ஞ்சை பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள பூவாளூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்ற பட்டியலின இளைஞரும், நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பிற்படுத்தப்பட்ட இளம்பெண்ணும் நீண்டகாலமாக காதலித்து பள்ளிப்படிப்பு முடித்தவுடன் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலைசெய்து வந்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 31/12/23 அன்று திருமணம் செய்துகொண்டு ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்தனர். இவர்களின் திருமணத்தை அறிந்துகொண்ட பெண்வீட்டார் பெண்ணை மீட்டுத் தரவேண்டும் என்று பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

“அது எப்படி ஒரு ஆண்டசாதி பெண்ணை ஒரு கீழ்சாதி பையன் கட்டிக்கலாம்?” என்று பொங்கியெழுந்த போலீசு உடனே அப்பெண்ணைக் கண்டுபிடித்து அவரின் எதிர்ப்பையும் மீறி பெற்றோருடன் வழியனுப்பி வைத்துள்ளது. ஐஸ்வர்யாவை வீட்டில் அடைத்துவைத்து 2.01.2024 அன்று இரவு அடித்துக்கொன்று ஆணவப் படுகொலை செய்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் 3-ஆம் தேதி அதிகாலையிலேயே யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சுடுகாட்டில் வைத்து ஐஸ்வர்யாவின் சடலத்தை எரித்து சாம்பல் கூட இல்லாமல் செய்திருக்கிறார்கள். இப்படுகொலை நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகே, அதாவது 7/01/24 அன்றுதான் வெளிவந்துள்ளது. அதன் பிறகே சாவாதானமாக ஐஸ்வர்யாவைப் படுகொலை செய்த அவரது பெற்றோரைக் கைதுசெய்து சிறையில் அடைத்து தனது “கடமையைச்” செய்துள்ளது போலீஸ். இச்சம்பவத்தை முன்னிட்டு ஆணவப்படுகொலைகளைத் தடுப்பதற்கான சிறப்பு சட்டம் இயற்றவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

இந்தியாவில் அதிகரித்துவரும் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காகவும் அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களை தண்டிப்பதற்காகவும் சிறப்புச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும் என 2018-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற அமர்வு பரிந்துரை செய்துள்ளது. இப்படியொரு சட்டம் இயற்றப்படும் வரையில் மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளாக “இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும், தலைமை செயலாளர் தலைமையில் கிராமம், தாலுகா, மாவட்டம் வாரியாக எங்கெல்லாம் கலப்புத் திருமணம் நடந்துள்ளதோ அதனைக் கணக்கெடுக்க வேண்டும். அவர்களுக்கு ஆபத்து இருப்பது தெரியவந்தால் தன்னிச்சையாக அந்த வழக்கை கையில் எடுக்க வேண்டும். மேலும், கலப்பு மணம் செய்தவர்களுக்குப் பிரச்னைகள் இருந்தால் அவர்களுக்குத் தனி வீடு கொடுத்து அவர்களுக்கான உணவு மற்றும் இதர செலவுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

“கலப்புத் திருமணம் செய்வதற்கு இந்து திருமணச் சட்டம் தடையாக இல்லை,” “காப் பஞ்சாயத்தும் கட்டப்பஞ்சாயத்தும் ஒன்றுதான். இவை இரண்டும் மோசமான, ஜனநாயகத்துக்கு எதிரான விஷயங்கள்,” “திருமணம் செய்து கொள்வதற்கான முடிவை எடுக்கும் அனைத்து அதிகாரங்களும் பெண்களுக்குத்தான் உள்ளது. அவர்களது தேர்வில் யாரும் குறுக்கீடு செய்யக் கூடாது. அவர்களின் சுயமரியாதையைக் கேள்வி கேட்கக் கூடாது,” “அனைத்து ஆணவக் கொலைகளுக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும்” என தனிச்சட்டம் இயற்றப்படுவதற்கு சாதகமாக உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் பல்வேறு தீர்ப்புகள் வந்துள்ளன.  மேலும், 2012-ஆம் ஆண்டு தேசிய சட்ட ஆணையம் திருமண சுதந்திரத்தை அங்கீகரிக்கவும், சட்டவிரோத பஞ்சாயத்துகளை தடுக்கவும் வரைவு ஒன்றைக் கொண்டு வந்தது. ஆனால் இவையெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாகவே இருக்கின்றன.

“2016-ஆம் ஆண்டில் இருந்து 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் எத்தனை ஆணவக் கொலைகள் நடந்துள்ளன?” என தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டதற்கு நெல்லையில் 1, திருப்பூரில் 1, தூத்துக்குடியில் 2 என நான்கு கொலைகள் மட்டுமே நடந்துள்ளதாக தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது. ஆனால் நாங்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட வழக்குகளே அறுபதுக்கும் மேல் இருக்கும். மேற்கண்ட நான்கு வழக்குகளிலும் ஏழு பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். இதுதவிர, கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகள் தொடர்பாக ஆறு தீர்ப்புகள் வந்துள்ளன. இதில் நான்கு வழக்குகளில் செசன்ஸ் நீதிமன்றத்தில் தண்டனை கிடைத்தாலும் மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றத்தால் கொலையாளிகள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்” என்கிறார் எவிடென்ஸ் கதிர்.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 120 முதல் 150 காதல் விவகாரம் தொடர்பான கொலைகள் நடக்கின்றன. தமிழ்நாட்டில் இப்படியென்றால் உ.பி.-யிலும் ம.பி.-யிலும் எவ்வளவு நடக்கும்? ஒட்டுமொத்த இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஆண்டுக்கு மூன்றாயிரம் கொலைகளாவது நடக்கும். 2014-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் கலப்புத் திருமண தம்பதிகளைக் காப்பதற்கு பாதுகாப்பு மையம் ஒன்றை மாவட்ட எஸ்.பி, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சமூக நலத்துறை என மூன்று துறைகளும் இணைந்து செயல்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. 2019-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் “பாதுகாப்பு மையம் எங்கே அமைத்தீர்கள்?” என அரசிடம் கேட்டதற்கு 38 மாவட்டங்களில் அமைத்துள்ளதாக அரசு அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, 3 மாவட்டங்களைத் தவிர வேறு எங்கும் பாதுகாப்பு மையம் அமைக்கப்படவில்லை எனத் தெரியவந்தது” என்கிறார்.

தனிச்சட்டம் இயற்றுவதால் ஆணவப்படுகொலைகளை தடுத்துவிடமுடியுமா என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும் பரந்துபட்ட மக்களிடம் உள்ள பார்ப்பனியத்தின் தாக்கமே இத்தகைய ஆணவப் படுகொலைகளுக்கு அடிப்படையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, அதிகாரவர்க்கத்திடம் படிந்திருக்கும் சாதிய மனநிலையே இப்படுகொலைகள் நடப்பதற்கு முழுமுதல் காரணமாக உள்ளது. மேற்கண்ட நவீன்-ஐஸ்வர்யா ஆணவப் படுகொலையில் பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டரான முருகையாவின் சாதிய மனநிலையே 19 வயதுடைய திருமணமான ஒரு மேஜர் பெண்ணை வலுக்கட்டாயமாக கணவரிடமிருந்து பிரித்து, அப்பெண்ணின் எதிர்ப்பையும் மீறி பெற்றோரிடம் அனுப்பியதுதான் ஐஸ்வர்யாவின் படுகொலைக்கு காரணம். கலப்பு மணம் புரிந்தவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்குப் பதிலாக, அவர்களை மிரட்டி, பிரித்து, பெற்றோரிடம் ஒப்படைத்ததற்கு சாதி பாசம் தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்? ஆனால் இப்படுகொலைக்கு முழுமுதல் காரணமான இன்ஸ்பெக்டர் முருகையா ஒரு குற்றவாளியாக சேர்க்கப்படாமல் வெறும் இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: 

சமூக செயல்பாட்டாளர்கள், முற்போக்காளர்கள் கோருவதைப்போல  நாளையே ஆணவப்படுகொலைகளை தடுப்பதற்கான தனிச்சட்டம் இயற்றப்பட்டாலும்கூட அதிகாரவர்க்கத்தின் ஒடுக்கப்பட்டவர்களுக்கெதிரான சாதிவெறியும், அதைத் தடுக்கத்தவறும் அரசின் அசட்டையான போக்கும் PCR சட்டதைப்போன்றே ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதில் அக்கறைகாட்டுமா என்பது சந்தேகமே.

ஒன்றியத்தில் பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழகத்தில் புத்துணர்வுபெற்று வளர்ந்துவரும் சாதிசங்கங்களை தடைசெய்வதும், ஒடுக்கப்பட்டவர்கள்மீது சாதிரீதியாக தாக்குதல் நடத்தும் ஆதிக்கசாதிகளுக்கு அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுவதும் போன்ற சட்டரீதியான நடவடிக்கைகளும் அவசியப்படுகிறது. அதோடு, பெரியார்-அம்பேத்கர்-பொதுவுடைமை கருத்தியலை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலமும், சாதி/மதம்/இன/மொழி வேறுபாடுகளைக் கடந்து வர்க்கமாக ஒன்றிணைப்பதன் மூலமும் சமுதாயத்தை விடுவிப்பது மட்டுமே இத்தகைய சாதிய ஒடுக்குமுறைகளையும், ஆணவப் படுகொலைகளையும் நிரந்தரமாக ஒழித்துக்கட்டும்.

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here