2023 நீட் தேர்வு குறித்து தி இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டிருக்கும் தகவல்கள் நீட் தேர்வின் சதியை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வில் முதல் 50 இடங்களை பிடித்தவர்களில் 37 பேர் நீட் கோச்சிங் சென்டர்களில் படித்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இதில் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களாக உள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. மேலும் அந்த 38 மாணவர்களில் 29 பேர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்றும், 5 பேர் ஆந்திர மாநில பாடத்திட்டத்திலும், 3 பேர் மராட்டிய மாநில பாடத்திட்டத்திலும், 2 பேர் மேற்குவங்க பாடத்திட்டத்திலும் படித்தவர்கள் என்றும் தி இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் விவரங்கள் சேகரிக்கப்பட்ட 38 பேரில் 29 பேர் பொதுப்பிரிவை சேர்ந்த உயர்சாதி மாணவர்கள், 7 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களாகவும், 2 பேர் மட்டுமே பட்டியலினத்தை சார்ந்தவர்களாகவும் உள்ளார்கள் என அறிக்கை கூறுகிறது.  ‘சாதனை’ படைத்த 38 பேரில் 37 பேர் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் என்றும் ஒரு மாணவர் மட்டுமே சிறப்பு பயிற்சி பெறாதவர் என்றும் ஆனால் அந்த  மாணவர் டெல்லியில் புகழ்பெற்ற பொதுப்பள்ளியில் படித்தவர் என்றும் அறிக்கை கூறுகிறது.

தி இண்டியன் எக்ஸ்பிரஸ் இணையதள செய்தி

சாதித்த அனைவருமே டெல்லி, புனே கொல்கத்தா,நாக்பூர், விஜயவாடா, விசாகப்பட்டிணம், சென்னை போன்ற பெருநகரங்களை சேர்ந்தவர்கள். அனைவருமே பொருளாதார அடிப்படையில் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

தி இண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் இந்த அறிக்கையானது நீட் தேர்வு குறித்த உண்மை வெளிக் கொண்டுவந்துள்ளது.

பணம் கொழிக்கும் கோச்சிங் சென்டர்

நீட் கோச்சிங் சென்டரில் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. தி இண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் அறிக்கையை பார்க்கும் போது நாம் ஒன்றை புரிந்துக் கொள்ளலாம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு கோச்சிங் செண்டர் தேவைப்படும் நிலை தான் உள்ளது.

இந்தியாவில் இருக்கும் கோச்சிங் செண்டர்கள் 1 லட்சம் கோடி அளவுக்கு பணம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது. நீட்டின் நோக்கமும் கல்வியை வியாபாரமாக்கி பணம் படைத்தவர்கள் மட்டும் மருத்துவம் படிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 720க்கு 720 மதிப்பெண் எடுத்து இந்தியாவிலேயே முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்ற பிரபஞ்சன் தான் கோச்சிங் செண்டரில் படித்ததை பெருமையாக கூறுகிறான். அந்த கோச்சிங் செண்டரும் அடுத்த வருடம் முதல் இதனை காரணமாக வைத்து விளம்பரம் செய்து கோச்சிங் செண்டருக்கு வரும் மாணவர்களிடம் பணத்தை கறக்கும். நீட் தேர்வு ஆரம்பிக்கும் போது இருந்த பயிற்சி மையங்களை விட இன்று பல மடங்கு பயிற்சி மையங்கள் பெருகி விட்டன. லாபம் கொழிக்கும் தொழிலாக வளர்ந்து வருகிறது. மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் கட்டாயம் கோச்சிங் செண்டர் போக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சமூக நீதிக்கு குழித் தோண்டும் பாசிச அரசு!

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மேற்கொண்ட ஆய்வில் 38 மாணவர்களில் வெறும் 7 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது சமூக நீதிக்கு எதிரானது. இடஒதுக்கீடு தேவையில்லை திறமையின் அடிப்படையில் வேலையும், படிப்பும் வழங்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை தூண்டிவிடும் சங்பரிவார் கும்பல் இதற்கு பதிலளிக்கவா போகிறது. ஆனால் இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராடும் இளைஞர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். நீட் தேர்வில் சாதனை படைத்த 38 பேரில் 29 பேர் பொதுப்பிரிவான உயர்சாதியை சேர்ந்தவர்கள். இது சமூகநீதிக்கு எதிரானது அல்லவா!

720 மதிப்பெண்ணுக்கு 100 மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் மருத்துவம் படிக்க முடிகிறது, காரணம் பணம். இதில் எங்கே உயர்ந்த கல்வித்தரம் இருக்கப் போகிறது. நீட் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசு சொன்ன தரமான கல்வி என்பது 100 மதிப்பெண்ணிலா இருக்கிறது? நீட் தேர்வு கல்வியின் தரத்தை உயர்த்தும் என்பதெல்லாம் பம்மாத்து.

இதையும் படியுங்கள்: ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை கொடும் கனவாக்கும் நீட் தேர்வு!

கல்வி வியாபார சரக்காக மாறியுள்ள நிலையில் நீட் கோச்சிங் சென்டர்கள் வரும் காலத்தில் பெரிய அளவில் வளர்ச்சி அடையக்கூடும். எக்காரணத்தை கொண்டும் ஒன்றிய அரசும் இதனை தடுக்கப் போவதில்லை. பல லட்சங்கள் கொட்டி படிப்பதற்கு கிராமப்புற மாணவர்களும் பொருளாதார வசதி படைத்தவர்கள் இல்லை. இதனை தெரிந்துக் கொண்டு தான் திட்டமிட்டே நீட் தேர்வை கொண்டு வந்துள்ளார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்வு என்று நீட்டை மக்களிடம் திணிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. நீட் தேர்வு கொண்டு வந்த நாள்முதல் பலமான எதிர்ப்பை தமிழகம் தெரிவித்து வருகிறது. பாசிச பாஜகவை தவிர, ஆளும் கட்சிகள் மட்டுமல்லாமல் எதிர்கட்சிகளும் எதிர்க்கிறார்கள்.  ஆனால் ஒன்றிய அரசு தனது எதேச்சதிகார போக்கினால் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கிறது. ஏழைகளும், கிராமப்புறங்களில் படித்து வரும் மாணவர்களுக்கும் மருத்துவம் எட்டாக்கனி தான் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை!

நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப்போராட்டங்களோ, அல்லது தீர்மானமோ மட்டும் போதாது. மாறாக மாணவர்களின் ஒன்றிணைந்த போராட்டமே இதனை மாற்றும் சக்தி படைத்தது.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here