இலங்கை : பொருளாதார நெருக்கடியும் விட்டுவிட்டுத் தொடரும் போராட்டங்களும்!

லங்கைப் பொருளாதாரம் திவாலாகாமல் தாக்குப்பிடிக்க அன்னியச் செலாவணி கையிருப்பை, அதன் அளவைத் தக்கவைக்கவேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளது.

அதன் முன்னால் உள்ள ஒரேவழி  ஐஎம்எஃப், ஐபிஎம் ஆகிய நிறுவனங்களிடம் கடன் வாங்குவதுதான். சுருக்கமாக, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளிடம்  கைநீட்டுவதுதான். ஏற்கெனவே கடன் நெருக்கடிதான். “காசு இல்லை என்ன செய்ய ?” என்கிறார் மத்தியவங்கி கவர்னர் நந்தலால் விக்ரமசிங்கே. இந்த நெருக்கடித்  தருணத்தில் கடுமையான நிபந்தனைகள் போடுவார்கள். நாட்டின் இறையாண்மையே கேள்விக்குறியாகும். சந்தேகமே வேண்டாம்.

நந்தலால் விக்ரமசிங்கே

பாதிக்கப்படும் மக்கள்  விட்டுவிட்டுப் போராடுகிறார்கள்.மின்சாரம் தட்டுப்பாடு; பள்ளிகளை மூடுகிறார்கள்; பெட்ரோலுக்கு 10 மணிநேரம் காத்திருப்பு; அரசு அலுவலகங்கள்  வீட்டிலிருந்தே வேலை செய்யச் சொல்லிவிட்டார்கள். காரில்வந்து பந்தாவாக ஏகப்பட்ட பெட்ரோல் போடும் காசுபடைத்தவர்களை செமையாகக் கவனிக்கிறார்கள் மற்ற உழைப்பாளிகள்.  போலீஸ் புகுந்து கேசு போடுகிறது. நடுத்தெருவில் அடித்துக் கொள்கிறார்கள்.

“ஊழல் நடக்கிறது, எரிகிற வீட்டில் பிடுங்க வருகிற அதானியை நுழையவிடாதே, அதானியே  வெளியே போ ! “என்று மக்கள் தெருவில்  இறங்கிச் சண்டை போடுகிறார்கள்.

போதாக்குறைக்கு  மோடி சிபாரிசில் அதானி 700 மில்லியன் டாலர்  (25000 கோடி இலங்கை ரூபாய்) திட்டம் 500 மெகாவாட் மன்னார், பூநகரி பகுதிகளில் மின்உற்பத்திக்கு அங்கே ஓடுகிறார். ஏலம் , போட்டி இல்லாமல்  அவர் திட்டம் எடுக்க  இலங்கை நாடாளுமன்றச்சட்டம் திருத்தப்படுகிறது. “ஊழல் நடக்கிறது, எரிகிற வீட்டில் பிடுங்க வருகிற அதானியை நுழையவிடாதே, அதானியே  வெளியே போ ! “என்று மக்கள் தெருவில்  இறங்கிச் சண்டை போடுகிறார்கள்.  அவர்கள் போராட்ட அமைப்புக்கு  வைத்துள்ள பெயர் ” மக்கள் அதிகாரம் “. மன்னார் காற்றாலைப் பண்ணைத்திட்டம் ஒன்றின் கட்டமைப்புத்துறைப் பொறியியலாளர் நுஸ்லி ஹமீம் என்பவர் அதற்குத் தலைமை ஏற்றுள்ளார்.   மன்னாரில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் மக்கள். கோத்தபய, ரணில், அதிகாரவர்க்கம் விழிபிதுங்கி திகைத்து நிற்கிறது.

அதானிக்கு எதிராக போராடும் இலங்கை மக்கள்

அந்த நாட்டுப் பணத்துக்குக் கணக்குப்  போட்டு ஈவிரக்கமின்றிச் சுரண்டச் சென்ற அதானி “அண்டைநாட்டுக்கு உதவி செய்வதற்காகவே அங்கே சென்றதாக”ச் சத்தியம் செய்கிறார்.  இந்தியாவின் கௌரவமும் ஆட்சிக் கௌரவமும் காக்க வேண்டுமாம். இந்த யோக்கியர் உத்தமர் அதானி  அவரது நாட்டில் டாலர் மதிப்பு என்னவோ அந்தப் பணத்துக்கு ஏத்தாமாதிரி திட்டத்தை அறிவிக்கவேண்டியதுதானே ?

படிக்க : கிரீஸ் முதல் இலங்கை வரை: மறுகாலனியாக்கம் கொண்டு வரும் – மரணப் பொருளாதாரம்!

இவற்றுக்கு எதிராகப் போராடுபவர்கள் அரசியல் இலக்கு இருக்கிறது என்று சொல்கிறார்கள் ; புதிய ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் இடது– ஜனநாயகச் சக்திகள் ஒருங்கிணைப்பு உள்ளது என்று ஒரு செய்தியும், அது முழுசில்லை சீராக இல்லை என்று மற்றொருசெய்தியும் கலவையாக வருகிறது, கவலை தருகிறது.

ஒவ்வொரு நாளும் துன்பம் துயரம். ரணில் மாற்று அல்ல,அந்நியக் கடன்கள் மாற்று அல்ல , நிரந்தரத் தீர்வென்ன என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் ; தனித்தனியே ஒவ்வொரு பிரச்சினையை முன்வைத்து போராட்டங்கள் நடந்தாலும் ,  விட்டுவிட்டு துண்டு துக்காணியாக அல்லாமல் ஆயிரம் பிரச்சினைகள் வந்தாலும் எப்படி இணைப்பது, எந்தக்கண்ணியைப் பிடித்தால் முழுசாகத் தீர்வை எட்டலாம் என்றவாறு விவாதிக்கிறார்கள். குறை களைந்த தேசிய இன விடுதலைப் போராட்டமா, ராசபக்ச குடும்பக் கும்பல் பாசிசம் திரும்ப வராமல் தடுக்க ஒரேயடியாகத் தூக்கி எறியப்பட புதிய ஜனநாயகப் புரட்சிக்குமுன் இடைத்திட்டம் என்ன வைப்பது , என்ன செய்ய– எங்கே தொடங்க என்று விவாதிக்கிறார்கள்.

படிக்க:

கடைசிச் செய்திப்படி, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ” பொருளாதாரம் நிலைகுலைந்துவிட்டது,…காசு கொடுத்தால்கூட எரிபொருள் தருவதற்கு எந்த நாடும் தயாராக இல்லை….” என்று அறிவித்துள்ளார். இந்தியா வரும்போதெல்லாம் அவர் விழுந்து கும்பிடும் ஒரே நம்பிக்கைச் சாமி திருப்பதி வெங்கடாசலபதியும் கைவிட்டுவிட்டதோ ?

ஆதாரம் :

ND TV.com, 16.6.2022; விகடன்.காம், 15.6.2022;டைம்ஸ் ஆஃப் இந்தியா, 12.4.2022  மற்றும்  ” கடைசிச் செய்தி, எகனாமிக் டைம்ஸ், 22.6.2022.

ஆக்கம் : இராசவேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here