தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களின் நீராதாரத்தை தனக்குள் தேக்கி வைத்திருக்கும் முல்லைப் பெரியாறு அணை குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது இரண்டு தேசிய இன மக்களுக்கு இடையில் பகை உணர்ச்சியை தூண்டுகின்ற வகையில் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த முல்லை பெரியாறு அணை தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதியான, கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் கொள்ளளவு 155 அடியாகும். ஏறக்குறைய 15.5 டிஎம்சி தண்ணீரை இதில் சேமித்து வைக்க முடியும்.

1996-1997 ஆண்டுகளில் இந்த ’முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்கு’ என்று தென் மாவட்டங்களில் குறிப்பாக தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் சுவரெழுத்து, தெருமுனைப் பிரச்சாரம், பேருந்து மற்றும் வீடுகள் பிரச்சாரம் மூலம் மக்களை அணிதிரட்டினோம். தேனியில் விவசாயிகளின் விடுதலை முன்னணியின் சார்பில் விவசாயிகளின் பேரணி, பொதுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளோம். அப்போது எமது அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் வெளியீடு ஒன்றையும் கொண்டு வந்து இரண்டு மாவட்ட மக்கள் மத்தியில் இதன் உண்மைகளை எடுத்துரைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டோம்.

மீண்டும் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் முல்லைப்பெரியாறு அணையின் மீது பல்வேறு வதந்திகளை கேரளா அரசும், அங்கிருந்த மலையாள இனவெறி ஊடகங்களும், ’முற்போக்கு’ என்ற பெயரில் திரியும் சில பிற்போக்கு சக்திகளும் அச்சத்தை கிளப்பியது. தமிழகத்தில் அதற்கு எதிரான போராட்டம் கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டும் வகையில் ’முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு சங்கம்’ நிறுவி தேனி மற்றும் மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், பல கிராமங்களில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தோம்.

கேரளத்தை ஆளுகின்ற இடதுசாரி அரசாங்கமாக இருந்தாலும் சரி; காங்கிரஸ் அல்லது பாஜகவாக இருந்தாலும் சரி; முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தில் ஒரு நிலைப்பாட்டையும், கேரளத்தில் ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கும் இரட்டை அணுகுமுறையை அம்பலப்படுத்தி மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை கொண்டு சென்றோம்.

எமது தொடர்ச்சியான பிரச்சாரங்கள் மற்றும் மதிமுக மற்றும் தமிழகத்தில் செயல்படும் பல்வேறு அமைப்புகளின் போராட்டங்களின் காரணமாக தமிழகத்தின் உரிமை உச்ச நீதிமன்றத்தில் நிலைநாட்டப்பட்டது பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்று 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் இந்தத் தீர்ப்பை கேரளா அரசு எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை இந்த அணை மிகவும் பழமையான அணை என்பதால் 146 அடி தண்ணீரை தேக்கி வைத்தால் அந்த அணை உடைந்துவிடும், இடுக்கி உட்பட கேரளாவின் ஐந்து மாவட்டங்கள் அழிந்து விடும் என்றெல்லாம் கற்பனையாக கதை அளந்து வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள குமுளி மற்றும் தேக்கடி ஆகிய பகுதிகள் மட்டுமின்றி அந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கேரளத்தின் பெரும் பணக்காரர்களுக்கு சொந்தமான தேயிலை, ஏலக்காய், காப்பி எஸ்டேட்டுகளும், குளுகுளு சூழலை அனுபவிக்கும் வகையில் நட்சத்திர சொகுசு விடுதிகளும் இருப்பதால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கூடாது என்று அவர்கள் கேரள அரசுக்கு உத்திரவிடுகின்றனர். அவர்களின் உத்திரவுக்கு பயந்து கேரள அரசு தொடர்ந்து நீர் தேங்குவதை அனுமதிப்பதில்லை. இந்த உண்மைகளையும், முல்லைப் பெரியாரின் வரலாற்றையும் இளம் வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.

முல்லைப் பெரியாறு அணையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழக அரசியல் பொதுப்பணித் துறை சிறப்பு தலைமை பொறியாளரான ஓய்வுபெற்ற வீரப்பன் பிபிசிக்கு அளித்த நேர்காணலில் இந்த பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி தெளிவாக விளக்கியிருந்தார். முல்லைப் பெரியாறு அணை எப்படி பலப்படுத்தப்பட்டு வைக்கிறது என்பதை விளக்கியிருக்கிறார். பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டும் வகையில் 2011 முதல் எமது இணையதளத்தில் வந்திருந்த கட்டுரைகளையும் காணொளிகளையும் வெளியிடுகிறோம்.

                                                                        தோழமையுடன்,

                                                                          ஆசிரியர் குழு,
                                                                                   மக்கள் அதிகாரம்.

கேரள வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு நீர் காரணமல்ல : மத்திய நீர் ஆணையம்

“கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது தமிழ்நாடு நியாயமாக நடந்துகொண்டிருக்க வேண்டும். அணையின் நீரை முன்கூட்டியே திறந்துவிட்டிருக்க வேண்டும்” என்று கூறியவர்கள் எல்லாம் வரிசையாக வாருங்கள். கேரளாவில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளம் குறித்த மத்திய நீர் ஆணையத்தின் அறிக்கை வந்துவிட்டது. கேரளாவில் ஏற்பட்ட இந்த வெள்ளத்திற்கு அதீதமாகப் பெய்த பருவமழையே காரணமென்றும் அணைகளிலிருந்து திறந்தவிடப்பட்ட தண்ணீர், குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் காரணமல்லவென்றும் அந்த அறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டுவிட்டது.

இந்த அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை, இரண்டின் நீர்பிடிப்புப் பகுதிகள், பெரியாறில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து இந்த அறிக்கையில் உள்ளவற்றின் சுருக்கம் இதுதான்.

1. கேரளாவில் ஆண்டு தோறும் பெய்யும் மழையின் அளவு 3000 மி.மீ. இதில் 90 சதவீதம் 6 மாத காலத்தில் பெய்கிறது. இந்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19ஆம் தேதிவரை மிகக் கடுமையான மழை அங்கே பெய்தது. இந்த காலகட்டத்தில் பெய்ய வேண்டிய மழை 1649.5 தான். ஆனால், 2346.6 மி.மீ அளவுக்கு மழை பெய்துவிட்டது. வழக்கமான அளவைவிட 42 சதவீதம் அதிகம். ஆகஸ்ட்டில் மட்டும் 164 சதவீதம் அதிகம் பெய்தது. ஆகஸட் 8-9 தேதிகளில் பெய்த மழையை அடுத்து எல்லா அணைகளும் தங்கள் முழுக் கொள்ளளவை எட்டத் தொடங்கியிருந்தன. இதற்குப் பிறகு 14ஆம் தேதி துவங்கி 19ஆம் தேதிவரை மீண்டும் கடுமையான மழை பெய்தது. இதனால், மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 13ல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 1924க்குப் பிறகு ஆகஸ்ட் 15-17ல் அவ்வளவு மழை பெய்தது இப்போதுதான்.

2. ஆகஸ்ட் 15-17ல் ஏற்பட்ட மழை பீர்மேட்டை மையம் கொண்டு கேரளா முழுவதும் விளாசித் தள்ளியது. அணைகள் முழுமையாக நிரம்பியதால் மாநிலத்தில் உள்ள 35 அணைகள் திறக்கப்பட்டன. 26 ஆண்டுகளுக்குப் பிறகு முழுவதும் நிரம்பியதால், அதன் மதகுகளும் திறக்கப்பட்டன.

3. கேரளாவில் மொத்தம் 57 அணைகள் இருக்கின்றன. இதில் 4 அணைகள் தமிழகத்தால் இயக்கப்படுகின்றன. இந்த 57 அணைகளில் 7 அணைகள் மிகப் பெரியவை. கேரள அணைகளில் தேக்கப்படும் நீரில் 74 சதவீதம் இந்த அணைகளில்தான் தேக்கப்படுகின்றன. அவை, 1. இடுக்கி, 2. இடமலையாறு, 3. கல்லாடா, 4. காக்கி, 5. பரம்பிகுளம், 6. முல்லைப் பெரியாறு, 7. மலம்புழா.

4. இருநூற்றி நாற்பத்து நான்கு கிலோ மீட்டர் நீளத்திற்கு ஓடும் பெரியாறுதான் கேரளாவின் மிகப் பெரிய நதி. இதன் தண்ணீர் பாயும் பகுதிகளில் 98 சதவீதம் கேரளாவிலும் 2 சதவீதம் தமிழகத்திலும் உள்ளது. இந்த நதியின் குறுக்கில் கட்டப்பட்டுள்ள மூன்று பெரிய அணைகள் முல்லைப் பெரியாறு, இடமலையாறு, இடுக்கி ஆகியவை. முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதியின் பரப்பு 237 ச.கி.மீ. இடுக்கிக்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் இடையில் உள்ள நீர்பிடிப்புப் பகுதியின் பரப்பு 605 ச.கி.மீ.

5. ஆகஸ்ட் 15 லிருந்து 17 வரை மூன்று நாட்களில் முல்லைப் பெரியாறு நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் அளவு மட்டும் 1147 மி.மீ. முல்லைப் பெரியாறு அணைக்கும் இடுக்கிக்கும் இடையில் உள்ள பரப்பில் பெய்த மழை 1445 மி.மீ.

6. இந்த பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீலேஸ்வரம் என்ற இடத்தில் வெள்ளத்தைக் கண்காணிக்கும் தளம் இருக்கிறது. அதன் பெயர் Neeleshwaram G&D stie. அந்த அளவீட்டின்படி,. ஆகஸட் 15-17ல் நதியில் பாய்ந்த நீரின் அளவு 1.93 பில்லியன் கன அடி. ஆகஸ்ட் 15-17 காலகட்டத்தில் இடுக்கி அணைக்கு வந்த நீர், அதில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர், இடுக்கி அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் எவ்வளவு என்பதை வரைபடம் ஒன்றிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அதாவது இந்த மூன்று நாட்களில் இடுக்கி அணைக்கு வந்த நீரில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே முல்லைப் பெரியாறில் இருந்து வந்த நீர்.

7. இந்த அறிக்கையின் முக்கியப் பகுதி இங்கேதான் வருகிறது. அதாவது இடுக்கி அணைக்கு உச்சகட்டமாக நீர்வரத்து இருந்தபோது அணையிலிருந்து வினாடிக்கு 1500 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நீலேஸ்வரம் வெள்ள அளவீட்டு மையத்தில் ஓடிய வெள்ளத்தின் அளவு 8800 மில்லியன் கன அடி. இதில் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரான 1500 மில்லியன் கன அடியைக் கழித்தாலும் 7300 மில்லியன் கன அடி நீர் ஆற்றில் ஓடியிருக்கும். அது மழை நீர். இடுக்கி அணை திறப்புக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. வெள்ளத்திற்கும் மிகப் பெரிய இடுக்கி அணை திறப்புக்கும் சம்பந்தமில்லையென்றால், அதில் மூன்றில் ஒரு பங்கு நீரை இடுக்கிக்குத் திறந்த முல்லைப் பெரியாறு அணைக்கு என்ன தொடர்பு இருக்க முடியும்? பெரியாற்று வெள்ளத்தில் இடுக்கி அணையின் பங்கு மிக மிகக் குறைவு என்பதுதான் இதன் அர்த்தம்.

8. ஆகஸ்ட் 1-19 வரை பெய்த மொத்த மழையான 758.6 மி.மீ மழையில் 15-17 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 414 மி.மீ மழை பெய்திருக்கிறது. இதுதான் வெள்ளத்திற்குக் காரணம்.

படம் 2

9. புள்ளி விவரங்களை வைத்து நீங்களே ஒரு முடிவுக்கு வந்தால் போதுமா? அறிக்கையில் எங்காவது இதைச் சொல்லியிருக்கிறார்களா என்றால், ஆம் என்பதுதான் பதில். “கேரளாவில் உள்ள அணைகளால் வெள்ளம் ஏற்படவில்லை. அதே சமயம் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் அவை உதவவில்லை. அணையின் நீர்மட்டத்தை குறைவாக வைத்திருந்தால், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்று சொல்ல முடியாது. குறைவாக வைத்திருந்தாலும் முதல் நாள் மழையிலேயே அவை நிறைந்து, திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்” என்கிறது ஆணையம். (பார்க்க படம் -2.)

ஹிமான்ஷு தாக்கூர் தன் கட்டுரையில் சொன்னபடி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 147 அடியை எட்டியதாக ஒரு இடத்திலும் அறிக்கையில் சொல்லப்படவில்லை. இதைச் சுட்டிக்காட்டியதற்குத்தான் தமிழ்த் தேசியவாதிகளின் உளறல் என்றார்கள்.

நன்றி: Muralidharan Kasi Viswanathan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here