ச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து தமிழக மீனவர்களுக்கு துரோகம் செய்துவிட்டது காங்கிரசும் திமுகவும் என்று பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் முதல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரை பாஜகவினர் அனைவரும் தற்போது கூவிக்கொண்டு இருக்கின்றனர்.

பத்தாண்டு காலமாக மோடியின் பொய்களையும் அண்ணாமலையின் உளறல்களையும் கேட்டு  சிரிப்பதற்கும் அது பற்றி நக்கல் அடிப்பதற்கும்; அவர்களின் பொய்களையும் உளறல்களையும்  ஆதாரங்களுடன் நார்நாராய் கிழிப்பதற்கும் தமிழகம் பழகிப் போய்விட்டது.

எனவே  கச்சத்தீவை பற்றி பாஜகவினர் தற்போது பேசுவதைப் பார்த்து
“திடீரென்று பாஜகவினருக்கு தமிழகத்தின் மீதும் தமிழர்களின் உரிமை மீதும் அக்கறை வந்துவிட்டதோ?” என்று பகுத்தறிவு உள்ள தமிழர்கள் யாரும் சந்தேகப்படவில்லை.

மாறாக, கச்சத்தீவு பிரச்சனையை இப்பொழுது பாஜகவினர் எழுப்புவதற்கு உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?  என்று அரசியல் நோக்கங்கள் ஆராயத் தொடங்கி விட்டனர். மேலும் முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரிகளோ அரசியல் ஆதாயத்திற்காக மீண்டும் கச்சத்தீவு விஷயத்தைக் கிளப்புவது இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவைப் ‌பாதிக்கும் என்று மோடி அரசை எச்சரித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சிக்குள் செல்லும் முன்பாக கச்சத்தீவைப் பற்றி சுருக்கமாக பார்த்து விடலாம்.

கச்சத்தீவு  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள ஒரு சிறு தீவு. இது 1.9 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. அதாவது 285 ஏக்கர் பரப்பளவு மட்டுமே கொண்டது. இங்கு மனிதர்கள் யாரும் வசிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1974 வரைகூட இது இந்தியாவுக்குச் சொந்தமென்று இருக்கவில்லை. அதுவரை இருதரப்பும் சொந்தம் கொண்டாடியது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சர்வதேச கடல் எல்லை வரைவின்போது இந்த ஒப்பந்தம் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1974 ஜூன் 26 ஆம் தேதி அன்று கச்சத்தீவு உரிமை இலங்கையுடையது என்று ஏற்கும் ஒப்பந்தம் போடப்பட்டது. அப்பொழுது இந்திய பிரதமராக இந்திரா காந்தியும் இலங்கையின் பிரதமராக சிரிமாவோ பண்டாரநாயகாவும் இருந்தனர். இந்த ஒப்பந்தம் போடப்படுவதற்கு முன்பு பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதம் எதுவும் நடத்தப்பட்ட வில்லை. அன்றைய காலகட்டத்தில் இந்திரா காந்தியின் அரசை திமுக ஆதரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தம் போடப்படுவதற்கு முன்பு 1971 ஆம் ஆண்டில் கச்சத்தீவை இலங்கை அரசு சொந்தம் கொண்டாடிய நிலையில், அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் கச்சத்தீவு நமக்குத் தான் சொந்தமானது என்பதற்கான ஆதாரத்தை திரட்டுமாறு சட்டப் பேராசிரியர் எஸ். கிருஷ்ணசாமிக்கு உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்: இலங்கை வடக்கில் வாழும் வறிய மீனவர்கள் கடல் அட்டைப் பண்ணைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பற்றி பேசுகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக 1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், கச்சத்தீவு இந்தியாவுக்குத்  தான் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களைக்  கொண்ட ஒரு அறிக்கையை முதல்வர் கலைஞர் வெளியிட்டார். அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு தரக்கூடாது என்று பிரதமர் இந்திரா காந்திக்கு கலைஞர் கடிதம் எழுதியதுடன் நிற்காமல் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் கேவல் சிங் மற்றும் இந்திரா காந்தியிடம் கச்சத்தீவு இந்தியா வுக்கு தான் சொந்தமானது என்பதை நிரூபிப்பதற்கான அத்தனை ஆதாரங்களையும்  வழங்கினார்.

இவ்வளவு எதிர்ப்பையும் மீறி பிரச்சினைக்குரிய பகுதியாக இருந்த கட்சத் தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்ட பொழுது தமிழகத்தின் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டி கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதுடன் சட்டப்பேரவையிலும் கண்டன தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதுமட்டுமின்றி, கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதற்கு எதிராக திமுகவால்  தமிழ்நாடு முழுவதும்  கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

வரலாற்று உண்மை இவ்வாறு இருக்க கச்சத்தீவு விவகாரத்தில் திமுக தமிழர்களுக்கு மாபெரும் துரோகத்தை  செய்துவிட்டதாக பாசிச பாஜகவினர் கூவிக்கொண்டே இருக்கின்றனர்.

இப்பொழுது நாம் பாஜகவினர் கச்சத்தீவைப் பற்றி இப்படி கூவிக் கொண்டிருப்பதற்கான உண்மையான காரணம் என்ன என்பதை ஆராய்வோம்.

திருவாளர் மோடியும் கூட இந்தியாவுக்கு சொந்தமான பகுதியை அண்டை நாட்டுக்குக் கொடுத்துள்ளார். அதைப்பற்றி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கர்கே தெரிவித்த கருத்தை இப்பொழுது பார்ப்போம்.

இதையும் படியுங்கள்: மீனவர்கள் வாழ்வை அழிக்காதே! கடல்சார் மீன் வள மசோதா 2021ஐ திணிக்காதே!

“2015 ஆம் ஆண்டு வங்கதேசத்துடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தின் படி 111 இந்தியப் பகுதிகள் வங்கதேசத்திற்கு வழங்கப்பட்டன. இந்த ஒப்பந்தம் இருநாட்டு மக்களின் இதயங்களை இணைக்கும் என்று அப்பொழுது மோடி வர்ணித்தார். இதுபோன்ற நட்பு ரீதியான ஒப்பந்தத்தின் மூலமாகத்தான் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது” என்று கூறியதுடன் “ஆனால் கச்சத்தீவை கொடுத்ததைப் பற்றி மட்டும் பாஜகவினர்  விமர்சிப்பது ஏன்? ” என்று  கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்பதற்காக மோடி செய்தது எதுவும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதேசமயம் கச்சத்தீவு இலங்கைக்கு தான் சொந்தமானது என்ற கருத்தை மோடி  அரசு தெரிவித்துள்ளதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

“இலங்கையுடன் போரிட்டு தான் கச்சத்தீவை மீட்க முடியும்” என்று 2014 ஆம் ஆண்டு மோடி அரசின் அட்டானி ஜெனரலாக இருந்த முகுல் ரோதகி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் கச்சத்தீவின் நிலை குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்(மோடி அரசு தான்) “கச்சத்தீவு,  இந்தியா- இலங்கை பன்னாட்டு கடல் எல்லைக் கோட்டின் இலங்கை பக்கத்தில் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இந்திய பாராளுமன்றத்திலும், இந்திய உச்ச நீதிமன்றத்திலும் கச்சத்தீவு இலங்கை அரசிற்கு தான் சொந்தமானது என்று கூறி வந்த மோடி, கடந்த பத்து ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்பதற்கு என்று ஒரு துரும்பைக்கூட எடுத்து போடாத மோடி இப்பொழுது கச்சத்தீவிற்காக போலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் நேரம் என்பதால் பாஜகவினர் இப்படி போலி கண்ணீர் வடிக்கின்றனரா? இது மட்டும் காரணம் அல்ல. இந்தியப்  பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்படுவதை தவிர்ப்பதற்காகவும் கச்சத்தீவை பற்றி பிரச்சனையை தற்போது பாஜக எழுப்பி வருகிறது.

2000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனா அபகரித்துள்ளபோதும் எந்த சீனப்படையும் இந்திய மண்ணில் இல்லை என உண்மையை மறைத்து நியாயப்படுத்தியவர் மோடி. “உண்மையில் சீனா அபகரித்துள்ள நிலம் இந்த சிறிய தீவை (கச்சத்தீவை)விட  ஆயிரம் மடங்கு பெரியது” என்று கூறுகிறார்
ப. சிதம்பரம்.

2021 ஆம் ஆண்டு இந்தியாவின் ஒரு பகுதியான அருணாச்சலப் பிரதேசத்திற்குள்  (அசல் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி) 4.5 கிலோமீட்டர் தூரம் ஊடுருவி அங்கு 101 குடியிருப்புகளை கட்டி புதிய கிராமத்தையே சீனா உருவாக்கியுள்ளது. இது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த பொழுதும் கூட இந்திய எல்லைகளை சீனா ஆக்கிரமிக்கவே இல்லை; இல்லவே, இல்லை என்று மோடி பொய்யுரைத்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தொடரும் இலங்கை கடற்படையின் தாக்குதல்கள்  படுகொலை!

2017 ஆம் ஆண்டு தொடங்கி 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அதாவது தற்போதைய தேதி வரை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள  47 இடங்களுக்கு சீன மொழியிலும், சீனாவின் மாண்டரின் மொழியிலும் திபெத்திய மொழியிலும் புதிய பெயர்களை சூட்டியுள்ளது. 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள்,  4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப் பாதை மற்றும் ஒரு சிறு நிலப்பகுதி என ஒரு பெரும் பகுதிக்கே இந்த புதிய பெயர்கள் சீனாவால் சூட்டப்பட்டுள்ளன. அத்துடன் நிற்காமல்  இந்திய மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்திற்கு ஜங்னான் என்று சீனா பெயர் சூட்டியுள்ளது. இந்தப் பெயர்கள் வரும் மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் சீனா அறிவித்துள்ளது. இப்பொழுதும் 56 இன்ச் மோடியால் சீனாவுக்கு வலுவான எதிர்ப்பை  தெரிவிக்க இயலவில்லை.

இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளை சீனா ஆக்கிரமித்ததற்கு எதிராக எவ்வித  வலுவான எதிர்ப்பையும் இதுவரை 56 இன்ச் மோடி காட்டியதே இல்லை. ஐநா போன்ற உலகளாவிய மன்றங்களிலும் கூட சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒரு முறை கூட மோடி அரசு கண்டன குரல் எழுப்பியது இல்லை.

இந்தக் கையாலாகாத தனத்தை மறைப்பதற்காகத்தான் கச்சத்தீவு பிரச்சனையை  பாஜகவினர் எழுப்புகிறார்கள். இதன் மூலம், முடிந்தவரை அப்பாவி தமிழர்களை எய்த்து விட வேண்டும் என்றும் துடிக்கின்றனர்.

தர்க்க அறிவுடைய தமிழர்கள் இவர்களின் தகுடுதித்தங்களை நன்றாக புரிந்து வைத்திருப்பார்கள் என்பது உறுதி. அப்படி புரிந்து கொள்ள இயலாத அப்பாவிகளுக்கு பாஜக -வினரின் மோசடிகளை பற்றி பேசி புரிய வைக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை.

  • குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here