ரே சாதிக்குள் காதலித்து திருமணம் செய்தவர்களை வெட்டிக் கொன்றுள்ளது சாதி, பொருளாதார வெறிப் பிடித்த கும்பல். உங்களுக்கு என்ன தான் பிரச்சினை? சாதி மாறி காதலிச்சா வெட்டுனீங்க… மதம் மாறி காதலிச்சா வெட்டுனீங்க… இப்ப ஒரே சாதிக்குள் காதலிச்சு திருமணம் செஞ்சவங்களையும் வெட்டி கொல்றீங்க…

தான் கையை காட்டும் ஆண்மகனை எந்தவித மறுப்பும் கூறாமல் ஒத்துக் கொள்ள வேண்டும். பெண்ணுக்கு பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுதான் இந்தியா முழுக்க இருக்க கூடிய ஆதிக்க சிந்தனை. ஆணாதிக்க சிந்தனை. இதுவே தன் மகளென்றும் பாராமல் கொலை வரை செய்யத்தூண்டுகிறது.

தமிழகத்தில் பெரியாரிய சிந்தனை, இடதுசாரிகளின் அரசியல் பிரச்சாரம் இவையெல்லாம் மக்கள் மத்தியில் ஓரளவு சென்றிருந்தாலும் அவர்களிடம் ஆதிக்கம் செலுத்துவது சமூகத்தில் இருக்கும் பிற்போக்கு சிந்தனையே. அதனால் தான் திமுக கட்சியில் பெரியாரிய கொள்கைகளை பேசினாலும், சனாதனத்தை எதிர்த்தாலும் கூட அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவால் அவரது மகளின் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இளவரசன்-திவ்யா, கௌசல்யா-சங்கர், கோகுல்ராஜ் என்று சாதி மாறி காதலித்ததாலேயே ஆணவக்கொலை செய்யப்பட்டவர்கள் பட்டியல் ஏராளம். சில கிராமங்களில் கொலை செய்துவிட்டு பஞ்சாயத்து மூலம் பேசி வெளியில் வராமல் பார்த்துக் கொண்டதும் உண்டு. அந்த வரிசையில் சாதி மாறி திருமணம் என்றில்லாமல் ஒரே சாதியில் திருமணம் செய்தும் கணவன், மனைவி இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்தவர்கள் மாரிசெல்வம், கார்த்திகா. இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவராக இருந்துள்ளார் மாரிசெல்வம். கார்த்திகா கல்லூரியில் படித்து வருகிறார். அவரது தந்தை முத்துராமலிங்கம் பால் வியாபாரியாகவும், வட்டிக்கு விடும் தொழிலும்(பைனான்ஸ்) செய்து வருகிறார்.

பொருளாதார ரீதியில் பெண்ணின் குடும்பம் முன்னேறியுள்ளதால் கார்த்திகாவின் தந்தை இருவரது காதலையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இரு குடும்பத்திற்கும் இடையில் தகராறு நடந்துள்ளதாகவும் செய்திகளில் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவில்பட்டியில் பதிவுத் திருமணம் செய்துள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம் மாரிசெல்வம் வீட்டிற்கு வந்து இன்னும் ஒரு மணி நேரத்தில் என்னுடைய மகள் வீட்டிற்கு வரவில்லை என்றால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி சென்றதாக அவரது தந்தை கூறியுள்ளார்.

இந்நிலையில் மாரிசெல்வம் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனை நோட்டம் விட்ட கும்பல் அவரது தந்தை இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் புகுந்து மாரிசெல்வம் கார்த்திகா இருவரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளது.

இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள், பாமக சாதிவெறி கும்பல் சொல்வது போல் இது ‘நாடக காதல்’ கிடையாது. இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்களும் கிடையாது. பிறகு எதற்காக கொலை செய்யப்பட்டார்கள்

கம்யூனிசத்தின் தந்தை காரல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் “முதலாளித்துவ சமூகத்தில் அனைத்து உறவுகளும் பண உறவுகளே” என்று. இது எழுதப்பட்டு 150 வருடங்களை கடந்தாலும் இதுதான் உண்மை என்று பல சம்பவங்கள் நம் கண் முன்னே நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. இந்தியா முதலாளித்துவ சமூகமாக முழுமையாக மாறாவிட்டாலும் இங்குள்ள உறவுகளும் பண உறவுகளாகவே நீடிக்கிறது.

தான் பெற்று பாராட்டி சீராட்டி வளர்த்தாலும் தன் மகள் திருமணம் செய்யக் கூடியவன் தனது தகுதிக்கு ஏற்றவனாகவோ அல்லது அதைவிட பொருளாதார பலத்தில் உயர்ந்தவனாகவோ இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் எந்த வகையிலும் நேர்மையானவனாக, உழைப்பை நம்பி வாழ்பவனாக, தன் மகள் விரும்பும் நபராக இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.

பெண் என்றாலே ஆணை சார்ந்து வாழ வேண்டும் என்று பார்ப்பனிய சிந்தனையில் ஊறியிருக்கும் ஆண்கள், பெண்ணை தனது உடைமையாக கருதுகிறார்கள். அவர்களை மீறி நடந்துக் கொண்டால் ஏற்றுக் கொள்ள முடியாத பிற்போக்குதனத்தில் ஊறியுள்ளார்கள். இதுவே இந்த கொலைக்கு அடிப்படை காரணமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:

♦ நாங்குநேரிகளுக்கு தீர்வு காண்பது எப்படி?

சாதிகள் என்ன செய்யும்? ஆர்எஸ்எஸ் பாஜகவைக் கேள், சொல்லும் !

ஆனால் இதை உணராத இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு சாதி போதையை ஊட்டி வளர்க்கிறார்கள். தன் சொந்த சாதியாக இருந்தாலும் காதலித்து திருமணம் செய்ய பொருளாதார ஏற்றத்தாழ்வு தடுக்கிறது. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கான காரணத்தை அறிந்துக் கொண்டு களைய போராடாமல் சாதிப்பெருமை, குடிப்பெருமை பேசிக் கொண்டு திரிகிறது இளைஞர் கூட்டம்.

சொந்த சாதிக்காரனாக இருந்தாலும் பணம் இல்லை என்றால் கல்லூரியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள், சொந்த சாதிக்காரனாக இருந்தாலும் பணம் இல்லையென்றால் காதலித்து திருமணம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். இவ்வளவு தான் இவர்களின் ‘சாதி பாசம்’.

நீங்கள் எந்த சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் உங்கள் பிரச்சினையில் பணம் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. இது தெரியாமல் இளைஞர்கள் சாதிப்பெருமையை பேசிக் கொண்டு பிரதான பிரச்சினையை கவனிக்க மறுக்கிறார்கள். தொழிற்சாலையில் முதலாளி, தொழிலாளியை சாதி பார்க்காமல் எல்லோரையும் அடிமைப்போல் ஒட்டச் சுரண்டுகிறான்.

நாம் எப்பொழுதெல்லாம் பிரச்சினையை உணர்ந்து போராடலாம் என்று முன்னுக்கு வருகிறோமோ அன்று சாதி, மதங்களை முன்னிறுத்தி நம்மை பிளவுபடுத்துகிறார்கள். ஆனால் நாம் உறுதியாக நின்று போராடும் பொழுதே இதனை தகர்க்க முடியும். பொருளாதார ஏற்றத்தாழ்வை களையாமல் வர்க்க பேதமற்ற சமுதாயத்தை அமைக்காதவரை நம்முடைய பிரச்சினை தீராது. அதன் ஒரு அங்கம் தான் இது போன்ற படுகொலைகள்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here