டந்த இரண்டாண்டுகளாக  பெரியார் குறித்த விவாதம் உச்சம்தொட்டு வருகின்றது. பார்ப்பனர்களும் ஆர்எஸ்எஸ் சங்கிகளும் தங்களின் நோக்கத்தை ஈடேற்றிக்கொள்ள   போர்க்கோலம் பூண்டு ருத்திரதாண்டவம் ஆடுவது ஒன்றும் நமக்கு புதிய விஷயமல்ல.  தற்போது மாமிகளையும் களமிறக்கி  ‘சதிர் ஆட்டம்’ ஆடச்செய்திருக்கிறார்கள்  என்பதுதான் புதிய செய்தி.

டி.எம். கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாடெமி “சங்கீத கலாநிதி”  விருது வழங்குவதை  கண்டித்து  பாடகிகள் ரஞ்சனி-காயத்ரி இணையினர்  கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து “பெரியாரை பின்பற்றுவோருக்கு விருதா?” என்று  பார்ப்பன கர்னாடக இசை  வித்துவான்கள்  வாமன அவதாரம் எடுத்து மண்ணுக்கும் விண்ணுக்கும் தாண்டிக் குதிக்கிறார்கள்.  பெரியார்- திராவிட எதிர்ப்பு அரசியல்,  ஊடகங்கள் மூலம் திட்டமிட்டு முன் நகர்த்தப்படுகிறது.

டி.எம்.கிருஷ்ணா ஒரு மூத்த இசைக்கலைஞர் என்பதோடு  இசை அறிஞர் செம்மங்குடி சீனிவாச ஐயரின் மாணவர். முன்னாள் மத்திய நிதியமைச்சர்  டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் மருமகன் என்று அறியப்பட்டவர்.

இசை, எழுத்து மற்றும் சமூக செயல்பாடுகளுக்காக  பல விருதுகளைப் பெற்று சமூக ஆர்வலராக டி.எம். கிருஷ்ணா வெளிப்பட்டுள்ளார்.  ஆய்வுக் கண்ணோட்டத்தில் இசை பற்றிய பல்வேறு  புத்தகங்களை எழுதியுள்ளார். இசையை சமூக சீர்திருத்தத்திற்கான கருவியாகப் பயன்படுத்தியுள்ளார்.

“ஓரிடத்தில் டி.எம்.கிருஷ்ணா இருக்கிறார் என்றால், அங்கு நாங்கள் செல்ல மாட்டோம், நாங்கள் சங்கீத  அகாடெமியின் ஒட்டுமொத்த கூட்டத்தையும் புறக்கணிக்கிறோம், டிசம்பர் 15 முதல் ஜனவரி 1 வரை நடைபெறும் இசைமாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை” என்று  ரஞ்சனி-காயத்ரி இணையினர் ஓலமிடுகின்றனர்.

” தர்மம், அயோத்தியா, ஸ்ரீ ராமர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், டி. எம்.  கிருஷ்ணாவின் கருத்துகளால் நான் துயரமடைந்துள்ளேன். வரும் ஆண்டு (2025) நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்.” என்று சென்னை மியூசிக் அகாடமியில் 2017ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல்நாள் அன்று ஹரிகதை நிகழ்த்திவரும் துஷ்யந்த்ஸ்ரீதர் மனம் நொந்திருக்கிறார்.

இசைக் கலைஞர்கள் விசாகா ஹரி, திருச்சூர் சகோதரர்கள் கிருஷ்ண மோகன், ராம்குமார் மோகன், மதுரை மணிஅய்யர் வாரிசுகள் மற்றும் சிஷ்யகொடிகள் என்று வரிசைகட்டி  எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

“கர்நாடக இசை உலகத்துக்கு மிகப்பெரிய சேதத்தை டி.எம். கிருஷ்ணா ஏற்படுத்தியிருக்கிறார். வேண்டுமென்றே  இசையுலகின் அடிப்படை நம்பிக்கைகளை  நசுக்கிவருகிறார்.   தியாகராஜர், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றவர்களை அவமரியாதை செய்கிறார்” என்று கிருஷ்ணா மீது அவதூறுகளை அள்ளிவீசி வருகின்றனர்.

கிருஷ்ணா எதிர்ப்பு போட்டியில் எல்லோரையும் விஞ்சும் வகையில்  சித்ரவீணை ரவிக்கிரண் “சென்னை மியூசிக் அகாடமி தனக்கு வழங்கிய “சங்கீத கலாநிதி” விருதை திருப்பித் தர முடிவு செய்திருக்கிறேன். எதையும் விட கொள்கை முக்கியம் என்பதை பரிசீலித்தே இந்த முடிவை எடுத்துள்ளேன்”  என்று உச்சம்காட்டி பதட்டமடைந்து ஆவேசப்படுகிறார்.

பார்ப்பனர்களின் இந்த பதற்றத்திற்கு டி.எம். கிருஷ்ணா பெரியாரை புகழ்ந்து பாடியதோடு சமூகநீதியை ஆதரித்து  பேசிவருவதுதான் காரணம்.   “சிந்திக்கத் சொன்னவர் பெரியார்” என்ற கிருஷ்ணாவின் குரல் அவர்களின் காதுகளில் நாராசமாய் ரீங்காரமிட்டு எரிச்சலுட்டுகிறது.

ஜாதி – மொழி இரண்டையும் பக்கவாத்தியமாக சேர்த்துகொண்டு ராக ஆலாபனை செய்வதுதான் அவர்களின் கர்நாடக சங்கீதம்.  “கர்நாடக சங்கீதத்தைத் தமிழில்பாடு” என்றால், “இசைக்கு மொழியில்லை. மொழிகளைக் கடந்தது இசை” என்று அவர்கள் பசப்ப தவறியதில்லை.

இசையில் மொழி இரண்டாம் பட்சமானதுதான்  என்றாலும், மொழித்தீண்டாமையும்,

பார்ப்பன சாதிமேலாதிக்கமும்தான் கர்நாடக சங்கீதத்தின் அச்சாணி.

பிராமணர்களே ஆனாலும் தமிழில் கீர்த்தனைகள் எழுதிய வெங்கடசுப்பையர், கோபால கிருஷ்ண பாரதி, பாபநாசம் சிவன் போன்றவர்கள் இவர்களுக்கு துக்கடாக்களே.

சுந்தரத்தெலுங்கு என்று ஒருபக்கம் புகழ்ந்தாலும் தமிழ், தெலுங்கு இவைகளைவிட சமஸ்கிருதமே உயர்ந்தது என்பதுதான் அவர்களது சித்தனையில்  படிந்திருக்கும் ஆழமான கருத்து.  வேதத்தையும், சனாதனத்தையும், சமஸ்கிருதத்தையும்,  வைணவத்தையும்  போற்றி புகழ்வது  அவர்களின் வாழ்வியல் அடிப்படை.   சத்திரியரானாலும் இசைவிற்பனர் ஸ்வாதித்திருநாள் (கேரளா) போற்றப்படுவதும்  இந்த அடிப்படையில்தான்.  அவர்களிடம் நீடித்து நிலைத்து நிற்பது சனாதன பார்ப்பன மேலாதிக்க வெறியைத்தவிர வேறெதுவும் கிடையாது.

தெலுங்கு சமஸ்கிருத கீர்த்தனைகள் தோன்றுவதற்கு முன்பே  அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோர் தமிழில் கீர்த்தனைகள் பாடி ஆதி மும்மூர்த்திகள் என  தமிழர்களால் போற்றப்படுகின்றனர்.

இவர்களை மறைத்து தியாகய்யர், சியாமாசாஸ்திரிகள், முத்துச்சாமி தீட்சிதர்  ஆகிய சாதி மும்மூர்த்திகளை உயர்த்திப் பிடித்து கர்னாடக இசையில் பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

இவர்கள் பாடுகிற  கீர்த்தனைகள் அனைத்தையும்  நாதசுர கலைஞர்  இவர்களைவிட சிறப்பாகவே இசைக்கின்றனர்.  இசைவேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலையோடு பிறந்தவர்கள். அவர்களிடம் இருந்து சுரங்களையும்,  நாட்டியத்தையும் திருடி தங்களின் கண்டுபிடிப்பாக பறைசாற்றி இன்றளவும் பித்தலாட்டம் செய்து வருகிறார்கள்.

சங்கீத உலகுக்கு வெளியில் நிற்றுகொண்டிருக்கும் நாம்,  சங்கீத உலகத்தின் உள்அரசியல் அறியாதவர்களாக இருக்கிறோம்.  டி.எம் கிருஷ்ணா சங்கீத உலகின் உள்ளும் புறமும் நன்கு அறிந்தவர். அதை அவர் வெளிப்படுத்தும் போதெல்லாம்  அவர்கள் பதற்றமடைகிறார்கள்.

ரஞ்சனி காயத்ரி சகோதரிகளும், துஷ்யந்த்களும்  மீண்டும் மீண்டும் சொல்லவருவது ஒன்றே ஒன்றுதான்.  கர்நாடக சங்கீத மேடைகள் பார்ப்பனர்களுக்கானவை. நாங்கள் மட்டுமே உரிமை கொண்டாட தகுதி உடையவர்கள்.  இசை என்னும் கலையை  சாதியின் பெயரால் தட்டிப்பரிக்கும் உரிமை எங்களுக்கு மட்டுமே உண்டு  என்பதுதான்.

இதே சங்கீத உலகில் பாலியல் வக்கிரம், சுரண்டல் கோலோச்சுகிறது. அதுகுறித்து செய்திகள் கசியும் போதெல்லாம்  மாமிகள் உள்ளிட்டு அனைவரும்  அமைதி காத்தே வந்திருக்கின்றனர்.

கிருஷ்ணா மீது இவர்கள் கொண்டிருக்கும் வெறுப்புணர்வு தனிப்பட்ட வெறுப்புணர்வு அல்ல. சுயமரியாதை, பகுத்தறிவு,  சமூகநீதி போன்ற விழுமியங்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் வெறுப்புணர்வை தவிர வேறெதுவும் அல்ல.

இதையும் படியுங்கள்:

“டி.எம். கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாடெமி ‘சங்கீத கலாநிதி’  விருது வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் வேற்றுமையில் ஒற்றுமையைக் காண விரும்புகிறோம்” என்று சென்னை மியூசிக் அகாடெமியின் தலைவர் முரளி  அறிவித்திருப்பது பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உரியது.

டி.எம்.கிருஷ்ணாவை வைத்து சங்கிகள் தேர்தல்கால லாபம்பெற  முயற்சிக்கிறார்கள்.  ஊடகங்களில்  பொய்யுரைகள் வாரி இறைக்கிறார்கள்.   இதன்மூலம் மூன்று சதவீத ஓட்டுகளை  தக்கவைக்க முடியும் என்று நம்புகிறார்கள். பார்ப்பன, சத்திரிய, வைசிய கூட்டணியால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்தகாலங்களை மறக்கத்தயாராக இல்லை.

திருவையாற்றில் தண்டபாணி தேசிகர் தமிழில் பாடியதற்காக மேடையிலிருந்து இறக்கிவிடப்பட்டார். பார்ப்பனர்கள் தீட்டுகழிக்கும் சடங்கை அரங்கேற்றி   அவமானப்படுத்தினார்கள். கடந்தகாலத்தை யார் மறந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மறக்கவில்லை. வரலாறு பின்னோக்கி திரும்பும் என்றால்  களவாடிய தமிழிசையை மீட்கும் போராட்டம் முன்னோக்கிவரும் என்பது காலத்தின் கட்டாயமாகிவிடும்.

  • தஞ்சை இராவணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here