கென்யாவின் மலிண்டா பகுதியில் “குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச்” என்ற சபையை நடத்திவரும் பால் மெக்கன்சி என்ற மதபோதகர், தன்னிடம் வந்த இயேசுவின் பக்தர்களை “இயேசுவைப் பார்க்கவேண்டுமானால் பட்டினியிருந்து உயிரை விட வேண்டும்” என்று கூறி ஏறக்குறைய 90-க்கும் மேற்பட்டவர்களை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியுள்ளார்.

கிறிஸ்துவத்தில் இதுவொன்றும் புதியது இல்லை, ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இச்சம்பவங்கள் அனைத்தும் கிறிஸ்தவத்தின் நிறுவனமயமாக்கப்பட்டு, தற்போது ஐரோப்பியாவில் அருங்காட்சியகத்திலுள்ளபிரதான பிரிவுகளான ரோமன் கத்தோலிக்கம், ஆங்கிலிக்கன், லுத்தரன் போன்றவற்றில் நடப்பதில்லை. உடனே இவர்கள் எல்லாம் யோக்கியர்கள் என்று அவசரப்பட்டு முடிவு செய்துவிட வேண்டாம். இவர்கள் அனைவரும் பல்வேறு கொடூர படுகொலைகளை நிகழ்த்தி இரத்தக்கறை படிந்தவர்கள்தாம். அமெரிக்கா, ஐரோப்பாவில் இவர்கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அக்கண்டங்களில் இரத்த ஆற்றை ஓடவிட்டவர்கள்தாம். இன்றைக்கு சாந்தசொரூபியாகக் காட்சிதரும் பாதிரியார்கள் அன்றைக்கு மிகக் கொடூரமாக மக்களை வதைத்தவர்கள்.

உலகம் முழுவதும் வலைப்பின்னலைக் கொண்டிருக்கும் மேற்சொன்ன கார்ப்பரேட் கிறிஸ்தவ மதநிறுவனங்களைத் தவிர உள்ளூர் முதலாளிகள், சிறு/குறு முதலாளிகள் போல பலரும் ஒரு சில பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டு, ஏற்ற இறக்கமாகப் பேசும் கலையை கற்றுக்கொண்டு தெருவுக்கு இரண்டு சபைகளை ஆரம்பித்து வியாபாரத்தைத் தொடங்கி விடுகின்றனர். பிறகு ஒன்று இரண்டு வருடங்களிலேயே பக்தர்களின் தசம பாகத்தின் உதவியால் ஆடம்பர பொருட்கள், கார், வீடு என்று செட்டில் ஆகி விடுகின்றனர். இதெல்லாம் எப்படி வந்தது என்ற சங்கடமான கேள்வியைத் தவிர்க்கக் கூடவே எல்லா பொருட்களின் மீதும் “God’s Gift” என்ற ஸ்டிக்கரையும் ஒட்டி விடுகின்றனர்.

இப்படி ஊழியம் செய்தே பல நூறு கோடிகள் சம்பாதித்த டிஜிஎஸ் தினகரன் குடும்பம், மோகன் சி. லாசரஸ், சாது சுந்தர் செல்வராஜ் போன்ற தொழில் முன்னோடிகளை முன்மாதிரியாகக்கொண்டு பக்தர்களின் வாழ்க்கையில் சும்மா புகுந்து விளையாடுகின்றனர். பில்லி சூனியம், தொழில் முடக்கம், கடன் பிரச்சனை, நோய்கள், கல்வி போன்ற பல கட்டுகளை உடைப்பதாகக் கூறி இவர்களை நாடி வருவோரை தம் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர். பின்னர் தசமபாகம் (வருமானத்தில் 10%) என்றும், சிறப்பு ஜெபங்கள் என்றும், சிடி விற்பனை என்றும் அட்டை போல இரத்தத்தை உறிஞ்சி கொழுக்கின்றனர்.

ஜெபத்தாலேயும், தீர்த்தம், இயேசு அறையப்பட்ட சிலுவையின் (?) மரக்கட்டை, CD, மண் (ஏதோ ஒரு சர்ச்சிலிருந்து பக்கத்து வீட்டுக்காரர் கொண்டு வந்திருக்கிறார்) போன்றவற்றால் பக்தர்களின் உடல், உளவியல் பிரச்சனைகளை தீர்த்துவிடுவதாக கதைவிடும் இவர்கள் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஹை-கிளாஸ் மருத்துவமனையைத்தான் நாடுகின்றனர்.

பொருளாதார சிக்கல்கள், சமூக சிக்கல்கள், அருகிவரும் வாய்ப்புகள், நிச்சயமற்ற வாழ்வு என்று பல்வேறு வகைகளில் பாதிக்கப்படும் மதஉணர்வு கொண்ட மக்கள் தம்முடைய இந்நிலைமைக்கு காரணமான பொருளாதாரக் கொள்கைகளையும் அவற்றை நடைமுறைப்படுத்தி வாழ்வைப்பறிக்கும் அரசையும் எதிர்த்து போராடுவதற்கு அஞ்சி குறுக்குவழியை நாடி இப்போதகர்களிடம் தஞ்சம் அடைகின்றனர்.

இதையும் படியுங்கள்: குஜராத்: இந்து மதத்தை விட்டு ஆயிரக்கணக்கில் வெளியேறிய மக்கள்! கதறிக் கொண்டிருக்கும் சங்கிகள்!!

சரியான அரசியலையும், தீர்வையும், சித்தாந்தத்தையும் கொண்டுள்ள புரட்சிகர இயக்கங்கள் ஒரே ஒரு நபரை வென்றெடுப்பதற்கு கூட ஆண்டு கணக்கில் திட்டம் போட்டுக்கொண்டு தலைகீழாகத் தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த போதகர்களோ ஒரே ஒரு சிட்டிங்கில் ஒரு குடும்பத்தையே “அலேக்காத்தூக்கி மல்லாக்க போட்டுவிடும்” சாமர்த்தியசாலிகள். பின்னர் ஆண்டாண்டு காலமாக அக்குடும்பமே இவர்களின் அடிமைகளாக இருக்கும், வேறு பல குடும்பங்களையும் இந்த பாஸ்டர்களிடம் கூட்டியும் வரும்.

இந்தியா போன்ற நாடுகளில் பக்தர்களின் பணத்தையும், சொத்துக்களையும், பக்தைகளையும் மட்டுமே ஆட்டையை போடும் இக்கும்பல் ஏகாதிபத்தியங்களாலும், உலக முதலாளிகளாலும், ஆயுத வியாபாரிகளாலும் கொடூரமாகச் சுரண்டப்படும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் தீவிரமாகி பக்தர்களை பரலோகம் அனுப்பி உள்ளது. அதன் சமீபத்திய சான்றுதான் கென்யாவில் நடந்துள்ள சம்பவம்.

கென்யா சம்பவத்தை விவரிக்கும் ஊடகங்கள் கடவுள் நம்பிக்கை என்பது சரி! ஆனால் இதை போன்ற மூடநம்பிக்கையால்தான் பிரச்சனை என்று அங்கலாய்த்துக்கொள்கின்றன. ‘கடவுள் நம்பிக்கையே ஒரு மூடநம்பிக்கைதான்’ என்பதை வாகாக மழுப்பி கடவுள் நம்பிக்கைக்கு முட்டுக்கொடுக்கின்றன. மக்களிடம் அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவை ஊட்டுவதற்குப் பதிலாக ராசிபலன், ஆன்மிகம் என்று அறிவியலுக்குப் புறம்பானதையே தீவிரமாகப் பரப்பிவருகின்றன. செய்திகள் பகுதியில் கண்டிப்பாக ஏதாவது ஒரு கோயிலைப்பற்றிய செய்தி வருமாறு தேடிப்பிடித்துப் போடுகின்றன. பற்றாக்குறைக்கு இந்த மதவாத கும்பலே ஆளுக்கொரு தொலைகாட்சி சேனலை ஆரம்பித்து எப்போது பார்த்தாலும் “ஏசுவே வாரும், அல்லேலூயா” என்று மரண ஓலமிட்டுவருகின்றன.

முதலாளித்துவ அரசுகளாலும், பாசிஸ்டுகளாலும்அமல்படுத்தப்படும் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கையால் வாழ்வாதாரத்தை இழக்கும் மக்கள் இதுபோன்ற மதவாத மோசடி கும்பலிடம் ஏமாறாமல் தம் வாழ்வைப் பறிப்பவர்களுக்கு எதிராகப் போராடுவது மட்டுமே தீர்வு என்பதை உணர வேண்டும். அப்படியல்லாமல் மதம்தான் தீர்வு, கடவுள்தான் வழி  என்று மதவாதிகளின் பின்னால் போனால் இது போன்ற பல கொடூரமான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here