“நா காவுங்கா, நா  கானே துங்கா” (நான் லஞ்சம் வாங்க மாட்டேன், யாரையும் லஞ்சம் வாங்கவும் அனுமதிக்க மாட்டேன்) என்று வீரவசனம் பேசி ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்த மோடி கடந்த பத்தாண்டுகளில் நடத்திய மெகா ஊழல் பட்டியலில் தற்போதைய வரவுதான் தேர்தல் பத்திரங்களின் மூலம் ₹6000 கோடிக்குமேல் நடத்தியுள்ள உலகமகா ஊழல். அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள் மூலம் கறுப்புப்பணம் வெள்ளையாக்கப்படுவதாக முதலைக்கண்ணீர் வடித்து 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் தேர்தல் பத்திரங்கள் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய அப்போதைய நிதியமைச்சரான அருண் ஜெட்லீ, “அரசியல் கட்சிகள் மக்களிடமிருந்து நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மையை தேர்தல் பத்திரங்கள் உறுதிப்படுத்தும்” என்று கூறினார்.

அதாவது கட்சிகளுக்கும் நன்கொடை வழங்குபவர்களுக்குமான நேரடித்தொடர்பை தேர்தல் பத்திரங்கள் தடுக்கும் என்று கூறினார். தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்த போது அது தொடர்பான விவாதத்தில் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மிகக்கடுமையான முறையில் எதிர்த்து வாதிட்டார். அரசியல் கட்சிகளிடையே எழுந்த எதிர்ப்புகளையடுத்து உடனே அந்த சட்டத்தை நிதி மசோதாவாகக் கொண்டுவந்து நிறைவேற்றியது மோடி அரசு. இது நிதி மசோதா அல்ல, மாறாக, மிகப்பெரும் அளவில் நிதியை சூறையாடப்போகிற, பணத்தை அள்ளி விழுங்கப்போகிற மசோதா என்று சீத்தாராம் யெச்சூரி விவாதத்தின்போது குறிப்பிட்டார்.

அப்போதிருந்தே தேர்தல் பத்திரங்கள் எப்படியெல்லாம் முறைகேட்டிற்கு வழிவகுக்கும் என்று பல்வேறு விபரங்கள் அவ்வப்போது வெளிவந்தவண்ணம் இருந்தன. அதைத்தொடர்ந்து “ஜனநாயக சீர்திருத்தக்கழகம்” (Association for Democratic Reforms), காம்மன் காஸ் (Common Cause)  என்ற தொண்டு நிறுவனங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக 2017-ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தன. பல்வேறு கட்டங்களாக விசாரிக்கப்பட்ட அவ்வழக்கில் 7 வருடங்களுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 15 அன்று ”மோடி அரசின் தேர்தல் நன்கொடை பத்திரத் திட்டம் லஞ்சம் பெறுவதை சட்டபூர்வமாகும் திட்டம். எனவே, இது அரசமைப்பு சட்டத்திற்கு  எதிரானதால் இத்திட்டம் செல்லாது” என்று உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அத்துடன் தேர்தல் பத்திரங்களை வழங்கிய இந்திய ஸ்டேட் பாங்க்-கையும் (SBI) யார் எவ்வளவு மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளனர், எந்தெந்த கட்சிகள் அவற்றை மாற்றியுள்ளன என்ற விபரங்களைத் தாக்கல் செய்யச்சொன்னது. அதுமுதல் கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதையாக பாசிச பாஜக-வின் சட்டபூர்வ கொள்ளைகள் நாள்தோறும் அம்பலமாகி மோடியின் முகத்திரையை கிழித்துத் தொங்கவிடுகின்றன.

பாஜக பாசிஸ்டுகளோ பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும் கேள்விகளை எதிர்கொள்ளமுடியாமல் இஞ்சிதின்ற குரங்காகத் தவித்து வருகின்றனர்.  இப்பிரச்சினையை திசைதிருப்புவதற்காக CAA-வை அமல்படுத்துவது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைதுசெய்வது, காங்கிரசின் வங்கிக்கணக்குகளை முடக்குவது, வருமானவரித்துறை நோட்டீஸ் என்று தங்களாளான அனைத்து குறளி வித்தைகளையும் செய்து வருகிறார்கள்.

தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பரஸ்பர கைமாறு, அடாவடி வசூல், பிரதிபலன், சட்டவிரோத பணப்பரிமாற்றம் ஆகிய நான்கு வழிகளில் பாஜக பாசிஸ்டுகள் 2019 முதல் கடந்த 2023 மார்ச் மாதம் வரையிலான நான்கு ஆண்டுகளில் சுமார் ₹6,986.5 கோடிகளைக் கல்லாகட்டியிருக்கிறார்கள்.

பரஸ்பர கைமாறு

குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வாங்கிவிட்டு அரசு ஒப்பந்தங்களைக் கொடுப்பது. இப்படி சுமார் 37 நிறுவனங்கள் பாஜக-விற்கு ₹1,751 கோடி பெறுமான பத்திரங்களைக் கொடுத்து ₹3.7 லட்சம் கோடி ரூபாய் பெறுமான 179 அரசாங்க ஒப்பந்தங்களை பெற்று அபார பலன்களை அடைந்துள்ளன.

இதற்கு ஒரு சில உதாரணங்களாக தெலுங்கானாவைச் சேர்ந்த மேகா எஞ்சினியரிங் அண்ட் இன்பிரா என்ற நிறுவனத்திடம் மொத்தமாக ₹669 கோடிகளை பாஜக பெற்றுள்ளது. அதற்கு பிரதிபலனாக ₹4509 கோடி மதிப்புள்ள ஜம்மு காஷ்மீரின் ஜோஜிலா சுரங்கப்பாதை ஒப்பந்ததையும், ₹14,400 கோடி மதிப்பிலான தானே-போரிவாலி இரட்டை சுரங்கப்பாதை ஒப்பந்ததையும் பெற்றுள்ளது.

அதேபோல ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனம் பாஜக-வுக்கு ₹25 கோடி நன்கொடை கொடுத்து சட்டிஸ்கர் மாநிலத்தில் காரே பால்மா நிலக்கரி சுரங்க ஒப்பந்ததைப் பெற்றுள்ளது.

அடாவடி வசூல்

அமலாக்கத்துறை, சிபிஐ, மற்றும் வருமானவரித்துறை சோதனைகள் மூலம் நிறுவனங்களை மிரட்டி வசூல் செய்தது. அமித்ஷா குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தபோது குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களிலுள்ள மார்பிள் குவாரி அதிபர்களிடம் ரவுடிகளை அமர்த்தி சட்டவிரோதமாக வசூல் செய்ததுதான் அவரது ’வீர’ வரலாறு. அவர் ஒன்றிய உள்துறை அமைச்சரானதும் எல்லைகளை விரிவுபடுத்தி இந்தியாவெங்கும் ஒன்றிய விசாரணை அமைப்புகளை வைத்து நிறுவனங்களை மிரட்டி வசூல் செய்துவந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. இதன்படி சுமார் 41 நிறுவனங்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளான சிபிஐ, வருமானவரித்துறை, மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றால் சோதனைக்கு உட்படுத்தப்படுத்தி ₹2,471 கோடிகளை தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக நன்கொடை பெற்றுள்ளது.

இதற்கு உதாரணமாக ஹீட்டரோ பார்மா (₹15 கோடி), யசோதா ஹாஸ்பிடல் (₹10 கோடி), ஷீர்டி சாய் எலக்ட்ரிக்கல்ஸ் (₹40 கோடி), லாட்டரி மார்டினின் பியூச்சர் கேமிங் (₹100 கோடி) நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு இந்நிறுவனங்கள் பாஜக-வுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் படியளந்துள்ளன.  ஒவ்வொருமுறை சோதனை நடத்தப்படும்போதும் இந்நிறுவனங்கள் உடனடியாக தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்திருக்கின்றன.

பிரதிபலன்

இம்முறையில் முன்னரே டீலிங் பேசி முடிவுசெய்துகொண்டு அரசு ஒப்பந்தங்களைக் கொடுத்துவிட்டு பிறகு ஏற்கனவே பேசியபடி கமிஷனை தேர்தல் பத்திரங்களாக வாங்கிக்கொள்வது.

கொரோனா பெருந்தொற்றின்போது தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்று பல்லாயிரம் கோடிகள் குவித்து திடீர் பணக்காரராக மாறிய சீரம் இன்ஸ்டிட்யுட்-ன் முதலாளி தனது நிறுவனம் மூலம் ₹50 கோடி ரூபாய் அளவிற்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜக-வுக்கு நிதியளித்துள்ளார்.

தனது ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராகப் போராடியவர்களை போலீஸ் மூலம் சுட்டுக்கொன்ற வேதாந்தா நிறுவனம் ராதிகாபூர் சுரங்க ஒப்பந்ததை பெற்றுக்கொண்டு அதற்கு பிரதிபலனாக ₹25 கோடிகளை தேர்தல் பத்திரம் மூலம் பாஜக-வுக்கு நன்கொடையளித்துள்ளது.
அது போலவே மேகா எஞ்சினியரிங் அண்ட் இன்பிரா நிறுவனம் BKC புல்லட் ரயில்நிலைய ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டு ₹56 கோடி நன்கொடை அளித்துள்ளது.

5G அலைக்கற்றை ஒப்பந்தத்தை ஏலம் நடத்தாமல் தனக்கு தாரைவார்த்ததற்காக ஏர்டெல் நிறுவனம் ₹236 கோடியை வாரிவழங்கியுள்ளது. இது பகவத் கீதை சொல்லும் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்ற ’இந்து தர்மத்துக்கு’ எதிரானது

சட்டவிரோத பணப்பரிமாற்றம்

கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் நிறுவனங்கள் தங்களது மூன்று வருட லாபத்தில் 7 சதவீதத்துக்கு மிகாமல் நன்கொடை அளிக்கலாம் என்ற சட்டத்தை மோடி கும்பல் திருத்தியது. இதன் மூலம் ஊழலை சட்டப்பூர்வமாக்கியது. இதன்மூலம் 2017-க்கு பின்பு மட்டும் சுமார் 43 உப்புமா நிறுவனங்கள் ( டீசெண்டாக சொன்னால் ஷெல் நிறுவனங்கள்) முளைத்தன. இவற்றில் கணிசமான நிறுவனங்கள் கோவிட்-19 தொற்றுக் காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடே ஊரடங்கில் முடங்கிப்போய் தொழில் நிறுவனங்கள் இயங்காமல், உற்பத்தி நடக்காத நேரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் மூலமாக மட்டும் ₹100 கோடி அளவிற்கு தேர்தல் பத்திரங்கள் பாஜாக-வுக்காக வாங்கப்பட்டுள்ளன.

இப்படி தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜக பாசிஸ்டுகள் நடத்திய திருட்டுத்தனங்கள் ஒவ்வொருநாளும் வெளிவந்தவண்ணமுள்ளன. லஞ்சத்தை சட்ட பூர்வமாக்கி, பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பதை நியாயப்படுத்தி சரித்திரம் படைத்துள்ளது பாசிச பாஜக. இது இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் அல்ல உலகத்திலேயே மிகப்பெரிய மெகா ஊழல் என்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார அறிஞருமான பிரகலா பிரபாகர். தேர்தல் பத்திரங்கள் மூலம் தாங்கள் கொள்ளையடித்தது அம்பலப்பட்டு நாறிக்கொண்டிருப்பதைப் பற்றி விளக்கமளித்த அமித்ஷா தேர்தல் பத்திரங்கள் மூலமாக மொத்தமாக பெறப்பட்ட ₹20,000 கோடியில் பாஜகவு-க்கு வெறும் ₹6000 கோடிகள்தான் கிடைத்துள்ளதாக அப்பட்டமாகப் புளுகி மற்றக்கட்சிகளும்தான் தேர்தல் பத்திரங்கள் வழியாக நன்கொடைபெற்றுள்ளன என்று தான் செய்த அடாவடி வசூலை நியாயப்படுத்தியுள்ளார்.

கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாகத்தான் நன்கொடை வாங்கவேண்டுமென்று சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டு மற்ற கட்சிகளும்தானே ஊழல் செய்துள்ளது என்று கூறி தான் செய்த மெகா ஊழலை சமன்படுத்த முயற்சிக்கிறார். தமிழ்நாட்டிலும் பாசிச பாஜக-வின் அண்ணாமலை திமுக எப்படி இவ்வளவு நன்கொடை பெற்றது, திரிணமூல் காங்கிரஸ் எப்படி இவ்வளவு நன்கொடை பெற்றது என்று எதிர்கேள்வி கேட்டு தனது ஆட்டுமூளையின் “வலிமையை” வெளிப்படுத்தியிருக்கிறார்.

தற்போதுவரை வெளிவந்துள்ள தகவல்கள் எல்லாம் பனிப்பாறையின் முகடுதான் என்று மக்களுக்கான செய்தி இணையதளங்கள் தெரிவித்துள்ளன. அதுமட்டுமல்லாமல் இதுவரை கிடைத்துள்ள விபரங்கள் எல்லாமே 2019 ஆண்டுக்குப் பின்னர் உள்ளவைதான் என்றும், அதற்கு முன் வாங்கப்பட்ட சுமார் ₹2500 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும், அம்பானி, அதானி உள்ளிட்ட மோடியின் ஆத்ம நண்பர்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக-வுக்கு கொடுத்திருக்கும் நன்கொடைகள் பற்றிய விவரங்கள் வெளிவரவில்லை என்றும் குறிப்பிடுகின்றன. இந்தக் கூத்துகள் போக சுமார் ₹600 கோடிக்கும் மேலான மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் குறித்த விபரங்கள் காணவில்லையென்று SBI சமீபத்தில் தெரிவித்துள்ளது.

ஒரு அரசியல் கட்சியாக உலக மகா ஊழலை செய்து கையும் களவுமாக மாட்டிக்கொண்ட இந்த திருட்டு கொலைகார கலவரக்கும்பல்தான் எதுவுமே நடக்காததுபோல் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுக்கேட்டு மக்களிடம் செல்லவுள்ளது. முதுகில் ஆயிரக்கணக்கான கோடிகளில் ஊழல் பணம், முகத்தில் ஊழல் கரி, கைகளில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை, மும்பை, குஜராத், மணிப்பூர், ஹரியானா, தில்லி, கர்நாடகா, உத்திரபிரதேச வன்முறைகள், இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள், தலித்துகள் மீதான வன்முறை என்று கணக்கிலடங்கா வன்முறைகள், படுகொலைகளின் ரத்தக்கறையுடன் மக்களிடம் வருகிறார்கள். ஊழலை சட்டப்பூர்வமாக்கிய இந்த பாஜக பாசிச கலவர கும்பலை தேர்தலில் மட்டுமல்ல தெருவிலும் தோற்கடிக்கவேண்டிய அவசியம் இந்த நாட்டின் மீதும், மக்கள் மீதும் பற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் உள்ளது.

இப்பாசிச கும்பலை மக்களால் சமூகப் புறக்கணிப்பு செய்யும் வகையில் மக்கள் மத்தியில் தீவிரமாக அம்பலப்படுத்துவோம். முதற்கட்டமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் INDIA கூட்டணிக்கு ஓட்டுப்போடுவதன்மூலம் மோடி-அமித்ஷா தலைமையிலான பாசிஸ்டுகளை, மனிதகுல விரோதிகளை அதிகாரத்திலிருந்து வீழ்த்துவோம்!

  • மதியழகன்

புதிய ஜனநாயகம் (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here