தென்னாப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே அதிபர் மங்கக்வா, தனது நாட்டை தாக்கியுள்ள வறட்சியால்  நாட்டிற்கு தேசிய பேரிடர் ஏற்பட்டுள்ளதாக அறிவித்தார். இது இயற்கையின் சதியல்ல; கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்கு தரப்படும் தொடர்பலி.

ஜிம்பாப்வேயின் முக்கிய பயிரான மக்காச்சோளத்தில் பாதிக்கும் மேல் கருகிவிட்டது. எஞ்சியதும் கைக்கு வருமா என்ற கலக்கத்தில் உள்ளனர். வறட்சியைத் தொடர்ந்து, “அதிகரிக்கும் தானியப் பற்றாக்குறை” விலைகளை கூட்டிவருகிறது. அதிகரிக்கும் பணவீக்கத்தால் சுமார்  27 லட்சம்பேர் பட்டினி சாவை நோக்கி நகரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இதிலிருந்து ஜிம்பாவே மீளவேண்டுமென்றால் தேவையான உணவுப்பொருட்களை உலக நாடுகள் இலவசமாக அனுப்பவேண்டும். அல்லது, உணவுதானிய இறக்குமதிக்காக வல்லரசுகள் சுமார் 20 கோடி டாலர் கடனாகவோ, உதவியாகவோ தந்தாக வேண்டும்.

பாதிப்பில் உள்ளது  ஒரு நாடு மட்டுமல்ல!

ஜிம்பாப்வேயின் அண்டை நாடுகளான ஜாம்பியா மற்றும் மலாவி ஆகியவை வறட்சியால் பேரிடர்  நாடுகளாக சமீபத்தில் அறிவித்துள்ளன. 1.36 கோடி பேர் தென்னாப்பிரிக்காவில் நிலவும் வறட்சியால் தாக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து வறட்சிகளும் காலநிலை மாற்றத்தால் ஏற்படுவதில்லை, ஆனால் வளிமண்டலத்தில் அதிகப்படியான வெப்பம் பூமியிலிருந்து அதிக ஈரப்பதத்தை இழுத்து வறட்சியை மோசமாக்குகிறது.

பருவநிலைமாற்றத்தை தூண்டிவரும் ஏகாதிபத்தியங்கள் அதன் துணைவிளைவான பெருவெள்ளம், கடும் வறட்சி போன்ற ‘இயற்கை’ சீற்றங்களுக்கு பொறுப்பேற்பதில்லை. பசிபிக்பெருங்கடலின் வெப்ப உயர்வு, கண்டங்களின் சமநிலையை குலைத்துப்போட்டுள்ளது.

ஜிம்பாப்வே நீர் மின்சாரத்தை நம்பியிருப்பதால் மழையில்லாமல் மின்சார உற்பத்தியும் பாதித்துள்ளது. மின்பற்றாக்குறையானது பிற தொழில்களையும் பாதிக்கிறது.

தொடரும் சோகம்!

ஜிம்பாப்வே ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவின் ரொட்டி கூடையாக இருந்தது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி பயிர் மற்றும் கால்நடைகளை பாதித்துள்ளது. 1992 ஆம் ஆண்டில், தேசிய கால்நடை மந்தையின் கால் பகுதி அழிந்தது. அதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டிலும், மீண்டும் 2019 ஆம் ஆண்டிலும் வறட்சி ஏற்பட்டது.

பருவநிலைமாற்ற காப் (COP) மாநாடுகள், ஏழை நாடுகளை ஏமாற்ற மட்டுமே என்பதை இப்போதைய ஜிம்பாப்வேயின் நிலை உணர்த்துகிறது. ஒருபுறம் மேட்டுக்குடிகளின் நுகர்வுவெறிக்காக பயோ டீசல், பீர் உற்பத்தி என விளைந்தும் வீணடிக்கப்படும் உணவுப்பொருட்கள். மறுபுறம் வறட்சியால் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் ஏழை நாடுகளின் மக்கள் கூட்டம். இதுதான் உலகை மேலாதிக்கம் செய்யும் ஏகாதிபத்தியங்கள் – கார்ப்பரேட்டுகள்  உலகிற்கு தந்துள்ள பரிசு!

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here