நவம்பர் 2023 இன் பிற்பகுதியில், தாய்லாந்து வளைகுடாவில் இருந்து ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வங்காள விரிகுடாவை கடந்து டிசம்பர் 1 அன்று தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின் டிசம்பர் 2 அன்று, புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 440 கிலோமீட்டர் (270 மைல்) தொலைவில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைந்தது. மணிக்கு 110 கிலோமீட்டர் (68 மைல்) வேகத்தில் தமிழ்நாட்டின் கடற்கரையை நெருங்கியது. டிசம்பர் 5 அன்று, புயல் ஆந்திரப் பிரதேசத்தில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடந்தது. டிசம்பர் 6 ஆம் தேதிக்குள், புயல் வலுவிழந்து மத்திய ஆந்திரப் பிரதேசத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இதற்கிடையில் டிசம்பர் 3 இரவு முதல் 4-ஆம் தேதி இரவு வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலின் காரணமாக அதிகனமழை பொழிந்து சென்னையே வெள்ளைக்காடாக மாறியது. சுமார் மூன்று நாட்களுக்கு மேலாக பல பகுதிகளில் தண்ணீர் குறையவில்லை. சென்னையில் நுங்கம்பாக்கத்தில் டிசம்பர் 2 முதல் 4 வரையிலான மூன்று நாட்களில் அதிகபட்சமாக 530 மிமீ மழை பதிவானது. பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த உடைமைகள் அனைத்தும் வெள்ளத்தால் இழந்து தவித்து வருகின்றனர். அரசின் சார்பில் நிவாரண உதவிகள் ஆங்காங்கே மேற்கொண்டாலும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சென்றடையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. குறிப்பாக புயல் கடந்த ஒரு வாரம் பின்பும் வட சென்னையில் இருக்கும் மக்களின் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. குறிப்பாக கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப் பகுதியான எண்ணூரில், ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் மழையால் வந்த புது வெள்ளம் மட்டும் சீறிப்பாயவில்லை. CPCL நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் அந்த வெள்ள நீரோடு நீராக கழிவுகள் கலந்து நஞ்சாக மாறியுள்ளது எண்ணூரை குற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள்.
தன்னார்வலர்களால் பெரு மூச்சு விடும் குடியிருப்பு வாசிகள்
மிக்ஜாங் புயலால் சென்னையே வெள்ளக்காடாக மாறிய சூழலில் வழக்கம் போல் தன்னார்வலர்களே சென்னையை மீட்டெடுக்க தொடர்ந்து அவர்களால் முடிந்த பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். வேளச்சேரியில் கழுத்தளவு தண்ணீரில் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரில் உள்ளே சென்று மக்களை சந்தித்து நிவாரணம் தருவதற்கு அரசு ஏற்பாடு செய்யவில்லை. அரசின் நிவாரண செயல்பாடுகள் எப்படி உள்ளது என்றால் வேளச்சேரி பாலத்தின் மீது நிவாரண பொருட்கள் வண்டியை நிறுத்தி, அங்கே வரக்கூடிய குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டுமே வழங்கிவிட்டு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து கொடுப்பதில்லை என்ற பிரச்சனையே மக்கள் பிரதானமாக முன்வைத்தார்கள்.
சென்னையின் துயரத்தை உணர்ந்த பல தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் இன்னும் பிற அமைப்புகளும் மக்களுக்கு உதவி செய்ய வந்தனர். அவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று முன் பகுதியில் உள்ள மக்களுக்கு கொடுத்து உதவி செய்துள்ளனர். தனி நபர்களும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை உணர்ந்து பணமாகவும் பொருளாகவும் மக்களுக்கு உதவி செய்தனர். அதேபோல பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேர்க்க பொருட்களை அனுப்பி வைத்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரண பொருட்கள் சேரவில்லை என்பதே உண்மை.
இதை உணர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் Concrete study circle என்ற குழுவினர் உதவி செய்ய முன்வந்தனர். கட்டுமான துறையில் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய இவர்கள் தங்கள் துறையில் ஏற்படும் பிரச்சனைகள் எப்படி எதிர்கொள்வது மற்றும் அவ்வேலையில் உள்ள புதிய தொழில்நுட்ப அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அவர்களுடைய வேலை முறையை மேம்படுத்திக் கொள்வது என்பதற்காக உருவாக்கப்பட்ட குழு. இதற்குமுன்பு கொரோனா காலகட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்காக உதவிகளை இக்குழுவின் மூலம் செய்துள்ளனர். தற்போது சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் முன் வந்தனர். ஆனால் எந்தப் பகுதியில் அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எப்படி நிவாரண பொருட்களைக் கொண்டு சேர்ப்பது என்பது தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பை தொடர்பு கொண்டு கள நிலவரங்களை சேகரித்தார்கள்.
இதையும் படியுங்கள்: சென்னை: வடிய மறுக்கும் வெள்ளம்!
அந்த வகையில் மயிலை பாலாஜி நகர் நான்காவது பிளாக்கில் அன்றாட தின கூலிகள், துப்புரவு வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யக்கூடிய பெண்கள் இப்படி அன்றாட வேலைக்கு சென்று உழைக்கும் அடித்தட்டு மக்களாக இப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு நிவாரணங்களை கொண்டு சேர்க்கலாம் என வழிகாட்டுதல் கொடுத்தோம். Concrete study circle குழுவின் சார்பில் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களும், மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்து கொண்டு மயிலை பாலாஜி நகர் நான்காவது பிளாக்கில் உள்ள உழைக்கும் மக்களுக்கு 150 குடும்பங்களுக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வீட்டில் உள்ள பெண்கள் அல்லது குடும்ப தலைவருக்கு நிவாரண பொருட்களை கொடுத்தனர். ஆயினும் அப்பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கொண்டு சேர்க்கவில்லை என்கின்ற வருத்தம் Concrete study circle குழு நபர்களிடம் வெளிப்பட்டது. மேலும் எங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து செய்து கொடுப்போம் என Concrete study circle குழுவின் சார்பாக தெரிவித்தார்கள்.
“எங்கள் வீடுகள் முழுவதும் தண்ணீர் புகுந்துவிட்ட நிலையில் மூன்று நாட்களாக குழந்தைகளை வைத்துக்கொண்டு உணவு, மின்சாரம் இல்லாமல் கஷ்டப்பட்டு நாங்களாகவே மீண்டுவருகிறோம். அரசாங்கமோ அரசு அதிகாரிகளோ எங்களை இந்த நாள் வரை சந்திக்கவில்லை. முதலில் எங்களை சந்தித்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வீடு தேடி நிவாரணம் கொடுத்தது நீங்கள் தான்” என்று Concrete study circle குழுவினருக்கு நன்றியை தெரிவித்து பெருமூச்சு விட்டார்கள் அப்பகுதி மக்கள்.
தகவல்:
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்