சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வடமாவட்டங்களில் மிக்ஜாம் புயலானது நின்று நிதானமாக ஆடிச்சென்றுள்ள கோரத்தாண்டவத்தால் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.

மூழ்கியது ஏழைகளின் ஒண்டுக்குடிசை வீடுகள் மட்டுமா? அடுக்குமாடி குடியிருப்புகளும்தானே மூழ்கியது. அங்கிருக்கும் கார்கள் கூட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதே என உங்களுக்குள் கேள்வி எழக்கூடும்.

புவி வெப்பமாதலை தூண்டிவரும் முன்னணி கார்ப்பரேட்டுகளால் நேற்று சென்னையில் காற்றின் மாசு அபாயகரமான அளவு கூடியது; இன்று புயல் வெளத்தில் மிதக்கிறது. இதில் மேட்டுக்குடிகளின் விருப்பத்தேர்வான வேளச்சேரி, ECR இல் சதுப்பு நிலங்களை வளைத்துக் கட்டிய குடியிருப்புகளில் தரைத்தளம் மூழ்கிவிட்டுள்ளது. இதுபோல் மாம்பலம், திருவல்லிக்கேணி என அவாள்களின் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் வந்துள்ளதுதான்.  அப்படியிருக்க உழைக்கும் மக்கள் வாழ்வாதாரம் அழிந்துள்ளதாக மட்டும் ஏன் குறிப்பிட வேண்டும்?

மேட்டுக்குடியினரை மீட்டெடுக்க விரைகிறது அரசின் கரங்கள். அவர்களின் பகுதிகளில் பொக்லைன், JCP, படகுகள், மிதவைகள், தண்ணீர் லாரிகள், உணவு மற்றும் நிவாரணப் பொருட்களுடன்  பல்வேறு வண்டிகள் குறுக்கும் நெடுக்குமாக சென்றபடி உள்ளன. ஆனல் அன்றாடம் காய்ச்சிகளின் பகுதியில் பெயரளவுக்குதான் நிவாரண உதவிகள் செய்யப்படுகின்றன.

மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள பொக்லைன்

லட்சங்களில் சம்பளம் வாங்கும் IT துறையினர் தமது வீட்டை பூட்டிவிட்டு வெளியேறுகின்றனர். இவர்கள் சொந்த ஊருக்கு செல்லவும், வெள்ளம் வடியாத பகுதியில் தற்காலிகமாக தங்க வசதியான இடத்தை ஏற்பாடு செய்து தங்கவும் முடியும். ஆனால் சென்னையின் பூர்வகுடிகளுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ள சமூகநலக்கூடங்களோ, திருமண மண்டபங்களோதான் ஒரே மாற்று!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காருக்கு இன்ஸ்சூரன்ஸ் மூலம் இழப்பீடு கிடைக்கும். அப்படி கிடைக்காவிட்டாலும் கூட மேட்டுக்குடியினரால் புதிய கார் வாங்க சில லட்சங்களை செலவு செய்வது பெரிய விசயமே அல்ல.

ஆனால் வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, திருவெற்றியூர் போன்ற பகுதிகளில் உள்ள உழைக்கும் மக்களின் வாழ்நாள் சேமிப்பான அத்தியாவசிய பொருட்கள் மொத்தமாக போய்விட்டது. வீட்டுக்குள் சாக்கடை நீர்தான் இடுப்பளவு நின்றுள்ளது. இவர்கள் நிர்கதியாக நிவாரண உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர். ஆனால் இருப்பவர்கள் பக்கம்தான் ஆட்சியாளர்கள் அக்கறை காட்டுகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரவைக்கப்பட்டுள்ள துப்புரவு பணியாளர் முதல் மின் ஊழியர்கள் வரை அனைவரும் சுறுசுறுப்பாக வேலைகளை முன்னெடுக்கின்றனர்.

மீட்பு மற்றும் நிவாரணம் இரண்டிலும் கார்ப்பரேட் கம்பெனிகள், அடுக்குமாடி வளாகங்கள், கேட்டெட் கம்யூனிட்டி அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கும் பகுதிக்குதான் முன்னுரிமை தரப்படுகிறது. இதுதான் அரசின் வர்க்க பாசமா?  இப்பகுதிகளை விரைந்து மீட்காவிட்டால் புதிய முதலீடுகள் வராதோ? அல்லது, இருக்கும் நிறுவனங்கள் வெளியேறிவிடும் என்ற அச்சமா? ஸ்டாலின் தலைமையிலான கழக ஆட்சி யாருக்கானது என்பதை கையேந்தும் மக்கள் கூர்ந்து பார்க்கிறார்கள்.

மக்கள் அதிகாரம் செய்திப்பிரிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here