ந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் இருந்து கடுமையான எதேச்சதிகாரம் நிலவுவதாகவும், அதாவது சமீப ஆண்டுகளில் முதல் 10 எதேச்சதிகார நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதாகவும் ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 1975 காலகட்டத்தில் இருந்ததைப் போன்ற ஜனநாயக மட்டத்திற்கு தாழ்ந்து சென்று விட்டதாகவும், இந்தியா இனி ஜனநாயக நாடு என்று அழைக்கப்படும் தகுதியை இழந்து எதேச்சதிகார நாடு என்ற நிலைக்கு சென்று விட்டது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

ஜனநாயகத்தின் வகைகள் – V DEM (Varieties of Democracy) எனும் அமைப்பு உலகளவில் 179 நாடுகளில் நடத்திய ஒரு மதிப்பாய்வில் மேற்கண்டத் தகவல்கள் வெளியாகி உள்ளன. உலக அளவில் இப்போது எதேச்சதிகாரத்தின் அலை வீசிக் கொண்டிருக்கிறது. உலகில் 35% மக்கள் வாழும் 42 நாடுகளில் இப்போது எதேச்சதிகாரம் கோலோச்சிகிறது. அதில் சரிபாதி மக்கள்தொகை (18 %) இந்தியாவில் உள்ளது.

தெற்காசியாவில் மக்கள் அனுபவித்து வந்த தாராளமய ஜனநாயகம் கடந்த 10 ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்து, சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த நிலைக்கு சென்று விட்டது. அதாவது வியட்நாம் போர் மற்றும் இந்தியாவில் இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனப்படுத்திய காலகட்டத்திற்கு தாழ்ந்து விட்டது. 140 கோடி மக்கள் இந்தியாவில் எதேச்சதிகாரத்தின் கீழ் உள்ளனர். தாராளமய ஜனநாயகக் குறியீடு (Liberal Democratic Index) மற்றும் தேர்தல் ஜனநாயகக் குறியீடு (Electoral Democratic Index) ஆகியவற்றில் உள்ள 71 கூறுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த 179 நாடுகளின் பட்டியலில் கடந்த காலத்தை விட மோசமாக இந்தியா 104-வது இடத்தில் உள்ளது. இந்த ஆய்வறிக்கை ஆட்சிகள் எந்த அளவுக்கு தூய்மையான, சுதந்திரமான மற்றும் நேர்மையான வகையில் தேர்தல்களை நடத்துகின்றன என்பதை மட்டுமல்லாமல், அங்கு நிலவுகின்ற உண்மையான கருத்துச் சுதந்திரம், ஆண் – பெண் வாக்குரிமை விகிதம் போன்றவற்றின் அடிப்படையில் ஆராய்ந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஜனநாயகக் குறியீடுகளிலும் இந்தியாவிற்கு பின்னடைவுதான்!

உலக அளவில் பார்க்கையில் நேர்மையான தேர்தல்கள் குறியீட்டில் முதல் 18 எதேச்சதிகார நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஹங்கேரி, உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை உள்ளன. இங்கு சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கான குறிகாட்டிகள் மிகவும் மோசமடைந்துள்ளன.

அரசின் கொடுங்கோன்மை மற்றும் பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மைகளுக்கு எதிராக தனிநபர் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தாராளமய ஜனநாயகத்தில் ஒரு கூறாக உள்ளது. இந்த விஷயத்திலும் இந்தியா ஏற்கனவே இருந்ததை விடப் பின்னடைந்து 92-ஆம் இடத்தில் உள்ளது. அதேபோல அரசியல் அரங்கில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அனைத்து சமூகக் குழுக்களுக்கும் சமமான அளவில் இருக்கிறதா என்ற மதிப்பீட்டில், அதாவது சமத்துவக் கூறு குறியீட்டு எண்ணில் இந்தியா 137- வது இடத்திற்கு சரிந்துள்ளது.

அனைத்து அரசியல் செயல்முறைகளிலும் குடிமக்கள் ஊக்கமாக பங்கேற்பதை உறுதி செய்யும் பங்கேற்புக் கூறு குறியீட்டிலும் சரிவை சந்தித்து 103 – வது இடத்தில் இந்தியா உள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பகுதி இப்போது உலகின் இரண்டாவது எதேச்சதிகாரப் பகுதியாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது. இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் போன்ற தேர்தல் எதேச்சதிகார நாடுகளில் இப்பகுதியின் பெரும்பான்மையான 93% மக்கள் வசிக்கின்றனர்.

கருத்து சுதந்திரத்திற்கு கல்லறையும், டிஜிட்டல் ஒடுக்கு முறையும்!

கடந்த 10 ஆண்டுகளாகவே கருத்து சுதந்திரத்தை அனுமதிக்காத போக்கும், ஊடக சுதந்திரத்தை தன்வயப் படுத்துவதும், சமூக ஊடகங்களின் மீதான ஒடுக்கு முறைகளும் இந்திய ஒன்றிய அரசால் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களை போலியான வழக்குகளில் கைது செய்து பிணையே வழங்காமல் சிறையில் அடைப்பது போன்றவை தொடர்கதையாக உள்ளன.

மோடி தலைமையிலான இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியானது தேசத் துரோகம், அவதூறு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை தன்னை விமர்சிப்பவர்களை ஒடுக்குவதற்கு பயன்படுத்துகிறது. UAPA சட்டத்தை திருத்தியதன் மூலம் மதச்சார்பின்மைக்கான அரசியலமைப்பின் உறுதிப்பாட்டையும் சீர்குலைத்துள்ளது. இந்தியாவில் மதச் சுதந்திரம் சுருங்கி வரும் சூழலையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதையும் படியுங்கள்:

மோடி அரசு சிறுபான்மை மத உரிமைகளையும் தொடர்ந்து நசுக்குகிறது. இந்தியா 2018-ல் தேர்தல் எதேச்சதிகாரத்தின் கீழ் வந்தது. அது இப்போதும் தொடர்கிறது. நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதில் இந்தியாவின் நிலை மிக மோசமாக, கவலைக்குரியதாக உள்ளது. அரசு நிர்வாகத்தைப் பல வகைகளிலும் முறைகேடாகப் பயன்படுத்துவது, ஊடகங்களை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுத்து தனது கைப்பாவை ஆக்குவது போன்ற நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் மற்றும் தேர்தல் முடிவுகளை கேள்விக்குரியதாக ஆக்கியுள்ளது பாசிச பாஜக அரசு.

கடந்த 10 ஆண்டுகளில் இணைய சுதந்திரத்திற்கான குறியீட்டில் 14 நாடுகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. இந்தியா கடந்த ஐந்து ஆண்டுகளில் இணைய முடக்கத்தின் தலைமை பீடமாகவே மாறியுள்ளது. சமீபத்தில் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயற்சித்தனர். சமூக வலைதளங்களில் விவசாயிகள் அல்லது அவர்களது ஆதரவாளர்களின் பதிவுகளை நீக்குமாறு பாசிச மோடி அரசு உத்தரவிட்டது.

எதேச்சதிகாரத்தின் விஸ்வ குருவாகவே இந்தியா விளங்குகிறது. தேர்தல் ஜனநாயக குறியீட்டில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வீழ்ச்சியைத்தான் சந்தித்து வருகிறது. சமீப ஆண்டுகளில் எதேச்சதிகார அரசின் கீழ் வாழ்பவர்களின் அளவு 48 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ரஷ்யாவில் இந்த நிலை உள்ளது.

இந்தியா வளர்ச்சி அடையவில்லையா?

வளர்ச்சி, வளர்ச்சி எனக் கூப்பாடு போட்டு ஆட்சியைப் பிடித்த பாசிச மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவில் பல வளர்ச்சிகளை காண முடிவது உண்மைதான். கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம், மக்களின் வறுமை நிலை போன்றவைதான் வளர்ச்சி அடைந்துள்ளன. மறுபுறம் மகிழ்ச்சிக் குறியீடு உள்ளிட்ட அத்தனையிலும் வீழ்ச்சியைத்தான் காண்கிறோம்.

கார்ப்பரேட்டுகளுக்கு பொற்கால ஆட்சியையும் மக்களுக்கு இருண்ட கால ஆட்சியையும் வழங்கி வரும் பாசிச மோடியின் பாஜக ஆட்சியை வரும் தேர்தலில் வீழ்த்தியே ஆக வேண்டும். இல்லையேல் இனி இந்தியாவில் தேர்தல்களே இல்லாத நிலைஉருவாகும். அத்தகைய முழுமையான சர்வாதிகாரம் அரங்கேறுவதை தடுத்து நிறுத்துவது நம் அனைவரின் கடமையாகும்.

ஆக்கம்: குரு

மூலம்: https://thewire.in/rights/india-ranked-104-between-niger-and-ivory-coast-on-the-liberal-democracy-index-report

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here