மோடி தலைமையிலான பாசிச பாஜக ஆட்சியில் அமர்ந்த 2014 க்குப் பிறகு இந்தியாவில் சமூக வலைதளங்களின் மீதானத் தடைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பாராளுமன்றத்தில் டிசம்பர் 2023 – ல் பதிலளித்த மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MEITY) துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஜனவரி 2018 முதல் அக்டோபர் 2023 வரையிலான காலகட்டத்தில் 36,838 URL எனப்படும் இணையதள மூலங்களை தடை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதே காலகட்டத்தில் X (முன்பு டிவிட்டர்) எனும் அரசியல் உரையாடல்கள் அதிகமாக நடக்கும் தளத்திலும் 13,660 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதில் இருந்து, அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியும் போக்கு அதிகரித்துள்ளது. ஃபேஸ்புக், யூடியூப் போன்ற நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்தியாவில் முடக்கப்பட்ட “ஹிந்துத்துவா வாட்ச்”!

இதற்கு சமீபத்திய உதாரணமாக, ஜனவரி 27 முதல் அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் “ஹிந்துத்துவா வாட்ச்” என்ற இணையதளம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்வதற்கு முன்பாக அந்த இணைய தளத்தின் நிறுவனரான ரகிப் ஹமீத் நாயக்கிற்கு, உங்களது இணையதளம் முடக்கப்படலாம் என MEITY எச்சரிக்கை அனுப்பியது. அதேபோல, சென்ற மாதத் தொடக்கத்தில் அமைச்சகம் சார்பாக X நிறுவனத்திற்கு ஹிந்துத்துவா வாட்ச்சை இந்தியாவில் தடை செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவுக்கு அடிபணிந்து ஜனவரி 16 முதல் X கணக்கை முடக்கியது அந்த நிறுவனம்.

ஆர்ட்டிகிள் 14 இணைய இதழ் சார்பாக ஹிந்துத்துவா வாட்ச் நிறுவனர் நாயக்கிடம் கேட்டபோது, “இந்தியாவில் எமது இணையம் மற்றும் X கணக்கு முடக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து எமக்குத் தெரியாது. இந்தியாவில் எமது இணையதளத்தை தடை செய்ததால் அதிர்ச்சி அடைந்தேன், ஆனால் ஆச்சரியப்படவில்லை. எமது இணையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் அவர்கள் மீதான வன்முறைகள் குறித்த 3000 செய்திகளும், 1600 வீடியோக்களும் உள்ளன. எனவேதான் மோடியின் அரசும் அதன் ஆதரவாளர்களும் இதை தடை செய்துள்ளனர்” என்றார்.

வெறுப்புப் பிரச்சாரங்களை அம்பலப் படுத்தினால் தடை!

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 – ன் பிரிவு 69 ஏ -ன் கீழ் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாட்டு தொடர்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றின் நலங்களுக்காக சமூக ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட MEITY – க்கு அதிகாரம் உள்ளது. ஆனால் இதற்கு மாறாக
2017 ஆம் ஆண்டு முதல் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஹிந்துத்துவாவினரின் வெறுப்புப் பிரச்சாரத்தை வெளியிட்ட பல இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. சமீபத்திய தடைதான் ஹிந்துத்துவா வாட்ச் மீது விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து கூறிய நாயக், “கடந்த இரண்டு ஆண்டுகளில் X நிர்வாகமானது, இந்திய அரசு மற்றும் சில பாஜக மாநில அரசுகளின் அழுத்தத்தால் 26 பதிவுகளை நீக்கச் சொல்லி புகார் வந்திருப்பதாக தெரிவித்தது. அதில் சிலவற்றை மட்டும் நீக்காமல், பலவற்றை நீக்கியும் உள்ளது. இந்திய அரசாங்கமே தரவுகளைத் திரித்து பரப்புகிறது. ஆனால் உண்மையானத் தரவுகளை வெளியிடுபவர்களை முடக்குகிறது” என்றார்.

ஆட்சியின் அவலங்களை, கொள்கைகளை விமர்சிக்கும் X பதிவுகள் மற்றும் இணையப் பதிவுகளை மோடி அரசு தொடர்ந்து தடுப்பதாக பல்வேறுக் குற்றச்சாட்டுகள் உள்ளன. வெளிநாட்டு செய்தி அறிக்கைகள், பத்திரிகையாளர்களின் கணக்குகள், ஊடக இணைய தளங்கள் மற்றும் புலனாய்வு ஆவணப் படங்களை இந்தியாவில் தடை செய்கிறது. இந்திய அரசு எடுக்கும் தணிக்கை நடவடிக்கைகள் பெரும்பாலும் ரகசிய உத்தரவாகவே அனுப்பப்படுகின்றன.

அதேபோல தனது சொந்த விதிகளையே மதிக்காமல் அதை மீறும் வகையில்தான் செயல்பாடுகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதுள்ள சட்டங்கள் பயனுள்ள வகையில் மேல்முறையீட்டு முறையை அனுமதிக்கவில்லை. எனினும் ஒன்றிய அரசின் தடைக்கு எதிராக சிலர் நீதிமன்றங்களை நாடியும் தீர்வு ஏதும் கிடைப்பதில்லை.

சட்டங்களை மதிக்காத மோடி அரசு!

இணைய தளங்களின் உள்ளடக்கத்தை தடுப்பதற்கான நெறிமுறைகள் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2009 – ல் விவரிக்கப்பட்டுள்ளது. இவை தகவல் தொழில்நுட்பத் தடுப்பு விதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அதில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு சில ஆய்வுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஆனால் மோடி அரசு இதையெல்லாம் மதிக்காமல் சட்டங்களை மீறி செயல்படுகிறது.

உதாரணமாக விதி எண் 7 – ன் படி ஒன்றிய அரசு நியமித்த ஒரு அதிகாரியின் தலைமையில் உள்துறை, சட்டம், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு குழுவானது, அரசின் தடுப்புக்கான கோரிக்கையை ஆய்வு செய்ய வேண்டும். விதி எண் 8, இந்தக் குழுவின் தலைவர் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கம் எனக் கூறப்படும் விஷயத்தை வெளியிட்ட நபருக்கு அழைப்பாணை அனுப்பி வரவழைத்து, குழுவின் முன் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதன் பிறகு நடவடிக்கைத் தேவை எனக் கருதும் பட்சத்தில், குழு சார்பாக தகவல் தொழில்நுட்ப துறையின் செயலருக்கு பரிந்துரையை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். அங்கு அங்கீகரிக்கப்பட்ட பிறகு தான் இணைய அணுகளைத் தடுக்க சம்பந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனத்திற்கு உத்தரவிட முடியும். அவசர நிலைகளில் MEITY நேரடியாக நடவடிக்கை எடுத்தாலும் இந்த வழிமுறைகளை 48 மணி நேரத்தில் செய்தாக வேண்டும் என்ற விதி உள்ளது.

“இந்த உரிய பாதுகாப்பான விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றினால் போதும். ஆனால் நடைமுறையில் அவை கண்மூடித்தனமாக மீறப்படுகின்றன” என்கிறார் சுதந்திர இணையதள அமைப்பின் ஆலோசகரான ராதிகா ராய். மேலும் தடுக்கப்படும் உள்ளடக்கத்தைத் தோற்றுவித்தவருக்கு MEITY எந்த அறிவிப்பும் செய்யாமல், விசாரணைக்கும் அழைப்பு விடுக்காமல் இருப்பதால் தங்களது இடுகை அல்லது கணக்கு எப்போது, ஏன் தடுக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியாமலேயே போகிறது என்றார் அவர்.

“ஹிந்துத்துவா வாட்ச் விவகாரத்தைப் போல பயனர்களுக்கு தெரிவிக்கும் பொறுப்பு அரசுக்கும், சமூக ஊடக நிறுவனங்களுக்கு உள்ளது. பெரும்பாலான நேரங்களில் பாதிக்கப்பட்ட நபரே அமைச்சகத்தை அணுக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதுவும் அவர்களது கணக்கு அல்லது பதிவு தடுக்கப்பட்ட பின்னரே அப்படி செய்ய வேண்டி உள்ளது” என்கிறார் ராய்.

ஒன்றிய அமைச்சகச் செயலாளரின் தலைமையிலான மறு ஆய்வுக் குழுவானது குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூடி MEITY – யின் தடை உத்தரவுகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும். தடை உத்தரவு சட்டப்படி இல்லையெனில், அதை நிராகரிக்க வேண்டும். ஆனால் இவையெல்லாம் நடப்பதே இல்லை. தடுப்பு விதிகளின் 16வது பிரிவு, பெறப்பட்ட அனைத்து கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கடுமையான ரகசியத் தன்மையை பராமரிக்க வேண்டும் என்கிறது.

மென்பொருள் சுதந்திரத்திற்கான சட்ட மையத்தின் ஆலோசகரான அர்ஜுன் அட்ரியன் டிசோசா, “இந்த ரகசியத் தன்மையானது இயற்கை நீதி மற்றும் நியாயமான விசாரணை முறைகளை மீறுவதாக உள்ளது. ஆணைகளை வெளியிடாத நிலையில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தெரியாமல் நீதிமன்றத்தை அணுக முடியாத சூழலையும் இது ஏற்படுத்துகிறது. மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 19 ஆவது பிரிவு வழங்கும் தனிநபரின் தகவல் அறியும் உரிமையை இத்தகைய உத்தரவுகள் மறுப்பதாகவும் உள்ளது” என்றார்.

போதுமான முறையீடுகள் செய்யப்படாதது ஏன்?

சமீப காலங்களில் MEITY – யின் தடை உத்தரவுகள் அதிகரித்துள்ள போதிலும், அதற்கு எதிரான முறையீடுகள் மிகக் குறைவாகவே உள்ளன. அதற்கான காரணங்களில் முதலாவதாக, MEITY தனது தடுப்பு உத்தரவின் நகலை தர மறுப்பதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதில் சிரமம் ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்:

இரண்டாவதாக, நீதிமன்றங்களை அணுகுவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாதது. இது குறித்து முன்னாள் தலைமை நீதிபதி என்.வி ரமணா ஜூலை 2022 – ல், “பெரும்பான்மையான இந்தியர்கள் நீதிமன்றங்களை அணுக முடியாத நிலை உள்ளது. போதிய விழிப்புணர்வு இன்றியும், வேறு வழியின்றியும் அவர்கள் தவிக்கிறார்கள்” என்றார். மூன்றாவதாக ஒவ்வொரு தணிக்கை உத்தரவுகளின் மீதான மனுக்களை பரிசீலித்தால், இதே போன்ற பிற வழக்குகள் தங்களிடம் வந்து குவியும் என்ற பொதுவான உணர்வு நீதிமன்றங்களுக்கு உள்ளது.

இணையதளம் குறித்தான தற்போதைய சட்டங்கள் மற்றும் விதிகள் வெளிப்படை தன்மையின்றி உள்ளன. மேலும் மேல்முறையீட்டுக்கான வாய்ப்பு பயனில்லாமல் இருப்பதாலும், அப்படியே முறையிட்டாலும் அரசுக்கு எதிராக உத்தரவுகள் ஏதும் வராது என்பதால், ஒன்றிய அரசாங்கம் கட்டுப்பாடற்ற அதிகாரத்துடன் செயல் படுவதாக சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

கருத்து சுதந்திரத்துக்கு கல்லறை கட்டும் காவி பாசிஸ்டுகள்!

2014 முதல் இணையத் தணிக்கை உத்தரவுகள் அதிகரித்துள்ளதும், X போன்ற தளங்கள் அரசாங்கத்துக்கு இணக்கமாக செயல்படும் போக்குகளும் கருத்து சுதந்திரம் பற்றிய கவலைகளை அதிகரிக்கின்றன. முன்பிருந்த twitter நிறுவனம் ஜூலை 2021 – ல் ஒன்றிய அரசின் தணிக்கை உத்தரவுகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போதுள்ள X, Facebook மற்றும் youtube போன்ற சமூக வலைதள நிறுவனங்களும் மோடி அரசின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து நடந்து வரும் சூழல் உள்ளது.

சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி, ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் இன்றைய பாசிச பாஜக அரசு, பெரும்பாலான வெகுஜன ஊடகங்களை தன்வயப்படுத்திய நிலையில், தான் செய்யும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும்,பொய்ப் பிரச்சாரங்களையும் அம்பலப்படுத்தும் சமூக வலைதளங்களையும் தடை செய்கிறது. இந்தப் பாசிச கும்பலுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்டியே ஆக வேண்டும்.

  • குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here