டில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரான டாக்டர் ஜி என் சாய்பாபா மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் வழக்கிலிருந்து மும்பை உயர்நீதிமன்றம் நாக்பூர் பெஞ்ச் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று விடுதலை செய்தது.

நீதிபதிகள் வினய் ஜோஷி, வால்மீகி மற்றும் எஸ்.ஏ மேனேசஸ்,  ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் சாய்பாபாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ததுடன் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரையும் விடுதலை செய்தது. அவர்கள் மீதான வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை அரசு தரப்பு நிரூபிக்க தவறியதால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிப்பதாக பெஞ்ச் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சாய்பாபா பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜி.என் சாய்பாபா தில்லி பல்கலைக்கழகத்தின் ராம் லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக 2003இல் இருந்து பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த 2014 ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கூறி மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்தது கைது செய்யப்பட்ட ஜி.என். சாய்பாபா நாக்பூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மார்ச் 2017-ல் மகாராஷ்டிரா செசன்ஸ் நீதிமன்றம் சாய்பாபா உள்ளிட்ட மகேஸ் திர்கி, பாண்டு நரோட், ஹேம் மிஸ்ரா,  பிரசாந்த் ரஹி மற்றும் விஜய் திர்கி ஆகியோர் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் தேசத்திற்கு எதிரான போரை நடத்த முயன்றதாகவும்  குற்றஞ்சாட்டி கைது செய்தது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA) இந்திய தண்டனைச் சட்டம் (IPC) ஆகியவற்றின் பல்வேறு விதிகளின் கீழ் அவர்களை குற்றவாளிகள் என்று நீதிமன்றம் சாய்பாபா மற்றும் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

பொய் வழக்கும், ஜாமீன் மறுப்பும்!

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை கடந்த 10 வருடமாக நிரூபிக்காத அரசு சிறை கொட்டடியில் கொல்ல திட்டமிட்டது எனலாம். காரணம் உடலளவில் கிட்டத்தட்ட 90% ஊனமடைந்த ஜி.என் சாய்பாபாவுக்கு அடிப்படை உதவிகளை கூட செய்தி தர அரசு தயாராக இல்லை. உடல் ஊனத்தால் உடல்நிலை மோசமடைந்ததையொட்டி குடும்பத்தினர் பலமுறை ஜாமீன் கோரினர். கடைசியாக 2015 ஜூன் முதல் 2015 டிசம்பர் வரை மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சாய்பாபாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. அதன் பின்பு சாய்பாபாவின் தாயார் இறந்தபோது கூட பரோல் தரவில்லை உணர்ச்சிகரமாக என தனது பேட்டியில் கூறியிருந்தார்.

ஆனால் மறுபுறமோ “இந்துக்கள் கையில் ஆயுதம் வைத்திருக்க வேண்டும்” என்று மதவெறி வன்முறையை தூண்டும் வகையில் பேசிய யதி நரசிங்கானந்த்  என்ற இந்து பயங்கரவாதியை ஜாமீனில் விடுவிக்கிறது நீதிமன்றம். ஆனால் மக்களுக்காக குரல்கொடுக்கும் பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்டவர்களுக்கு அவசரநிலையிலும், மருத்துவ சிகிச்சைக்காகவும் அன்று ஜாமின் மறுக்கப்பட்டது. பாலியல், கொலை, கொள்ளை, கலவரம் உள்ளிட்டவை ‘சிறிய’ குற்றங்களாகவும், அடித்தட்டு மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது ‘பெரிய’ குற்றமாகவும் இந்த அரசின் நிறுவனங்களால் பரபப்ப்படுகிறது. மோடி அரசு இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறுது.

நேற்று நாக்பூர் சிறையில் இருந்து  விடுதலையாகி சக்கர நாற்காலியில் வந்த சாய்பாபா செய்தியாளர்களிடம் பேசுகையில் “2017 மே மாதம் நான் சிறைக்குச் சென்றபோது ஆரோக்கியமான நபராக இருந்தேன். எனக்கு போலியோ மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது எனக்கு இதய கோளாறுகள் கணையம் மற்றும் பல தசை நோய்கள் உள்ளன. ஒரே நேரத்தில் பல அறுவை சிகிச்சைகள் செய்யுமாறு மருத்துவர் என்னிடம் கூறினார் ஆனால் எதுவும் நடக்கவில்லை” என்று கூறிய சாய்பாபா தனது உடல்நல குறைவுக்கு காரணமாக சிறை நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

பாசிஸ்டுகளின் குறி!

2014ல் ஆட்சிப் பொறுப்பில் பாசிஸ்டுகள் அமர்வதற்கு முன்னரே இடதுசாரிகளும், ஜனநாயகவாதிகளும் இந்துத்துவ கும்பலின் நரபலி நாயகர்களான மோடியை அம்பலப்படுத்தி பேசினார்கள், கூட்டங்கள் நடத்தினார்கள். கெடு வாய்ப்பாக மோடி வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிறகு சங்பரிவார் கும்பலின் முதல் இலக்காக இடதுசாரிகளும், சமூக செயற்பாட்டாளர்களுமே இருந்தார்கள். ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு ஆதரவாய் நின்ற ஜி.என்.சாய்பாபா, ஸ்டேன் ஸ்வாமி உள்ளிட்டவர்கள் மீது பொய்  வழக்குகளை புனைந்து சிறையில் அடைத்தார்கள். நீதிமன்றம் வழக்கை விசாரித்து விடுதலை செய்தாலும் சிறையில் இருந்து வெளியேறுவதற்கு முன்னரே பாசிச கும்பல் மற்றொரு பொய் வழக்கை புனைந்து சிறையில் அடைத்தது.

இதையும் படியுங்கள்: பேராசிரியர் சாய்பாபாவை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்!

அக்டோபர் 14 2022 அன்று பம்பாய் உயர் நீதிமன்றம் சாய்பாபாவின் விசாரணையில் உள்ள முறைகேடுகளை காரணம் காட்டி அவரை விடுவித்தது. ஆனால்  அதே நாளில் உச்ச நீதிமன்றம் உத்தரவை இடை நிறுத்தியது. அதன் பிறகு ஏப்ரல் 2023-ல் சாய்பாபாவையும் மற்றவர்களையும் விடுவிக்கும் பம்பாய் உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

சிறையில் இருக்கும் போதே பாண்டு காய்ச்சலால் 2022ல் உயிரிழந்தார். ஸ்டேன் ஸ்வாமியும் சிறையில் உடல்நிலை மோசமாகி சிகிச்சைக்கு ஜாமீன் கிடைக்காததால் உயிரிழந்தார்.

இடதுசாரிகளே இலக்கு!

சிறையிலிருந்து விடுதலையான சாய்பாபா, அவரது வழக்கறிஞர் சுரேஷ் காட்லிங் எல்கர் பரிசத் வழக்கில் சிறையில் இருப்பது வருத்தம் அளிப்பதாக கூறினார்.  அவரது கைதுக்கு ஒரே காரணம் விசாரணையின் போது எனக்கு உதவி செய்தார், அவர் என்னை பாதுகாத்தார். அதனால்தான் அவர் கைது செய்யப்பட்டார் என்றார்.

இதுபோல்  2002 குஜராத் கலவரத்தை  அம்பலப்படுத்தியதற்காகவும் கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் எம்பி இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியுடன் இணைந்து வழக்கை நடத்தியதற்காகவும் தீஸ்தா செதல்வாட்டை  கடந்த 2022ல் குஜராத் அரசு கைது செய்தது நினைவு இருக்கலாம்.

பாசிஸ்டுகளால் கடந்த 10 ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் ஏராளம். இதில் பெரும்பாலானவர்கள் இடதுசாரி செயல்பாட்டாளர்கள்  என்பது முக்கியமானது. அவர்களில் சிலரே விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். பலர் இன்னும் சிறையிலேயே உள்ளார்கள். கௌரி லங்கேஷ் உள்ளிட்டவர்கள் சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவ கும்பலின் கூலிப்படையால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள்.

ஒருபுறம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி சமூகத்திற்காக போராடுபவர்களை பொய் வழக்குகள் புனைந்து சிறையில் அடைப்பது,  இன்னொரு புறம் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் உள்ளிட்டவர்களை கூலிப்படைகள் மூலம் அழித்தொழிப்பது என இந்துத்துவ பாசிஸ்டுகள் வெறியாட்டம் போடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்: டிசம்பர் 9 கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட தினம்!

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சிஏஏ போராட்டத்தை ஈடுபட்டதற்காக ஜெ.என்.யு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித்  பிணை கிடைக்காமல் இன்னும் சிறையிலேயே உள்ளார். இவருக்கு எதிரான சாட்சிகள் அரசிடம் இல்லை என்றாலும் நீதிமன்றம் பிணை தர மறுக்கிறது.

சிறையில் இருக்கும் இவர்கள் பாசிஸ்டுகளின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் போராடிக் கொண்டுள்ளனர். சாய்பாபா கூறுகையில் “இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள  மக்களின் விருப்பங்களுக்கு விருப்பங்களாலும், அவர்களின் போராட்டத்தாலும் இது போன்ற துன்பங்கள் வலிகள் எல்லாம் கடந்து எப்பேர்ப்பட்ட சிறை சூழலிலும் வாழ முடியும் என்றார்.

சிறையில் பத்தாண்டுகளில் அவரது  வாழ்வை இழந்தார். வேலை போனதால் பொருளாதாரத்தை இழந்தார். ஆனால் ஒருபோதும் உணர்வை இழக்கவில்லை. ஜி.என்.சாய்பாபா மட்டுமல்ல, மக்களுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்யும்  அனைவருக்கும் இது பொருந்தும். சாய்பாபாவுக்கு துணை நின்றது போல் சிறையில் இருக்கும் சமூக போராளிகளுக்கும் துணை நிற்போம். உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கும் தேசங்கடந்த தரகு முதலாளிகளுக்கும், ஏகாதிபத்திய முதலாளித்துவ கும்பலுக்கு சேவகம் செய்யும் காவி பாசிச கும்பலை வீழ்த்தி போராளிகளுக்கு காணிக்கையாக்குவோம்.

  • நலன்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here