தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3, 2026 அன்று காவிரி நீர் உரிமை மீட்புக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்
-
கர்நாடகத்தின் மேகேதாட்டு அணை திட்ட முயற்சியைத் தடுத்தல்.
-
டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பகுதியாக அறிவித்தல்.
-
விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்தல்.
எனச் சரியாகவே வரையறுத்து இருந்தனர்.
காவிரியில் தமிழகத்துக்குரிய பங்கைக் கேட்டு வாங்குவதில் தவெக அரசும், முதல்வர் விஜய்யும் தவறி உள்ளனர் என்று உதயநிதி கண்டித்தும் பேசியுள்ளார்.
திசை மாறிய பேச்சு!
ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் காவிரி குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கவலை இல்லை என்றும், அவரது ஒரே கவலை திமுக மீது வழக்குப் போடுவதுதான் என்றார். அப்போது அங்கிருந்த தொண்டர்கள் ”த்ரிஷா, த்ரிஷா” எனக் கூச்சலிட்ட போது அதனைக் கண்டிக்காமல், தான் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்பதை கணக்கில் எடுக்காமல், அநாகரிகமாக இரட்டை அர்த்தம் வரும் வகையில் பேசியுள்ளது தற்போது பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. இதற்காக வழக்கு பதிந்த தமிழக காவல்துறை கைது நடவடிக்கையும் ஏவியுள்ளது.
மாநிலத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்க, தேசிய அளவில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்க ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனமும் திசை திருப்பப் பட்டுவிட்டது.
அராஜகமான ஒரு கைது நடவடிக்கை, அதற்கு தூண்டிய ஒரு ஏற்கத்தகாத பேச்சு என்பதாக தமிழகத்தின் அரசியல் களம் மாறுகிறது. கைதுக்கு இனிப்பு வழங்கும் தவெக-வினர் ஒருபுறம் என்றால், கைதை கண்டித்து சாலை மறியலில் இறங்கிய திமுகவினர் மறுபுறம் என இரு கட்சியினரும் எந்த உள்ளீடுமற்ற பிரச்சினையைப் பெரிதாக்கி வருகின்றனர்.
முதல்வர் விஜய் தான் பிள்ளையார் சுழி!
சட்டமன்றத்தில் வைத்து முதல்வர் விஜய் முன்னாள் முதல்வரை கிண்டல் அடிக்கும் பாணியில் சைகை செய்து தனது ‘தரத்தை’ நிரூபித்துள்ளார். தற்போது எதிர்க்கட்சித் தலைவர் தஞ்சாவூரில் விஜய் தனிப்பட்ட முறையில் தொடர்புப்படுத்தும் விதமாக இரட்டை அர்த்தத்தில் பேசியதன் மூலம் தனது ‘தரத்தை’ வெளிக்காட்டியுள்ளார்.
திமுகவின் தீப்பொறி ஆறுமுகம், அதிமுகவின் எஸ் எஸ் சந்திரன் போன்ற மூன்றாம் தர பேச்சாளர்கள் தான் இப்படி பேசுவார்கள். கலைஞரோ, ஸ்டாலினோ இப்படி மேடைகளில் பேசியதில்லை. உதயநிதி யாரை பின்பற்றுகிறார்?
இரட்டை அர்த்தத்தில் உதயநிதி பேசியுள்ளதையே வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு உதயநிதி ஸ்டாலின் மீது ஒன்பது பிரிவுகளில் வழக்கு தொடுத்து அவரை கைது செய்தும் உள்ளது காவல்துறை. இதன்மூலம் உதயநிதியின் பேச்சு ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தில் இருந்து திசை திரும்பிவிட்டுள்ளது.
மேலும் படிக்க: இருண்டு கிடக்கிறது தமிழ்நாடு சூட்டிங் ஸ்பாட்டாக தலைமை செயலகம்
அரசியலற்ற அக்கப்போர்களையே முதன்மையான நிகழ்ச்சிகளாக மாற்றுவதன் மூலம் தவெக அரசாங்கமும், அதை பின்னிருந்து இயக்கம் மோடி அரசும் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கே வாய்ப்பாக மாறிவிட்டுள்ளது. இதை எதிர்க்கட்சியினர் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறினால் ஆட்சியாளர்கள் உருவாக்கும் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று ஓடுவதாகவே அமைந்து விடும்.
செம்மறி ஆடுகளை வட்ட வடிவில் ஓடவிட்டுவிட்டால் அவை நிற்காமல் ஒன்றை பின் தொடர்ந்து ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும். அதுபோன்று ஒரு சுழலாக இத்தகைய அக்கப்போர்கள் மாறாமல் தடுக்க வேண்டியது மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைவரின் பொறுப்பாகவும் மாறி உள்ளது.
தஞ்சாவூருக்கு அலைக்கழிக்கப்பட்ட உதயநிதி!
விஜய் அரசாங்கமானது இதை பொறுப்பாக கையாளாமல், உதயநிதியை போலீஸ் வாகனத்தில் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்ததன் மூலம் ஒரு புதிய பிரச்சினையாக மடை மாற்றுவதில் வெற்றி பெற்றுவிட்டது. விஜய் அரசின் இந்த தவறான கைது அணுகுமுறையை பிற கட்சித் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.
ஒரு மேடைப் பேச்சுக்காக வழக்குப்பதிந்து உடனடியாக வந்து கைது செய்து அழைத்துச் சென்று விசாரிக்கும் அளவிற்கு செல்ல வேண்டியது ஏன்? இதன் பின் உள்ள நோக்கம் என்ன? இது விவாத களத்திற்கு வந்துள்ளது.
மேலும் படிக்க:சீமானின் ஆபாச பேச்சு! ஊடகங்களுக்கு பொறுப்பில்லையா?
5 ஆம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் உதயநிதியை ஒரு எதிர்க்கட்சித் தலைவராக அதில் வினையாற்ற விடாமல் தடுக்கும் கீழ்த்தரமான சதி என்பதாகவே திமுகவினர் இதை முன்வைக்கின்றனர்.
முதல்வர் விஜயின் கையாலாகத்தனத்தை அம்பலப்படுத்தியதாலும், கர்நாடக முதல்வரை கடுமையாக விமர்சித்திருப்பதாலும்தான் உதயநிதி இலக்காக்கப்பட்டுள்ளார் என்றும், மாறாக இரட்டை அர்த்த பேச்சு முதன்மையானது அல்ல என்றும், காவல்துறையின் பதிவுகளில் இருந்து எடுத்தும் உலக விவாதங்களில் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.
சுதாரித்துக் கொள்ளுங்கள்!
திமுகவினரே உங்கள் கணிப்பு சரியானதாக இருந்தால் உதயநிதியின் கைதை மட்டும் முதன்மை படுத்தாமல் பட்ஜெட்டில் என்ன வருகிறது என்பதையும், அதை அம்பலப்படுத்துவதிலும் தீவிர அக்கறையை காட்டுங்கள். வழக்குகள் திமுகவினருக்கு புதிதல்லவே. அதை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்பதாக அணுகுங்கள்.
உதயநிதியின் பேச்சை சிபிஐ, சிபிஎம், பாமக, விசிக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர். மாறாக உதயநிதி தவறாக பேசவே இல்லை என்பதாக நீங்கள் வாதத்தை வைத்தால், அவர் பேசியதையே ஊடகத்தில் ஒளிபரப்பினால், அது உங்களுக்கு எதிரானதாகத்தான் மாறும்.
இதை திமுகவின் அனுதாபிகள், இடதுசாரி செயல்பாட்டாளாகள் என கூறிக்கொண்டு செயல்படுபவர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு பொருத்தமான ஆலோசனையை வழங்குங்கள். பாஜகவையும், பாஜகவின் B – டீமையும், அவர்கள் திணிக்கும் இந்துத்துவாவையும் எதிர்கொள்ள தேவையான பக்குவத்தை கற்றுக் கொடுங்கள். உசுப்பேற்றி கவிழ்த்து விடாதீர்கள்.
இளமாறன்






