நாடாளுமன்றத் தேர்தலில் வென்றே ஆக வேண்டும் என்ற வெறிவுடனும் தோல்வி பயத்துடனும் இருக்கும் மோடி — அமித்ஷாவின் நீண்ட நாள் விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில், நீண்ட விடாப்பிடியான போராட்டத்திற்கு பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லியின் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து இருக்கிறது அமலாக்கத்துறை.

இந்த மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பல தலைவர்களும் 2022 ஆம் ஆண்டிலிருந்தே கைது செய்யப்பட்டுள்ளனர். உதாரணமாக, அக்டோபர் 2023 இல், ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங்கையும், பிப்ரவரி 2023ல்ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவையும் அமலாக்கத்துறை இந்த வழக்கில் கைது செய்து   சிறையில் அடைத்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி, “இந்த வழக்கு நடந்து வரும் கடந்த இரண்டு ஆண்டுகளில், ED மற்றும் CBI யால் ஒரு ரூபாய் கூட கைப்பற்முடியவில்லை. ஆயிரக்கணக்கான சோதனைகள்  நடந்த போதிலும் ஒரு ரூபாய் கூட மீட்கப்படவில்லை. தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் சதி”  என்கிறார்.

ஆக, இரண்டு ஆண்டுகளாகத் தேடியும் கூட அமலாக்கத்துறையால் மதுபானம் கொள்முதல் செய்ததில் ஆம் ஆத்மி கட்சியினர்  ஊழல் செய்துள்ளனர் என்பதை நிரூபிப்பதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியாத நிலையிலும் கூட இப்பொழுது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து இருக்கிறது என்பது எதை காட்டுகிறது?

ஆதாரம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆம் ஆத்மி கட்சியை  தேர்தலில் வீரியத்துடன்  செயல்பட விடாமல் முடக்கி விடவேண்டும்; அதன் தேர்தல் வெற்றிகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை தானே இது காட்டுகிறது?

எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பணிய வைப்பதற்கும் முடியாவிட்டால் உடைப்பதற்கும், தொழில் நிறுவனங்களை மிரட்டி பணம் பறிப்பதற்கும் அரசு நிறுவனங்களை திறம்பட சட்டவிரோதமாக கையாள்வதை ஒரு தனி கலையாக வளர்த்தெடுத்துள்ளது பிஜேபி. அதன் ஒரு வகை மாதிரி தான் அமலாக்கத்துறையின் செயல்பாடுகள்.

கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சியினரின் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதில்லை. தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வேலை செய்யக்கூடாது என்ற நோக்கத்திலேயே கைது செய்வது அல்லது கைது செய்தவரை ஜாமீனில் வெளியே வர முடியாத படி இழுத்தடிப்பது என்பது அமலாக்கத் துறையின் செயல்பாடுகளாக உள்ளன.

பாஜக தேர்தலில் கல்லா கட்டுவதற்கு ஏதுவாக சோதனையில் ஈடுபடுகிறது அமலாக்கத்துறை என்று பரவலாக கண்டனங்கள் எழுந்துள்ளன.

நிறுவனங்களை மிரட்டி தேர்தல் நிதி வழங்க வைப்பது, தேர்தலில் பாஜகவிற்கு எதிராக திரம்பட களமாட உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது அமலாக்கத் துறையை ஏவி கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற
மேற்கண்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தான் 2018-ம் ஆண்டு அமலாக்கத் துறையின் இயக்குனராக மிஸ்ரா நியமிக்கப்பட்டார்; மிஸ்ராவின் பதவிக்காலம் முடிந்த பொழுதும் கூட அவருக்கு பதிலாக வேறொரு இயக்குனரை நியமிக்காமல் தொடர்ந்து பாஜக அரசு அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுத்துக் கொண்டே இருந்தது என்று கண்டனங்கள் பரவலாக எழுந்து கொண்டே இருக்கின்றன.

மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு என்பது சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றமே கண்டித்தது. இருந்த போதிலும்  பொது நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் 15, 2023 வரை மிஸ்ராவை பதவியில் தொடர அனுமதிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது.

இதையும் படியுங்கள்:

எனவே செப்டம்பரில் 2023க்கு மேல்  மிஸ்ராவால் இயக்குனர் பதவியில் நீடிக்க முடியவில்லை. மிஸ்ராவை போன்ற பாஜகவிற்கு விசுவாசம் மிக்க வேறொரு இயக்குனரை பாஜக-வால் கண்டுபிடிக்க முடியவில்லையோ என்னவோ தெரியவில்லை. எனவே செப்டம்பர் 2023ல், செயல் இயக்குநராக  ராகுல் நவின்-ஐ  நியமித்து அமலாக்கத் துறையை “திறம்பட வேலை வாங்கி வருகிறது” பாஜக அரசு. பாஜகவின் நம்பிக்கையை ராகுல் நவீன் பொய்யாக்கவில்லை என்பது  தற்பொழுது தெளிவாகத் தெரிகிறது

இவ்வளவு சொன்ன பிறகும் அமலாக்கத் துறையை பாஜக தனது தீய நோக்கத்திற்காக பயன்படுத்தவில்லை என்று யாராவது கூறுவார்கள் எனில் அவர்களுக்காக  மேலும் ஒரு விஷயத்தை சுடிக்காட்டலாம்.

அமலாக்க துறையால் போடப்படும் வழக்குகள் அல்லது கைதுகள் என்பது 2014க்கு முன்பு இருந்தவை விட 4 மடங்கு அதிகரித்துள்ளது. அதில் 95 % நடவடிக்கைகள்  எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பாய்ந்துள்ளன.

இதற்குப் பிறகும் பாஜக தீய நோக்கத்துடன் செயல்படவில்லை என்று கூறுபவர்களை பற்றி என்ன சொல்வது?

  •  குமரன்

செய்தி ஆதாரம்: Thewire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here