச சங்பரிவார் கும்பலை தேர்தலில் மட்டுமல்ல தெருவிலும் தோற்கடிக்க நாம் தயாராக வேண்டியுள்ளது.
- ஜூலியஸ்