நீட் தேர்வில் முறைகேடு! ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வு முறையை ஒழிப்பதே தீர்வு!!
எந்த ஒரு தேர்வும் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பது தான் சரியானது. ஆனால் நாம் நீட் தேர்வை முறையாக நடத்த வேண்டும் என்று கூறவில்லை. மாறாக இந்த நீட் தேர்வு மூலம் மருத்துவப் படிப்பிற்கான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறோம்.

ம்மாதம், மே 3 ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் இருந்து 23 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தத் தேர்வு எழுதவரும் மாணவர்களின் உடைகளை, உள்ளாடைகளை சோதிப்பது, தலை முடியை சோதிப்பது என்றும் கையில் கட்டி இருக்கும் கயிறை அறுப்பது, காதில் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை அப்புறப்படுத்துமாறு கட்டாயப்படுத்துவது என்றும் பல  வகைகளில் மாணவர்கள் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டனர். இத்தனையும் நீட் தேர்வில் யாரும் முறைகேடு செய்து விடக்கூடாது என்பதற்காக செய்யப்படுவதாகவும், எனவே இதை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும்  விளக்கம் கொடுக்கப்பட்டு வந்தது.

ஆனால் தேர்வு நடப்பதற்கு 42 மணி நேரத்திற்கு முன்பாகவே அதாவது மே 1ஆம் தேதியே வினாத்தாள் கசிந்து விட்டது. நீட் நுழைவுத் தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும் என்ற நிலையில் தற்பொழுது கசிந்துள்ள வினாத்தாளில் இருந்து 140  கேள்விகள் அப்படியே நீட் நுழைவுத்திற்கு தேர்வுக்கான வினாத்தாளில் வந்துள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் நகரில் இருந்து கசிந்த வினாத்தாள் அரியானா, ஆந்திரா, காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பரவி உள்ளது. இப்படிக் கசிந்த  வினாத்தாள் 30 ஆயிரத்திலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இப்படி வினாத்தாளை விற்பனை செய்தவர்களில் ஏற்கனவே நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இப்பொழுது நீட் தேர்வு எழுதி இருக்கும் மாணவர்களும் அடங்குவர். தற்பொழுது இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் பணம் கொடுத்து வாங்கிய வினாத்தாளை பிரதி எடுத்து மற்ற மாணவர்களுக்கும் விற்று பணம் வாங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வினாத்தாள் கசிவு முறைகேட்டில் பல்வேறு தரப்பினருடன் மாணவர்களும் இந்த ஆண்டில் ஈடுபட்டுள்ளது என்பது நீட் தேர்வு முறைகேட்டில் ஏற்பட்டுள்ள மாபெரும் வளர்ச்சியையே குறிக்கிறது.

இப்படி மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி இந்த (கசிந்த வினாத்தாள்) விற்பனையில் ஈடுபட்டிருந்தது என்பது இந்த நீட் தேர்வில் நடக்கும் முறைகேடு என்பது எந்த அளவிற்கு புரையோடிப் போய் உள்ளது என்பதைத்தான் காட்டுகிறது.

நீட் தேர்வில் முறைகேடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவது இது முதல் முறை அல்ல.

படிக்க:

 நீட் தேர்வில் தில்லுமுல்லு! மாணவர்களுக்கு எதிரான அநீதி தொடர்கிறது!

 போட்டித் தேர்வு முறைகேடுகளுக்கும் மோடி உள்ளிட்ட பாஜகவினருக்கும் உள்ள தொடர்பு!

2024ஆம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி அன்று நடத்தப்பட்ட நீட் தேர்விலும் வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு நடத்தப்பட்டது. அந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் மொத்தம் 67 மாணவர்கள் 720 க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதற்கான நேரம் குறைவாக இருந்தது காரணமாக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கொடுத்ததால் தான் அந்த மாணவர்கள் இப்படி நூற்றுக்கு நூறு சதவீதம் மதிப்பெண் பெற்றதாக ஒரு பொய்யான காரணம் கூறப்பட்டதும் அப்பொழுது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அந்த ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக்கில் உள்ள  ஒயாசிஸ் பள்ளி மைதானத்தில் இருந்தே வினாத்தாள் கசிந்தது என்ற விவரம் சிபிஐ -யால் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது காரணமாக அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டுள்ளது. அதே சமயம் கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இப்பொழுது இந்த வினாத்தாள் கசிவு முறைகேட்டில் (விற்பனையில்) ஈடுபட்டுள்ளனர். இவை இரண்டையும் இணைத்துப் பார்க்கும் பொழுது நீட் தேர்வில் முறைகேடு நடப்பது என்பது வழமையான ஒன்றுதான் என்றும் இதுவரை இரண்டு முறை மட்டுமே இந்த வினாத்தாள் கசிவு முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; மற்ற ஆண்டுகளில் நடந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற முடிவிற்கு தான் வர முடிகிறது.

எந்த ஒரு தேர்வும் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பது தான் சரியானது. ஆனால் நாம் நீட் தேர்வை முறையாக நடத்த வேண்டும் என்று கூறவில்லை. மாறாக இந்த நீட் தேர்வு மூலம் மருத்துவப் படிப்பிற்கான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறோம்.

படிக்க: 

 மருத்துவர் கனவை எட்டாக்கனியாக்கும் நீட் தேர்வு!

♦ நீட் போன்ற போட்டி தேர்வுகள், பயிற்சி மையங்கள், தற்கொலைகள்!

நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நீட் பயிற்சி மையங்களில் பல லட்சம் செலவு செய்து மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இந்த பயிற்சியை ஏழை மாணவர்களால் பெற முடியாது என்ற நிலை தான் உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு என்பது ஏழை மாணவர்களை மருத்துவக் கல்வியில் இருந்து விலக்கி வைப்பதற்கான ஒரு நயவஞ்சகமானமுறை என்பதுதான் கல்வியாளர்களின் உறுதியான நிலைப்பாடு.

நீட் தேர்வு என்பது எவ்வளவு நியாயமாக நடத்தப்பட்டாலும் அது ஏழை மாணவர்களுக்கு எதிரான ஒரு முறைகேடு என்பதுதான் உண்மை. பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கூட நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று விடுவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதனால்தான் நீட் தேர்வு என்பதே இருக்கக் கூடாது என்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவ படிப்பிற்கான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் நாம் கூறி வருகிறோம்.

ஆனால் மக்கள் நலனில் சிறிதும் அக்கறையற்ற பாசிச மோடி அரசு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை நடத்தி ஏழை மாணவர்களுக்கு மாபெரும் அநீதியை இழைத்து வருகிறது. அதாவது ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அனிதா முதல் நாடு முழுவதும் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதும் ஏராளமான மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

இவை அனைத்தையும் தடுப்பதற்கு நீட் தேர்வை நியாயமாக நடத்துவது என்பது தீர்வாகாது; நீட் தேர்வையே இல்லாமல் ஒழிப்பது தான் ஒரே நேர்மையான தீர்வாக இருக்க முடியும்.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here