வீடு வீடாக குப்பைகளை சேகரிக்கும் துப்புரவு பணியாளர்களும் கையில் நோட்டுடன் “நோம்பி காசு குடுங்க சார்” என்கிறார்கள். பணத்தை தந்தால் வாங்காமல் நோட்டு பேனாவை தந்து “நோட்டில் எழுதிவிட்டு கொடுங்கள்” என்கிறார்கள். எதற்காக நோட்டில் எழுதச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் “நாங்க ஒவ்வொருத்தரும் வசூல் பண்றது எல்லாம் நோட்டில் எழுதி எடுத்துட்டு போய் மொத்தமா போட்டு அதிலிருந்து எங்களுக்குள் வந்து பிரிச்சு சமமா எடுத்துக்குவோம்; அதுக்காக தான் சார்” என்கிறார்கள். துப்புரவு தொழிலாளர்கள் தீபாவளி பணம் கேட்டு நிற்பதை பலரும் பார்த்திருப்பீர்கள்.

துப்புரவு வேலை செய்யும் இவர்களுக்கு  கான்ட்ராக்ட் முறையால் மாதத்திற்கு பத்தாயிரம் மட்டும்தான்(ஒரு சில இடங்களில் இதற்கும் குறைவான சம்பளமே தருகிறார்கள்) பெறுகிறார்கள். நம் வீடுகளில் குப்பை சேருவது என்பது தினந்தோறும் நடக்கிறது. அதேபோல் குப்பைகளை சேகரிப்பதும் தினம்தோறும் நடக்கிறது. தினந்தோறும் நடக்கக்கூடிய நிரந்தரமான இந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வேலை மட்டும் நிரந்தரம் இல்லை. ஒப்பந்த முறையை பயன்படுத்தி புரோக்கர்களும் அதிகாரிகளும் கல்லா கட்டுகிறார்கள்; உழைக்கும் மக்களை  தீபாவளிக்கு கையேந்தவும் வைக்கிறார்கள். ஆனால் மோடி முதல் நீதிபதிகள் வரை துப்புரவு தொழிலாளர்களுக்கு ‘பாதபூஜை’ மட்டும் செய்கின்றனர். அந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை தருவதில்லை.

தீபாவளி பணம் கேட்டு கையேந்தும் நிலை துப்புரவு தொழிலாளிகளுக்கு மட்டுமல்ல. பல நிரந்தரமற்ற வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் நிலைமையாக உள்ளது.

நாம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு வண்டியை எடுக்கும் போது  பணம் வாங்கும்  தொழிலாளி “தீபாவளி – நோம்பிக்காசு சார்” என்கிறார். நாமும் விரும்பிய பணத்தை தருகிறோம். இவர்கள் ஏன் கையேந்துகிறார்கள் என்று சிந்திக்காமல் கடந்து செல்கிறோம்.

பெட்ரோல் டீசல் என்பது பழம் காய்கறி போல் அழுகும் பொருள் அல்ல. விலை உத்தரவாதம் எப்போதும் இருப்பதால், பெட்ரோல் பங்க் முதலாளிகள் உத்தரவாதமான லாபத்தை அடைகிறார்கள். ஆனால் இதற்காக கால்கடுக்க நின்று உழைக்கும் தொழிலாளர்களை மதிப்பது இல்லை. அவர்களின் குடும்பமும் புத்தாடை அணிந்து, இனிப்புகளுடன், பட்டாசுகளுடன் தீபாவளியை கொண்டாட போனஸ் தருகிறார்களா என்றால் இல்லை.

கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு போனஸ் கேட்கும் உரிமை இல்லை. மீறி கேட்டால், “விருப்பம் இருந்தால் வேலைக்கு வா; இல்லையென்றால் நின்று கொள்” என்று முகத்தில் அறைவதுபோல் போல் பதில் வரும். இதனால்  பெட்ரோல் நிரப்பும் வேலை செய்த தொழிலாளிகள் வாகன ஓட்டிகளி்டம் கையேந்த வேண்டி உள்ளது.

நிரந்தர வேலை தரும் கவுரவம்!

கார்ப்பரேட் கம்பெனிகளில் நிரந்தர வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலை நேர்மாறாக உள்ளது. மாதம் 40 ஆயிரம் வரை சம்பளம் வாங்குபவர்கள் தமக்கென சங்கம் வைத்துள்ளார்கள். அந்த சங்கத்தின் மூலம் நிர்வாகத்துடன் போனஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

தங்கள் உழைப்பின் மூலம் இந்த ஆண்டு இத்தனை கோடி ரூபாய் லாபமாக நிற்கிறது; நாங்கள் உருவாக்கிய லாபத்தில் எங்களுக்கு உரிய பங்காக 20% கொடுங்கள், 30% கொடுங்கள் என உரிமையோடு கேட்கிறார்கள். நிரந்தர தொழிலாளர்கள் தமக்கான உரிமையான தொகையாக போனசை கேட்டு தன்மானத்துடன் பெரும்போது, அதே ஆலையில் பணிபுரியும் கான்ட்ராக்ட் தொழிலாளர்கள் கைவிடப்படுகின்றனர்.

நிரந்தர தொழிலாளர்களுக்கு எவ்விதத்திலும் குறையாத அளவு கான்ட்ராக்ட் தொழிலாளர்களும் உற்பத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்தான். ஆனால் அவர்கள் சட்டபூர்வ உரிமைகள் எதுவுமின்றி நிர்வாகத்தால் வஞ்சிக்கப்பட்டவர்களாக கைவிடப்படுகின்றனர். இவர்களும் தமது ‘முதலாளியான’ புரோக்கர் தருவதை வாங்கிக்கொண்டு திருப்தியடைந்து கொள்ள வேண்டியுள்ளது. இவர்களுக்கு தீபாவளி கசக்குமா – இனிக்குமா?

இருட்டில் மின்தொழிலாளர்கள்!

மின்வாரியத்தில் கான்ட்ராக்ட்டில் வேலை செய்யும் லைன்மேன்களின் நிலையும் இப்படித்தான் உள்ளது. வீட்டில் பவர் கட், லூஸ் கனெக்சன் என்றோ நாம் புகார் செய்யும் பொழுது நமக்காக போஸ்டில் ஏறி வேலை செய்கிறார்கள். இது தினம்தோறும் நடக்கும் வேலை.

மின்வாரியம் மாதம் முழுவதும் நமக்குரிய சேவையை வழங்கிவிட்டு உரிய கட்டணத்தை வசூலித்துக் கொள்வது என்பது திட்டமிட்டு நடக்கின்ற ஒரு நிரந்தர வேலை. ஆனால் அதில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளி மட்டும் நிரந்தரமி்ல்லாமல் இருப்பது என்பது எந்த வகையில் நியாயம்?

கையேந்த விடுவதுதான் குற்றம்!

இப்படி நம் கண் முன்னே உழைக்கும் பிரிவினர் பண்டிகை காலங்களில் தமது பிள்ளைகளின் நியாயமான விருப்பத்தை நிறைவேற்ற வேறு வழியில்லாமல் நம்மிடம் கையேந்தும் நிலைக்கு தாழ்த்தப்படுகின்றனர். இவர்களை இந்நிலைக்கு தள்ளும்  அதிகாரிகளோ மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர்; ஆயிரக்கணக்கான மக்களை  சுரண்டும் புரோக்கர்கள்  கோடிகளை குவிக்கிறார்கள்.

துறையின்  மண்டல – கோட்ட இயக்குனராக இவர்களுக்கு தனக்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்களை, தொழிலாளர்களை,  சட்டப்படியான உரிமைகளுடன் வேலை வாங்க துப்பில்லை என்றால், முதலில் இவர்கள் தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்ல வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளான  கவுன்சிலர், மேயர், எம் எல் ஏ உள்ளிட்டவர்களும்கூட இந்த கொடுமைகளை கண்டும் காணாமல் தான் இருக்கிறார்கள். உழைக்கும் மக்களை கையேந்த விடும் இவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான் .

புரோக்கர்களும் அதிகாரிகளும் ஆட்சியாளர்களுமே குற்றவாளிகள்!

அதிகாரிகளாகவும், நிரந்தர தொழிலாளர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் இருக்கின்றவர்களுக்கு  இந்த தீபாவளி எவ்வித நெருக்கடியையும் தரவில்லை. இவர்கள் மொத்த மக்களில்  சுமார் 20% என்று எடுத்துக் கொண்டால், எஞ்சியுள்ள 80% நிலை என்ன? அதிலும் குறிப்பாக இந்துக்களாக இருப்பவர்கள் தீபாவளி கொண்டாடியே ஆக வேண்டும் என்ற சமூக நிர்பந்தம் உள்ளவர்களின் நிலை என்ன? கட்டிக்கொடுத்த தன் மகளை தலைதீபாவளிக்கு அழைக்கும்  தந்தையின் மனநிலை கொண்டாட்டமாகவா இருக்கிறது.

இதையும் படியுங்கள்:

தீபாவளி தேவையா ? தந்தை பெரியார்
  WITNESS – மனசாட்சியை உலுக்கும் சமூக அவலத்தின் சாட்சியம்!

இந்துக்களுக்காக தாம்தான் இருப்பதாக அலப்பறை செய்யும் சங்கிகள் இப்போது தன் ஹிந்து சகோதரர்கள் கூனிக்குறுகி கையேந்துகிறார்களே என்று கொதிப்பதில்லை. போனஸ் தராத முதலாளிகளை  இந்து விரோதி என்று மறந்தும் பேசுவதில்லை. இந்துக்களை கையேந்துவிடும் கார்ப்பரேட்டுகளையும், நகராட்சி, மாநகராட்சி, பெருநகராட்சி அதிகாரிகளை தட்டி கேட்பதும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களை அடியாளாகவே பார்த்து பயன்படுத்தும் பாஜகவிடம் நாம் இப்படி எதிர்பார்ப்பது பொருத்தமில்லாதது தான்.

மக்களின் பாராமுகம்!

பெட்ரோல் பங்கிலோ, வீட்டு வாசலிலோ கையேந்துபவர்களிடம் 50 அல்லது 100 ரூபாயை கொடுத்து விட்டு நாம் ஏதோ பெரிய தாராளவான் போல், தர்ம பிரபு போல் கருதிக்கொண்டு கடந்து செல்கிறோம். சக மனிதனை, அதுவும் உழைத்து வாழும் மனிதனை கையேந்து நிலைக்குத் தாழ்த்தும் இத்தகைய கேடுகெட்ட செயலை கண்டிக்கவோ, எதிர்க்கவோ மனமின்றி உள்ளோம். இது நம்மை நினைத்து வெட்கி தலைகுனிய வேண்டிய அவலநிலை அல்லவா? உழைக்கும் மக்கள் கையேந்துவதற்கு நாம் இப்படி பாராமுகமாக இருப்பதுகூட ஒருவகையில் அடிப்படை காரணம்தான்! இந்த அவலத்திற்கு முடிவு கட்டுவோம்! சக மனிதனை மனிதனாக நடத்துவோம்!

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here