இலங்கையின் பட்டினி நிலைக்கான காரணம் என்ன?

பலரும் சொல்வது கோவிட்19 இனால் இலங்கையின் முதன்மையான மூன்று வருவாய் மூலங்களான 3 T உம் ( Tea, Textile and Tourism ) பாதிக்கப்பட்டமையே காரணம் என்பதே. மக்கள் தொகையினரில் கோவிட்19-னால் இறந்தவர்கள்/ தாக்குண்டவர்களின் ஏனைய நாடுகளின் விழுக்காட்டினை இலங்கையின் விழுக்காட்டுடன் ஒப்பிட்டால், இலங்கையின் தாக்கம் ஒன்றும் மோசமானதல்ல. மூன்று வருவாய் மூலங்களில் தேயிலைக்கும், தைத்த ஆடைகளுக்குமான தேவை ( Global demand ) கடந்த இரு ஆண்டுகளை மொத்தமாக நோக்கினால் , அதில் பெரிதாகக் குறைவு எதுவும் ஏற்படவில்லை. அவற்றின் உலகளாவிய நுகர்வின் அளவானது நோய்த் தொற்றின் தொடக்க காலத்தில் சற்றுத் தடுமாறிய போதும், பின்னர் வழமைக்கு வந்துவிட்டது. சுற்றுலாத்துறை மட்டுமே கடும் சரிவினைச் சந்தித்தது. தனது மொத்த உள்நாட்டு ஆக்கத்தில் ( GDP இல்) சுற்றுலாத்துறை வகிக்கும் விழுக்காட்டின் { %} அடிப்படையிலான பட்டியலினைப் பார்த்தால்; முதல் ஐம்பது நாடுகளில் கூட இலங்கையானது இல்லை. அந்த ஐம்பது நாடுகளும் (எவை எனக் குறிப்பு 1 இல் காண்க) தனது GDPஇல் 13% இற்கும் அதிகமாக சுற்றுலாத்துறையில் தங்கியிருக்க, இலங்கையோ 12.6 % மட்டுமே சுற்றுலாத்துறையில் தங்கியுள்ளது. எனவே அந்த ஐம்பது நாடுகளுக்குமில்லாத தாக்கம் இலங்கைக்கு மட்டும் ஏன்? இதற்கான விடையினை நோபல் பரிசு பெற்ற பொருளியல் வல்லுநரும் எழுத்தாளருமான அமர்த்தியா சென் கூறியுள்ளார். அவர் பொதுவாக எல்லா நாடுகளுக்குமென எழுதியது அச்சொட்டாக இலங்கைக்குப் பொருந்திப் போகின்றது. பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்ற பின்பு, அடுத்த ஆண்டே எழுதிய Development as Freedom பொத்தகத்திலேயே இச் சிக்கலுக்கான விடையுள்ளது.

அவரின் பின்வரும் கூற்றே பொத்தகத்தின் மையக் கரு : “No famine has ever taken place in the history of the world in a functioning democracy” : மக்களாட்சி (சனநாயகம்) செயல்படும் இடங்களில் உலக வரலாற்றில் இதுவரைப் பஞ்சம் ஏற்பட்டதில்லை”.
நீடித்த வளர்ச்சி என்பது மனித விடுதலையினை விரிவுபடுத்தும் செயல்முறையாகும்` என்பதே அவரது கருத்தாகும்.
பொருளாதார வாய்ப்புகள், அரசியல் உரிமைகள், சமூக ஆற்றல் என்பன கூட, வளர்ச்சியின் அடிப்படை என மேலும் கூறுவார்.

பண்பாட்டு வேறுபாடுகளை அடிப்படை மனித உரிமைகளாக ஏற்றுக்கொள்வதும், பன்முகத்தன்மையினை மதிப்பதும் வளர்ச்சிக்கான அடிப்படைத் தேவையாக இந்த நூற்றாண்டிலிருக்கும் எனவும் கூறுகின்றார்.

☝️👉சுருக்கமாகச் சொன்னால் மக்களாட்சியே (Democracy ) வளர்ச்சியின் (Development ) அடிப்படைத் தேவை என்பதே அவரது கூற்றாகும். மக்களாட்சி என்பது முழு மக்களையும் சார்புப்படுத்தும் ஒரு முறைமையினால் /சார்பாளர்களால் (Elected representatives ) மக்கள் ஆளப்படும் ஒரு முறையாகும். இங்கு முழு மக்கள் என்பது எந்தவொரு சிறுபான்மைப் பிரிவினையோ குழுவினையோ ஒதுக்கி விடக் கூடாது என்பதற்காகவே அழுத்திக் கூறப்படுகின்றது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சட்டம் எனப் பேசி, பன்முகத்தன்மையினை மறுத்து, அதிகாரப் பரவலாக்கலை புறந்தள்ளும் எந்த நாட்டிலும் மக்களாட்சி நடைபெறுவதாகக் கொள்ள முடியாது. அவ்வாறான நாடுகள் ஏதோ ஒரு காலத்தில் வந்து சேர வேண்டிய இடத்துக்கே இலங்கை இன்று வந்து சேர்ந்துள்ளது.

நாம் வாழும் காலத்தின் மிகப் பெரும் பொருளியல் வல்லுநர் சொன்ன பின்வரும் கருத்துடன் இப்பதிவினை முடிக்கின்றேன் “”No famine has ever taken place in the history of the world in a functioning democracy”

குறிப்புகள்

  1. https://stacker.com/stories/4450/countries-most-dependent-tourism
  2. https://www.amazon.co.uk/Development-as-Freedom-Amartya-Sen/dp/0192893300/ref=asc_df_0192893300/?tag=googshopuk-21&linkCode=df0&hvadid=310785600414&hvpos=&hvnetw=g&hvrand=7823583549341679297&hvpone=&hvptwo=&hvqmt=&hvdev=c&hvdvcmdl=&hvlocint=&hvlocphy=9045937&hvtargid=pla-459412787425&psc=1&th=1&psc=1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here