டையாறு ஆற்றங்கரையை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளதாக அனகாபுதூரில் தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், டோபிகானா தெரு மற்றும் காயிதே மில்லத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 700 வீடுகளை அகற்றும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களாகவே அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறை என அனைத்தும் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதியும் வருவாய்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வீடுகளை காலி செய்யக் கோரி மக்களை வற்புறுத்தியுள்ளார்கள்.

ஆனால் மக்கள் இரண்டு முறை உறுதியாக நின்று அதிகாரிகளை திருப்பி அனுப்பியுள்ளார்கள்.

50 வருஷமா இங்கே வாழுறோம்.

கடந்த 50 வருடமாக இந்த பகுதியில் வாழும் மக்கள் மாநகராட்சிக்கு தவறாமல் வரி செலுத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் நீண்ட காலமாக வாழ்ந்ததற்கான சான்றுகள் அனைத்தும் அவர்களிடம் உள்ளது. மழைக்காலத்தில் நாங்கள் வசிக்கும் பகுதியில் தண்ணீர் தேங்காது என்கிறார்கள் மக்கள்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் ஏ1-ஆல் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி சென்னையை வெள்ளக்காடாக மாற்றியது. அந்த சமயத்தில் ஆற்றங்கரையோரம் உள்ள அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் வந்தது. இதற்கு காரணம் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் என்று பிரச்சினை சுருக்கி பார்த்தது அரசு.

ஆனால் 50 வருடமாக அனகாபுதூர் பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் இந்த ஆற்றங்கரையினால் அனுபவிக்காத துன்ப துயரத்தை தற்போது அனுபவித்து வருகிறார்கள். இந்த துன்பத்திற்கு தற்போது காரணம் ஆளும் திமுக அரசு தான்.

குறி வைக்கப்படும் உழைக்கும் மக்கள்

ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் என்றாலே ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பொதுக் கருத்தை அரசும் ஆளும் வர்க்கங்களும் திட்டமிட்டே உருவாக்கியுள்ளன. அடையாறு, கூவம், பங்கிங்காம் உள்ளிட்ட ஆறுகளின் கரைகளில் இன்று நேற்றல்ல பன்னெடுங்காலமாகவே உழைக்கின்ற மக்கள் வசித்து வருகிறார்கள். சொல்லப்போனால் சென்னை நகரம் ஆங்கிலேயன் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காலம் தொட்டே வசித்து வருகிறார்கள்.

உண்மையை சொல்வதென்றால் இவர்கள் தான் சென்னையின் பூர்வக் குடிகள். இந்த பூர்வக்குடி உழைக்கும்  மக்களை தான் ஆளும் அரசுகள் அதிகார இயந்திரத்தினை பயன்படுத்தி நகரை விட்டு விரட்டி அடிக்கிறது.

தாங்கள் வாழும் பகுதிகளிலேயே பிழைப்பு நடத்தி வருபவர்களை ஊருக்கு ஒதுக்குபுறமாக கண்ணகி நகர், துரைப்பாக்கம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் கட்டாயப்படுத்தி திணிக்கிறது. இதனால் பிழைப்புக்காக பல கிலோ மீட்டர்கள் பயணம் செய்து பிழைத்து வருகிறார்கள் உழைக்கின்ற மக்கள்.

பாகுபாடின்றி உழைக்கும் மக்களை துரத்தும் கட்சிகள்

ஆக்கிரமிப்பு என்று கூறி மக்களை நகரை விட்டு துரத்துவதில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் பாகுபாடின்றி செயல்படுகிறது. அதிகாரத்தில் இல்லையென்றால் ஓட்டுக்காக குறிப்பிட்ட இடத்தில் பட்டா வாங்கித்தருவதாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களுக்கு துரோகமும் செய்துள்ளார்கள்.

2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசும் இதனை தொடர்ந்து செய்துக் கொண்டு வருகிறது. நகரின் முக்கிய பகுதியான அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்திருந்தார்கள் என்றுக் கூறி அங்கு வசித்த மக்களை வெளியேற்றியது திமுக அரசு தான். தற்போது அனகாபுத்தூரை குறி வைத்துள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்காக உழைக்கும் மக்களுக்கு சென்னை நகரத்தில் இடமில்லை என்கிறது.

மக்களின் கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை!

அனகாபுத்தூர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் மக்கள் கடனை வாங்கி தங்களது உழைப்பு அனைத்தையும் போட்டு வீடுகளை கட்டியுள்ளார்கள். வீடு கட்டும் பொழுதோ, மின்சார இணைப்பு தரும் பொழுதோ அல்லது தண்ணீர் இணைப்பு தரும் போதோ இந்த இடம் ஆக்கிரமிப்பு என்று கூறவில்லை. ஒருவேளை அன்றே கூறியிருந்தால் நாங்கள் இன்று இவ்வளவு சிரமத்திற்கு ஆளாகியிருக்க மாட்டோம். ஏன் இதனை அரசு செய்யவில்லை என்று குரல் எழுப்புகிறார்கள் மக்கள்.

மக்களின் கேள்வி நியாயமானதே! இதே ஆற்றங்கரையின் ஓரம் தான் மாதா கல்லூரி, காசா கிராண்ட், ஜி ஸ்கொயர் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. இதனை கண்டு கொள்ளாத அரசு உழைக்கும் மக்களை வதைப்பது என்ன நியாயம்.

மேலும் அந்த பகுதியில் 02.11.2023 ஒட்டப்பட்ட அறிவிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது; “மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற இறுதி உத்தரவுப்படி மீண்டும் எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற ஏழு நாட்களுக்குள் கூறப்பட்டுள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றும்படி கோருகிறோம்…” எனத் தொடர்கிறது. இவர்கள் சொல்வதுபடி பார்த்தால் கூட இன்னும் எல்லைகள் நிர்ணயம் செய்யப்படவில்லை. எல்லைகள் நிர்ணயம் செய்யப்படாமல் இதனை ஆக்கிரமிப்பு என்று எப்படி அறிவிக்க முடியும்?

மிரட்டும் அரசு!

ஆற்றங்கரை ஆக்கிரமிப்பு என்று கூறும் திமுக அரசு அவர்களுக்கு ஒதுக்கியுள்ள இடம் அஞ்சுகம் நகர் இதுவும் அடையாறு ஆற்றங்கரையின் ஓரம் தான் உள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடம் அனகாபுத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் கிஷ்கிந்தா ரோட்டில் அமைந்துள்ளது. அதிமுக ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் தரமில்லாமல் சுவரில் இருந்து சிமெண்ட்டை கையால் எடுத்தாலே உதிர்கிறது. இந்த கட்டிடம் கட்டுவதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதற்கு அதன் தரமே சாட்சி. இப்படி அபாயமான கட்டிடத்தில் தான் மக்களை வழுக்கட்டாயமாக குடியமர்த்த நினைக்கிறது திமுக அரசு.

கடந்த சனிக்கிழமை வீடுகளை அகற்ற புல்டோசருடன் வந்தார்கள் அதிகாரிகள். இதனை கண்டு கொதித்தெழுந்த மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த பதற்றத்தால் ஆயிரக்கணக்கான போலிசார் குவிக்கப்பட்டனர். போராடிய சிலரை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது காவல்துறை.

அதுமட்டுமில்லாமல் உடனே காலி செய்துவிட்டு செல்பவர்களுக்கே அஞ்சுகம் நகரில் வீடு அளிக்கப்படும் என்றும் மறைமுகமாக மிரட்டியுள்ளது. மழை என்றும் பாராமல் வீடுகளை இடித்து மக்களை தெருவில் நிறுத்தியுள்ளது. ஆனால் மக்கள் உறுதியாக நின்று போராடுகிறார்கள்.

எளிய மக்களின் வீடுகள் மட்டும் தான் ஆக்கிரமிப்பா?

ஆட்சியாளர்களை பொறுத்தவரையில் எளிய மக்களை தான் ஆக்கிரமிப்பாளர்கள் என்று அறிவிப்பார்கள். இதே ஆற்றங்கரையின் ஓரம் எண்ணற்ற ரியல் எஸ்டேட் முதலாளிகளின் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளதே இவையெல்லாம் ஆக்கிரமிப்பு இல்லையா? ராமபுரம் பகுதியில் உள்ள மியாட் மருத்துவமனை கூவம் ஆற்றின் ஓரத்தில் தான் கட்டப்பட்டுள்ளது அது ஆக்கிரமிப்பு இல்லையா? ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி கூவம் ஆற்றை ஒட்டி  தான் கட்டப்பட்டுள்ளது இது ஆக்கிரமிப்பு கிடையாதா?

2015-ல் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு பிறகு தமிழக அரசுக்கு அறிக்கை அளித்த அதிகாரிகள் குழு நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பும், மழைநீர் வடிகால்கள் சரியாக செயல்படாததும் தான் வெள்ளப்பாதிப்புக்கு ஏற்பட்ட காரணம் என்று கூறினார்கள். இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 71,262 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு அதனை அகற்றும் பணியையும் அதிகாரிகள் தொடங்கினார்கள்.

இதையும் படியுங்கள்:

♦ ஏரி ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் !நாட்டை ஆக்ரமிப்பவர்களுக்கு எதிராக தொடரட்டும்!
♦ சென்னை ஆர்.ஏ புரம் வீடுகள் இடிப்பு! வன்மையாக கண்டிக்கிறோம்.!

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதா? ஆம் அகற்றப்பட்டது. 17,400 ஆக்கிரமிப்புகள் என அரசு கூறியது. அத்தனையும் உழைக்கும் மக்கள் வசிக்கும் குடிசைகள். ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கோ, ‘கல்வித்தந்தை’களுக்கோ பாதிப்பில்லாமல் பார்த்துக் கொண்டார்கள் ஆளும் வர்க்கத்தினர்.

ஒவ்வொரு முறையும் மக்களை ஆக்கிரமிப்பு என்று அகற்றும் பொழுது சாமானிய மக்களாக நாம் வேடிக்கை பார்ப்பது சரியா? நமக்கும் அதற்கு பிரச்சினை இல்லை என்று கடந்துப் போய்விடலாமா? இல்லை. நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று கருதுகிறீர்களா? ஒருவேளை நாம் மேற்கண்டவாறு எண்ணினால் நமக்கு பிரச்சினை வரும் பொழுது நமக்காக போராட யாரும் இருக்கமாட்டார்கள்.

சென்னையின் குறுக்கேயும், சென்னைக்கு வெளியேயும் கார்ப்பரேட் முதலாளிகளின் சரக்கு வாகனங்கள் செல்ல பளப்பளவென சாலைகள் அமைப்பதற்கு பல்வேறு வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதுபோல் நாம் வசிக்கும் வீட்டிற்கு இந்த நிலை ஏற்படாது என்ற எந்த உத்திரவாதமும் இல்லை. கார்ப்பரேட்டுகள் கண்ணைக் காட்டினால் நாளை நம் வீட்டின் மேலேயும் சாலை வரலாம். ஆகையால் இன்று நாம் அனகாபுதூர் மக்கள் பக்கம் நின்று போராடவில்லை என்றால் நாளை நமக்கு துணை நிற்க யாரும் முன்வரமாட்டார்கள்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here