ழைகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக என்று கூறிக்கொண்டு ஆயுள் காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), விபத்துக் காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) மற்றும் ஓய்வூதிய திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (APY) என மூன்று நலத்திட்டங்களை மே 2015 இல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.

ஏழைகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டதாக மோடி அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால் இந்த திட்டங்களுக்கு குடிமக்களின் ஒப்புதல் இன்றி (வலுக்கட்டாயமாகவும் திருட்டுத்தனமாகவும்) மக்களை இந்த திட்டத்தில் சேர்த்துள்ளது ஒன்றிய அரசு. அது எப்படி செய்ய முடியும் என்று கேட்கிறீர்களா?

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா போன்ற அரசு வங்கிகளில் பணம் போட்டுள்ள குடிமக்களின் வங்கிக் கணக்கிலிருந்து அந்த மக்களுக்கே தெரியாமல் பணத்தை பிடித்து இந்தத் திட்டத்திற்கு கொடுத்து விடுவது மூலம் இப்பேற்பட்ட திருட்டுத்தனத்தை செய்து வருகிறது மோடி அரசு.

இதனால் அந்த மக்களின் பணம் திருட்டுத்தனமாக எடுக்கப்படுகிறது என்பது ஒரு பிரச்சனை. தங்களுக்கு இத்தகைய காப்பீட்டுத் திட்டம் இருக்கிறது என்பதே சம்பந்தப்பட்ட மக்களுக்கு தெரியாது என்பதால் இந்தத் திட்டத்தால் பலன் அடைய வேண்டிய மக்களுக்கு அந்த பலன் போய் சேர்வதே இல்லை என்பது மற்றொரு பிரச்சனை.

உதாரணமாக, ஒருவர் ஆயுள் காப்பீட்டில் (PMJJBY)வலுக்கட்டாயமாக திருட்டுத்தனமாக இணைக்கப்பட்டு அவரது வங்கி கணக்கில் இருந்து இந்தத் திட்டத்திற்காக பணம் பிடிக்கப்படுகிறது என்ற நிலையில் அவர் இறந்துவிடுவதாக வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவரின் குடும்பத்தினருக்கு அவரின் பெயரில் ஆயுள் காப்பீடு போடப்பட்டு இருப்பதே தெரியாது. எனவே அவர் இறந்ததால் அந்த குடும்பத்திற்கு வர வேண்டிய காப்பீட்டுத் தொகையை அந்த காப்பீட்டு நிறுவனத்திடம் அவரது குடும்பத்தினர் கேட்கப் போவதே இல்லை. இதனால் அந்த நிறுவனத்திற்கு தான் லாபமே ஒழிய சம்பந்தப்பட்ட நபருக்கு அல்ல.

காப்பீட்டு திட்டத்தில் ஒருவர் சேர்த்துக் கொள்ளப்படும் பொழுது அவரின் வாரிசுதாரர்(அதாவது காப்பீடு எடுத்துள்ள நபர் இறந்துவிட்ட நிலையில் அவருக்கு பதிலாக யார் அந்த காப்பீட்டுத் தொகையை பெறுவது என்று அந்தக் காப்பீட்டு விண்ணப்பத்தில்–காப்பீட்டு பத்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நபர்) யார் என்பதை குறிப்பிட வேண்டும்.

காப்பீட்டு திட்டத்தில் மக்களுக்குத் தெரியாமலேயே திருட்டுத்தனமாக சேர்ப்பதால் அவரின் குடும்பத்தில் உள்ள நபர்களின் பெயர் வங்கி ஊழியர்களுக்கு தெரியாது. பிறகு எப்படி வாரிசுதாரர் பெயரை குறிப்பிட முடியும்?

ஒருவரை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கும் பொழுது அவரின் வாரிசுதாரராக அந்த நபரின் தந்தையை குறிப்பிட்டு விட்டனர். வங்கியும் கணக்கு தொடங்கும் பொழுது மக்கள் குறிப்பிட்டுள்ள தனது தந்தையின் பெயரை பார்த்து இவ்வாறு எழுதியுள்ளனர். வங்கி ஊழியர்கள் புத்திசாலிகள் என்று நினைக்கத் தோன்றுகிறதா? அதுதான் இல்லை.

இந்த புத்திசாலிகள் ஏற்கனவே இறந்து போய்விட்ட தந்தைமார்களையும் கூட காப்பீட்டுதாரரின் வாரிசாக குறிப்பிட்டு விட்டனர்.

இந்த ஊழியர்களை புத்திசாலிகள் என்று கூற முடியாதுதான். ஆனால் குற்றவாளிகள் என்று கூற முடியுமா? என்றால் அது கேள்விக்குறிதான்.

வங்கி மேலதிகாரிகளின் நிர்பந்தம், நெருக்கடிகள் காரணமாகத்தான் பெரும்பான்மையான ஊழியர்கள் இப்படிப்பட்ட மோசடி வேலைகளில் ஈடுபட்டு இருக்கின்றனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தங்களது வங்கிக் கணக்கில் இருந்து தங்களுக்கு தெரியாமலேயே காப்பீட்டுக்கான பிரிமியம் பிடித்தம் செய்யப்படுவதை அறிந்த வங்கி வாடிக்கையாளர்கள் அது குறித்து புகார் தெரிவித்து பிரச்சினைகள் செய்த பொழுது, இது கணினியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் தான் ஏற்பட்டது என்று கூறி சமாளிக்க வங்கி அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர். அதையும் மீறி வழக்கு தொடுத்து போராடுபவர்களிடம் சமாதானம் பேசி நஷ்ட ஈடு கொடுப்பதாக வங்கி அதிகாரிகள் கூறுவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதேசமயம் வேலையை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தத்தால், மேலதிகாரியின் உத்தரவுப்படி செயல்பட்டு, வங்கி வாடிக்கையாளரின் கணக்கில் பிடித்தம் செய்த தொகையை வங்கி ஊழியர்கள் “நமக்கு பிரச்சனை வந்துவிடக் கூடாது” என்பதற்காக தமது சொந்தக்காசை கொண்டு திருப்பி செலுத்தி பிரச்சனையை முடித்துக் கொள்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட இலக்கை அடையும் வகையில் வங்கி ஊழியர்கள் இப்படி முறைகேடாகவேனும் மக்களை காப்பீட்டு திட்டங்களில் சேர்த்தாக வேண்டும். தவறினால், இதைப் பற்றி மத்திய நிதி அமைச்சகம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்று வங்கிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

மத்திய அரசின் காப்பீட்டு திட்டங்களில் மக்களை கட்டாயமாக சேர்த்தேயாக வேண்டும் என்று வங்கி ஊழியர்களை நிர்பந்திப்பது தங்களை மிகவும் பாதிக்கிறது என்று வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:

சட்ட விரோதமான முறையில் காப்பீட்டு திட்டங்களுக்கு ஆட்களை சேர்க்க மாட்டோம் என்று வங்கி ஊழியர்கள் கூறினால் மேல் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற பிரச்சனை ஒருபுறம்; அவர்களின் நிர்பந்தத்திற்கு பணிந்து செயல்பட்டால், பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களால் (தங்களைப் பற்றி குறிப்பேட்டில் அந்த புகார்கள் பதிவு செய்யப்பட்டால்) தங்களது நன்மதிப்பு பாதிக்கப்படும் என்ற கொடுமை மறுபுறம் என்று மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் வங்கி ஊழியர்கள் என்பதும் தற்பொழுது தெரிய வந்திருக்கிறது.

ஏப்ரல் 26, 2023 தேதி நிலவரப்படி 16.19 கோடி பேர் PMJJBY-லும் 34.18 கோடி பேர் PMSBY-லும் சேர்ந்துள்ளனர்.

தடயவியல் தணிக்கை மேற்கொள்ளப்பட்டால், இந்த பதிவுகளில் பெரும்பாலானவை வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக காப்பீட்டு திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வரும் என்று வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர்.

நாட்டையும் நாட்டு மக்களையும் சுரண்டி கொழுப்பதற்கு அம்பானி, அதானிகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் மோடி, நாட்டு மக்களின் பாதுகாப்பாளனாக தன்னை காட்டிக் கொள்வதற்காக இப்படிப்பட்ட அயோக்கியத்தனங்களில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதைத்தான் “மோடி மஸ்தான்” வேலை என்று தமிழகத்தில் குறிப்பிடுகிறார்களோ?

  • குமரன்
    செய்தி ஆதாரம்: The wire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here