பத்திரிக்கை செய்தி
22.05.23

ஸ்டெர்லைட்டை மூடி 5 ஆண்டுகள் ஆகிறது. “மூடியது சட்டப்படி சரியானது” என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதற்கெதிராக ஸ்டெர்லைட் தாக்கல் செய்த மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஸ்டெர்லைட்டின் பராமரிப்பு கோரிக்கை ஏற்கனவே நிராகரிக்கப்பட்டநிலையில், திரும்பத் திரும்ப கழிவு அகற்ற, பராமரிக்க என மனுத்தாக்கல் செய்கிறது ஸ்டெர்லைட். தமிழக அரசு அதனை அனுமதிக்கக்கூடாது.

“ஸ்டெர்லைட்டை மூடியது சட்டப்படி சரி, ஸ்டெர்லைட் போராட்டம் நியாயமானது, திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும்” என்ற நிலைப்பாட்டில் உள்ள தமிழக அரசு, ஸ்டெர்லைட் விரிக்கும் இடைக்கால கோரிக்கை என்ற வலையில் விழக்கூடாதெனக் கோருகிறோம்.

கழிவு அகற்ற ஏற்கனவே பலமுறை கால அவகாசம் கொடுத்தும் கழிவை அகற்றாமல் வேண்டுமென்றே வைத்துக் கொண்டு, இடைக்கால உத்தரவுகள் என்ற பெயரில், தனது கைக்கூலிகளை வைத்து, ஆலையை திறக்க வேண்டும் என்று பரப்புரை செய்வதே ஸ்டெர்லைட்டின் நோக்கம் என்பது தாங்கள் அறியாததல்ல. ஸ்டெர்லைட்டை மூடியது அரசின் கொள்கை முடிவு, இந்நிலைப்பாடு உறுதியானது, என்று சொல்லி, மூடி ஆண்டுகள் 5 ஆகிறது. “வழக்கை இறுதி விசாரணைக்கு எடுங்கள்” என்று நேரடியாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சொல்லி, எதிர்வரும் ஆகஸ்ட் 22& 23 தேதி இறுதி விசாரணை நடைபெற உள்ளது.

ஸ்டெர்லைட் என்ற 21-ஆம் நூற்றாண்டு கிழக்கிந்திய கம்பெனிக்கு இனி தூத்துக்குடியில் இடமில்லை என தமிழக அரசும், மக்களும் உறுதியாக உள்ளபோது, எந்த நம்பிக்கையில் ஸ்டெர்லைட் பலகோடி ரூபாய்களை இறைத்து தற்போது வரை வேலை செய்கிறது எனத் தெரியவில்லை. நலத்திட்டம்,உதவி என்ற பெயரில் மக்களை பிரிப்பது, சாதி, மதவாத சக்திகளை தூண்டி விடுவதென தூத்துக்குடி மாவட்டத்தின் பொது அமைதியை சீர்குலைக்கிறார் ஸ்டெர்லைட் CEO சுமதி. ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை, ஸ்டெர்லைட்டை கடுமையாக எதிர்க்கும் மக்களை மட்டும், கடும் நெருக்கடி செய்கிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டப்படும் ஸ்டிக்கர்களை கூட காவல்துறையினர் கிழித்து எறிகிறார்கள்.

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பதென்பது, வரலாற்று அநீதியாகவே இருக்கும். தூத்துக்குடியின் காவல் தெய்வங்களான 15 போராளிகளின் தியாகத்திற்கு 5 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை உரிய நடவடிக்கை இல்லாதது தூத்துக்குடி மக்களின் மனதில் ஆறாத ரணமாக உள்ளது.

மாண்புமிகு நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் அவர்களின் அறிக்கை துப்பாக்கிசூடு குற்றவாளிகளை துல்லியமாக அடையாளம் காட்டியபின்பும் இன்றுவரை பணிநீக்கம், வழக்குப் பதிவு, கைது என்ற எந்த நடவடிக்கையும் இல்லாதது ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மீதான நம்பகத்தன்மையை கேள்விகுள்ளாக்குகிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தை தூத்துக்குடி, தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல, உலகே கவனித்துக் கொண்டிருக்கிறது.

அனில் அகர்வாலின் நோக்கம் லாபம் மட்டுமே. ஸ்டெர்லைட் உற்பத்தியும் ஏற்றுமதிக்கே.

மக்கள்நலன்தான் தமிழக அரசின் இலக்கு என்பதை தூத்துக்குடி மக்கள் அறிவோம்.

எனவே உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ள வழக்கில் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட, தமிழக அரசு ஆவண செய்திட வேண்டும், ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக தூத்துக்குடியைவிட்டு அகற்ற வேண்டும்.

குறிப்பாக அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் முக்கிய குற்றவாளியான எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும் எனக் கோருகிறோம்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9940971599, 9751119005, 9789497542, 9965345695, 9994242519, 9894574817, 8870457518, 9003615889, 7548856166.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here