சம்பவம் 1: தேர்தல் பத்திர விவரங்களை கொடுக்க அவகாசம் வேண்டுமென கேட்கிறது SBI. உச்சநீதிமன்றம் கண்டிக்கிறது. பிறகு ஒரே நாளில் விவரங்களை வந்து கொட்டுகிறது SBI. உடனே உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பார் கவுன்சில் தலைவர் விவரங்களை உடனே வெளியிடக் கூடாது என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுகிறார். ஒரு வழியாக தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடப்படுகிறது.
சம்பவம் 2: உத்தரப்பிரதேச தேர்தல் நேரத்தில் பணமதிப்புநீக்கத்தை அறிவித்து மாயாவதியை முடக்கியது போல் தற்போது காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை பாஜக முடக்கியிருக்கிறது.
சம்பவம் 3: மறுபக்கத்தில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் தேர்தல் ஆணையர் பதவியை ராஜிநாமா செய்கிறார். தேர்தல் ஆணையர் நியமனம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் உள்ளடக்கிதான் தேர்ந்தெடுக்க வேண்டுமென வழக்கு தொடுக்கப்படுகிறது. விசாரணைக்குக் கூட காத்திராமல் அடுத்த நாளே பிரதமர், அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் கூடுகின்றனர். அதாவது மோடி, அமித் ஷா மறும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. குழுவின் பெரும்பான்மைப்படி மோடியும் அமித்ஷாவும் தேர்ந்தெடுத்தவர்கள் தேர்தல் ஆணையர்களாகி இருக்கின்றனர்.
சம்பவம் 4: இவற்றுக்கு இடையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ பற்றிய ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஒன்றிய தேர்தல் நடத்துவதற்கேற்ப மாநில அரசுகளின் காலத்தையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிறது அறிக்கை. கூடுதலாக உள்ளாட்சி தேர்தலையும் சேர்த்து நடத்த அறிவுறுத்தியிருக்கிறது.
மக்களவை தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக குறி வைத்திருக்கிறது. காரணம், இரு அவையின் பெரும்பான்மையுடன்தான் அரசியல் சாசன மாற்றம், நாட்டின் பெயர் மாற்றம், இந்து ராஷ்டிர உருவாக்கம் என எல்லாவற்றையும் செய்ய முடியும். இத்தகைய பின்னணியில்தான் ‘இந்தியா’ என்கிற அணி உருவாக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஒரு முக்கியமான ஆபத்தை சாதித்திருக்கிறது. New Normal எனப்படும் பல விஷயங்களை உருவாக்கி மக்களையும் ஏற்க வைத்திருக்கிறது. ஆதரவால் ஒன்றும் மக்கள் அவற்றை ஏற்கவில்லை, வேறு வழியில்லை என்கிற மனநிலையில்தான் ஏற்றிருக்கிறார்கள். இந்த உளவியல் வீழ்ச்சிதான் பாஜக உருவாக்கியவற்றிலேயே மிகப் பெரிய ஆபத்து.
- கடந்த பத்தாண்டுகளில் இஸ்லாமியர் மீதான தாக்குதல் இயல்பாகி விட்டது.
- தலித்துகளின் உரிமை பறிப்பு.
- கிறித்துவர்கள் வழிபாடு கொச்சைப்படுத்தப்படுவது இயல்பாகிவிட்டது.
- பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இயல்பாகி விட்டது. – எதிர்கட்சிகள் மீதான ஒடுக்குமுறை இயல்பாகி விட்டது.
- யாரும் எவரையும் இழுத்துப் போட்டு அடித்துக் கொன்று விட்டு பாஜகவில் சேர்ந்து கொள்ளலாம் என்பது இயல்பாகி விட்டது.
- வணிகம் செய்பவர்கள் பாஜகவின் அட்டூழியத்துக்கு இயைந்து போகாமல் வணிகம் செய்ய முடியாது என்கிற நிலை இயல்பாகி விட்டது.
- பொருளாதாரச் சூழலும் தனி நபர் வருமானமும் இன்னும் மோசமாகும் என்கிற தனி மனித சிந்தனை இயல்பாகி விட்டது.
- இவை எதையும் யாராலும் இனி சரி செய்ய முடியாது என்கிற மனநிலை இயல்பாகி விட்டது.
அமைப்புகள் தொடங்கி ஊடகங்கள் வரை பாஜகவின் வசம். 400-க்கு மேல் பாஜக விரும்புகிறது என்றால் 411 வரை ஊடகங்கள் வெற்றியளிக்கத் தயாராக இருக்கின்றன.
இத்தகைய வீழ்ச்சி மனநிலையையும் அவநம்பிக்கையையும்தான் பொய்களையும்தான் ஹிட்லர் ஜெர்மானியர்களிடம் விதைத்தான். யூதர்களை அழிக்கத் துடித்த ஜெர்மானியர்களுக்கு நிகரான அளவில், அத்தகைய சூழல் நேர்ந்ததை எண்ணி வருத்தப்பட்டவர்களும் இருந்தனர். ஆனால் அவர்களில் பெரும்பான்மையானோர் நம்பிக்கையை தொலைத்து விட்டிருந்தனர். அதுதான் ஆபத்தாக மாறியது.
வரும் தேர்தலில் பாஜக தோற்றாலோ மைனாரிட்டி வெற்றி பெற்றாலோ அடுத்த ஆட்சியில் தொடர முடியாது. எனவேதான் பாஜக இத்தனை பதற்றம் கொள்கிறது.
பாஜகவை எதிர்த்து உருவாக்கியிருக்கும் ‘இந்தியா’ கூட்டணி வட நாட்டில் அதிர்வை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. முழுமையாக ஊடகங்கள் அதை மறைக்கின்றன. எது எப்படியிருந்தாலும் நமக்கு தேவை ஒற்றை வார்த்தைதான். Defiance!
இன்னும் பாஜக நிறைய பதறும். நிறைய ஆடும். எந்த எல்லைக்கும் செல்லும்.
’அறிவு கொண்டவர்கள்தான் தயக்கம் கொள்வார்கள். முட்டாள்கள் தயங்கவே மாட்டார்கள். கொஞ்சமும் கூச்சம் கொள்ள மாட்டார்கள்!’
எதிரி ஜெயித்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றில் உறுதியாக இருக்க வேண்டும். நாம் வீழக் கூடாது.
இயக்கம் மட்டுமே இருப்பு. இருப்பு மட்டுமே வாழ்க்கை. இயங்க மறுத்தால் இருப்பு சிக்கலாகும். இருப்பு சிக்கலானால் வாழ்வே அழியும்.
’இறுதிநாயகர்கள்’ புத்தகத்தில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், பாஜகவின் ஆட்சியை விமர்சித்து ஒரு வரி கூறியிருந்தார்: ‘சூரியனே மறையாது என சொல்லப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் வீழ்த்தப்பட்டது. அதுபோல இந்த சாம்ராஜ்யத்தின் சூரியனும் மறையும்!”
எனவே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், Defiance! யார் வந்தாலும் எத்தனை பேர் எதிராக நின்றாலும் ஒருவராக தனியாக நிறுத்தப்பட்டாலும் பணியாதீர்கள்.
Defy! அதுவே விடுதலை!
நன்றி
- ராஜசங்கீதன்
பதிவு
மற்றொரு சம்பவத்தை விட்டு விட்டீர்கள CAA சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார்கள்