மீபத்தில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவும், அதைத் தொடர்ந்து SBI வங்கி தந்த பட்டியல் வெளியிடப்பட்டதும் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை ஏற்கனவே பாஜக எதிர்ப்பு அலை வீசிவருவதாலும், தற்போது இந்திய அளவில் வழங்கப்பட்ட நிதியில் சரிபாதிக்கும் மேலாக பாஜக மட்டுமே அள்ளியிருப்பதாலும் கலக்கமடைந்துள்ள தமிழக சங்கிகள், எங்கே மீண்டும் ”ஒத்தஓட்டு பாஜக! நோட்டோ விடம் தோற்ற பாஜக!” என அசிங்கப்பட்டுவிடுவோமா என்ற கலக்கத்தில்  திமுக-வை இலக்காக்குகின்றனர்.

திமுக கார்ப்பரேட் எதிர்ப்பாளரா?

இல்லவே இல்லை.  கட்சியின் தலைமையிலுள்ள  உறுப்பினர்களில் சிலரே பெரும் கார்ப்பரேட் முதலாளிகள்தான். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இணக்கமாக பல்வேறு திட்டங்களை கொண்டுவருவதும், பரந்தூர் விமான நிலையம், மேல்மா சிப்காட் உள்ளிட்டு மக்களின் எதிர்ப்பையும் மீறி  பலவற்றையும் திணித்து வருவதும் நாம் கண்டித்துள்ளவையே.

தற்போது வெளிவந்திருக்கும் தேர்தல் பத்திரம் பட்டியலில் திமுக  656.5 கோடியை பெற்றுள்ளதும், அதில் லாட்டரி சாம்ராஜ்ய அதிபரான மார்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனம் மூலம் மட்டும் 509 கோடிகளை பெற்றுள்ளதும்தான் புதிய தலைமுறை உள்ளிட்ட மோடி மீடியாக்களால் விவாதப் பொருளாக்கப்படுகிறது.

சூதாட்ட நிறுவனத்துடன் கைகோர்க்கலாமா?

நிச்சயமாக கூடாது. புரட்சிகர அமைப்புகள் தமது நன்கொடை வசூலின்போது கந்துவட்டிக்காரர்கள், சூதாடிகள் உள்ளிட்டவர்களிடம்  நிதி வாங்க மாட்டார்கள். ஆனால் திமுக ஒன்றும் புரட்சிகர கட்சி அல்ல. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் தடைசெய்யப்பட்ட லாட்டரியை இன்றுவரை மீண்டும் தமிழகத்தில் அனுமதிக்காமல் தான் திமுக ஆள்கிறது.

தமிழகத்தில் வெளிமாநில லாட்டரி சட்டவிரோதமாகத்தான் விற்கப்படுகிறது. உழைக்கும் மக்களை தற்கொலைக்கு தள்ளிவரும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய திமுக முயற்சித்தாலும், அதற்கு முட்டுக்கட்டை போட்டு இழிபுகழ் பெற்றது தமிழக ஆளுநரான ஆர்.என். (ரம்மி) ரவி என்பது மக்களுக்கு தெரியும். பாஜக அந்த அளவு வெளிப்படையாகவே இணைய வழி சூதாட்டத்தை ஆதரிக்கிறது. தற்போது லாட்டரி மார்ட்டினிடம் காசு வாங்கியிருப்பதன் மூலம் திமுக வை பாஜக வுடன் சமப்படுத்தலாமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

நீ பத்தினியா எனும் வாதம்!

காவி பாசிஸ்ட்டுகள் கார்ப்பரேட்டுகளின் அடியாட்களாகி, நாட்டை கூறுபோட்டு விற்றுவருவதும், அதை எதிர்ப்பவர்களை கொடூரமாக ஒடுக்கி வருவதையும் மக்கள் பார்த்தே வருகிறார்கள். இவர்களின் கார்ப்பரேட் கொள்கை(ளை)யை  விமர்சிக்க விடாமல் சாதி, மத, இன கலவரங்களை தூண்டியும் வருகிறது. அந்த வகையில் தேர்தல் பத்திர வசூல் வேட்டையில் அம்பலாமாகியுள்ள பாஜக வுக்கு முட்டு தரவே திமுக மட்டும் யோக்கியமா என எதிர்கேள்வி எழுப்புகின்றனர். நீ ஏன் சோரம் போகிறாய் என்றால் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், சங்கிகள் தமது வழக்கமான பாணியில்  எதிர்விமர்சனம் செய்து தப்பிக்க விடலாமா?

பாஜக வை எதிர்ப்பவர்கள் தவறே செய்திராத புனிதர்களாகவோ, புனித கட்சியாவோ இருந்தாக வேண்டிய அவசியமில்லை. மக்கள் மீது துளியளவு பற்றும், நாட்டு நலனில் சிறிதளவேனும் அக்கறையும் கொண்டிருந்தாலும் அவர்களை, பாசிச எதிர்ப்பில் ஊன்றி நிற்கும் வரை ஆதரிக்கலாம்.

அதேபோல காங்கிரசும்தான் காசு வாங்கியுள்ளது. ஆனால் பட்டியலை வெளியே விடக்கூடாது என நீதிமன்றத்தில் வாதம் செய்தும், SBI அவகாசம் போதாது என பொய் சொல்ல தூண்டியும்  சதிசெய்தது யார்? சங்கிகள்தானே. எல்லோரும் வாங்கினறென்றால் ஏன் பாஜக வுக்கு மட்டும் குலைநடுங்க வேண்டும். ஒரு பிரச்சினையிலிருந்து தப்பிக்க புதிதாக மற்றொன்றை கிளப்பிவிடும் தந்திரத்தில் ஏன் இறங்க வேண்டும்?  அவசரமாக CAA வை ஏன் அமல்படுத்தும் அறிவிப்பை விடவேண்டும்? இப்படி கேள்விகளை எழுப்பி யோசித்தால் பிற கட்சிகளுக்கும் பாஜகவுக்குமான வித்தியாசமும், கார்ப்பரேட் காவி பாசிசத்தை துடைத்தெறிய வேண்டியதன் அவசியமும் தானாக புரியும்.

எல்லோரும் திருடன் தானே!

ஒருவன் 50 அல்லது 100க்கு பஸ்சில் பிளேடு போடும் பிட்பாக்கெட் திருடன். மற்றொருவன் வீடுபுகுந்து பீரோவை உடைத்து நகை, பணத்தை திருடுபவன். மூன்றாம்வகையில் வருபவன் வீடுபுகுந்து பெண்களை வல்லுறவு செய்து, நகை பணத்தை கொள்ளையடித்து வீடுகளையும் கொளுத்தி ஊரையே சாம்பலாக்கி செல்பவன். இந்த மூவரையும் திருடன் என்று சமப்படுத்தலாமா? கூடவே கூடாது.

அதாவது காசு ஆசையில் சூதாடும் குடிமகனும், சூதாட்டத்தை ஏற்பாடு செய்து, விளம்பரப்படுத்தி, நடத்துபவனும், அதை தடுக்காமல் ரம்மி ரவி போன்று துணை நிற்பவனும் ஒன்றல்ல.

தான் வளர கலவரங்களை நடத்துவதையே வழிமுறையாக வைத்திருக்கும், படுகொலை செய்யும் கிரிமினல்களை தேடிப்பிடித்து பதவியில் அமர்த்துவதும், கும்பல் வல்லுறவு, படுகொலைகளை ஊக்குவிக்கும் கட்சிக்கு வரும் நன்கொடையும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு துணை செய்யும் வரம்புடன் நிற்கும் கட்சிக்கு வரும் நன்கொடையும் ஒன்றல்ல.

திமுகவை நிபந்தனையற்று ஆதரிக்கலாமா?

கூடாது. இந்தியா கூட்டணியில் அது இருக்கும் வரை, காவி பாசிசத்தை, கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்க்கும் வரை ஆதரிக்கலாம். மாறாக, மக்கள்விரோத திட்டங்களை கார்ப்பரேட் நல திட்டங்களை திணித்தால், அது எந்த கட்சியின் / கூட்டணியின் தலைமையிலான அரசாக இருந்தாலும் அதை எதிர்ப்பதே சரி. குறைந்த பட்ச செயல்திட்டத்தை முன்வைத்து, இந்த திசையில்  பாதைவிலகாதபடி நிர்பந்தித்து போராடுவோம் என்றுதான் மக்கள் அதிகாரம்  இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறது.

தூத்துக்குடியை விசமாக்கிய நாசகார ஸ்டெர்லைட்டை மூட வாதிட்டது திமுக அரசு.  மோடி தலைமையிலான பாஜகவோ துப்பாக்கி சூடு நடத்த எடப்பாடிக்கு வழிகாட்டி,  வேதாந்தாவுக்கு விசுவாசமாக செயல்பட்டு, அனில் அகர்வாலிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக மட்டும்  400 கோடியை சுருட்டியுள்ளது.

இதையும் படியுங்கள்:

உத்தரகாடில் சில்க்கியாரா சுரங்கம் தோண்ட மெகா இஞ்சினியரிங் கம்பெனிக்கு டெண்டர் தந்து, சுரங்க விபத்தில் அவர்களின் பெயர் அடிபாடாமல் மீடியாக்களை வைத்து 41 தொழிலாளர்களை இடுபாட்டிலிருந்து மீட்பதை மட்டுமே செய்தியாக்கி காத்தது மோடி அரசு. இந்நிறுவனம் தந்துள்ள 966 கோடி ரூபாயில் பாஜக எவ்வளவு சுருட்டியது என்பதை தெரிந்துகொள்ள விடாமல் SBI மூலம் தடுத்துள்ளது. மோடி அரசு ED, IT, NIA, CBI போன்றவற்றை ஏவி நடத்திய ரெய்டுகளுக்கும் மலைபோல் குவிந்துள்ள தேர்தல்பத்திர நிதிக்கும் தொடர்புள்ளது.

இப்படி விபத்து, படுகொலைகள், சுற்றுச்சூழல் நாசம் என எது  நடத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு துணைநிற்கும் பாஜகவுடன் இந்தியா கூட்டணியிலுள்ள கட்சிகளை சமப்படுத்தக்கூடாது. ஸ்டெர்லைட்டிடம் காசுவாங்கிய பாஜகவையும், மார்ட்டினிடம் காசு வாங்கிய திமுக வையும் பொதுமைப்படுத்தக்கூடாது. நுங்கை தின்றவன் தான் தப்பிக்க, நோண்டித்தின்றவனை  குற்றம் சாட்டுகிறான். விழித்துக்கொள்வோம்.

  • இளமாறன்

2 COMMENTS

  1. அதிமுக சமூக நீதி கட்சி
    அண்ணன் திருமா.

    அதற்கு ஒரு விளக்கம் தந்தால் மேலும் நலம்

    • இதை மக்கள் அதிகாரம் கூறவில்லை. நீங்கள் தோழர் தொல் திருமாவளவனிடம் கேட்பதே சரியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here