சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் கல்வித்துறை இணை அமைச்சர், நாடு முழுவதும் 100893 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகச்செயல்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் அரசு பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் தான். இதில் நாட்டிலேயே மிக அதிகமாக ஆந்திராவில் மட்டும் 16,357 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகச் செயல்படுகின்றன.
மகாராஷ்டிராவில் 9265, கர்நாடகாவில் 8042, தெலுங்கானாவில் 4793, தமிழ்நாட்டில் 3957 என பொருளாதார ரீதியில் வளர்ந்த மாநிலங்களிலும் பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் ஒரு ஆசிரியர் பள்ளிகளாக நீடிக்கின்றன.
ஜார்கண்ட் ,தெலுங்கானா, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களும் கிட்டத்தட்ட ஒரே அளவு மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள்; ஆயினும் ஜார்க்கண்டில் 9,827 ஓராசிரியர் பள்ளிகளும் தெலுங்கானாவில் 4793 பள்ளிகளும், கேரளாவில் வெறும் 67 பள்ளிகளும் ஒர் ஆசிரியர் பள்ளிகளாக இருக்கின்றன. ஓராசிரியர் பள்ளிகளின் விளைவு பல்வேறு வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்குத் தொடர்ச்சியான முறையான முழுமையான தரமான கல்வி கிடைக்காது என்பதே.
மேலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆகப்பெரும்பான்மையினர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடிச் சமூகத்து மாணவர்களே. எனவே ஓராசிரியர் பள்ளிகள் என்பவை அடித்தட்டு மக்களுக்கு கல்வி உரிமையை அரசே மறுக்கும் செயலின் வெளிப்பாடாகும்.

பொருளாதார ரீதியாக வளர்ந்த மாநிலங்கள் என்று சொல்லப்படும் மாநிலங்களில் மிக அதிகமான ஒராசிரியர் பள்ளிகள் நீடிப்பது பொருளாதார வளர்ச்சி என்பது அந்த மாநில மக்களின் கல்வி, நலவாழ்வுக்கு எதிர்த் திசையில்பயணிக்கிறது அல்லது அந்த வளர்ச்சி அடித்தட்டு மக்களின் நலனுக்கு எதிரானதாக இருக்கிறது என்றே பொருள்படும்.
எனவே ஒரு மாநிலத்தின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவது அந்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியல்ல மாறாக அம்மாநில அரசு மக்களின் கல்வி மீது கொண்டிருக்கும் அக்கறையும் அதற்கான கொள்கையுமே என்பதற்கு கேரளம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
மோடி அரசின் கொள்கை வகுக்கும் நிறுவனமான நிதி ஆயோக் அறிக்கையின்படி கடந்த 10 ஆண்டுகளில் 94 ஆயிரம் அரசுப் பள்ளிகளும் 4000 அரசு உதவி பெறும் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. 2 கோடியே 26 லட்சம் மாணவர்கள் இடைநிலைக் கல்வியிலேயே பள்ளியை விட்டு விலகி இருக்கின்றனர். அதாவது நாளொன்றுக்கு 25 பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன; 600 மாணவர்கள் பள்ளி படிப்பை விட்டு விலகி இருக்கின்றனர்.
ஓராசிரியர் பள்ளியானாலும் சரி பள்ளிகள் மூடப்படுவதானாலும் சரி அதிகரிக்கும் இடை நிற்றல் ஆயினும் சரி அனைத்துமே பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் கல்வி உரிமையை மறுக்கும் செயல் என்பதை எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.
படிக்க:
♦ அரசுப் பள்ளி ஆசிரியர்களே திருந்துங்கள்!
♦ அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்கும் திமுக அரசு!
கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் 50,000 சுயநிதி தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன என்ற உண்மை கல்வியில் தனியார் கொள்ளையின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள உதவும். மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சி, மக்களின் இடப்பெயர்வு, பிறப்பு விகிதம் குறைதல் போன்றவை பள்ளிகள் மூடலுக்குக் காரணமாகச் சொல்லப்பட்டாலும் அவற்றின் பங்கு மிக மிகக் குறைவே.
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டதற்கு பிறகு மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் பள்ளிகள் அருகாமையில் இருக்கும் பள்ளிகளோடு இணைக்கப்படுகின்றன. இதன் விளைவாக மூடப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அடுத்த ஊருக்குச் சென்று படிக்க இயலாமல் போவதன் விளைவாக இடைநீற்றல் அதிகரிக்கிறது. அவர்களின் கல்வி உரிமை பறிக்கப்படுகிறது.
முன்னேறிய பல முதலாளித்துவ நாடுகளிலும் கட்டாய அடிப்படை கல்வி வழங்குவதை அரசுகள் தம் அடிப்படையாக கடமையாகக் கொண்டு செயல்படுகின்றன. கல்விக்கு மிகக் கூடுதலான நிதியை ஒதுக்குகின்றன.
இந்தியா தான் கல்விக்கு மிக மிகக் குறைவான தொகையை ஒதுக்குகிறது. கல்வியைத் தனியார்மயமாக்கும் மோடியின் புதிய கல்விக் கொள்கை அரசுப் பள்ளிகளின் மூடலையும் மாணவர்களின் இடை நிற்றலையும் வேகப்படுத்துகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் லாப நோக்கில் பல்கலைக்கழகங்களை நடத்தலாம் என மோடி அரசு அண்மையில் அறிவித்திருக்கிறது. பல்வேறு மொழிகள் இனங்கள் பண்பாடு பொருளாதார வாழ்க்கை முறை நிலவுகின்ற நாட்டில் மையப்படுத்தப்பட்ட, நாடு முழுவதற்குமான ஒரே கல்விக் கொள்கை என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்ல, அறிவியலுக்குப் புறம்பானதும்கூட.
படிக்க:
♦ அரசுப் பள்ளி மாணவர்கள் முரடர்களா ?
♦ அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் ‘தத்தெடுக்கும் திட்டத்தை’ உடனே நிறுத்து! | புமாஇமு
கல்விக்காக நாடு முழுவதும் செலவிடப்படும் தொகையில் 80 விழுக்காடு மாநிலத்தின் பங்காகவும் 20 விழுக்காடு மட்டுமே ஒன்றியத்தின் பங்காகவும் நீடிக்கும் நிலையில் கல்விக் கொள்கை வகுக்கும் முழு அதிகாரத்தையும் ஒன்றிய அரசு எடுத்துக் கொள்வது மிக மிக அநீதியானது.
உலக அளவில் கற்பிக்கும் முறையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இன்னும் மனப்பாடக் கல்வியே இந்தியாவின் கல்விமுறையாக நீடிக்கிறது. இது மேலும் மேலும் தற்குறித்தனத்தை வளர்க்கிறதே தவிர அறிவியல் சிந்தனையை வளர்ப்பதில்லை.
14 வயது வரை அடிப்படை கட்டாய இலவச கல்வி என்பது அடிப்படை உரிமையாக ஆக்கப்பட்டாலும் நடைமுறையில் பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.
எனவே அனைவருக்கும் முழுமையான கல்வி கிடைக்க வேண்டும், சமூகம் மேம்பட வேண்டும் என்றால் கல்வி வழங்கும் முழு உரிமையும் மாநிலத்தின் அதிகாரத்திற்கு மாற்றப்பட வேண்டும். லாப நோக்கிலான கல்வி நிலையங்கள் தனியார் கல்வி நிலையங்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
கல்விக்கு இப்போது ஒதுக்கப்படும் தொகை பல மடங்கு உயர்த்தப்பட வேண்டும். ஜனநாயகப்படுத்தப்பட்ட சமமான அறிவியல் பூர்வமான கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இத்தகைய கோரிக்கைகளுக்கான மக்கள் இயக்கங்கள் விரைவாகக் கட்டியமைக்கப்படவேண்டும்.
தோழர் காளியப்பன்
முகநூல் பதிவு






