உ.பி. ஆட்சியாளர்களின் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல இருக்கிறது!

உ.பி.யில் என்ன நடக்கிறது?

ராம்ராஜ்யம் என்ற பெயரில் 

அயோத்தியில் வன்முறை அரங்கேறிவிட்டது,  

அடுத்து காசி, மதுராவில் ரத்தக்கறை படியப்போகிறது

 சாமியார் முதலமைச்சரின் தொகுதியான 

கோரக்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளது.

எதிர்த்துக் கேட்டால் காக்கிச்சட்டை போலீசு

கஞ்சா கேஸ் போடுது

”ஹிந்துவானாலும் முஸ்லீம் ஆனாலும் 

நமக்கு உழைத்தால் தான் சாப்பாடு – 

இவர்களுக்கு (பாஜகவினருக்கு) 

ஹிந்து முஸ்லீம்களைப் பற்றி பேசினால் தான்

 அவர்கள் அரசியலில் பிழைக்க முடியும், 

உழைக்கும் வழியைப் பார்த்துப் போங்கடா”. 

”போராடும் விவசாயிகளை

கார் ஏற்றிக்கொலை செய்கிறான்

அமைச்சரின் மகன்,

நம்ம சவுகிதார்(மோடி) என்ன செய்கிறார்? 

கொல்லப்பட்ட விவசாயிகளின் நீதிக்கு யார் பொறுப்பு?”

‘எலிகள் கடிக்கும் சிறையில் அடைக்கப்படுவேன்” என்று என் அம்மா கூறுகிறார். ஆனால் நான் பயப்படவில்லை’

நேகாசிங் ரத்தோர் என்ற பெண்பாடகி எளிய இசைக்கருவிகளின் துணையுடன் சமூகத்தின் பிரச்சனைகளை தனது தாய்மொழியான போஜ்பூரியில் உரக்கப் பாடுகிறார். தினமும் பாடிக்கொண்டே இருக்கிறார். அவருடைய பாடல்கள் மக்களின் தொலைபேசிகளின் ரிங் டோனாக மாறி ஒலிக்கிறது. இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கும், சங்கிகளுக்கும் நவதுவாரங்கள் வழியாகவும் எரிச்சல் பொங்கி வருகிறது.

கொரானா காலத்தில் சூரத்திலிருந்தும், மும்பையிலிருந்தும் நடந்து வந்த மக்களின் துன்பத்தைப் பார்த்து அவர் பாடத்துவங்கினார். கொரான ஊரடங்கு காலத்தில் ஏதோ பொழுது போகாமல் பாடுகிறார். பிறகு அடங்கிவிடுவார் என ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். அவர் பாடல்கள் யூடியூப் வழியாக மக்களின் செவிகளை அடைய அடைய பிரபலமானார்.

 

புல்டோசர் மூலம் ஆட்சியாளும் உத்திர பிரதேச யோகி ஆதித்யநாத் சும்மாயிருப்பாரா? போலீசை ஏவினார். முதல்வரை விமர்சித்தார் என போலீசு நேகாவை கைது செய்ய போனார்கள். நேகா அவர்களுக்கு முன்பே போலீசில் விளக்கம் கொடுத்துவிட்டு, நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுவிட்டார்.

நேகா மீது கஞ்சா வழக்கைப் போட்டார்கள். அவரோ அதிர்ச்சியடையாமல், நான் என்ன சாமியாரா? கஞ்சா அடிச்சிட்டு சுருண்டு கிடக்க! நான் கஞ்சா குடித்தேனா? என்பதை எந்த ரத்தப் பரிசோதனை நிலையத்தில் சோதனை செய்யவேண்டும். சொல்லுங்கள். வருகிறேன் என அதற்கும் ஒரு பாடலை பாடினார்.

இந்துத்துவ சாமியார்கள், சங்கிகள், ஆட்சியாளர்கள் நேகாவை வாயாடி, உ.பியின் புகழை கெடுக்கிறார். எதிர்கட்சிகளிடமும், முசுலீம்களிடமிருந்தும் காசு வாங்கிக்கொண்டு பாடுகிறார என தினமும் அவதூறுகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சொல்லை வைத்தே அவர்களுக்கான பதிலடிகளை நேகா பாடல்களால் பாடிக்கொண்டிருக்கிறார்.

பாடகர் நேகா தீதி

நாட்டுப்புற பாடல்கள் பாடும் இவர் பிறந்தது பீகார். உ.பி. கான்பூரில் படித்துப் பட்டம் பெற்றார். இப்பொழுது வயது 26. உபிரதேசத்தில் இப்பொழுது கணவருடன் வாழ்கிறார். குடும்பம் அவருக்கு உறுதுணையாக இருக்கிறது. யூடியூப்பில் அவரை பத்து லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். அவர் பக்தி பாடல்களையும் பல மேடைகளில் பாடிவருகிறார். இப்பொழுது அவர் சமூக பாடல்களை அதிகமாய் பாடிவருகிறார்.

சட்டமன்றத்திலேயே எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் பாடகி நேகாவிற்கு ஆட்சியாளர்கள் தரும் குடைச்சலை கண்டித்தார். ”அவர் ஒரு நாட்டுப்புறப் பாடகி. சமூகத்தின் துன்ப, துயரங்களை பாடுகிறார். பிறகு உங்களின் ஆட்சியைப் புகழ்ந்து பஜனைப் பாடல்களையா பாடச் சொல்கிறீர்கள்? நாங்கள் ஆதரித்தால் எங்களிடம் இருந்து காசு வாங்கி கொண்டு பாடுவதாக தூற்றுவீர்கள். நான் ஆட்சி செய்த காலத்தில் எங்களை விமர்சனம் செய்தவர்களை பாராட்டி விருது கொடுத்திருக்கிறேன். அதை இந்த நாடு அறியும்.” என பேசினார்.

உ.பிரதேசத்தில் தங்களின் கோரமான ஆட்சியை எதிர்த்தவர்களை எல்லாம் சிறையில் தள்ளினார்கள். தள்ளுகிறார்கள். சுட்டுக்கொன்றார்கள். இப்பொழுதும் சுட்டுக்கொல்கிறார்கள். ஆனால் ஒரு நாட்டுப்புற பாடகியின் எளிய குரலை அவர்களால் ஒடுக்க முடியவில்லை. ஏனெனில் அவருடைய பாடல்கள் இப்பொழுது மக்களிடம் போய் சேர்ந்துவிட்டது. இப்பொழுது அவர் தனி ஆளில்லை. அவருக்கு பின்னே மக்களின் பேரதரவு இருக்கிறது. இதோ நேற்று ஒரு பாடலை பாடினார். இப்பொழுது வரை ஒன்றரை லட்சம் பேர் கேட்டிருக்கிறார்கள். “உங்கள் பாடல் ஜனநாயகத்திற்கான பாடல் சகோதரி. தொடர்ந்து பாடுங்கள்” என பின்னூட்டங்களில் மக்கள் உற்சாகப்படுத்துகிறார்கள்.

நேகா பாடுவார். அவர் கண்களில் துளியும் பயமில்லை. மோசமான ஆட்சியாளர்களுக்கு தொடர்ந்து மன உளைச்சலை கெடுக்கிறார். மக்களின் ஆதரவு இருக்கும் வரைக்கும் அவர் பாடிக்கொண்டே இருப்பார். அவர் பாடும் பாடலை நீங்களும் ஒருமுறை கேளுங்கள். பிறகு தொடர்ந்து கேட்க துவங்குவீர்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here