டந்த மூன்று நாட்களில் இரண்டு செய்திகள் என் கவனம் பெற்றன. இரண்டும் தனித்தனி செய்திகள் என்றாலும் கோட்பாடு அளவில் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு உள்ளவை.

செய்தி 1:

தமிழ்நாட்டில் 11 தனியார் சட்ட கல்லூரிகளை தொடங்க அனுமதி வேண்டி தனியார் சிலர் அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும், அனுமதி வழங்க கூடாது என்று வழக்கறிஞர் ஒருவர் தொடுத்த பொதுநலன் வழக்கின் மீது கருத்து தெரிவித்த நீதிபதிகள், தொடக்க கல்வி மட்டுமே அடிப்படை உரிமை ஆகும், உயர்கல்வி அடிப்படை உரிமை இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

செய்தி 2:

லோக் நிதி- Centre for the study of developing societies ஆகிய இரண்டு நிறுவனங்கள் நடத்திய கள ஆய்வு அறிக்கை ஒன்று தி ஹிந்து நாளிதழில் மூன்று தொடர்களாக வெளிவந்துள்ளன. அந்த ஆய்வு சொல்கிறது, இந்தியாவில் இப்போது கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை விடவும் NEET, JEE போன்ற போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை அதிகம். நீட் மருத்துவ கல்விக்கும், JEE பொறியியல் சார்ந்த பல மேல்படிப்புகளுக்கும் ஆன நுழைவுத்தேர்வுகள்.

குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா என்ற ஊரில்தான் இது போன்ற பயிற்சி நிலையங்கள் அதிகம் என்று சொல்லப்படுகிறது. அங்கே 1000 மாணவர்களிடம் நேரடியாக நடத்தப்பட்ட கள ஆய்வில் பல அதிர்ச்சி தரும் உண்மைகள் அம்பலமாகியுள்ளன. அக்டோபர் மாதம் முதல் பகுதியில் நடத்தப்பட்டது இந்த ஆய்வு. இவர்களில் 30% பெண்கள்.

இந்த கள ஆய்வின் முடிவுகள் சுருக்கமாக இதுதான்:

1. இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் நடந்த தற்கொலை சாவுகளில் 8% மாணவர்கள். முக்கியமான காரணம் இது போன்ற நுழைவு தேர்வுகள் தரும் அழுத்தம். இந்த வருடத்தில் மட்டும் கோட்டாவில் 25 மாணவர்கள் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டார்கள்.

2. கோட்டாவில் பயிற்சி வகுப்புகளில் படிப்போரில் பெரும்பாலோர் பிஹார், உ பி, ராஜஸ்தான், ம பி மாநிலங்களை சேர்ந்தவர்கள். இவர்களில் பாதிப்பேர் நகரங்களில் இருந்தும் 14% பேர் கிராமங்களில் இருந்தும் வந்தவர்கள், பெரும்பாலும் மத்தியதர வகுப்பினர்.

3. இவர்களின் பெற்றோர் அதாவது குடும்பத்தில் சம்பாதிப்போரில் 27% அரசு ஊழியர்கள், 21% வணிகர்கள், 14% விவசாயிகள்.

4. மாணவர்களில் 63% ஆண்கள், 37% பெண்கள். 15 முதல் 19 வயது வரையானோர் அதிகம்.

5. கோட்டாவில் மட்டும் நீட் நுழைவு தேர்வுக்கு படிப்போர் 59%, இவர்களில் 76% பெண்கள்.

6. 35% J E E போட்டிக்காக படிக்கிறார்கள். இவர்களில் 46% ஆண்கள், 16% பெண்கள்.

7. மாணவர்களிடம் கொடுக்கப்பட்ட பல கேள்விகள், அவற்றுக்கு மாணவர்கள் அளித்த பதில்கள் வருமாறு:

நீட், ஜே ஈ ஈ நுழைவு தேர்வில் வெற்றி பெறுவது என்பதற்கு நீங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

மிக மிக முக்கியம் 65% பேர்
முக்கியம் 26%
முக்கியம் இல்லை 4%.

8. இந்த நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது உங்கள் வாழ்க்கையில் என்ன விதமான மாற்றத்தை ஏற்படுத்தும்?

பொருளாதார நிலை உயரும் 16% பேர்
சமூகத்தில் அந்தஸ்து உயரும் 22%
வாழ்க்கையில் செட்டில் (settle)ஆகலாம் 35%
இலட்சியத்தை அடையலாம் 20%

9. பயிற்சி நிலையங்களில் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் இருப்பீர்கள்?

2 – 5 மணி 10% பேர்
6 -7 மணி 85%
8 மணி நேரத்திற்கும் அதிகம் 5%

10. குடும்பத்தை விட்டு பிரிந்த உணர்வு உங்களை தாக்குவது உண்டா?

ஆம், அடிக்கடி 36% பேர்
சில நேரங்களில் 47 %
எப்போதாவது 9 %
இல்லை 6%

11. கோட்டாவுக்கு வரும் முன், வந்த பின் உங்கள் தூக்க பழக்கத்தில் வேறுபாடு உள்ளதா?

உறங்க செல்வது: மாற்றம் இல்லை 37%
சீக்கிரமாக உறங்க செல்கிறேன் 10%
இரவில் தாமதமாக உறங்க செல்கிறேன் 50%

12. உட்கொள்ளும் உணவின் அளவு: வழக்கம் போலவே உள்ளது 46 பேர்
முன்பை விடவும் குறைவு 47 பேர்
முன்பை விடவும் அதிகம் 29 பேர்.

13. கோட்டாவில் நுழைவுத்தேர்வு பயிற்சி எடுக்கும் 19% மாணவர்கள் தங்களுக்கு நண்பன் என்று யாரும் இல்லை என்றும், தாங்கள் சோர்வுஅடையும் போது, துயரில் வீழும்போது அதை பகிர்ந்து கொள்ள யாருமில்லை என்றும் சொல்கிறார்கள்.

14. 10இல் இருவர் மட்டுமே தங்கும் இடத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். 10இல் இரண்டுக்கும் குறைவானவர்களே பெற்றோருடன், உடன் பிறந்தோருடன் தங்கி படிக்கிறார்கள். மூன்றில் இருவர் தனியாகவே வசிக்கின்றனர்.

15. இடைவிடாத வகுப்புகள், மாதிரி தேர்வுகள் என தம் மீது தொடர்ந்து நடத்தப்படும் ஆபத்தில் இருந்து தப்பிக்க 68% மாணவர்கள் குடும்பத்தினருடன் பேசுகிறார்கள். பலர் சமூக வலைத்தளங்களில், நண்பர்களை சந்திப்பதில் சற்றே மனஅமைதி பெறுகின்றனர். 26% பேர் தியானம், உடற்பயிற்சி என்று போகிறார்கள்.

16. 46% மாணவர்கள் தங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் நேரத்தில் தூங்க முயற்சி செய்வதாக சொல்கிறார்கள். அபாயம் என்னவெனில் இவர்களில் 16% பேர் தூக்க மாத்திரைகளை உட்கொள்கிறார்கள்.

17. இப்படிப்பட்ட மன அழுத்தம், கவலை, தேர்வு பயம் உள்ளிட்ட பல அழுத்தங்களில் இருந்தும் தப்பிக்க 5% புகை பிடிக்கும் வழக்கத்திற்கும் 2% மது அருந்தும் பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளனர்.

18. கோட்டாவில் தங்கி பயிலும் 7% மாணவர்கள் தமக்கு தற்கொலை எண்ணம் தலைதூக்கியதாக சொல்கிறார்கள். 10இல் மூன்று பேருக்கு மனநல சிதைவு ஏற்பட்டுள்ளது.

19. 43% மாணவர்கள் மனச்சோர்வுக்கும், 33% மாணவர்கள் பதட்டத்துக்கும், 30 % மாணவர்கள் மன அழுத்தத்துக்கும் ஆளானதாக சொல்கிறார்கள்.

20. கோட்டாவில் பயிலும் மாணவர்களிடம், இப்படிப்பட்ட பயிற்சி வகுப்புகளில் சேர்ந்த பிறகு ஒரு மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என்று எப்போதாவது உணர்ந்தது உண்டா என்ற கேள்வி கேட்கப்பட்டபோது அவர்கள் கூறிய பதில் இது:

3% ஆம், மனநல மருத்துவரை சந்தித்து உள்ளேன்
48% இல்லை, அப்படி உணர்ந்தது இல்லை
19% நானே சமாளித்து கொள்கிறேன்
4% ஆலோசனை கட்டணத்தை சமாளிக்க முடியாது

21. மிக முக்கியமான ஒன்று, மாணவர்கள் இடையே நிலவும் பாகுபாடுகள், வெறுப்புணர்வு. சாதி, மதம், பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடுகள் நிலவுகின்றன. 21% மாணவர்கள் தம் மீது சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறது என்றும், 26% மாணவர்கள் தம் மீது பொருளாதார அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.17% மாணவர்கள் தம் மீது மத அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் சொல்கிறார்கள். இந்த 17% பேரில் ஐந்தில் ஒருவர் இந்துவாகவும், 34% பேர் முஸ்லிமாகவும் உள்ளனர்.

22. மொத்தத்தில் 47% மாணவர்கள், தம் மீது கல்விப்புலமை (அதாவது மதிப்பெண் அடிப்படையில் என்று சொல்லலாம்,) அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.

2023 ஆகஸ்ட் மாதம் வரை தமிழ்நாட்டில் 16 பேர் நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் தற்கொலை செய்துகொண்டார்கள்.

தேசிய குற்றப்பதிவுகள் நிறுவனத்தின் NCRB ஆவணப்படி நிகழ்ந்த தற்கொலைகள், அவற்றில் மாணவர்கள் ஆண்கள்/பெண்கள் விழுக்காடு:

National Library of Medicine என்ற மையநூலகம் National Centre for Biotechnology Information என்ற ஒன்றிய அரசு நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. அதன் ஆய்வின்படி (19/13/2020) மாணவர்களின் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருப்பது NEET நுழைவுத்தேர்வுதான்.

தி ஹிந்து 6, 7, 8/11/2023 Data Point பகுதியை பாருங்கள்.

– மு இக்பால் அகமது
முகநூல் பதிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here