ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் முறையில் நேர்மையைப் பேணுவது மிகவும் முக்கியமானது.  ஆளும் கட்சியானது இதை சீர்குலைக்க முயல்வது ஜனநாயகத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்துவிடும். இந்தியாவை ஆளும் மோடி அரசு இதைத்தான் செய்து வருகிறது. இந்திய அரசுக்கு எதிராக  மனித உரிமை மீறல்கள், மத சகிப்புத் தன்மையின்மை மற்றும் ஜனநாயகப் பின்னடைவு குறித்தெல்லாம் சர்வதேச அளவில் விமர்சனங்கள் அவ்வப்போது வைக்கப்படுவதுண்டு.

ஆனால் இன்றைய நிலையில் அமெரிக்கா, ஜெர்மன் மற்றும் ஐ.நா போன்றவை இந்தியத் தேர்தல் குறித்தான கவலையை வெளிப்படுத்தியுள்ளன.

பிரதமர் மோடி ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தின் போதும் வாய் கிழியப் பேசுவது “இந்தியா என்பது ஜனநாயகத்தின் தாய்” என்பதைத்தான். ஆனால் கடந்த 10 ஆண்டுகால மோடியின் ஆட்சியில், இந்தியா ஜனநாயகப் பாதையிலிருந்து தடம் புரண்டு எதேச்சதிகாரப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை V – DEM எனும் ஜனநாயகத்திற்கான சர்வதேச ஆய்வு நிறுவனம் சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளது.

போலி சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை இருந்த பெயரளவு ஜனநாயகமும் மோடி கும்பலால் கேள்விக்குரியதாகி உள்ளது. ஜனநாயகம் என்பதன் மறு பெயர் மக்களாட்சித் தத்துவமாகும். இதில் எந்த ஒரு தனி மனிதனோ அல்லது அரசியல் இயக்கமோ, எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் தமது கொள்கை முன்மொழிவுகளைப் பேசவும், அரசியல் தலைவர்களை விமர்சிக்கவும் மற்றும் பொதுவெளியில் ஆளும் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யவும் முழு உரிமை உள்ளது.

அதேபோல இரண்டுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருப்பதும் ஜனநாயகத்தின் அவசியமாக உள்ளது. மீண்டும் மீண்டும் தேர்தல் நடத்துவதால் மட்டுமே ஜனநாயகம் தழைத்து விடாது. ஒரு நாட்டில் மக்கள் விரும்பும் உண்மையான அரசியல் மாற்றம் ஏற்படும் போதுதான் அந்தத் தேர்தல் அர்த்தமுள்ளதாக மாறுகிறது. எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் சுமூகமாக நடைபெறுவதற்கு எதிர்க்கட்சிகளின் இருப்பு மிகவும் இன்றியமையாதது.

எதிர்க்கட்சிகளின் பங்கு வெறுமனே அரசியல் போட்டிக்கு மட்டுமானது அல்ல; ஜனநாயக விழுமியங்களை நிலை நிறுத்தவும், ஆளும் கட்சியானது மக்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகவே எதிர்க்கட்சிகள் உள்ளன. பலதரப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் மூலமாகவே சமூகத்தில் உள்ள ஒரு நபர் பன்முகக் கண்ணோட்டத்தைப் பெற முடிகிறது.

ஒரு ஆளும் கட்சியானது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தவே, அதாவது ஆளும் தரப்புக்கு அல்லது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமான முடிவுகளை எடுக்கவே முற்படும். இதற்கு முட்டுக்கட்டை போடவும், அதிகாரக் குவிப்பை தடுக்கவும்  பலமான எதிர்கட்சி என்பது அவசியமாகிறது.

ஆனால் இன்றைய மோடி தலைமையிலான அரசு, எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என நினைக்கிறது.

எதிர்க்கட்சிகளை வேட்டையாடும் மோடி!

பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு வாரங்கள் முன்னதாக பிரதான எதிர்க் கட்சியான காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன. தேர்தல் அறிவிப்பு வந்த பிறகும் எதிர்கட்சிகளுக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள். மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப் படுகிறார்கள். இந்த நிலையில் இங்கு துளியாவது ஜனநாயகம் இருக்கிறதா என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

ஓரளவு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு பெயர் பெற்ற நாடான இந்தியாவில், தற்போது அரசியல் அமைப்பின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கே கடும் சவாலான சூழலை ஆளும் பாஜக கும்பல் உருவாக்கியுள்ளது. ஆளும் கட்சியின் உத்தரவின் பேரில் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுப் பிரிவு, வருமான வரித்துறை மற்றும் பிற தன்னாட்சி அமைப்புகள் எதிர்க்கட்சிகளின் மீது பாய்ந்து நடவடிக்கை எடுப்பதால் அவை தங்களது இருப்பை தக்க வைக்கவே போராடுகின்றன.

திமுக, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, ஆம் ஆத்மி மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்ட பல எதிர்க்கட்சிகளில் உள்ள தலைவர்கள் திட்டமிட்டு குறி வைக்கப் படுகிறார்கள். ஆளும் கட்சி மட்டுமே யோக்கிய சிகாமணி போலவும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஊழல், லஞ்ச வாவண்யங்களை செய்வதாகவும் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. எதிர்க் கட்சிகளிலிருந்து பாஜக வில் சேர்பவர்கள் உத்தமர்களாகி விடுகின்றனர். மறுப்பவர்கள் கைது, சிறை என மாதக் கணக்கில் பிணை கூடப் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சமாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித் துறையால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது நடைபெறவிருக்கும் தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா? என்ற பெரும் சந்தேகம் ஏற்படுகிறது.

காங்கிரசை முடக்க முயலும் மோடி அரசு! 

கடந்த பிப்ரவரி மாதத்தில் அதாவது தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, வருமான வரித்துறை அதிகாரிகள் காங்கிரஸின் கணக்குகள் வைத்திருக்கும் வங்கிகளுக்கு அந்த கணக்குகளை முடக்குவதற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை காங்கிரஸ் கட்சி அணுகியது. அந்த முறையீடு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

1994 – 95 மதிப்பீட்டு ஆண்டில் காங்கிரஸ் சுமார் 5 கோடி வரி பாக்கியை வைத்திருந்ததாகவும், அதற்கு வட்டியாக 48.8 கோடியை சேர்த்து மொத்தம் 53.8 கோடியை செலுத்த வேண்டும் எனவும் இத்தனை ஆண்டுகள் கழித்து வருமான வரித்துறை  உத்தரவிட்டுள்ளது. அதேபோல 2013 -14 தொடங்கி 2019 – 20 வரையிலான ஆண்டுகளிலும் வரிபாக்கி, அதற்கான வட்டி மற்றும் தண்டத்தொகை (Penalty) கணக்கிட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மொத்தம் 3,567 கோடி தொகையை உடனே செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

பிரச்சனை இப்போது வரிக்கான நோட்டீஸ் மட்டுமல்ல, மாறாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நேரமும், தன்மையும்தான் முக்கியமாக பரிசீலிக்கப்பட வேண்டியதாகும். தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் பாசிச பாஜக அரசின் இந்த நடவடிக்கையானது தேர்தல் நியாயமாக நடைபெறுமா என்ற வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது. தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வாய்ப்புகளை பலவீனப்படுத்த அனைத்தையும் செய்கிறது ஆளும் மோடி அரசு.

தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்குவதன் மூலம் எதிரியை முடமாக்கிவிட்டு போட்டிக்கு அழைப்பது போல பாஜகவின் செயல்பாடு உள்ளது. பிஜேபியின் நடவடிக்கைகள் யாவும் அப்பட்டமாக உள்நோக்கம் கொண்டதாகவும், தேர்தலில் போட்டி சமனற்றதாக இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்: 

தேர்தலில் எந்த ஒரு அரசியல் கட்சியின் வெற்றிக்கும் நிதி மிக முக்கியப் பங்கு வகிப்பதை மறுக்க இயலாது. தேர்தல் பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகை நன்கொடைகளைப் பெற்று பெரும் நிதி ஆதாரத்துடன் விளங்கும் பாசிச பாஜக, தனது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் நிதியை முடக்குவது, காங்கிரசின் பிரச்சாரத்தையும், வெற்றியையும் தடுப்பதற்காகவே ஆகும். தேர்தல் பிரச்சாரத்துக்கு விளம்பரங்கள் மிகவும் முக்கியம். கட்சிகள் தங்களது செய்தியை வாக்காளர்களுக்கு கொண்டு செல்ல விளம்பரங்களும், அதற்கான நிதியும் மிகவும் அவசியமாகிறது.

தொலைக்காட்சி, பத்திரிகை மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள் மட்டுமல்லாமல், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் மூலமாக மக்களை சந்திக்கவும் வேட்பாளர்களுக்கு நிதி தேவைப்படுகிறது. அலுவலக இடம், தொண்டர்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து அனைத்துக்கும் செலவு செய்தாக வேண்டும். இந்த சூழலில்தான் ஒரு கட்சியின் நிதி ஆதாரத்தையே ஒட்டுமொத்தமாக முடக்கும் வேலையை மோடி அரசு செய்கிறது. இத்தகைய செயலானது எதிரியை முடமாக்கி விட்டு, சண்டைக்கு அழைக்கும் கோழைத்தனமானதாகும்

இது “வரி பயங்கரவாதம்”- காங்கிரஸ் குற்றச்சாட்டு!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது X பதிவில், “அரசாங்கம் மாறும் போது ஜனநாயகத்தை சிதைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இப்படி எல்லாம் செய்ய யாருக்கும் தைரியம் வராத வகையில்  நடவடிக்கை இருக்கும். இதுவே எனது உத்தரவாதம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஜெய்ராம் ரமேஷ், “எம்மை பொருளாதார ரீதியாக முடக்கவே நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இது வரி பயங்கரவாதம் ஆகும். காங்கிரசைத் தாக்க இது பயன்படுத்தப்படுகிறது. இதை உடனே நிறுத்த வேண்டும்” என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி நாகரத்னா அமர்வில் ஏப்ரல் 1 அன்று விசாரணைக்கு வந்தபோது, தங்களது தலையில் சம்மட்டியால் அடி வாங்க வேண்டி இருக்கும் என உணர்ந்த வருமான வரித்துறை, காங்கிரசுக்கு எதிராக எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் இப்போதைக்கு எடுக்க மாட்டோம் என உத்தரவாதம் அளித்துள்ளது.

பல்வேறு தில்லுமுல்லுகளையும், அதிகாரத்தை கேடாகப் பயன்படுத்தியும் இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாசிச பாஜக முயல்கிறது. அதன் சதித்திட்டங்கள் அனைத்தையும் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியதும், தேர்தலில் “இந்தியா” கூட்டணியை ஆதரிக்க வேண்டியதும் ஜனநாயக சக்திகளின் முக்கியக் கடமையாக உள்ளது.

குரு

மூலம்: https://thewire.in/politics/congress-income-tax-vivek-tankha

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here