புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி நிறுவனரும், டெல்லி முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவாலை ‘மோடியின்’ அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 9 முறை சம்மனை நிராகரித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் என்று அவர் மீது பாஜகவினர் குற்றச்சாட்டுகின்றனர். காரணம் இந்த வழக்கில் தான் சாட்சியா? குற்றஞ்சாட்டப்பட்டவரா? என்பதையே அந்த சம்மன்கள் தெரிவிக்கவில்லை. இதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு கொடுத்திருந்தார்.
கடந்த 2 மாதங்களில் 2 மாநில முதல்வர்களை பாசிச மோடி அரசு கைது செய்துள்ளது. ஜனவரி மாதம் 31 ஆம் தேதி ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அரவிந்த் கெஜ்ரிவாலை அமாலாக்கத்துறை ஆணையம் கைது செய்துள்ளதும் நடந்துள்ளது.
இது திட்டமிட்ட நடவடிக்கை என்பது கண் கூடாக தெரிகிறது. இதில் 2 வகையான லாபம் பாஜகவுக்கு உண்டு. ஒன்று தேர்தல் பத்திரம் தொடர்பான செய்திகள் மக்களிடம் பேசு பொருள் ஆகாமல் கெஜ்ரிவால் கைதை பற்றி மட்டுமே பேச வைப்பது.
மற்றொன்று தன்னை ஊழலுக்கு எதிரானவன் என்பதை காட்டிக் கொண்டு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு இருக்கும் செல்வாக்கை குறைப்பது என காத்திருந்து கெஜ்ரிவாலை தூக்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தலுக்கான வேலைகளில் அனைத்து கட்சிகளும் மும்மரமாகியுள்ள நிலையில் கெஜ்ரிவால் கட்சிக்கு சிறிது தடுமாற்றத்தை ஏற்படுத்தும்.
கெஜ்ரிவால் கைதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அதிஷி கெஜ்ரிவாலின் கைதை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி போராடும் என்றும், இந்த கைதானது பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும் சேர்ந்து செய்த அரசியல் சதி என்று குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அதிஷி, “நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய ஒரு மணி நேரத்திற்குள், அவர்கள் கெஜ்ரிவாலின் வீட்டை வந்தடைந்தனர். இன்று அமலாக்கத்துறை ஒரு சுயாதீன அமைப்பு அல்ல. பாஜகவின் அரசியல் ஆயுதம்” என்றார்.
இதே வழக்கில் பாரதிய ராஷ்டிர சமிதி தலைவர் கே.கவிதாவும் மார்ச் 15 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 2022 ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பலர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 2023-ல் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி சஞ்சய் சிங்கை இதே மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அவரது வீட்டில் நீண்ட சோதனைக்கு பிறகு கைது செய்தது.
முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் மறுத்து வருகிறது. முன்னதாக மற்றொரு ஆம் ஆத்மி தலைவரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு கடந்த ஜூன்1, 2022 முதல் சிறையில் உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கி வைத்துள்ளது ஆளும் பாசிச கும்பல். எதிர்கட்சிகள் மீதான தாக்குதலையும் பல்வேறு வடிவங்களில் தொடுத்து வருகிறது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டித்து பேசியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப்பதிவில் “பயந்துப் போன சர்வாதிகாரி இறந்துப்போன ஜனநாயத்தை மீட்டெடுக்க விரும்புகிறார்” என்று கூறியுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் கைதை வன்மையாக கண்டிக்கிறோம். தேர்தல் விதிகள் அமுலில் இருக்கும் நிலையில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்ததற்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டானினும் தனது கண்டனத்தை பதிவுச் செய்துள்ளார்.
ஊழலை ஒழிப்பதாக வேசம் தரித்துக் கொண்டு தேர்தல் பத்திரம் மூலமும், பி.எம்.கேர் பண்ட் மூலமும், ரஃபேல் ஒப்பந்தம் மூலமும் பல ஆயிரம் கோடி ஊழல் செய்து வருகிறது. இவர்கள் நோக்கம் ஊழலை ஒழிப்பது அல்ல. மாறாக இந்தியாவில் எதிர்கட்சிகள் இல்லாமல் ஒழிப்பதே.
இதையும் படியுங்கள்:
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு எதிர்கட்சிகளை பலவீனம் அடைய செய்வதன் மூலம் வெற்றி பெறலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறது பாசிச பாஜக.
பாஜக சொல்படி நடந்திருந்தால் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தூய்மையின் மறுவடிவமாக ஆக்கியிருப்பார்கள். தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்று அறிந்த உடனேயே கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஊழல் ஒழிப்பு என்பது வேறு; எதிர்கட்சிகள் ஒழிப்பு என்பது வேறு. தற்போது மோடி அரசு நடத்திக் கொண்டிருப்பது ஊழல் ஒழிப்பு அல்ல. எதிர்கட்சிகளை ஒழிக்க மோடி அரசு நடத்தும் பாசிச தாக்குதல். அமலாக்கத்துறை, மைய புலனாய்வுத் துறை போன்ற அரசின் கட்டமைப்புகளை பாசிசத்தின் ஏவல்நாயாக கையாளும் மோடி அரசின் அயோக்கியத்தனமே இங்கு பிரச்சினை.
இந்த கைது நடவடிக்கைகள் நம்மை பாசிசம் என்ற பேராபத்து சூழ்ந்துள்ளது. அதனை விரட்ட பாசிச பாஜக தவிர்க்க முடியாமல் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கிறது. பாசிச பாஜகவை தோற்கடிப்பதன் மூலமே சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.
- நலன்