லக பொருளாதாரத்தில் இந்தியா 4வது பெரிய நாடாகிறது. ஜி 20 மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறது. ரஷ்யா – உக்ரைன் போரைக்கூட நிறுத்தும் அளவுக்கு வல்லமை பெற்றவர் மோடி என்றெல்லாம் சமூகவலைத்தளங்களிலும், டிவி விவாதங்களிலும் சுயதம்பட்டம் அடிக்கிறார்கள் மோடி பக்தர்கள்.

ஆனால் நிலைமை என்னவோ இந்தியாவில் வசிக்கும் மக்கள் பட்டினியால் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். உலக பட்டினிக் குறியீட்டில் 125 நாடுகள் தாவரிசைப்படுத்தப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் உலகளாவிய பட்டினி குறியீட்டு எண்ணில் இந்தியா28.7 புள்ளிகள் பெற்று 111வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 107வது இடத்தில் இருந்த இந்தியா 111வது இடத்திற்க்கு  ‘முன்னேறி’யுள்ளது.

இந்த பட்டியலில் பின்தங்கிய நாடுகளான பாகிஸ்தான் 102வது இடமும், வங்காளதேசம் 81வது இடமும், நேபாளம் 69வது இடமும், சமீபத்தில் திவால் நிலைக்கு சென்ற இலங்கை 60வது இடமும் பெற்று இந்தியாவை விட சிறப்பான இடத்தில் உள்ளது.

உலகப்பட்டினி குறியீட்டில்  ‘முன்னேறிய’ இந்தியா!

அதேபோல குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடையில் இருக்கிறதா என்று கணக்கிட்டால், இந்தியாவில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருப்பதாக ஆய்வுமுடிவு கூறுகிறது.

ஆனால் இந்த புள்ளி விவரங்களை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. நரேந்திரமோடி உலகின் நம்பர் 1 தலைவர் என்று சொன்னால் மட்டுமே ஏற்றுக் கொள்ளும் பண்புடையது தான் இந்தியாவை ஆளும் பாசிச கும்பல்.

மோடிக்கு ஆதரவான கருத்துக்களை மட்டுமே பரப்பும் வகையில் கட்டமைக்கப்பட்ட இந்திய ஊடகங்கள் இதுப்பற்றி வாய்திறக்காமல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போருக்கு ஒத்துஊதி வருகின்றன. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவுக்கு வேலை செய்யும்  முக்கிய பணியையும் தொடங்கி விட்டதால் இதுப்பற்றி வாய்திறக்க வாய்ப்பில்லை.

சமீபத்தில் தான் இந்திய பணக்காரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முகேஷ் அம்பானி மீண்டும் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக  ‘முன்னேறி’யுள்ளார். அதானி 2 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ 8.08 லட்சம் கோடி இது கணக்கில் வந்த சொத்து மதிப்பு.

அம்பானியின் சொத்து கடந்த 5 ஆண்டுகளில் 2.1 மடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானியின் சொத்து 57 சதவீதம் சரிந்து  ரூ.4.47 லட்சம் கோடியாக உள்ளது. நமக்கெல்லாம் கொரோனா காலத்தில் தடுப்பூசி போட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டிய அதார் பூனாவாலா 2.78 லட்சம் கோடியுடன் 3ஆம் இடத்தில் உள்ளார். இப்படி இந்தியாவில் உள்ள 57  செல்வந்தர்களின் சொத்து மதிப்பு நடப்பாண்டில் இரட்டிப்பாகியுள்ளதாக ஹூருண் இந்தியா தெரிவிக்கிறது.

உலகப்பட்டினி குறியீட்டில்  ‘முன்னேறிய’ இந்தியா!

ஒருபுறம் பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துக் கொண்டிருக்க, மறுபுறம் இந்தியாவில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதிலிருந்தே பாசிச மோடி அரசு யாருக்காக அள்ளும் பகலும் உழைக்கிறது என்பதையும், இந்தியாவின் வளர்ச்சி யாருக்கானது என்பதையும் நம்மால் எளிதில் புரிந்துக் கொள்ள முடியும். பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்தால் உழைக்கும் மக்களின் பட்டினி சாவுகளும் அதிகரிக்கும்.

அதற்கு சமீபத்திய உதாரணம் கொரோனா காலத்தில் ஊரடங்கு அறிவிப்பால் தொழிலாளர்கள் வேலையிழந்து ரோட்டில் உணவுக்காக கையேந்திய அதே நாட்களின் அதானியின் சொத்து மதிப்பு 400 சதவீதம் உயர்ந்தது. எந்த நெருக்கடியான காலத்திலும் முதலாளிகளும் செல்வந்தர்களும் சோத்துக்கு கையேந்தியதில்லை என்பதே வரலாறு.

இதையெல்லாம் சங்கிகளிடம் பேசி புரியவைக்க முடியாது. அவர்களை பொறுத்த வரையில் 111 என்பது பெரிய எண், நாம் ‘முன்னேறி’ தானே இருக்கிறோம் என்பார்கள். அதனால் இதனை நாம் மக்களிடம் தான் கொண்டு  செல்ல வேண்டும். அவர்களிடம் இந்த பாசிச கும்பலை அம்பலப்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:

மக்களிடம் பிடுங்கும் வரிப்பணங்களை எல்லாம், மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தாமல், கார்ப்பரேட்டுகளின் கஜானாக்களை நிரப்புகிறது. உழைக்கும் மக்கள் இங்கு இங்கு பட்டினியில் வாடும் அதே நேரத்தில் அம்பானிகள் சொத்தும் பல மடங்கு உயர்கிறது. மோடிக்கும் கவலை இருக்கலாம், நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தும் நண்பன் அதானியின் முதலிடத்தை தக்கவைக்க முடியவில்லையே என்று… மோடியின் ஏக்கம், கவலை எல்லாம் அதானி அம்பானிகளின் வளர்ச்சியே.

கார்ப்பரேட்டுகளுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் அடிவருடிகளான பாசிஸ்டுகள் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்கும் வரை  இந்த நிலை மாறாது. பட்டினி சாவுகள் அதிகரிக்கலாம். பாசிஸ்டுகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிந்து மக்களுக்கான அதிகாரம் நிறுவாமல் உழைக்கும் மக்களுக்கான விடியல் சாத்தியமில்லை. அதுவரை துவளாமல் போராடுவோம்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here