குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் ஹரியானா விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த பிப்ரவரி 13 முதல்  10,000க்கு மேற்பட்ட விவசாயிகள் சம்பு எல்லையில் முகாமிட்டுள்ளனர். ஒரு புறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறம் போராடும் விவசாயிகளை ஒடுக்கும் வேலையையும் ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது.

போராடும் விவசாயிகளின் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை போடுவதும், ரப்பர் தோட்டாக்கள் கொண்டு தாக்குவதும் பெல்லட் குண்டுகளை பயன்படுத்துவதும் என்று பாசிஸ்டுகள் விவசாயிகளை தாக்கி வருகின்றனர்.

இதில் 24 வயதேயான இளம் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்துள்ளார். வாழ்வை தொடங்காத நிலையில் ஃபாசிஸ்டுகள் அடக்குமுறையால் கொல்லப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 16 அன்று போராட்ட களத்தில் 79 வயதான விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போராடும் விவசாயிகளை கொலை செய்யும் பாசிச அரசு!

பாரதிய கிசான் யூனியன் (ஏத்தா மால்வா) துணைத்தலைவர் குர்வந்தர் சிங் பலோக் கூறுகையில்  “எனது கிராமமான பலோவில் வசிக்கும் சுப்கரன் சிங் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் தலையில் பலத்த காயமடைந்து சம்பு எல்லையில் உயிரிழந்தார்…” என்று கூறுகிறார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு (2020-21) பல மாநில விவசாயிகள் ஒன்று திரண்டு போராடியதன் விளைவால் ஒரு வருட காலத்திற்கு பின்னர் வேறு வழியில்லாமல் பின்வாங்கிய ஒன்றிய பாஜக அரசு வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற்றவுடன் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தது.அதன் அடிப்படையில் தான் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்த போராட்டத்தில் போராட்ட களத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்திருந்தார்கள்.

ஆனால் 2 ஆண்டுகள் கடந்தும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகம் இழைத்து வருகிறது மோடி அரசு. இதனால் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள் பொறுத்து பார்த்த்து போதும் என்று மீண்டும் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். டெல்லி எல்லையை முற்றுகையிட்ட விவசாயிகளை பாசிச கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது ஹரியானா பாஜக அரசும், இந்திய ஒன்றிய அரசும்.

ஹரியானா எல்லையிலேயே அவர்களை தடுத்து நிறுத்துவதுடன் சொந்தநாட்டு விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி கண்களை குருடாக்குவதுடன் ரப்பர் தோட்டாக்களால் தாக்கி விவசாயிகளை கொலையும் செய்துள்ளது.

இதையும் படியுங்கள்: 

இதுவரை நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள். ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறுகிறார் ஒன்றிய விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டா. குறைந்த பட்ச ஆதார விலை குறித்து கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றாத வரையில் போராட்டத்தை நிறுத்த விவசாயிகளும் தயார் இல்லை.

2024 நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ள பாஜக சங்கப் பரிவார் கும்பலுக்கு விவசாயிகள் போராட்டம் பெரும் குடைச்சலாக மாறியுள்ளது. கடந்த போராட்டம் போல் டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்தால் உலகளவில் பேசுபொருளாகி மோடியின் செல்வாக்கு குறைந்து விடும் என்ற அச்சத்தினாலேயே போராட்டத்தை ஒடுக்கப் பார்க்கிறது.

விவசாயிகளின் இந்த போராட்டம் அனைத்து மக்களுக்கானது. இன்று விலைவாசி கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்துள்ளதற்கும் குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகள் கோருவதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. பூண்டு அமோக விளைச்சல் கண்டிருந்த நாட்களில் சரியாக விலை கிடைக்காததால், 1 கிலோ 1 ரூபாய் நிலைக்கு சென்ற போது விவசாயிகள் வேறு வழியின்றி பூண்டு சாகுபடியை குறைத்தார்கள். அதனாலே பூண்டிற்கு கிராக்கி ஏற்பட்டு 600 ரூபாய் வரை விலை சென்றது.

ஒருவேளை குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக்கப்படிருந்தால் பூண்டு விவசாயிகளுக்கு லாபம் கிடைத்திருக்கும், வாங்கிப் பயன்படுத்தும் மக்களும் விலை உயர்வு இல்லாமல் பயனடைந்திருப்பார்கள். இது ஒரு எடுத்துக்காட்டு தான்.

ஒன்றிய பாஜக அரசை பொறுத்தமட்டில் அதானி போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்களே விவசாயிகள். அவர்களுக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவதும், பல லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்வதும் இதனை எதிர்த்து நியாயமான கோரிக்கைகளை வைத்து போராடும் விவசாயிகளை போலிசு இராணுவங்களை ஏவி கொல்வதும், காயப்படுத்துவதே பாசிஸ்டுகளுக்கு மகிழ்ச்சியாக தோன்றாலாம். மக்கள் விவசாயிகள் பக்கம் நிற்காத வரையில் தான் பாசிஸ்டுகளுக்கு பலம்.

அதனால் விவசாயிகள் போராட்டத்தை நமது போராட்டமாக வரித்துக் கொண்டு அவர்களுக்காக அனைவரும் கரம் கொடுப்போம். டெல்லிசலோ போராட்ட்த்தை பெரும் மக்கள் போராட்டமாக மாற்றியமைத்து பாசிஸ்ட்களை மரண அடி கொடுப்போம்.

  • மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here