மிழகத்தின் வட மாவட்டங்களை மிக்ஜாம் புயல் புரட்டிப் போட்டுவிட்டது. சென்னை வியாசர்பாடியில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஊருக்குள் புகுந்த மழைநீர் நான்கு நாட்களாகியும் வடியாமல் உள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் அன்றாடம் உழைக்கும் மக்கள் உணவு இல்லாமல் தண்ணீர் புகுந்த வீட்டினிலேயே இருக்கின்றனர்.

இந்த மக்கள் வசிக்கும் பகுதிக்கு பின்புறம் தான் பக்கிங்காம் கால்வாய் ஓடுகிறது. இந்த கால்வாய் நிரம்பி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தது. இக்கால்வாயில் கார்ப்பரேட் கம்பெனிகளின் கழிவுநீரும் கலந்து வீட்டிற்குள் புகுந்துள்ளது. தெருவில் 3 அடிக்குமேல் தேங்கியுள்ள தண்ணீரால் செப்டிங் டேங்க் கழிவுகளும் சேர்ந்தே நாறிவருகிறது.

அதிகபட்சம் சுமார் 50 செ.மீ வரைமழை கொட்டிய போதும், திரும்பிய பக்கமெல்லால் வெள்ள்த்தில் மிதக்கின்ற போதும் இம்மக்களுக்கு இன்று குடிக்க ஒரு குடம் தண்ணீர் இல்லை. இவர்களின் குறையை கேட்கவும் அதிகாரிகளுக்கு நேரமில்லை.

” எங்களை இதுவரை மக்கள் பிரதிநிதிகளும் யாரும் வந்து பார்க்கவில்லை. சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுகிறோம்! யாருமே கண்டுக்கொள்ளவில்லை. எங்கள் ஏரியாவில் வசிக்கும் மக்களே ஒரு சிலர் தண்ணீர் புகாத வீட்டில் உள்ளவர்கள் ஒருவேளை சமைத்து தருகிறார்கள்” என்று நம்மிடம் கொந்தளித்து பேசினார்கள்.

மழை விட்டால் ’விடியல்’ வரும் என இத்தனை நாட்கள் பொறுத்து பார்த்தவர்கள் இன்று (06.12.2023) சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து போராட்ட களத்திற்கு வந்தது போலீசு. முதலில் போராடும் மக்களை கலைக்க காவல்துறை கான்ஸ்டபிள்களின் முயற்சி பலனளிக்காததால் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் கொண்ட  அதிகாரிகளின் படை வந்தது.

இதற்கிடையில் ஆம்புலன்ஸ்க்கும் வழிவிட்டு போராட்டத்தை தொடர்ந்தார்கள் பகுதி மக்கள்.

பிரச்சினை சரிசெய்யாமல் கலைந்து போக முடியாது என்று மக்கள் உறுதியாக இருந்தார்கள். போராட்டத்தை முடித்து வைக்க காவல்துறை முதலில் மின்சாரம் வழங்குகிறோம் எங்களுக்கு 1 மணிநேரம் அவகாசம் கொடுங்கள் என்றது. அதற்கு பணியாத மக்கள், முதலில் மின்சாரத்தை வழங்குங்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சாலையில் இருந்து அகல மறுத்து விட்டார்கள்.

வேறு வழியில்லாமல் மின்சாரத் துறையில் இருந்து ஆட்களை வரவழைத்து முதலில் சில தெருக்களுக்கு மட்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. இதனை முன் வைத்து நம்பிக்கையூட்டி போராடியவர்களை கலைத்தும் விட்டது.

இதில் பிரதான சாலையில் இருந்து பக்கிங்காம் கால்வாயை ஒட்டி வசிக்கும் மக்களின் பிரச்சினையே முக்கியமானது. குழந்தைகளுடன் வசிக்கும் மக்கள் வெள்ள நீர் புகுந்த வீட்டில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு குறைந்த பட்சம் தற்காலிகமாக இடம் ஒதுக்கி உணவு வழங்க வேண்டும். ஆனால் அதை செய்வதற்கு எந்த அதிகாரியும் சாலைமறியல் செய்யும் இடத்திற்கு வரவில்லை. இந்த பிரச்சினைக்கு சம்பந்தமில்லாத காவல்துறை வந்து பிரச்சினையை பேசி சமாளித்து மக்களை கலைத்துள்ளது.

இந்தியாவிற்கே பம்ப் உற்பத்தி செய்து அனுப்பும் வல்லமை படைத்தது தமிழ்நாடு. ஆனால் தலைநகரில் தெருவில், வீட்டில் புகுந்த தண்ணிரை வாரி இறைக்க பக்கெட்டை விட்டால் வேறு நாதியில்லை என்ற நிலை தொடர யார் காரணம்? மக்களுக்கு புரியும் முன்னர் அரசு விழித்துக்கொள்வதே  – திருத்திக்கொள்வதே நல்லது.

படங்கள் மற்றும் செய்தி தொகுப்பு
மக்கள் அதிகாரம் ஊடகக்குழு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here