திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டத்தை ஏவியுள்ளது திமுக அரசு.

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக தேத்துரை, குரும்பூர், மேல்மா, வீரம்பாக்கம் உள்ளிட்ட 9 கிராமங்களில் 3174.12 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் என அன்று விளம்பரம் செய்யப்பட்டது.

விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்து மனு அளிக்க வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து விவசாயிகளுக்கும், காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் சிப்காட் விரிவாக்க அலுவலகம் சென்று மனு அளித்து திரும்பியுள்ளனர்.

இதுவெல்லாம் நடந்தது கடந்த ஜூலை மாதம்.

சிப்காட் நிலம் கையகப்படுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கலாம் என்று கூறிவிட்டு ஆட்சேபம் தெரிவிக்க வந்தவர்களை அனுமதிக்காமல் இருந்ததிலேயே தெரிகிறது இவையெல்லாம் சம்பிரதாய நடவடிக்கைகள் என்று.

இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் மேல்மா சிப்காட் என்ற பெயரில் மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, நர்மா பள்ளம், நெடுங்கல், தேத்துரை, வட ஆளாய் பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, மணிபுரம் மற்றும் வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 3,174 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால் கோபமடைந்த விவசாயிகள், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையை ஆட்சியரிடம் ஒப்படைக்க சென்ற 11 கிராமங்களை சேர்ந்த 60 விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசு 5 பேருக்கு மட்டும் தான் அனுமதி என்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் “எங்களது வாழ்வாதாரத்தை அழித்து ஒழிக்கும் சிப்காட் வேண்டாம் எனக் கூறி மனுக்களை கொடுக்க வந்துள்ளோம். எங்களை அனுமதித்தால் சட்டம் – ஒழுங்கு பாதிக்கும் எனக் கூறுகிறீர்கள். நாங்கள் என்ன கலவரம் செய்யவா வந்துள்ளோம். முப்போகம் விளையக்கூடிய நிலங்களை அழிக்கும் சிப்காட் தேவையில்லை ஆட்சியரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினர்”.

காத்திருப்பு போராட்ட்த்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் குழு அமைத்து விசாரணை செய்து நடவடிக்கை செய்யப்படும் என்று கூறிய மாவட்ட ஆட்சியர் இதுவரை குழு அமைக்கவில்லை.

ஆனால் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான பணியை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தீவிரப்படுத்தியுள்ளனர் என்கிறார்கள் விவசாயிகள்.

மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் ஜூலை 2 ஆம் தேதி முதல் கடந்த 124 நாட்களாக காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அதில் 11 விவசாயிகள் மீது தடையை மீறி பேரணி சென்றதாகவும், காவல்துறை வாகனத்தை சேதப்படுத்தியதாகவும், அனுமதியின்றி ஆட்சியர் அலுவலகத்தில் கூடியதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதையடுத்து, ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேர் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் மீது நேற்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

குண்டர் சட்டம் என்பது கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது ஏவப்படும் சட்டமாகும். இதனை விவசாயிகள் மீது ஏவியுள்ளது திமுக அரசு. முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களை சிப்காட் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று போராடியது தான் ‘மிகப்பெரிய’ குற்றம் என்கிறது திமுக அரசு.

ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தின் பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட் அமைக்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் கடந்த ஓராண்டுக்கு மேலாக போராடி வருகிறார்கள். தற்போது மேல்மா சிப்காட்டுக்கு எதிராக போராடிய விவசாயிகள் கைது, சிறை என அடக்குமுறையை கையாள்கிறது அரசு.

கார்ப்பரேட் முதலாளிகள் நலன் சார்ந்த திட்டங்களுக்காக சிப்காட் அமைப்பதற்கும், எட்டு வழி சாலைகள் அமைப்பதற்கும், விமான நிலையங்கள் அமைப்பதற்கும் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களை விவசாயிகளின் அனுமதி இல்லாமல் பறிமுதல் செய்கிறது அரசு.

இதற்காக போராடக் கூடிய விவசாயிகளையும், பொதுமக்களையும் பொய்குற்றச்சாட்டுகளின் மூலம் கைது செய்து சிறையில் அடைக்கிறது. போராடுபவர்களை கைது செய்தாலோ, அடக்குமுறையை கையாண்டாலோ போராட்டங்களை நிறுத்திவிட முடியாது என்பதை திமுக அரசு உணர வேண்டும்.

விவசாயிகளை குண்டர்கள் என்று சித்தரிப்பதன் மூலம் மக்களிடம் இருந்து திமுக அரசு தனிமைப்படுகிறது. போராடும் மக்களை எதிரிகளின் பக்கம் தள்ளுகிறது. இது காவி பாசிஸ்டுகளுக்கு பலமாக அமையும். விவசாயிகளுடன் நிற்பதாக பாஜக அண்ணாமலை நாடகமாட துவங்கிவிட்டார். காவியின் அடிமைகளும் விவசாயிகளின் ‘ஜனநாயக உரிமை’க்காக குரல் கொடுத்து பொங்கக்கூடும்.

இதையும் படியுங்கள்: திருவண்ணாமலை சிப்காட்டுக்கு எதிராக போராடும் மக்களை ஆதரிப்போம்!

ஒருபுறம் மக்கள் நல அரசு, விடியல் அரசு என்று சொல்லிக் கொள்ளும் திமுக, மறுபுறம் மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்துகிறது. 1 ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி செல்வதற்காக விவசாயத்தையும், விவசாயிகளையும் பலிக் கொடுக்கிறது திமுக அரசு.

சிப்காட் அமைத்தால் தான் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று பொய்யான பிம்பத்தை உருவாக்குகிறது. இப்படி அமைக்கப்பட்ட சிப்காட்களில் எத்தனை நிறுவனங்கள் தொழிலாளர்கள் உழைப்பை சுரண்டி விட்டு ஆலையை மூடி தொழிலாளர்களை நடுத்தெருவில் விட்டு சென்றது என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஃபோர்டும், நோக்கியாவுமே.

எனவே தமிழ்நாடு அரசு மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிடுவதோடு, எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்பப் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை முன்வைத்துப் போராடுவோம்.. விவசாயிகள் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் கார்ப்பரேட் நல திட்டங்களை கைவிட நிர்பந்திப்போம்.

  • மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here