“பாசிச BJP–யை தோற்கடிப்போம்“INDIA கூட்டணியை ஆதரிப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் “ INDIA “ கூட்டணியை ஆதரித்து கோவை TVS நகர், பரணி தெரு பகுதி மக்களிடம் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி SRI – கிளை தோழர்கள் 12 பேர் 05/04/24 அன்று மாலை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் “நீங்கள் பிரச்சாரம் செய்யக் கூடாது” என தடுத்தனர். “எங்களது கருத்துக்களை மக்களிடம் கூறுகிறோம், நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்” என கேட்ட போது, பாஜக- வுக்கு எதிரான கருத்துக்களை மக்களிடம் பேசக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதோடு காவல்துறையை அழைத்து வந்து பிரச்சாரம் செய்த அனைவரையும் எங்கேயும் நகர முடியாதபடி அச்சுறுத்தினர். கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த SI மணிசேகரன், காவலர்கள் செல்வகுமார், கோவிந்தராஜ் ஆகியோர் தோழர்களைப் பேசவிடாமல் “அனுமதி பெற்றுதான் பிரச்சாரம் செய்யவேண்டும்” என கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியது மட்டுமில்லாமல் தோழர்கள் கையிலிருந்த அனைத்துத் துண்டறிக்கைகளையும் வலுக்கட்டாயமாக பிடுங்கிக்கொண்டனர்.
அதோடு தோழர்கள் ஒவ்வொருவருடைய பெயரும் முகவரியும் கட்டாயமாகச் சொல்லவேண்டும் என அராஜகத்தோடு நடந்து கொண்டனர். “தேர்தல் காலத்தில் மாலை நேரங்களில் DOOR CAMPAIN செய்ய கூடாது என எந்த தேர்தல் விதிகளில் உள்ளது?, அனைத்து கட்சியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர், எங்களை மட்டும் ஏன் தடுக்கிறீர்கள்?” என்ற தோழர்கள் தரப்பு நியாயத்தை எதையும் கேட்காமல் “என்னையே எதிர்த்து பேசுகிறாயா? சட்டம் எல்லாம் மாறிவிட்டது போய் தெரிந்து கொண்டு வா “ என மரியாதை இல்லாமல் பேசியதோடு, களைந்து செல்கிறீர்களா? இல்லை வழக்கு போட்டு சிறையில் அடைக்கவா? என மிரட்டல் விடுத்து காவல்துறையினர் பேசினர்.
உடன் வந்த தேர்தல் அதிகாரி என்ன ஏது என விசாரிக்காமல், தோழர்கள் கூறிய எதையும் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல், “அனுமதி பெற்றுதான் பிரச்சாரம் செய்ய வேண்டும்” என உண்மைக்குப் புறம்பான தகவலை அதிகாரத்தோடு கூறி தேர்தல் நடத்தை விதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு சட்ட விரோதமான முறையில் நடந்து கொண்டார். பிரச்சினையை கேள்விப்பட்டு வழக்கறிஞர்களும் களத்திற்கு வந்தனர். அதன் பின்னர் போலீஸ் பறிமுதல் செய்த பிரசுரங்களை ஒப்படைத்து விட்டு பின்வாங்கியது.
தேர்தல் அதிகாரி மற்றும் காவல் அதிகாரிகள் முழு சங்கிகளாகவே மாறி பாஜக கட்சித் தொண்டர்கள் போல நடந்து கொண்டனர். இப்படி குறிக்கிட்டதன் மூலம் உழைக்கும் மக்கள் மத்தியில் பாசிச பாஜகவின் செய்லபாடுகள் குறித்து பளிச்சென அம்பலப்பட்டுக் கொண்டனர்.
பாசிஸ்டுகளின் பத்தாண்டு ஆட்சியில் அரசின் ஒவ்வொரு துறையும் பாசிசமயமாகி வந்துள்ளதையே காவல்துறை மற்றும் தேர்தல் அலுவலரின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. பெயரளவில் உள்ள ஜனநாயக உரிமையாவது மிச்சம் இருக்க வேண்டுமெனில் தேர்தல் அரங்கிலும் ஆர்.எஸ்.எஸ்.- பாஜக கும்பல் கட்டாயம் தோற்கடிக்கப்பட்டே ஆக வேண்டும்!, தெருவிலும் தோற்கடிக்கப்படவேண்டும்!
செய்தி: புஜதொமு, கோவை மாவட்டம்