இந்தியாவுக்கு ஐரோப்பிய நாடுகளுடன் வணிகத்தொடர்புக்கு பயன்படுவது அரபிக்கடல். அதிலும் குறிப்பாக செங்கடல். இன்று அப்பகுதியை கடக்கும் சரக்கு கப்பல்களை காக்க 10 போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது இந்தியா.
கடத்தலும், ஏவுகணை தாக்குதலும்:
2024 ஆம் ஆண்டில் செங்கடலை ஒட்டியுள்ள ஏடன் வளைகுடாவை கடக்க வணிகக் கப்பல்கள் அஞ்சுகின்றன. வழக்கமாக வரும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் தாக்குதலும், அதை முறியடிக்க இந்தியா உள்ளிட்ட பலநாடுகளின் போர்க்கப்பல்களின் ரோந்தும் தொடர்கிறது.
திடீரென கடற்கொள்ளையர்கள் பெருகிவிட்டனரா? அல்லது அவர்களின் தாக்குதல் பலம் கூடிவிட்டதா? எதற்காக கூடுதலாக 10 முன்னணி போர்க்கப்பல்களை, கடல் கமாண்டோக்களுடனும், MQ 9B நவீன கண்காணிப்பு டிரோன்கள், P8I வீமானங்கள், ஏவுகணை எதிர்ப்பு வசதிகள் உள்ளிட்ட வசதிகளோடு அனுப்புகிறது இந்தியா? இது நம் பரிசீலனைக்கு உரியது.
காசா மீதான தாக்குதலின் எதிர்வினை:
இப்போது முக்கிய பிரச்சினை சோமாலிய கடற்கொள்ளையர்கள் அல்ல. நாம் இஸ்ரேல் தரப்பில் ஏவப்படும் பாலஸ்தீன தாக்குதலுக்குள், அதன் எதிர்விளைவுகளுக்குள் இழுக்கப்படுகிறோம். எதிரியின் நண்பர்களும் எதிரியே என்ற வகையில் பாலஸ்தீன ஆதரவு குழுக்களால் எதிரிகளாக பார்க்கப்படுகிறோம். இஸ்ரேல், ஹெர்மஸ் ரக ஏவுகணைகளை நம் நாட்டிலிருந்துதான் அதானியுடன் கூட்டு சேர்ந்து தயாரித்து, அதை காசா மீது வீசி வருகிறது.
எனவே நாமும் – நமது நாட்டுடன் தொடர்புடைய கப்பல்களும் – தாக்குதல் இலக்கிற்குள் வருகிறோம். எனவேதான் நம் – இந்தியாவின் கடல் வணிக கார்ப்பரேட்டுகளின் – கப்பல்கள் தாக்கப்படும் என்றும், நம் ஏகாதிபத்திய எஜமானர்களுக்கான சரக்குகள் மூழ்கடிக்கப்படும் என்றும்தான் இந்தியா பதறுகிறது.
ஏடன் வளைகுடாவில் பாலஸ்தீன ஆதரவு போராளிக்குழுக்கள் தமது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.செங்கடலை கடக்கும் வணிகக்கப்பல்கள் மட்டுமல்லாமல் பெரியண்ணன் அமெரிக்காவின் போர்க்கப்பல்களே இந்த ஏமன் நாட்டினரின் குழுக்களால் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
அமெரிக்காவும் இந்த ஹூதி போராளிகளை சமாளிக்க செங்கடலுக்கான ஒரு கடல் பாதுகாப்பு கூட்டணியை (Operation Prosperity Guardian) உருவாக்கியுள்ளது. ஆனால் இந்தியா அதில் சேரவில்லை என அறிவித்துள்ளது. பின்னர் ஏன் 10 போர்க்கப்பல்களை அனுப்புகிறது?
அமெரிக்கா தனது பிராந்திய மேலாதிக்க வெறியுடன், வெளிப்படையாக இஸ்ரேல் நடத்தும் இனஅழிப்புக்கு துணைநிற்கிறது. இந்தியாவின் மோடி அரசோ, இஸ்லாமிய வெறுப்புணர்விலும், பாசிச அடக்குமுறையை ஏவுவதிலும் இஸ்ரேலுக்கு முன்னோடியாகத்தான் இருந்து வருகிறது. ஆனாலும் அமெரிக்காவைப்போல் பட்டவர்த்தனமாக கரம்கோர்க்க விரும்பாமல் கொல்லைப்புற வழியில் ஜியோனிச இஸ்ரேலை ஆதரிக்கிறது. அதே தந்திரத்தைத்தான் செங்கடலிலும் ஹூதிக்களால் தாக்குதலுக்கு உள்ளாகும் கப்பல்களை பாதுகாக்கவும் கடைபிடிக்கிறது.
கொண்டையை மறைக்கத்தெரியாத மோடி!
குருகிராமில் உள்ள இந்திய கடற்படையின் தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையம் (IMAC), 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அமைக்கப்பட்ட கடல் தகவல் மற்றும் கண்காணிப்புக்கான நோடல் ஏஜென்சி, தேசிய கடல்சார் கள விழிப்புணர்வு (NMDA) மையமாக மேம்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே சர்வதேச அளவில் செங்கடலில் பயணிக்கும் போர்க்கப்பல்கள், கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ரேடார்கள் அனுப்பும் சிக்னல்கள், செயற்கைக்கோள் சிக்னல்களை இணைத்து இந்தியப்பெருங்கடலை கண்காணித்து வருகின்றனர். கூட்டாக முன்னெடுக்கப்படும் இதில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் நாமும் இணைந்தே உள்ளோம்.
இதையும் படியுங்கள்:
சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையேற்றுள்ள குவாட் கூட்டமைப்பில் இந்தியா உள்ளது. பசிபிக், இந்தியப்பெருங்கடலில் கூட்டு போர்க்கப்பல் பயிற்சியையும், ரோந்தையும் பெருமிதத்தோடு முன்னெடுக்கிறது. அமெரிக்காவுடன் பல்வேறு ராணுவ ஒப்பந்தங்களையும் போட்டு பராமரிக்கிறது. இந்த நிலையில் ஏடன் வளைகுடாவில் அமெரிக்காவுடன் கைகோர்க்கவில்லையாம்! தனியாகத்தான் சண்டையிடபோகிறார்களாம்! நாமும் நம்புவோம்!
ஹூதி கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ளத்தான் கூடுதல் கப்பல்கள் என அறிவிக்க இந்தியா தயாராக இல்லை. தனது புதிய அடிவைப்புக்கு சோமாலிய கடற்கொள்ளையர்களையும் சேர்த்துக்கொள்வதன் மூலம் தற்போது நடக்கும் சர்வதேச அரசியல் நிகழ்வுகளை ஒதுக்கிவிட்டு நாம் துண்டாகவே பார்ப்போம் என நம்புகிறது மோடி அரசு. ஒருவேளை ஏடன் வளைகுடாவில் நம் போர்க்கப்பல் தாக்குதலுக்கு உள்ளானால், அதை பாலஸ்தீன இனஅழிப்புடன் ஒப்பிட்டு நாம் எதிர்க்க விடக்கூடாது என்றே நாடகமாடுகிறது.
நம்மால் செங்கடலையே பாதுகாக்க முடியும் என்றால் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாக் நீரிணையை காக்காதது ஏன்? செங்கடலை கடக்கும் சரக்கு கப்பல்களுக்கு ஆபத்து, பெரியண்ணனின் போர்க்கப்பல் மீதே எறிகனை வீச்சு ஆகியவற்றால் பதறும் மோடி அரசு உடனே கமாண்டோக்களுடன் 10 போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளதே, இந்திய மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் நடப்பதை தடுக்க எத்தனை கப்பல்களை அனுப்பியுள்ளது? இதையும் சேர்த்து பார்த்தால் இந்திய கடற்படை யாருக்கானது என்று புரியும்.
- இளமாறன்