2.பாகிஸ்தான்

மூன்றாம் உலக ஆசிய நாடுகளில் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து பிறந்த குழந்தைகள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்  இறப்பு விகிதம்  அதிகரித்து வருகிறது.  அதில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.நிலவும் சமூகநிலைமையைக் கணக்கில் கொண்டு சென்ற பாகத்தில் ஆப்கனைப் பற்றிப் பார்த்தோம். இப்போது பாகிஸ்தானைப் பற்றி பார்க்கப் போகிறோம்.

குறைவளர்ச்சியில் சிசுக்கள் பிறப்பது, குறைபாடுகளோடு குழந்தைகள் பிறப்பது, தடுப்பூசிக்கு எதிரான மூடநம்பிக்கைகள், தடுப்பூசிப்பற்றாக்குறைகள்,  சுகாதாரமற்ற மகப்பேறு மருத்துவம், தாய்ப்பால் கொடுப்பது குறைவாக இருப்பது, மகப்பேற்றின்போது பல சிக்கல்கள், திடீரரெனக் குழந்தைகள் இறப்பு நேருவது (SIDS), சமூகப் பொருளாதாரச் சீர்கேடுகள், நோய்த்தடுப்புக் கட்டமைப்புப் போதாமை ஆகிய அனைத்தும் பல திசைகளிலுமிருந்தும்  தோன்றுகின்றன,  பிறகு ஒன்றாய்ச் சேர்ந்து  மக்களைத் தாக்குகின்றன.  இத்தனையும் அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியவை.

நாட்டின் பல நெருக்கடிகளிடையே  இவற்றில் ஏதாவது ஒன்றைக் கையில் எடுப்பார்கள்,  உடனே வேறொரு பிரச்சினை ” என்னைக் கவனி ! ” என்று  முன்னால்வந்து நிற்கும்.  கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து விசயம் நிவாரணவரிசையில்  அவர்கள் பட்டியலில் இடம் பெற்றன.

பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு இயக்கம் உடனே எடுக்கப்பட்டது. காரணம், குழந்தைகள் இறப்புவிகிதம் பெண்கல்வி அறிவோடு நேரடியாக சம்பந்தப்பட்டது;  அதற்கடுத்ததாக, அதிக மருத்துவர்களை நியமிப்பதும், மருத்துவத்துறை உள்கட்டுமானங்களைப் பராமரிப்பதும் வந்தன;  அதில் குறிப்பாக, புறக்கணிக்கப்பட்ட பிராந்தியங்களில் நெருக்கடிகள் தீவிரமாயின. இவைதவிர, சுத்தமான குடிநீர் ஏற்பாடு உட்பட  உடல்நலக் கண்காணிப்பு- செயல்பாடு கவனிப்பைக் கோரியது.  கடைசி அம்சமாக, மருத்துவமனைக்குச் செல்ல சாலை வசதி வாய்ப்பில்லாத அளவு மிகத் தொலைவில்  உள்ள கிராமவாசிகளுக்கு “தொலைபேசி இணைப்புகொண்ட மருத்துவ இணைப்பு” வழங்கவேண்டியிருந்தது. அரசாங்கம் சமாளித்ததா? எங்கே சமாளித்தது? ஒன்றிணைக்கும் ஒரு திட்டமில்லாததால் கதிகலங்கி நிற்கிறது. அரசாங்கம்  எந்தத் திட்டத்தையும் கார்ப்பரேட் கல்லாவைக் கேட்காமல்  நகர்த்தவே முடியாது.

இறப்பு விகிதம்: புள்ளி விவரங்கள் என்ன சொல்கின்றன ?

ஐந்து வயதுக்குக் கீழே குழந்தைகள் இறப்பு விகிதம்  (2020 கணக்கின்படி, “ஆயிரம் பிறப்புக்கு 37  சாவுகள்”  என்ற உலக நிலவரத்தை ஒப்பிடும்போது ) பாகிஸ்தான், 65.2 என்று உள்ளது.  ஆயிரம் பேருக்கு ஏமனில் 60, ஆஃப்கனில் 58,இந்தியாவில் 33  என்ற புள்ளிவிவரங்களோடு ஒப்பிடும்போது  பாகிஸ்தான் ஆபத்தின் விளிம்பில் நிற்கிறது  என்பதைச் சுலபமாக விளங்கிக் கொண்டுவிடமுடியும்.

இதையே வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும்போது பேரதிர்ச்சியே காத்திருக்கும். அமெரிக்காவில் பிறந்து28 நாட்களே ஆன – குழந்தைச் சாவுகள் ஆயிரத்துக்கு 5.5 என்றும், ஆஸ்திரேலியாவில் 2.8 என்றும், ஜப்பானில் 1.6 என்றும் விகிதம் இருப்பதை மூன்றாம் உலக நாடுகளோடு ஒப்பிடவேண்டும். இது 2022- ஆம் ஆண்டு நிலவரம். பாகிஸ்தானில் இதன் உள்பிரிவாக வைத்து  விவாதிக்கப்படும் “பிறக்கும் குழந்தை இறக்கும் விகிதம்” ஆயிரத்துக்கு  சுமார் 57 என்று உள்ளது. இதையும் உலக அளவிலான  26.7 என்ற  2022-ஆம் ஆண்டின் புள்ளிவிவரத்தோடு ஒப்பிடுங்கள். இதை “பச்சிளம் குழந்தைகளின்  இறப்பு ( Neonatal Deaths)” என்று மருத்துவ உலகின் ஆய்வாளர்கள் வகைப்படுத்துகிறார்கள்.  இத்தகைய இறப்பிற்கு   ” குறைகாலப் பிரசவம் “, ” குறை எடை” ,   ” உடல் உயரமும் அகலமும் குறைவாக இருப்பது ”  என்று  ஆக மூன்று முக்கியக் காரணங்களைக் கண்டறிந்துள்ளார்கள்.

இறப்புக்கான காரணங்கள் என்ன?

பிறந்த குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் குறைகாலப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதில் சிரமப்படுகின்றன. சளிக் காய்ச்சல் ( நிமோனியா ), தண்டுவடச் சவ்வு அழற்சி (மெனிஞ்சைடிஸ்)  ரத்த நஞ்சினால் சீழ்த் தொற்று  (செப்சிஸ்)  ஆகிய மூன்றும் குழந்தைகளின் இறப்புக்குக் காரணமாகின்றன ; மூன்றாவதாக உள்ள செப்சிஸ் நோய்க்கிருமி குழந்தையின் உடலுக்குள் புகுந்து உடல் உறுப்புகளைத் தாக்கும் கொடிய நோய் .

முதலாவது புள்ளி, தொப்புள் கொடியைத் (கொப்பூழ்க் கொடி) துண்டித்து தாயிடமிருந்து குழந்தையைப் பிரிக்கிறார்கள் அல்லவா, அந்தப் புள்ளியிலிருந்து தொற்று தொடங்குகிறது. பாரம்பரியமாக — நோய் நுண்மங்களை ஒழிப்பதற்கான  தூய்மைப்படுத்தும் முறைதான்( ‘ ஸ்டெரிலைஸ் ‘ செய்வது ) அந்த ஆரம்பப் புள்ளி. குறிப்பாகக் கிராமப்புறங்களில் சாணம், நெய், சாம்பல் பயன்படுத்தி  வகைதொகையே இல்லாமல்  தொப்புள்கொடி வெட்டும் முறையிலிருந்து அது ஆரம்பிக்கிறது. அதாவது, அறிவியல்முறையைக் கடைப்பிடிக்காத  அறியாமைதான் ஆரம்பம்.

உடல் உள்உறுப்புக் குறைபாடுகள் என்பது இதயம், நுரையீரல், மூளைக் குழாய்க் குறைபாடுகள் முக்கிய நோய்களாக வேகமாய்த் தீவிரமடைகின்றன; இவற்றில் குறைவான சதவீதமே மரபுசார்ந்த குறைபாடு காணமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. அவை குரோமோசோம்  என்ற இனக்கீற்று, கம்பிஇழை போன்ற பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளாகும் ;   இவைதவிர சத்துணவுக் குறைபாடுகள், சுற்றுச்சூழல் மாசு, கதிர்வீச்சு போன்றவைகளும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பிற காரணங்கள் என்னென்ன ?

தடுப்பூசிகள் சம்பந்தமாக மூடநம்பிக்கைகளும்  அறியாமையும் பாகிஸ்தானைப் போட்டு வாட்டுகின்றன. ஏறக் குறைய 70%  குழந்தைச் சாவுகள் தொற்றுநோய்கள் காரணமாக ஏற்படுகின்றன. குழந்தைகளில் பாதிப் பேருக்கே, தடுப்பூசிகள் போடப்படுகின்றன.  அதிகாரமாற்றம் நடந்து 30, 31 வருசங்கள் போனபிறகே கணையப் பற்றாக்குறைக்கான தடுப்பூசி ( EPI ) அறிமுகமாகி நடைமுறைக்கு வந்தது. அதாவது, காசநோய் ( TB ), போலியோ, டிஃப்தீரியா,பெர்தூசிஸ், டெடானஸ், ‘ புட்டாலம்மை ‘ போன்றவற்றுக்கு ஊசிவந்தது.

தவிர, கிராமப்புறங்கள் வரை பெரும்பாலும் படிப்பறிவற்ற பெண்கள் மத்தியில்  அறிவியல் மருத்துவ விழிப்புணர்வு பரவிய பிறகே,  மகப்பேற்றில்  “இறந்து  பிறக்கும்  குழந்தைகள்” என்ற விசயம்  வெளியே விவாதிக்கப்பட்டது;  மகப்பேற்றின் போது ரத்தம் அதிகம் வெளியேறுவது  காய்ச்சல், வலிப்பு நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு மரணமடைந்தன. உடல்ரீதியாகவே ஆண்குழந்தைகள் நோய் எதிர்ப்புச் சக்தியில் பலவீனமாக இருந்து தொற்றுக்களுக்கு ஆட்பட்டன.

சமூகப் பொருளாதாரக் காரணங்களும் உண்டு!

சமூகப் பொருளாதாரக் காரணிகளும், மருத்துவநலத் துறைக் குறைபாடுகளும் முக்கியப் பாதிப்பைக் கொடுத்தன. ஆசியாவில்  அடிமட்ட, நடுத்தர வருவாய்  உள்ள நாடுகளில் 94% பிரச்சினைகள் வருகின்றன ; பிரசவ காலத்தில் பெண்களுக்குச் சத்துணவுப் போதாமையால் ரத்தச் சோகையினாலும்,   தொற்றுநோய்ப்  பாதிப்பு  மற்றும் ஆல்கஹால் பழக்கம் போன்றவற்றாலும்  அப்படிப்பட்ட பிரச்சினைகள்  வருவது ஓரளவு ஆராய முயலப்பட்டுள்ளது. 70%, இளவயது — அதாவது, 5 வயதுக்குக்கீழே குழந்தைகளின் சாவுகள்  தொற்றுக்களால் நேருகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.  அவற்றில் பாதிக்குப்பாதி, 50%,    தடுப்பூசியை மறுத்துவிடுவதால்  வரும் பாதிப்புக்களே. கிராமங்களில் போதிய விவரமும் தராமல்,  அங்கிருந்து  கணக்குகளும் வராமல் போவதால்  முழுப் புள்ளிவிவரமே இல்லை. ஆரம்பத்தில் தடுப்பூசி போடவரும் ஊழியர்களே தாக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த நிலைமை மாறுவதற்கே பலர் போராடவேண்டியிருந்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.

குறிப்பாக, ஆண்குழந்தைகளின்  உடலில் நோய்த் தடுப்புக் குறைபாடு, மூச்சுக்குழாய்க் காய்ச்சல், பிறப்பிலேயே சிறுநீர் உறுப்புகள் முழுதாக வளராமல் இருப்பது ஆகியவற்றை  மருத்துவர்கள் பிரச்சினைகளாகக்  குறிப்பிடுகிறார்கள் ; பெண்கள்  தாமதமாகப்  பூப்படைவதால்  தாய்மையின்போது அதன்காரணமாகச் சிக்கல்கள் வருகின்றன என்றும் அவர்கள் பதிந்துள்ளார்கள் ; இவையன்றி, திடீர் மரணச் சிக்கல்களும் விவாதிக்கப்பட்டுள்ளன.

“திடீரென்று மரணம் நேரும் நோய்க்குறிகள்  (SIDS )” பற்றியும் விவாதிக்கிறார்கள். மூச்சுத் திணறல், இதயநோய், மூச்சு இயக்கப்படுவதை ஒழுங்குபடுத்திக் கொடுக்கும் மூளைப்பகுதியில் இயல்புகடந்த சிக்கல்  போன்றவற்றை ஒரு தொகுப்பாகச் சொல்வதே  SIDS நிலைமை. ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகள் இப்படித்தான் இறக்கின்றன ; அதிலும் முதல்  ஆறே மாதத்துக்குள் அதிகம் நடப்பதாகப் பதியப்பட்டுள்ளன. SIDS–ஐச் சீராக்கக் கூடியவை, அப்படி முடியாதவை  என்று  இரண்டாகப்  பதிந்திருக்கிறார்கள்.  தாம்பத்தியப் பிரச்சினைகள் , தூக்கத்தில் மூச்சுத் திணறல் ( sleep apnea ), இதய நோய்கள், மூச்சுக்குழாய் நோய்கள், மூளைத்தண்டுப் பாதிப்புகள் போன்றவற்றை சீர்செய்ய முடியாத பட்டியலில் தள்ளுகிறார்கள். ஏனிப்படி நடக்கிறது ? இவை பண்பாட்டுப் பழக்கவழக்கங்களால் வருகின்றன என்று ஒரு சாரார் வாதாட, மற்றொரு சாரார் அதை மறுக்கிறார்கள்.

20  வயதுக்குக் கீழே  பெண்கள் திருமணம், பேறுகாலத்தில் நாளொன்றுக்கு 10 சிகரெட்டுக்கு மேல் புகைப்பது என்று பெண்கள் மீதான  புகார்கள் சொல்லப்படுகின்றன; தலைமூலம்தான் வெப்பம் வெளியேறுகிறது, தலையைமூடி கருப்பு புர்கா ஆடை அணிவதால் உடல் வெப்பம் கூடி கர்ப்பத்தைப் பாதிக்கிறது, தலையை   எப்படி மூடலாம் என்று சில மருத்துவர்கள் விமரிசிக்க,  பாரம்பரியமாகவே இப்படி வாழ்கிறோம், இதுநாள்வரை  கோடிக்கணக்கில்  மக்கள் பாதிக்கப் பட்டிருக்கவேண்டுமே, அப்படி  வருகிறதா? என்று மறுத்தும் வாதம் தொடர்கிறது.

SIDS–ன் கீழ்  விவாதிக்கப்படும் வேறு முக்கியக் காரணிகள்  வறுமை, குழந்தைப் பராமரிப்பில் அறியாமை– தாய்ப்பால் கொடுக்கும் முறையிலேயே  சிக்கல் வருகிறது, குழந்தைகள் உறங்கும் படுக்கை அமைப்பில் கவனம் தேவை போன்று பல கருத்துகள் எழுந்துள்ளன; தவிர, பொதுக் கல்வி, சமூகக் கல்வியின் போதாமை ஆகியவை முக்கியக் குறைபாடுகளாகச் சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறது. இதில் ஆண்கல்வி போதாமையும் சேர்க்கப்படுவதில் நிச்சயமான நியாயமுண்டு — குடும்ப வேலையில், குழந்தை வளர்ப்பில் அவர்கள் அற்பசொற்பமாகவே ஈடுபடுகிறார்கள், அல்லது ஈடுபடுவதே இல்லை.

வறுமை எப்படி முக்கியமாகத் தாக்குகிறது ?

குடும்பங்களின்  உணவுக்கு  உத்தரவாதம்  இல்லாமை,  சுகாதாரம்  இல்லாமை, கல்வி அறிவு போதாமை,  உடல்நல மருத்துவப் பராமரிப்பு கிடைக்காமலிருப்பதும் மறுக்கப்படுவதும் — ஆகிய அத்தனையும் ஒன்று சேர்ந்து தாய்க்கும் சேய்க்கும் நெருக்கடிகளை உண்டாக்கியிருக்கிறது.

இதையும்படியுங்கள்: ஆசியாவில் : சாவை எதிர்நோக்கியிருக்கும் குழந்தைகள்!

நுண்மையான  ஊட்டச்சத்துகள்  உள்ள உணவு கிடைக்காமல் இருப்பதை எடுத்துக் கொள்வோம். கர்ப்ப காலத்தில்  தாயின்  வயிற்றில்  உருவாகி  வளரும் குழந்தைபலப்பல பிரச்சினைகளைச் சந்திக்கிறது. ” சத்துணவு போதாமை ”  என்று சொல்லிவிட்டு நழுவிவிடுவது, தப்பித்துக்கொள்வது சரியா ?  பொதுவாகவே வறுமை என்பதை ஆழமாக ஆராயும்போது, குழந்தைப்பேறு, 5 வயதுவரை  குழந்தைப்  பராமரிப்பு  இரண்டையும்  பொதுவாக வழமைக்குச் சொல்லிவிட்டுப்  போய்விடுவது

பிரச்சினையைத் தீர்க்குமா ?

என்ன பிரச்சினைகளெல்லாம் வரும் ? பேறுகால வலிப்பு நோய்,  ஜன்னி,  முன்கூட்டியே  வலி/ பொய்வலி எடுத்து குழந்தை பெறும் நிலை;  தவறான உறுப்பு உருவாக்கம் ( faulty organogenesis ), பல்வேறு உடல்குறைபாடுகளோடு, ஊனங்களோடு குழந்தை பிறப்பது — மூளைக்குறைபாடுகள் ஆகியவை ஃபோலேட்/ ஃபோலிக் அமிலம் (  இது புதிய செல் உருவாக்கத்துக்கும் புற்று நோய்க்குள் தள்ளிவிடும் டிஎன்ஏ மாற்றங்களைத் தடுப்பதற்கும்  உதவி செய்கிறது )   மற்றும்  B-12  ஊட்டச்சத்து இல்லாமையால்  உண்டாகக்கூடும் என்று நிபுணர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள். பிறந்த குழந்தைக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல்போனால் நோய்எதிர்ப்புச் சக்தியின்மை தொடர்பான விளைவுகள்  ஏற்படக்கூடும் ; வயிற்றுப்போக்கு  அல்லது  நிமோனியா  போன்றவை வந்து குழந்தைகளை வாரிக்கொண்டுபோய்விடும்.

போதுமான  சுகாதாரத்தோடும்  தேவையான வசதிகளோடும் வீடு இல்லாமல் போவது பிரச்சினைதான்  ; கிராமப் புறத்தில் 80% வீடுகளில் சுத்தமான குழாய்நீர் இல்லை ; இவை காரணமாக 72% வீடுகளில்  வயிற்றுப் போக்குள்ள குழந்தைகளைப் பார்க்கிறோம்.  அவற்றுக்கு முறையான ஆலோசனைகளோ, மருத்துவமோ  கிடைப்பதில்லை.

75 ஆண்டுகளாகியும் உடல்நலப்  பராமரிப்புக்கான
கட்டமைப்பு உருவாகவில்லை !

பாகிஸ்தான் இன்னமும் போராடிக்கொண்டே இருக்கிறது. கட்டமைப்பின் சில சுவர்கள்  அமைக்கப்பட்டும் பலனில்லை.

நாடுமுழுக்க 731 யூனிட்டுகள் மட்டுமே  இருக்கின்றன. மொத்தம் உள்ள 1201  மருத்துவமனைகளில்  683-ல்  மட்டுமே உடல்நலப் பராமரிப்புக்கான  யூனிட்டுகள் இருக்கின்றன. குழந்தைகளுக்கான   தீவிரச் சிகிச்சைப் பிரிவில் (  Paediatric Intensive Care Unit — PICU  )  போதிய செவிலியர்கள், மருத்துவர்கள் இல்லை ;  போதிய வெப்பம் நிர்வகிக்கும் வசதி  (தெர்மல் கேர் : Thermal Care ) மற்றும் மருத்துவ மனைகளில் இருக்கவேண்டிய  பரிந்துரை அமைப்பு  ( Referral System ) இல்லை.

பாகிஸ்தான் முழுமையிலும்  2019  கணக்கின்படி, தோராயமாக,  2000 பேருக்கு ஒரேஒரு   செவிலியர்தான்உண்டு  ; அதேபோல, 1000 பேருக்கு ஒரே ஒரு மருத்துவர்தான் உண்டு.  இத்தனைக்  கோளாறுகளும் நிறைந்த   துறையாகப் பொதுமருத்துவமும், குழந்தைநலப்  பராமரிப்பும் உள்ள காரணத்தினால்தான்  பாகிஸ்தானில் குழந்தைச்சாவுகள் அதிகரித்துள்ளன. கோவிட் தொற்றுக் காலகட்டத்தில் மேலும் அதிகரித்துவிட்டன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மேலும்  ஒரு  சமூக  அவலம். இத்தனைக் கொடிய நிலையிலும்கூட பெண்கள்  குழந்தைக்கோ தமக்கோ மருத்துவ உதவிகள் பெற தாங்களாகவே வெளியில் சென்றுவிடமுடியாது ;  வீட்டு வேலைகளோடு   குழந்தைப் பராமரிப்பையும்  சேர்த்துச்  சுமந்தாகவேண்டும்.

எல்லா  விவரங்களையும்  உடனே  தேடிஎடுத்து  நிவாரணத்தைத் திட்டமிடுவதற்கு  யார் முன்வந்தாலுமே நாடு முழுவதற்குமான ஆவணங்களும் இல்லை ; ஆய்வுகளும் இல்லை; நிதி இல்லை ;  துறைசார்ந்த விற்பன்னர்கள் இல்லை ; குழந்தைச் சாவுகளைப் போக்கிப் பாதுகாப்பைக் கொண்டுவர  அக்கறையுமில்லை; விவரங்களைச் சோதித்து ஆய்வு செய்து தீர்வைச் சொல்லும்  ஆய்வாளர்களும் இல்லை , வளர்க்கப்படவுமில்லை.  கோவிட் தொற்று பரவியபிறகே குழந்தைகளைப் பலிகொள்ளும்  தொற்று நோய்கள் பற்றியும், அதற்கான நிவாரணம் பற்றியும், பாதுகாக்கும் வழிகள் பற்றியும்  சமூகத்தின் கவனத்துக்கு வந்து  விவாதங்கள் எழுந்தன.  ஒரு அழிவு பல அழிவுகளைப் பற்றி சிந்திக்கத் தூண்டியது பாகிஸ்தானின் அவல நிலை.

மூன்றாம் உலக ஏழை நாடுகள் அழிவது விதிவசமா ?

பாகிஸ்தானில் குழந்தைச் சாவுகள் மிக அதிகம் என்பதை விரிவாகப் பார்த்தோம். தொகுப்பாக, குறைமாதப் பிரசவங்கள், பிரசவச் சிக்கல்கள், தடுப்பூசிக் குறைபாடுகள், தாய்ப்பால் கொடுப்பதில் குறைகள்,  பிரசவத்தின்போது சுத்தம் பற்றிய கவனமின்மை, செத்துப்பிறக்கும் குழந்தைகள் மற்றும் SIDS சிக்கல்கள் ஆகியவை மீண்டும் மீண்டும் கவனம் குவிக்கப்படவேண்டியவை. இவை மட்டுமன்றி பாகிஸ்தானின் சமுகப் பொருளாதாரக் காரணிகளும் உண்டு என்று பாரத்தோம். வறுமை, அரசிடம்  மக்கள் நலவாழ்வுத் திட்டங்களின்மை, பெண்கல்விக் குறைபாடு –பெண் மருத்துவம்  குறைவாக இருப்பது ஆகிய அத்தனையும் இதில் சம்பந்தப்பட்டுள்ள  எரியும் உண்மைகள்!

சமுகப் பொருளாதாரத் துறையில் நாட்டின் கட்டமைப்பு , உற்பத்தி, வருமானம், திட்டம் , செலவினம் ஆகியவற்றில்— அமெரிக்க உலகவங்கி, ஐஎம்எஃப் இரண்டின் கடன்வட்டிக்கும் உலக உள்நாட்டுக் கார்ப்பரேட்டுக்களின்  கொள்ளைக்கும் போக மிச்ச மீதி பின்தங்கிய சமூக இருப்புக்காகவே விரயமாகிவிடுகிறது.

இவை மாறாமல்,பாகிஸ்தானில் உள்ள மத அழுத்தம், மூடநம்பிக்கைகள் தொலையாமல், மக்களுக்கோ  வருங்காலத் தலைமுறையான குழந்தைகளுக்கோ விடிவு இல்லை.

000

ஏழைநாடுகள் தானாக அழிவதில்லை ; மாறாக,   இன்று உலக, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.

“சில நேரங்களில் ஒருநாட்டின் வாழ்க்கை வரலாறு முழுவதையும் ஒரு சில நாட்களில் நேருக்கு நேரே பார்த்துவிடலாம் ” என்று தியா ஹதீத் மற்றும்  அப்துல் சத்தார் ஆகிய  இரு எழுத்தாளர்கள்  ” தேசியப் பொது வானொலி ( npr, washington ) ” –ல் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார்கள் (2.2.2023).

நெருக்கடியிலிருந்து மீள சர்வதேச நிதியத்திடம் ( ஐஎம்எஃப் ) பாகிஸ்தான் உதவிகோர, அது முன்வைத்த நிபந்தனைகளை பாகிஸ்தான் நிதி அமைச்சர் ஈஷாக் தார் ஏற்காமல் மறுத்து, பிறகு  தற்போதுள்ள அரசியல் நிர்ப்பந்தத்தினாலும், தேவையைக் கருதியும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுவிட்டார்.  சுமார் ஒரு கோடி வியாபாரிகள் அழியும் நிலை ; சமையல் வாயு விண்ணில்- சமையல் எண்ணெய் – கோதுமை விலை அனைத்தும்  பறக்க  மக்கள் வாழமுடியாது தவிக்கிறார்கள் ;  நாட்டின் பொருளாதாரமோ கடனில் கழுத்தளவு மூழ்கிச் சிதைந்து போயிருக்கிறது.  இந்நிலையில் ஈஷாக்  இப்படி முடிவு செய்துவிட்டார்.  இது விதியின் விளையாட்டல்ல  என்றுமட்டும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் ; ஆளும் வர்க்கங்கள் திட்டமிட்டு அழிக்கின்றன என்பதை மீண்டும் சொல்கிறோம், அதைச் சேர்த்துப் புரிந்துகொள்ளுங்கள்.

பாகிஸ்தான் இதுநாள்வரை 25 ஆண்டுகள் ராணுவ ஆட்சி, 4 அரசியல் படுகொலைகளைக் கண்டுவிட்டது. இங்கே அரசியல்ஜனநாயகத்துக்காகக் கம்யூனிஸ்டுகளும் இடது  தொழிற்சங்கங்களும் மட்டுமே  தொடர்ந்து தியாகம் செய்து போராடிவருகின்றனர்.  அரசியல் எதிர்ப்புரட்சிக் கும்பலோ  — அந்த நாட்டுக்கே உரிய வலதுசாரி / பாசிச அரசியல் எதிரியாக  வளர்கிறது.  இது  வீழ்த்தப்படாமல்  மாற்றம் வராது !

ஆதாரங்கள்:

www.ncbi.nlm articles;

www.voa.news.com.pakistan ;

npr — National Public Radio ;

மற்றும் சர்வதேச மருத்துவ ஆய்வுகள்.

(தொடரும்)

அடுத்த பாகத்தில் : இந்தியாவில் குழந்தைச்சாவுகள்.

ஆக்கம் : இராசவேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here