ரு பொதுத் தேர்தல் நடக்கிறது என்றால் அதில் போட்டியிடும் கட்சியையோ, கூட்டணியையோ, அதன் வேட்பாளரையோ ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ பிரச்சாரம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு.

அப்படி பிரச்சாரம் செய்யும் உரிமை மறுக்கப்பட்டால், அதை ஜனநாயக நாடு என்றோ, அத்தேர்தல் ஜனநாயக ரீதியாக நடத்தப்படும் தேர்தல் என்றோ கூற முடியாது.

தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறைகள்!

தற்போது நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கல்கள் முடிந்து,  பட்டியல் இறுதியாகிறது. இதைத் தொடர்ந்து மாநில, தேசிய தலைவர்களால் வாக்காளர்களுக்கான ஆதரவு பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. 

இதற்காக பொதுக்கூட்டம், வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்காக இனிமேல் தேர்தல் ஆணையரையோ மாவட்ட ஆட்சியரையோ நேரில் சந்திக்கவெல்லாம் தேவையில்லை ; அனைத்தையும் இணையத்தின் மூலமாக செய்து கொள்ளுங்கள் என்கிறது தேர்தல் ஆணையம்.

தேர்தலில் போட்டியிடுபவர் மட்டுமே அல்லது அப்படி போட்டியிடுபவரால் அங்கீகரிக்கப்படுபவர்கள் மட்டுமே பிரச்சாரத்திற்கு அனுமதி கோர முடியும் என்ற விதியை புகுத்தியுள்ளது தேர்தல் ஆணையம்.

இந்த அடிப்படையில் நாம் பாசிச பாஜகவை தோற்கடிப்போம் இந்தியா கூட்டணியை ஆதரிப்போம் என்று பிரச்சாரம் செய்ய விரும்பினால், அதற்கு அத்தொகுதியில் வேட்பாளர்களின் யாராவது ஒருவரின் பரிந்துரை கடிதம் அவசியம் என்கிறது தேர்தல் ஆணையம்.

அதாவது தேர்தலில் போட்டியிடுபவர்கள் மட்டும்தான் பேச வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது, உலகில் மிகப்பெரிய ‘ஜனநாயக’ நாட்டின் தேர்தல்ஆணையம். அதிநவீனம் போல் தோன்றுகின்ற நடைமுறையான இணைய வழி செயல்பாடுகள் அதிகாரிகளுக்கு மட்டுமே  உதவுகிறது. 

நேரில் வரத் தேவையில்லை என இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க சொல்வதன் மூலம் தமது விதிமுறைகளுக்கான நியாயத்தை விளக்க அதிகாரவர்க்கம் விரும்பவில்லை. அல்லது தேர்தலையொட்டி தமது கருத்தை ஜனநாயக ரீதியாக முன்வைக்க விரும்பும் தனிநபர்கள் அமைப்புகள் இயக்கங்களின் தரப்பு நியாயத்தை காது கொடுத்து கேட் ஆளும் வர்க்கம் தயாராக இல்லை. இவை இரண்டுமே ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல.

இதன் பொருள் தேர்தலில் போட்டியிடாதவர்களுக்கு தேர்தல் குறித்து மக்களிடம் தமது கருத்தை சொல்லும் உரிமை இல்லை என்பதுதான். அதாவது கருத்து சுதந்திரமும் பேச்சுரிமையும் இல்லை என்கிறது தேர்தல் ஆணையம்.

மோடி மூன்றாம் முறையாக ஒருவேளை தேர்தலில் ஜெயித்தால், அதன் பின்னர் தான் நாடு முழுமையாக பாசிசத்தால் நாசமாகும் என்று கருதுபவர்கள் தற்போது நடப்பதை உற்றுப் பார்க்க வேண்டும். அதாவது, தேர்தலையொட்டி கருத்தை சொல்வதற்காக கடும் போராட்டத்தை, சட்டப் போராட்டத்தை, ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தை நடத்தும் நிலைக்கு நம்மை தள்ளிவிட்டுள்ளனர் பாசிஸ்டுகள். 

தேர்தல்ஆணையம் கொண்டுவரும் புதிய விதிமுறைகளுக்கும் நடைமுறைகளுக்கும் பாஜக எப்படி பொறுப்பாக முடியும் என்று சிலர் அப்பாவித்தனமாக கேட்கக் கூடும். அப்படி கருதுபவர்கள் தேர்தல் ஆணையர்களின் நியமனம் குறித்த சர்ச்சைகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலையீடு இல்லாமல், தான் விரும்பும் அதிகாரியையே தேர்தல் ஆணையராக, தலைமை தேர்தல் ஆணையராகவெல்லாம் நியமித்துக் கொள்ளலாம் என மோடி சாதித்துக் காட்டியுள்ளார். அப்படி அவரால் நியமிக்கப்பட்ட தலைமை தேர்தல் ஆணையரின் மூலம்தான் இத்தகைய புதிய விதிமுறைகள் அமல் ஆகின்றன.

பாத்திரத்தில் உள்ள நீர் முழுவதும் கொதிக்கும் முன் முதலில் அடியிலிருந்துதான் நீர்க்குமிழிகள் வெளிவரும். அது விரைவில் கொதி நிலையை அடைவதற்கான முன்னறிவிப்பு தான். தற்போதைய அரசு துறைகளில் நாம் பார்த்து வரும் புதிய அணுகுமுறைகளையும் இப்படியே மதிப்பிட வேண்டும். அதாவது பாசிசம் தனது தயாரிப்பு கட்டத்தை முடித்துக் கொண்டு தாக்குதலில் இறங்கி விட்டுள்ளது.

தனிகவனம் பெரும் கோவை !

பாஜகவின் தமிழக தலைவராக உள்ள அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியானது தனி கவனம் பெற்று வருகிறது. தமிழகம் முழுவதிலும் போட்டியிடவோ மூன்றாம் நான்காம் இடத்தை பிடிக்கவோ கூட பாஜகவால் முடியாது. எனவே தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு இடங்களைப் பிரித்து தந்து விட்டு, பெயரளவில் தேர்தலில் போட்டியிட்டு, குறைந்தபட்சம் ஒன்று இரண்டு சீட்டுகளையாவது ஜெயித்து விட மாட்டோமோ என்று மனப்பால் குடிக்கிறது பாஜக.

கோவையில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒன்று மோடியின் ஆட்சியில் கோவையில் உள்ள மக்கள் முன்னேற்றத்தை கண்டிருக்க வேண்டும். அல்லது, மாநிலத்தை ஆள்பவர்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்களால் கோவை மக்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்க வேண்டும். இப்படி எதுவும் நடக்காத நிலையில், பாஜக தான் வெற்றி பெற வேண்டும் என்றால், தவிர்க்கவே முடியாமல் அது கையில் எடுக்க திட்டமிட்டுள்ளது கலவரங்களைத்தான்.

இந்திய பிரதமர் மோடி பொதுக்கூட்டத்திற்காக வரும்போது ஆட்களை திரட்டி, இருக்கைகளை நிரப்பி கணக்கு காட்ட தமிழர்கள் சிக்குவதில்லை. எனவே வட இந்திய தொழிலாளர்களை தலைக்கு இவ்வளவு என்று விலை பேசி அழைத்து வந்து கூட்டங்களை நடத்தி முடிக்கிறார்கள் பாஜகவினர்.

அப்படி வட இந்திய மக்களை குறிப்பாக இந்தி மொழி பேசும் மக்களை தமது அடித்தளமாக ஆக்கிக் கொள்ள துடிக்கிறது காவி கும்பல். அவர்களை இலக்கு வைத்து  தனியாக இந்தி மொழியில் சுவரொட்டிகளை அச்சிட்டு வாக்கு சேகரிக்கும் வேலையில் இறங்கியுள்ளது சங்கிகள் கூட்டம். 

கோவையில் ட்டப்பட்ட இத்தகைய இந்தி சுவரொட்டிகளில் யார் ஒட்டியது என்று எந்த அமைப்பின் பெயரையும் போடாமல் மொட்டை கடுதாசி போல்  ஒட்டியும் உள்ளது காவிக்கும்பல்.

பிற ஜனநாயக முற்போக்கு புரட்சிகர இயக்கங்கள் சுவரொட்டி ஒட்டினால், மக்கள் அதிகாரம் தமது அமைப்பின் பெயருடன் தொடர்பு எண்ணையும் அச்சிட்டு சுவரொட்டிகளை ஒட்டினால் கூட காவல்துறை அதை தடுக்கிறது.

அப்படி ஒட்ட ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மோப்பம் பிடித்து வந்து, போஸ்டரையும் பசைவாளியும் பாய்ந்து பிடுங்கும் கோவை மாநகர காவல் துறையினர், தற்போது ஒட்டப்பட்ட ஹிந்தி சுவரொட்டி குறித்து கள்ள மவுனம் காக்கிறார்கள்.

இதைக் கண்டித்து முற்போக்கு ஜனநாயக புரட்சிகர அமைப்புகள் ஒன்றிணைந்து கோவை ராமகிருஷ்ணனின் தலைமையில் புகார் மனு தந்த உடன் சிசிடிவி மூலம் புலனாய்வு செய்வதாக பசப்பி சமாளிக்கின்றனர்.

தோழர் கோவை இராமகிருஷ்ணன் தலைமையில் தோழர்கள் புகார் கொடுத்தனர்.

மறுபுறம் பிஜேபிக்கு எதிராகவும், இந்தியா கூட்டணிக்கு ஆதரவாகவும் வாக்களிக்க சொல்லி சுவரொட்டி ஒட்டிய ரஹ்மானை  பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கி கும்பல் சுற்றி வளைத்து மிரட்டி, தாக்குதலையும் தொடுத்துள்ளது.

இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது . ஒருபுறம், தேர்தல் ஆணையம் மூலம் சட்டபூர்வமாகவே இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் இயக்கங்களின் அமைப்புகளின் குரல்வலையை நெரிக்கிறது. மறுபுறம், சங்கிகளோ பகிரங்கமாக சுவரொட்டி ஒட்டிய வரை தாக்குகின்றனர்; இந்தி மொழியில் பெயர் இல்லாத அனாமதேயே சுவரொட்டிகளையும் நகர் முழுக்க ஒட்டுகின்றனர். இதற்கு காவல்துறையினரின் மறைமுக ஒத்துழைப்பும் தாராளமாக கிடைக்கிறது.

இப்படி வாக்குப் பதிவுக்கு முன்னரே தேர்தலை தலைமையேற்று நடத்தும் தேர்தல் ஆணையத்தின் உண்மை முகம் பளிச்சென்று அம்பலம் ஆகிறது. தனக்கு ஒத்து வரக்கூடிய அதிகாரிகளை  தனக்குத் தேவையான தொகுதிகளில் பணியிட மாற்றம் செய்து பொருத்தியிருப்பதன் மூலம் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற காவிக் கும்பலின் தவிப்பு புரிகிறது.

இப்படி ஒரு தரப்புக்கு சார்பாக கூச்ச நாச்சமின்றி  செயல்பட்டு  பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் தலைவர்களை சிறையில் அடைப்பது, எதிர்க்கட்சியினரின் வங்கிக் கணக்குகளை முடக்குவது, ஜனநாயக சக்திகளின் பிரச்சார உரிமையை தடுத்து  அலைக்கழிப்பது என செயல்பட்டு வரும் அரசை எப்படி நம்புவது? இவர்கள் பூத்துகளில் வைக்கும் EVM மிஷின்களின் மீது எந்த அடிப்படையில் வாக்காளர்கள் நம்பிக்கை வைப்பது?

இதுவழக்கமான தேர்தல் அல்ல என்பதற்கு மேலே விவரித்து இருக்கும் சில சம்பவங்களே போதுமானது. எனவே பாசிஸ்டுகளின் கீழ்த்தரமான சதிகளை முறியடிப்போம். காவிப் பாசிசத்தை கருவறுப்போம். ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்!

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here