லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஆதிக்கத்தை பலவீனப் படுத்தும் எந்த ஒரு நிகழ்வையும் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும்.
அந்தக் கண்ணோட்டத்தில் வெனிசுலா மக்களின் இடது சாரி ஆதரவு முக்கியத்துவம் பெறுகிறது. எமது தளத்தில் தோழர்.கலையரசன் எழுதிய கட்டுரையை மீள் பதிவு செய்கிறோம்.

தி இந்து தமிழ் பத்திரிகையில், “வாழும் போதே நரகமாகும் வெனிசுலா” என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் பல உண்மைக்கு புறம்பான தகவல்களை கற்பனையாக புனைந்து எழுதி உள்ளார். அரசியல் பிரச்சார நோக்கில் எழுதப்படும் இது போன்ற கட்டுரைகள் எந்த லாஜிக்கும் இல்லாமல், புனைவுகளையும், அரைவாசி உண்மைகளையும் கலந்து எழுதப் படுகின்றன. இவற்றை தி இந்து போன்ற தரமான பத்திரிகைகள் கூட பிரசுரிப்பதன் மூலம் அவற்றின் நன்மதிப்பை குறைத்துக் கொள்கின்றன.

ஜெ.சரவணன்: //ஒருகாலத்தில் லத்தீன்- அமெரிக்க நாடுகளிலேயே பணம் கொழிக்கும் மிக செழிப்பான நாடாக வெனிசுலா இருந்தது. அதிக எண்ணெய் வளம் மிக்க நாடு.//
எண்ணை வளம் மிக்க நாடுகள் எல்லாம் “பணம் கொழிக்கும் நாடு” என்று நினைத்துக் கொள்வது சிறுபிள்ளைத்தனமானது. வெனிசுவேலா மட்டுமல்ல, அங்கோலா, நைஜீரியா, இந்தோனேசியா, என்று பல எண்ணெய் வளம் மிக்க நாடுகள் இன்னமும் ஏழை நாடுகளாக இருக்கின்றன.
எண்ணெய் விற்பனையால் கிடைக்கும் வருமானம் ஒரு சில பணக்காரர்களின் பைகளை மட்டுமே நிரப்புகின்றது. பெரும்பான்மை மக்களுக்கு அதனால் எந்த ஆதாயமும் கிடைப்பதில்லை. எண்ணை ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானம் அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி உள்ளதா? குறைந்த பட்சம், அம்மக்களின் அத்தியாவசியத் தேவைகளையாவது பூர்த்தி செய்துள்ளதா? இதுவே நாம் கேட்க வேண்டிய கேள்வி.
ஒரு காலத்தில் வெனிசுவெலாவிலும் அந்த நிலைமை தான் இருந்தது. அதாவது, எண்ணை ஏற்றுமதியால் கிடைத்த வருமானம் ஒரு சில பணக்காரக் குடும்பங்களின் சொத்துக்களாக முடங்கிக் கிடந்தது. பெரும்பான்மை மக்கள் எண்ணையால் எந்த நன்மையையும் கிட்டாதவர்களாக வறுமையில் வாடினார்கள். அதனால் தான், எண்ணெய் வருமானம் மக்களுக்கு கிடைக்கச் செய்வதாக வாக்குறுதி கொடுத்து பொதுத் தேர்தலில் போட்டியிட்ட சாவேஸை பெரும்பான்மை வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
சாவேஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், தான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நேர்மையாக நிறைவேற்றினார். எண்ணெய் விற்பனையால் அரசுக்கு கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதி, அரசு மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப் பட்டது. அப்போது தான் பிரச்சினை ஆரம்பமானது.
உண்மையில், வெனிசுவேலா எண்ணையின் பெரும் பகுதி அமெரிக்காவுக்கு தான் ஏற்றுமதியானது. அதே நேரம், அந்தக் கால கட்டத்தில் சர்வதேச சந்தையில் எண்ணை விலை மிக அதிகமாக இருந்தது. இதனால் அரச கஜானா நிரம்பியதால், சாவேசின் மக்கள் நலத் திட்டங்களுக்கான செலவினத்திற்கும் இலகுவாக பணம் கிடைத்தது.
இதில் உள்ள ஆபத்துகளை உணராமல், சாவேஸ் உட்பட, வெனிசுவேலா ஆட்சியாளர்கள், அன்றைய பொருளாதார நிலைமையை குறைவாக மதிப்பிட்டமை தான் தவறு. பல தசாப்த காலமாக வெனிசுவேலா எண்ணையின் பெரும் பகுதியை வாங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா, ஒரு காலத்தில் பொருளாதாரத் தடை கொண்டு வந்தால் என்ன நடக்கும்? திடீரென வேறு வாடிக்கையாளரை பிடிக்க முடியுமா?
அதே மாதிரி, சர்வதேச சந்தையில் எண்ணை விலை பாதியாக குறைந்தால் என்ன நடக்கும்? அதை மட்டுமே நம்பியிருந்த பொருளாதாரம் வீழ்ச்சி அடையாதா? இது தான் நடந்தது. இந்த உண்மைகளை மறைத்து விட்டு, எல்லாவற்றையும் சாவேஸ், மடூரோ தலையில் தூக்கிப் போடுவது ஒரு பக்கச் சார்பான அரசியல் பிரச்சாரம் அன்றி வேறென்ன?
//2010-ல் ஆரம்பித்தது வெனிசுலாவின் இருண்ட காலம். அப்போது அதிபராக இருந்த ஹியாகோ சாவேஸ் வெனிசுலா மக்களுக்காக சில முடிவுகளை எடுத்தார். அதாவது, அனைத்தையும் அரசு மயமாக்குவது.//
ஒரு சில பணக்காரர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருந்த எண்ணை வருமானத்தை கொண்டு, பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக செலவினத்தை ஈடுகட்டும் அரசின் திட்டம் எப்படி “இருண்ட காலம்” ஆகும்? மக்களைப் பொறுத்தவரையில் அது தான் பொற்காலம். ஆனால், தமது பண வருவாய் குறைவதை பொறுக்க முடியாத பணக்காரர்களுக்கு மட்டுமே அது இருண்ட காலம்.
மேலும், “அனைத்தையும் அரசு மயமாக்கியதாக” குறிப்பிடுவது ஒரு தவறான தகவல். இன்று வரையில், வெனிசுவேலா பொருளாதாரத்தின் பெரும் பகுதி தனியார் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கிறது. நாட்டிற்கு பெருமளவு ஏற்றுமதி வருமானம் ஈட்டித்தரும் பெற்றோலிய நிறுவனம் சாவேஸ் காலத்திலேயே அரசு மயமாக்கப் பட்டது. அதைக் கூட செய்யா விட்டால், பெட்ரோல் முதலாளிகள் எப்போதோ வெனிசுவேலா பொருளாதாரத்தை முடக்கி இருப்பார்கள். அவர்கள் தக்க தருணத்திற்காக எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
//உற்பத்தி நிறுவனங்களை எல்லாம் கையகப்படுத்தி ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்தார். உணவு உற்பத்தியை இராணுவத்திடம் கொடுத்தார். அவர் போட்ட கணக்கு ஒன்று, நடந்தது ஒன்று. சாவேஸ் திட்டமிட்ட கொள்கைகள் எதுவுமே ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை.//
இந்தக் கட்டுரையாளர், எது ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்று அழுகிறார்? எத்தனயோ நட்டத்தில் இயங்கிய தொழிற்சாலைகளை தொழிலாளர்கள் பொறுப்பேற்று நடத்தினார்கள். அதற்கு அரசும் ஊக்கமளித்தது. இது ஜனநாயகம் இல்லையா?
தனியார் வீட்டுமனை நிறுவனங்கள் வாடகைக்கு விடும் வீடுகளில், குடியிருப்பாளர்கள் மாதக் கணக்காக வாடகை கட்டா விட்டாலும், அவர்களை வெளியேற்றி தெருவில் விட முடியாது. இந்தச் சட்டம் சாவேஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப் பட்டது. இது ஜனநாயகம் இல்லையா?
அது சரி, உலகில் எந்த நாட்டில் தனியார் நிறுவனங்கள் ஜனநாயகத்தை பின்பற்றுகின்றன? எந்த நிறுவனத்தில் ஒரு நிர்வாகி அல்லது மானேஜர்கள், ஊழியர்களின் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்? ஆனால், வெனிசுவேலாவில் சாவேஸ் அரசு கையகப் படுத்திய நிறுவனங்கள் யாவற்றிலும் ஜனநாயக ரீதியான பொது வாக்கெடுப்பு நடந்துள்ளது.
உற்பத்தி நிறுவனங்கள், உணவு உற்பத்தி எல்லாம் இன்றைக்கும் தனியாரிடம் தான் உள்ளன. அதனால் தான், தனியார் துறை முதலாளிகள் உற்பத்தியை குறைத்தும், பொருட்களைப் பதுக்கியும் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்க முடிந்தது. இது தனியார் துறையினர் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு உருவாக்கிய பொருளாதார நெருக்கடி.
தி ஹிந்து கட்டுரையாளர் குறிப்பிட்ட மாதிரி, சாவேஸ் அனைத்தையும் அரசு மயமாக்கி இருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. அதைச் செய்யாமல் விட்டது தான் தவறு. எல்லோருக்கும், குறிப்பாக உற்பத்தியை கட்டுப்படுத்தும் சக்தி படைத்த தனியார் துறையினருக்கு சுதந்திரம் கொடுத்ததன் பலனை மக்கள் இன்று அனுபவிக்கிறார்கள்.
அரசு நிறுவனங்கள் எதுவும் இல்லையா என்று கேட்கலாம். இருக்கின்றன. ஒரு சிலவற்றை இராணுவ அதிகாரிகள் நிர்வகிப்பதும் உண்மை தான். ஆனால், வெனிசுவேலாவின் மொத்த பொருளாதார உற்பத்தியுடன் ஒப்பிட்டால் அந்த அரசு நிறுவனங்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவு. பத்து சதவீதம் கூட இருக்காது.
//அத்துடன் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தொழில் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்நியச் செலாவணி பெருமளவில் பாதிக்கப்பட்டது.//
இது ஓர் உண்மைக்குப் புறம்பான கூற்று. வெனிசுவேலா நாட்டில் இன்று வரைக்கும் அந்நிய நிறுவனங்கள் முதலிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. பிரச்சினை அதுவல்ல. பணவீக்கம் அதிகரிப்பதாலும், நிச்சயமற்ற தன்மை காரணமாகவும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கு வர்த்தகம் செய்வதற்கு தயங்குகின்றன. இருப்பினும் தவித்த முயல் அடிப்பது போன்று, இந்த நேரத்திலும் முதலிடும் காரியவாதிகள் இருக்கிறார்கள். அண்மையில் நெதர்லாந்தில் இருந்து சென்ற இளம் வணிகர் ஒருவர், அங்கு ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, மிகக் குறைந்த விலைக்கு வீட்டு மனைகளை வாங்கி வைத்துள்ளார். ஒரு காலத்தில் நிலைமை சீரடைந்தால் அவற்றை நல்ல விலைக்கு விற்று விடுவது தான் திட்டம். (de Volkskrant, 30.01.2019)
தனியார் துறைக்கு சுதந்திரம் இருந்தாலும், வெளிநாட்டு மூலதனத்தை தாராளமாக அனுமதித்தாலும், தேசப் பாதுகாப்பு அல்லது பொது மக்களின் நன்மை கருதி சில அத்தியாவசிய துறைகளில் முதலிட அனுமதிக்கப் படுவதில்லை. உதாரணத்திற்கு, பெட்ரோலிய நிறுவனம், துறைமுகம், விமானநிலையம் போன்ற துறைகளில் தனியார் முதலீடு அனுமதிக்கப் படுவதில்லை. மற்ற படி, யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் முதலிடலாம், வணிகம் செய்யலாம்.
அதிகம் பேசுவானேன். எதிர்க்கட்சிகளுக்கான ஆதரவு எங்கிருந்து கிடைக்கிறது? தனியார் நிறுவனங்கள் நூறு சதவீத ஆதரவு வழங்குகின்றன. ஊடகங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தனியார் நிறுவனங்கள் நடத்தும் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் அனைத்துமே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான பிரச்சார சாதனங்கள் தான். அவை அரசுக்கெதிரான செய்திகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த போதிலும் தடைசெய்யப் படவில்லை. சுதந்திரமாக இயங்க விடப் பட்டுள்ளன.
//வெனிசுலாவின் கடன் 105 பில்லியன் டாலர். அதன் கையில் இருப்பது வெறும் 10 பில்லியன் டாலர்.//
பல வருட காலமாக பொருளாதாரத் தடைகளை விதித்து வந்த அமெரிக்கா, எதிர்க்கட்சித் தலைவரை ஜனாதிபதியாக அங்கீகரித்ததுடன் நில்லாது, எண்ணை வாங்கியதற்காக கொடுக்க வேண்டிய பணத்தையும் தர மாட்டேன் என அடம் பிடித்தது. அத்துடன் நில்லாது அமெரிக்க வங்கிகளில் இருந்த வெனிசுவேலா நாட்டின் அந்நிய செலாவணியும் பறிமுதல் செய்யப் பட்டது. பிரித்தானியாவில், Bank of England இல் வெனிசுவேலா வைத்திருந்த பில்லியன் டாலர் பெறுமதியான தங்கத்தை திருப்பித் தர முடியாது என்று அறிவித்தது.
நீங்கள் உங்களிடமிருந்த பணத்தையும், நகைகளையும் பாதுகாப்பதற்காக நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து வைக்க, அவர் அதையெல்லாம் சுருட்டி வைத்துக் கொண்டு தர முடியாது என்று அடாவடித்தனம் பண்ணுவது அநீதி இல்லையா? இந்த அடாவடித்தனங்களை கண்டிக்காமல், “வெனிசுவேலாவின் கையில் இருப்பது வெறும் பத்து பில்லியன் டாலர்” என்று நையாண்டி செய்வது நியாயமா? மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போலுள்ளது இந்தக் கட்டுரையாளரின் வன்மம் நிறைந்த எழுத்துக்கள்.
//நாட்டிலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறியிருக்கிறார்கள். வெளியேற நினைப்பவர்கள் பாஸ்போர்ட் கூட எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.//
ஐயா! அவர்கள் பொருளாதார அகதிகள். பாஸ்போர்ட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நாட்டில் யுத்தம் நடந்தால் மட்டும் தான் அகதிகள் வெளியேற வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாகவும் பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்லலாம். அதிகம் பேசுவானேன். இலங்கை போன்ற யுத்தம் நடந்த நாடுகளில் இருந்து வந்தவர்களையும், “பொருளாதார அகதிகள்” என்று தான் மேற்கத்திய நாடுகளில் அழைக்கிறார்கள்.
வெனிசுவேலாவில் ஏன் பொருளாதார நெருக்கடி வந்தது? சாவேஸ் கொண்டு வந்த சோஷலிச திட்டங்கள் பெரும்பாலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை அடியொற்றி கொண்டு வரப் பட்டன! அதாவது, மேற்கு ஐரோப்பாவில் தனியார் துறை இயங்குவதற்கு தாராளமாக அனுமதிக்கிறார்கள். அதே நேரம், அரசுக்கு கிடைக்கும் வரிப் பணம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப் படுகின்றது. அது வீட்டு வாடகை செலவை ஈடுகட்டுதல், உணவுப் பொருட்களுக்கு கொடுக்கும் மானியம் என்று பல வகைப் படும். அதே திட்டங்களை தான் வெனிசுவேலாவில் சாவேஸ் அரசு நடைமுறைப் படுத்தியது. அது தான் இங்கே பிரச்சினை.
தனியார் நிறுவனங்கள் வீட்டு வாடகையை உயர்த்த விடாமல் அரசு சட்டம் போட்டு தடுத்தது. அதனால், புதிய வீடுகள் கட்டப் படுவது நின்று விட்டன. குழந்தைகளுக்கான பால்மா போன்ற பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அரசு மானியம் கொடுத்தது. அதனால், உணவு உற்பத்தியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தனியார் நிறுவனங்கள் பொருட்களை பதுக்க ஆரம்பித்தன. இதற்குள் கடத்தல்காரர்களும் புகுந்து தமது கைவரிசையை காட்டினார்கள். வெனிசுவேலாவில் அரசு மானிய உதவியால் குறைந்த விலைக்கு வாங்கப்படும் பால்மா, அயல் நாடான கொலம்பியாவில் அதிக விலைக்கு விற்கப் பட்டது. இது ஓர் உதாரணம் மட்டுமே.
அதன் விளைவு தான் லட்சக்கணக்கானோரின் வெளியேற்றம். தனியார் துறையினரின் திட்டமிட்ட புறக்கணிப்பால், நாட்டில் அனைத்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கிடையில் அமெரிக்க பொருளாதாரத் தடை காரணமாக, பிரதானமான ஏற்றுமதிப் பொருளான பெட்ரோல் விற்பனையும் வீழ்ச்சி கண்டது. ஒரு நாட்டில் பொருளாதாரப் பிரச்சினையை உண்டாக்க இவ்வளவும் போதாதா?ஒரு காலத்தில் அடித்தட்டு மக்கள் முழுவதும் ஒரு மனதாக அரசை ஆதரித்தார்கள். இன்று அவர்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்புகின்றன. இருப்பினும், மடூரோ அரசு அம்மக்களின் ஆதரவை இழந்து விட்டது என்று கூற முடியாது. இன்றைக்கும் புலம்பெயர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் அரச எதிர்ப்பாளர்களாக உள்ளனர். இது ஒரு வகையில் புலம்பெயர்ந்தோரின் உளவியல். அது ஒரு வகை சுயநல அரசியல். அவர்கள் தமது சொந்த நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
//குற்றங்கள் அதிகரிக்கின்றன. திருடர்களும், தீவிரவாதிகளும் அதிகரித்துவருகின்றனர்.//
ஐயா, பெரியவரே! லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிகளவு குற்றங்கள் நடப்பது ஒன்றும் புதினம் அல்ல. வெனிசுவேலாவில் சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, அதிகளவு குற்றங்கள் நடப்பதால் தலைநகர் கராகஸ் ஒரு பாதுகாப்பற்ற தலைநகரம் என்ற கெட்ட பெயரைப் பெற்றிருந்தது. அயல்நாடான கொலம்பியாவில் குற்றங்கள், திருடர்கள், தீவிரவாதிகள் மட்டுமல்லாது உலகளவில் போதைவஸ்து கடத்தும் மாபியா கும்பல்களாலும் பாதிக்கப் பட்டுள்ளது. அதெல்லாம் உங்கள் கண்களுக்கு தென்படுவதில்லையா?
//அதிபர் சாவேஸ் மறைந்த பிறகு, நிகோலஸ் மதுரோ அதிபரானார். அவர் மீது மக்கள் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தனர். கிட்டதட்ட வெனிசுலாவை மீட்பது என்பது, மணலைக் கயிறாகத் திரிக்கும் சவால்தான். ஆனால், தீவிர இடதுசாரி எனத் தன்னை முன்னிறுத்தும் மதுரோ ஆறு ஆண்டுகளாகியும் வெனிசுலாவை மீட்க எந்த முயற்சியையும் செய்யவில்லை.//
மடூரோ அதிபரான காலத்தில் தான், சர்வதேச சந்தையில் எண்ணை விலை பாதியாக குறைந்திருந்தது. அத்துடன், பெருமளவு எண்ணெயை வாங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா பல்வேறு வகையான பொருளாதாரத் தடைகளை கொண்டு வந்தது. வெனிசுவேலாவில் வர்த்தகம் செய்து வந்த அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேறின. தனியார் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர்.முன்பு சாவேஸ், பின்னர் மடூரோ ஆகியோர் தம்மை “தீவிர இடதுசாரிகள்” என்று அறிவித்துக் கொண்ட போதிலும், தனியார் நிறுவனங்கள் இயங்க அனுமதித்திருந்தனர். அந்நிய மூலதனத்தையும் தடுக்கவில்லை. இது ஒரு காலத்தில் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை. “எந்த முயற்சியும் செய்யவில்லை.” ஆம், பொருளாதாரத்தில் தனியார் துறையினரின் ஆதிக்கத்தை குறைத்து, நிறுவனங்களை அரசுமயமாக்கவில்லை. இது தவறு தான்.
//எதிர்கட்சிகள் இவரது ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்கின்றன. மக்கள் புரட்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.//
ஏற்கனவே பொருளாதார நெருக்கடி காலத்தில் நடந்த தேர்தலில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. அதனால் ஜனாதிபதி மடூரோ கொண்டு வந்த பல திட்டங்களை நிறைவேற்ற விடாமல் முடக்கி உள்ளனர். மேலும், அண்மையில் தான், கடந்த இரண்டு வருடங்களுக்குள் பொதுத் தேர்தல் நடந்தது. மடூரோ கூட கடும் போட்டிக்கு பின்னர் தான் ஜனாதிபதியாக தெரிவானார். அப்படி இருக்கையில் குறுகிய காலத்திற்குள் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்தக் கோருவது ஜனநாயக விரோதம் அல்லவா?
“மக்கள் புரட்சியில் ஈடுபடுகின்றனர்” என்று, இந்தக் கட்டுரையாளர் எதை அடிப்படையாக வைத்துக் கூறுகின்றார்? எதிர்க்கட்சி கூட்டங்களுக்கு சேரும் ஆதரவாளர்களின் எண்ணிக்கையை வைத்தா? இந்தியாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ், அல்லது தமிழகத்தில் திமுக கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் சேரும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களின் எண்ணிக்கையை வைத்து, “இந்திய மக்கள் புரட்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” என்று கூற முடியுமா?
//அதிபர் மதுரோ இதற்கெல்லாம் அமெரிக்காதான் காரணம் என்கிறார். வெனிசுலாவின் உள்விவகாரங்களில் தலையிட்டால் வெள்ளை மாளிகையிலிருந்து ரத்தக்கறையோடுதான் வெளியே வருவார் என்கிறார்.//
ஐயனே! அமெரிக்கா வெனிசுவேலா மீது படையெடுக்கக் காத்திருப்பது தான் இன்றைய பிரச்சினை. உள்விவகாரங்களில் தலையிடுவது காலங்காலமாக நடக்கிறது. ஆனால், ஒரு நாட்டின் மீது படையெடுத்து ஆக்கிரமிக்கப் போவதாக மிரட்டுவதை சாதாரணமான விடயமாக கடந்து போக முடியாது. அமெரிக்க இராணுவம் படையெடுத்து வந்தால், வெனிசுவேலா இராணுவம் புளியம்பழம் பறித்துக் கொண்டிருக்க வேண்டுமா? தகுந்த பதிலடி கொடுக்க வேண்டாமா?
//ரஷ்யாவும், சீனாவும் வெனிசுலாவுக்கு ஆதரவாக இருப்பதுபோல் பாவ்லா காட்டுகின்றன. ஆனால், உண்மையில் வெனிசுலாவுக்கு உதவ எந்த நாடோ அமைப்போ தயாராக இல்லை.//
அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்குப் பின்னர் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் எண்ணெய் விற்பதற்கு ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. ஆமாம், இந்தியாவும் தான்! அமெரிக்க பயமுறுத்தல்களுக்கு மத்தியிலும் இந்தியா வெனிசுவேலா எண்ணையை வாங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவுக்கு எண்ணை விநியோகம் செய்யும் நாடுகளில் வெனிசுவேலா மூன்றாம் இடத்தில் உள்ளது.
ரஷ்யாவுடனான உறவு வித்தியாசமானது. ரஷ்யாவின் பன்னாட்டு எண்ணை நிறுவனமான Rosneft, வெனிசுவேலாவின் பல்வேறு அந்நிய கடன்களை அடைப்பதற்கு பணம் கொடுத்துள்ளது. அதற்குப் பதிலாக அரச எண்ணை நிறுவனமான PDVSA, ரஷ்யாவுக்கு, அதாவது Rosneft கம்பனிக்கு எண்ணெய் விற்க வேண்டும். இதுவும் நவகாலனித்துவம் தான். ஆனால், இன்றைய நிலையில், வெனிசுவேலாவுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை.
//வெனிசுலாவின் இன்றைய நிலை என்பது எந்த நாட்டுக்கும் ஏற்படக்கூடியதுதான். இன்றைய பணமய பொருளாதாரத்தில் போட்டி நாடுகள் எந்த சூழ்ச்சியையும் செய்யலாம்.//
கட்டுரையாளரே! நீங்கள் குறிப்பிடும் “பணமய பொருளாதாரம்” என்பதன் உண்மையான பெயர் நவ- லிபரலிச பொருளாதாரம். “போட்டி நாடுகள்” என்பதன் அர்த்தம் (மேற்கத்திய) ஏகாதிபத்திய நாடுகள். இந்த உண்மையை மூடி மறைப்பதற்கு எப்படி எல்லாம் மாய்மாலம் செய்கிறீர்கள்?
இந்தியாவில் தற்போது நுகர்வு என்பது அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. நாலைந்து செல்போன் வைத்திருக்கிறோம். வீடு முழுக்க ஆடைகளால் நிறைந்திருக்கின்றன. நிறுத்த இடமில்லை என்றாலும் நாலைந்து கார்களை வாங்குகிறோம். இதனால் வேகமான பொருளாதாரமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறோம்.
இதை நுகர்பொருள் கலாச்சாரம் என்று சொல்வார்கள். இன்றைய நவ- லிபரலிச முதலாளித்துவ அமைப்பு அதன் மேல் தான் கட்டப் பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமே உரிய விடயம் அல்ல. உலகம் முழுவதும், ஏன் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் கூட ஏற்கனவே பல தசாப்த காலமாக நடைமுறையில் உள்ளது. இதை இன்னொரு விதமாக கிரெடிட் கார்ட் பொருளாதாரம் என்றும் அழைக்கலாம். மக்கள் நுகர்வோர்களாக மட்டுமல்லாது, நிரந்தரக் கடன்காரர்களாக மாற்றப் பட்டுள்ளனர். இந்தக் கடன்களில் தான் பொருளாதாரம் வளர்கிறது.
//இந்தியா – வெனிசுலா: இந்தியா, தனியார் மய கொள்கையை தீவிரமாக்கி வருகிறது. இது நிறுவனங்களுக்கிடையே போட்டியை அதிகப்படுத்தும். இதனால் நாட்டின் வளங்கள் மீதும், மக்களின் மீதும் பெரும் சுரண்டலை நிகழ்த்தும். வெளிநாட்டு நிறுவனங்கள் எப்போது எல்லாவற்றையும் சுரண்டிக்கொண்டு கடையை காலி செய்வார்கள் என்று தெரியாது. அப்போது இந்தியாவின் கஜானா காலியாவதும் உறுதி.//
தனியார்மயத்தை தீவிரப் படுத்தும் பொழுதே இந்தியாவின் கஜானா காலியாகி விடும். ஏனெனில், அரசு நிர்வாகம், பாதுகாப்புத் துறை தவிர்ந்த அனைத்தையும் தனியார்மயமாக்குவது தான் நியோ லிபரலிச சித்தாந்தம். அதைத்தான் இந்தியாவுக்கு கடன் கொடுக்கும் நாடுகள், IMF, உலகவங்கி என்பன வலியுறுத்துகின்றன. அத்துடன் வரிகளையும் குறைக்குமாறு வற்புறுத்துகின்றன.
உதாரணத்திற்கு, இந்தியாவில் முதலிடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டப்படி மிகக்குறைந்த வரி கட்டுகின்றன. (அதைக் கூட ஒழுங்காக கட்டுவதில்லை.) இந்திய அரசு அந்த வரித் தொகையை கூட்டுவதற்கு தயங்குகிறது. அப்படி செய்தால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா வராமல் வேறு நாடுகளை தேடி ஓடி விடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். அப்படியானால் எப்படி இந்திய கஜானா நிரம்பும்?
மேற்கு ஐரோப்பாவில் கார்ப்பரேட் வரித் தொகை மிக அதிகம். அதனால் தான் அந்த நாடுகளில் கஜானா நிரம்புகிறது. அரசு அந்தப் பணத்தை எடுத்து மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிட்டு வருகின்றது. வெனிசுவேலாவும் அதைத் தான் பின்பற்ற விரும்பியது. மேற்கு ஐரோப்பிய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆனால், நடந்தது என்ன?
அமெரிக்கப் பொருளாதார தடை. தனியார் துறையினரின் பதுக்கல்கள், உற்பத்திக் குறைப்புகள். அதனால் எழுந்த அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு. அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகள், லட்சக்கணக்கான அகதிகளின் வெளியேற்றம்….
இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளின் ஆட்சியாளர்கள், வெனிசுவேலாவின் உதாரணத்தை பின்பற்றி தம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு கனவு கூடக் காணக் கூடாது. மீறினால் வெனிசுவேலா நிலைமை தான் உங்களுக்கும் உண்டாகும். இது அந்நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.
  • கலையரசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here