டந்த 4 ஆம் தேதி வெளியான நீட் தேர்வின் முடிவுகளில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  #RENEET ஹேஸ்டேக்கையும் டிரண்ட் செய்து வருகிறார்கள்.

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது, ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை பாழாக்கும் என்று நீட் தேர்வு வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட காலத்தில் இருந்து தமிழ்நாடு எதிர்த்து போராடி வருகிறது. மேலும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என்றும் இதில் கோச்சிங் சென்டர் நடத்தும் முதலாளிகளின் லாப நோக்கமும் அடங்கியுள்ளது என்று பல்வேறு தருணங்களில் அம்பலப்படுத்தி தமிழ்நாடு போராடி வருகிறது. நீட் தேர்வு- அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என தொடரப்பட்ட வழக்கு பல ஆண்டுகளாக  உச்சநீதிமன்றத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் 0 பெர்சண்டைல்  பெற்றவர்களுக்கு முதுநிலை மருத்துவ சீட் கிடைத்தது பற்றி நமது தளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த வருடம் நீட் தேர்வே முறைகேடாய் நடந்துள்ளது தெரியவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகி வருகிறது.

முன்கூட்டியே வெளியான ரிசல்ட்

கடந்த மே 5 ஆம் தேதி இந்தியா முழுவதும் 574 நகரங்களில் 4750 தேர்வு மையங்களில் 23.33 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அகில இந்திய தேர்வுகளை தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA – National Testing Agency) ஜூன் 14 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவித்திருந்தது.

திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஜூன் 4 ஆம் தேதியே தேர்வு முடிவுகளை வெளியிட்டது மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. அதற்கு தேசிய தேர்வு முகமை அளித்த விளக்கம்  ‘தேர்வு முடிவுகள் முன்னரே வெளியிட்டால் தான் கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்க்கு வசதியாய் இருக்கும்’ என்று கூறியது.

இந்த விளக்கம் நம்மை ஏமாற்றுவதற்கு என்பது பின்னர் நடந்த சம்பவங்கள் மூலம் உணர முடிகிறது. உலகமே உற்று நோக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்க வேண்டிய அவசரம் தேசிய தேர்வு முகமைக்கு ஏன் வந்தது?.

நீட் ரிசல்ட்டில் வெளிப்பட்ட உண்மை

ஜூன் 4 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான போது தான் பலருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் தேர்வு எழுதியதில்  13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த ஆண்டு  11,46,000 பேர் மட்டுமே தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். UPSC, JEE தேர்வுக்கு பிறகு நீட் தேர்வே கடினமான தேர்வாக பார்க்கப்படுகிறது. அதனாலேயே அரசு பள்ளி மாணவர்களாலும், ஏழை மாணவர்களாலும் இந்த தேர்வில் தகுதிப் பெற முடியாத நிலை உள்ளது. அப்படி இருக்கும் பொழுது 720க்கு 720 மதிப்பெண்ணை 67 பேர் பெற்றது எப்படி என கேள்வி எழுவது சகஜம் தானே? கடந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழ்நாட்டில் ஒரு மாணவர் உட்பட 2 மாணவர்கள் மட்டுமே 720க்கு 720 மதிப்பெண் எடுத்தனர்.

தேர்வில் முறைகேடு: சந்தேகம் வரக் காரணம்!

நீட் தேர்வில் மொத்தம் 180 வினாக்கள் கொடுக்கப்படும். ஓவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண்கள் கொடுக்கப்படும். ஒரு வினாவுக்கு பதிலளிக்கா விட்டால் 4 மதிப்பெண்கள் இழக்க நேரிடும். தவறாக பதிலளித்தால் 4+1 என்று 5 மதிப்பெண்கள் பறிக்கப்படும்.

இப்படியான ஒரு முறை இருக்கும் பொழுது 2 ஆம் இடம், 3 ஆம் இடம் பிடித்த மாணவர்கள் 718, 719 மதிப்பெண்கள் வாங்கியது எப்படி? இதுவே மாணவர்கள் மத்தியில் உள்ள கேள்வியாக உள்ளது. ஒரு கேள்விக்கு தவறாக பதிலளிக்கப்பட்டால் 5 மதிப்பெண்கள் இழக்க நேரிடும் போது 716 அல்லது 715 மதிப்பெண்கள் தானே எடுக்க முடியும். இதற்கு பதிலளித்த தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்கள் அளித்த காரணத்தினால் இவ்வாறு மதிப்பெண்கள் வந்திருக்கும் என்கிறது.

கருணை மதிப்பெண்கள்(Grace Mark)

கருணை மதிப்பெண்கள் குறித்து சரியான புரிதலை தேசிய தேர்வு முகமை இதுவரை கொடுக்கவில்லை. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின் படி தான் கொடுக்கிறோம் எனக் கூறும் NTA  என்ன அடிப்படையில் கொடுக்கிறோம் என்று விளக்க வேண்டியது அவர்களின் கடமை அல்லவா.

நேர பற்றாக்குறை காரணமாக 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை கூறுகிறது. நேரப்பற்றாக்குறை என்றால் எப்போது நேரப் பற்றாக்குறை ஏற்பட்டது? யார் யார் அப்ளை செய்தார்கள்? எவ்வளவு நேரத்திற்கு எவ்வளவு மதிப்பெண் வழங்கப்படும்? என்பது குறித்து எந்த விவரமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இதுபற்றி பெரும்பான்மை மாணவர்களுக்கு தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. பின்னர் எப்படி 1563 மாணவர்கள் மட்டும் அப்ளை செய்தார்கள் என்பது தேசிய தேர்வு முகமைக்கே வெளிச்சம்.

ஒரே கோச்சிங் சென்டரில் 7 பேர் முதலிடம்!

ஹரியானா மாநிலம் பரிதாபாத் என்ற இடத்தில் உள்ள தனியார் நீட் கோச்சிங் சென்டரில் படித்த 7 மாணவர்கள் 720/720 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றுள்ளனர். 7 பேரின் வரிசை எண்களும் தொடர்ச்சியாக உள்ளன. ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 8 மாணவர்களும் முதலிடம் பெறுவது எப்படி சாத்தியமாகும்.

இதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் வினாத்தாள் கசிந்ததாக செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு 11 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். ஆனால் தேசிய தேர்வு முகமையோ இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. தேர்வு தொடங்கி 2 மணி நேரத்திற்கு பிறகு தான் வினாத்தாள் கசிந்தது என்றும் அதுவும் எங்கள் தரப்பில் நடைப்பெறவில்லை என்றுஉயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில் முறைகேடுகள் தொடர்பாக கமிட்டி அமைத்து ஆராய்ந்து வருகிறோம். தவறான வினாத்தாள் காரணமாக 1600 பேருக்கு மறுத்தேர்வு நடத்தப்பட்டது என்றும் கூறுகிறார். நடந்த முறைகேடுகளை நடத்தியவர்களே விசாரித்தால் எப்படி உண்மை வெளியே வரும்.

முறைகேடுகளை திட்டமிட்டு மறைப்பதற்காகவே நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் அதே நாளில் நீட் தேர்வின் முடிவுகளையும் வெளியிட்டுள்ளார்கள். தேர்தல் பரபரப்பில் இதனை மறந்து விடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டுள்ளார்கள். ஆனால் குட்டு வெளிப்படுவிட்டது.

மாணவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி

நீட் தேர்வில் தகுதி பெறுவதே கடினமானது என்ற நிலையில் 620 மார்க் எடுத்தவர்களுக்கே சீட் கிடைப்பது கடினம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆட்பட்டுள்ளார்கள்.

19 வயதான சாடியா ஃபயாஸ் என்பவர் நீட் தேர்வில் 720க்கு 511 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது அவருக்கு முதல் நீட் தேர்வாகும். அவர் கூறுகையில் இந்த வருடம் நான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாட்டேன் என்று தெரியும், ஆனால் 600க்கும் மேல் மதிப்பெண் பெற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களை பார்த்து தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக் கூறுகிறார்.

நீட் தேர்வுக்கு 1 வருடம் முழுவதும் கடுமையாக உழைத்த மாணவர்கள் இந்த வருடம் கட் ஆஃப் மதிப்பெண் 650 ஆக உயர்ந்ததால் தேர்வெழுதிய பலர் வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் அடுத்த வருடம் தேர்வெழுதுவதற்கான மனநிலையும் மாணவர்கள் இழந்துள்ளார்கள். நீட் தேர்வு தகுதிப் பெற்றால்  மருத்துவப்படிப்பில் சேர்ந்து விடலாம் என்பது கனவாகிப் போய்விட்டது.

மாணவர்களின் போராட்டம்

நீட் தேர்வு முறைகேடுகளை  கண்டித்தும் மறுtதேர்வு நடத்தக் கோரியும் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் காங்கிரஸ் மாணவர் அமைப்பும் கலந்து கொண்டுள்ளது.

இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் இளநிலை மருத்துவர்கள் அமைப்பினர் இந்த  விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரி வலியுறுத்தியுள்ளனர். மேலும் கருணை அடிப்படையிலான மதிப்பெண்கள் என்ற புது விதிமுறையை தேசிய தேர்வு முகமை இந்த முறை நீட் தேர்வில் கையாண்டிருப்பது ஏன்? என்ற கேள்வியும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக பாஜகவின் கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டேயின் மகாராஷ்டிரா அரசு நீட் தேர்வு முடிவினை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தியுள்ளது.

மாணவர்கள் இந்தாண்டு நீட் தேர்வில் கருணை மதிப்பெண்ணை நீக்கி விட்டால் சீட் கிடைத்துவிடும் என்ற மாயையில் சிக்கியுள்ளார்கள். கோச்சிங் சென்டர் முதலாளிகள் கொள்ளை லாபம் பார்க்கவும், உழைக்கும் வர்க்கத்தின் அடுத்த தலைமுறை மேலெழும்பி வராமல் தடுப்பதற்கும்  காவி பாசிச கும்பலால் உருவாக்கப்பட்டதே நீட் தேர்வு என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை முற்றாக ஒழித்தால் தான் அடித்தட்டு மக்களின் மருத்துவ கனவை நனவாக்க முடியும் என்பதை போராட்ட களத்தில் உணர்த்துவோம்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here