இஸ்ரேல் – ஈரான் – அமெரிக்கா இடையிலான போர்ச் சூழல் இன்று உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்தப் போரின் பாதிப்பு ஏதோ தொலைதூரத்தில் நடக்கும் ஒன்றாக இல்லாமல், இந்தியாவின் சாமானிய உழைக்கும் மக்களின் அடுப்பங்கரை வரை வந்து சேர்ந்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே நாம் எழுதியுள்ளோம்.
ஆரம்பத்தில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று பாஜக தரப்பில் முட்டுக் கொடுத்தாலும், இன்று பிரதமர் மோடியின் “சிக்கன நடவடிக்கைகள்” குறித்த வேண்டுகோள் நாட்டின் நிலைமை கைமீறிப் போனதையே பறைசாற்றுகிறது. இதற்கும் நயினார் நாகேந்திரன் போன்றோர் ‘நாட்டின் நன்மைக்கு’ என முட்டுக் கொடுப்பார்கள்.
விறகடுப்பிற்குத் திரும்பும் அவலம்
இந்தியாவின் நவீனமயமாக்கல் என்ற முழக்கங்கள் இன்று காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் எல்பிஜி (LPG) இணைப்புகள் மூலம் புகையில்லா அடுப்பங்கரை நோக்கி நகர்ந்த மக்கள், இன்று மீண்டும் விறகடுப்பிற்கும், மாட்டுச் சாண எருவிற்கும் (cow-dung cakes) திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை தி வயர் கட்டுரையின் மூலமாக பார்க்கமுடிகிறது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா இங்கு கிராமப்புற மற்றும் அரை-நகர்ப்புறப் பகுதிகளில் எல்பிஜி சிலிண்டர்கள் கிடைக்காததால் மக்கள் மீண்டும் மாட்டுச் சாண உருண்டைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். முன்பு ஒரு மாட்டு சாண உருண்டை 4-5 ரூபாய்க்கு விற்ற நிலையில், இன்று அதன் விலை 35-40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
ஆச்சரியமளிக்கும் விதமாக, சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட எருவாட்டிகள் இணையதளங்களில் ஒரு கிலோ ₹150 முதல் ₹200 வரை விற்கப்படுகின்றன. இது வறுமையின் ஒரு அங்கமாக இருந்த எரிபொருள் தற்போது லாபகரமான வணிகமாக மாறியுள்ளதைக் காட்டுகிறது.
டில்லியின் சேரிப் பகுதிகளில் வாழும் மக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் மைல் கணக்காக நடந்து சென்று விறகுகளைச் சேகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கேஸ் சிலிண்டர்களின் விலை கறுப்புச் சந்தையில் நான்கில் ஒரு பங்கு வரை உயர்ந்துள்ளதால், உழைக்கும் மக்களுக்கு அது எட்டாக்கனியாக மாறியுள்ளது.
உழைக்கும் மக்கள் மீதான சுமை
உலகின் எந்த மூலையில் ஏகாதிபத்தியப் போர் நடந்தாலும் அதன் முதல் பலி சாமானிய உழைக்கும் மக்கள் தான். இந்தியாவின் எல்பிஜி தேவையில் 60% இறக்குமதியைச் சார்ந்துள்ளது, இதில் பெரும் பகுதி ஹோமுஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக வருகிறது. இந்தப் பாதை முடக்கப்பட்டதால் இந்தியாவின் எல்பிஜி பயன்பாடு கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2.2 மில்லியன் டன் குறைந்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் இன்று சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சிறிய உணவகங்கள் மற்றும் தாபாக்கள் கூட எல்பிஜி பற்றாக்குறையினால் மாற்று எரிபொருட்களைத் தேடி ஓடுகின்றன. வாங்கும் சம்பளம் முழுவதும் எரிபொருளுக்கே செலவானால் அவர்கள் வாழ்வாதாரத்தை எப்படித் தக்கவைக்க முடியும்?
பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் மோடி அரசு
இந்த நெருக்கடியைச் சரியாகக் கையாளத் தவறிய மோடி அரசு, தற்போது மக்கள் மீது “தேசபக்தி” என்ற போர்வையில் சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கிறது. வீட்டிலிருந்தே வேலை செய்வது (WFH), கார் பூலிங் (Carpooling) மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைக் குறைப்பது போன்ற ஆலோசனைகள் மூலம் தன் தோல்வியை மறைக்க முயல்கிறார் பாசிச மோடி.
ஏற்கனவே நாட்டில் 45 நாட்களுக்கு மட்டுமே தேவையான எரிவாயு கையிருப்பு உள்ள நிலையில், முறையான திட்டமிடல் இல்லாத அரசின் அணுகுமுறை ஏழை மக்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. விறகு மற்றும் மாட்டுச் சாண அடுப்புகளில் இருந்து வரும் புகை எவ்வாறு சிஓபிடி (COPD), நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது.
படிக்க:
♦ சமையல் கேஸ் விலை உயர்வு! மக்கள் அதிகாரம் ஆர்பாட்டம்.
♦ சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு: மோடி அரசின் தோல்வியும் உழைக்கும் மக்களின் அவல நிலையும்!
டெல்லியைச் சேர்ந்த 35 வயது அஃப்சானா காட்டூன் கூறுகையில், “தினமும் 6 மணி நேரம் விறகு தேடி வெயிலில் மைல் கணக்கில் நடக்க வேண்டியுள்ளது. சமைக்கும் போது புகை கண்ணையும் தொண்டையையும் கரிக்கிறது. இப்போது என் முழு வாழ்நாளும் விறகு சேகரிப்பதிலேயே முடிந்துவிடுகிறது” எனத் தனது நேரடி அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட 75 வயது சாந்தி, “புகையில் இருக்கக்கூடாது என மருத்துவர் எச்சரித்துள்ளார். ஆனால் எல்பிஜி சிலிண்டர் வாங்க பணமில்லை, புகையிலேயே சமைக்க வேண்டியுள்ளது, என் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிறது” என்கிறார்.
தற்போதைய எரிசக்தி நெருக்கடி என்பது ஒரு தற்காலிகத் தட்டுப்பாடு மட்டுமல்ல, இது இந்தியாவின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள ஒரு வரலாற்றுத் தோல்வியாகும். சுத்தமான எரிசக்தி ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் பட்சத்தில், காற்று மாசினால் ஏற்படும் முன்கூட்டிய மரணங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டும்.
டிஜிட்டல் இந்தியா, ஏஐ (AI), செயற்கைக்கோள்கள் எனப் பேசிக் கொண்டிருக்கும் அரசு, நெருக்கடி என்று வரும்போது மக்களை மீண்டும் மாட்டுச் சாணத்திற்கும் விறகிற்கும் தள்ளியுள்ளது ஒரு வரலாற்று முரண். ஏகாதிபத்தியப் போர்களை எதிர்க்காமல், அதன் விளைவுகளால் பாதிக்கப்படும் தன் நாட்டு மக்களைக் காக்கத் தவறியது இந்த அரசின் மிகப்பெரிய நிர்வாகத் தோல்வியாகும். இதனை மோடி ஒப்புக்கொள்ள போவதில்லை. ஆனால் நாம் வேடிக்கைப் பார்க்க முடியாது. உண்மையை உள்ளபடி மக்களுக்கு தெரியப்படுத்துவோம். ஏகாதிபத்தியத்திற்கு சேவைசெய்யும் மோடி அரசின் மக்கள் விரோத செயல்களை அம்பலப்படுத்துவோம்.
- நலன்






