பாஜக ஆட்சியில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் நடந்துள்ள அடுக்கடுக்கான முறைகேடுகள் வெளியில் வந்து நாடு முழுக்க நாறிக் கொண்டிருக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்த செய்தி.
ஆனால் முறைகேட்டில் ஈடுபட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கே மீண்டும் மீண்டும் தேர்வை நடத்த ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதும், இந்த முறைகேடு செய்த நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளுடன் மோடி உள்ளிட்ட பாஜக-வினரும் பிற காவி அமைப்பின் நிர்வாகிகளும் நெருக்கமாக இருக்கும் விசயமும் தற்போது வெளியில் வந்து நாறிக் கொண்டிருப்பது பலரும் அறிந்திராத செய்தி.
நீட் நுழைவுத் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகளுக்கு எதிராக இப்பொழுது நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நீட் தேர்வில் ஒவ்வொரு முறையும் முறைகேடு நடப்பது வழக்கமானதாகிவிட்டது. நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்த வண்ணம் உள்ளதால் இந்த முறைகேடுகளை தடுப்பதற்காக தனிச்சட்டம் இயற்றுவோம் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதாக வாக்குறுதி கொடுத்த பாஜகவின் யோக்கிதை என்ன? இந்த முறைகேடுகளுக்கும் பாஜக விற்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
இத்தகைய போட்டித் தேர்வுகளில் பெரும் முறைகேடுகளில் ஈடுபட்ட நிறுவனம் எடுடெஸ்ட் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் (Edutest Solutions Private Limited). இது குஜராத் மாநிலத்தை சேர்ந்தது.
இந்த நிறுவனம் பிப்ரவரி 2024ல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவலர் பணியிடத்திற்கான தேர்வை (UP police constable recruitment exam) நடத்தியது. இந்த தேர்வு வினாத்தாள் கசிய விடப்பட்டு மிகப்பெரும் மோசடி நடந்துள்ளது அம்பலத்திற்கு வந்து நாடே நாறியதால் இந்த நிறுவனம் நடத்திய இந்த தேர்வையே உத்தர பிரதேச அரசு ரத்து செய்து விட்டது. மேலும் உத்தரப் பிரதேச அரசு இந்த நிறுவனத்தை தடுப்பு பட்டியலில் (Blocklist) வைத்துவிட்டது.
தேர்வு மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தை பாஜக அரசு தடுப்பு பட்டியலில் வைத்து நியாயமாக நடந்து கொண்டிருக்கும் பொழுது பிஜேபி -யினருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக எப்படி கூற முடியும்? என்று வாசகர்கள் கேட்கலாம்.
எடுடெஸ்ட் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற இந்த நிறுவனம் போட்டித் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. இந்நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடத்திய எண்ணற்ற தேர்வுகளில் இது போன்ற முறைகேடுகள் பலமுறை நடந்துள்ளன.
எனவே பல மாநில அரசுகள் ஏற்கனவே இந்த நிறுவனத்தை தடுப்பு பட்டியலில் வைத்துள்ளன. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக (Managing Director) வினித் ஆர்யா உள்ளார்.
இந்த நிறுவனத்தால் பிப்ரவரி 2017 ஆம் ஆண்டு பீகாரில் நடத்தப்பட்ட (Bihar Staff Selection Commission exam) தேர்வில் வினாத்தாள் கசிந்துள்ளது. இதற்காக வினித் ஆர்யா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பிணையில் வெளிவந்த இவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பிக்கும் நோக்கில் “நான் மனநலம் சரியில்லாதவன்” என்றும் “எனக்கு தற்கொலை எண்ணங்கள் தோன்றுகின்றன” என்றும் கூறி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் போக்கு காட்டி வருகிறார் என்பது தனிக்கதை. இந்த வினீத் ஆர்யா இயக்குனராக இருந்த Confisec Private Limited என்ற நிறுவனத்தில் தான் இந்த வினாத்தாள் அச்சு அடிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு போன்ற பல்வேறு முறைகேடுகளில் சிக்கிக்கொண்ட Confisec Private Limited என்ற இந்த நிறுவனத்தின் பெயரை ஆகஸ்ட் 2018 ல் எடுடெஸ்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Edutest Solutions Private Limited) என்று மாற்றி விட்டனர்.
பிறகு என்ன? மறுபடியும் அரசுகளிடம் போட்டித் தேர்வுகள் நடத்துவதற்கான ஒப்பந்தங்களை பலமுறை பெற்று பிராடுத்தனம் செய்து கொண்டே இருந்தது இந்த எடுடெஸ்ட் நிறுவனம்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தில் எடுடெஸ்ட் நிறுவனத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்த மாணவர்களில் 5,657 பேர் குறைந்தபட்ச மதிப்பெண்கள் கூட பெறாதவர்கள் என்ற உண்மை வெளிவந்து பலரையும் அதிர்ச்சிக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாக்கி இருந்தது.
இவ்வளவு இருந்தும் கூட மீண்டும் மீண்டும் போட்டித் தேர்வுகளை நடத்துவதற்கான ஒப்பந்தம் இந்த நிறுவனத்திற்கு கொடுக்கப்படுவதற்கு காரணம் என்ன?
இந்த எடுடெஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் – இயக்குனரான (Founder-Director) சுரேஷ் சந்திர ஆர்யா “சர்வதேசிக் ஆரிய பிரதிநிதி சபா” (Sarvadeshik Arya Pratinidhi Sabha) என்கிற ஒரு முக்கியமான இந்து அமைப்பிற்கு தலைவராகவும் உள்ளார்.
இந்த அமைப்பு ஆரிய சமாஜத்தின் ஒரு பிரிவாக உள்ளது. இந்த சுரேஷ் சந்திர ஆர்யாவின் மகன் தான் வினீத் ஆர்யா.
இந்த சர்வதேசிக் ஆரிய பிரதிநிதி சபா” (Sarvadeshik Arya Pratinidhi Sabha) நடத்தும் விழா மேடையில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் ஆரிய சமாஜ் நடத்திய ஒரு விழாவில் சுரேஷ் சந்திர ஆர்யாவுடன் மோடி உள்ளிட்ட பல பாஜகவினர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் குஜராத்தில் கவர்னர் ஆச்சார்யா தேவராட் மற்றும் மத்திய அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி சுரேஷ் சந்திர ஆர்யாவின் பெயரை குறிப்பிட்டு பேசியுள்ளார். இதுபற்றிய காணொலிகள் பிரதமரின் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
படிக்க:
♦ NEET-க்கு தூக்கு தண்டனை தரத்துடிக்கும் மாணவர்கள். கருணை காட்டும் உச்ச நீதிமன்றம்.
♦ கல்வி உரிமை மறுக்கப்பட்ட நாட்டில் நீட் எதற்கு? அடியோடு தூக்கி எறி!
பிராடு கம்பெனியான எடுடெஸ்ட் நிறுவனத்தின் இணையதள ப்ரொபைலில் சுரேஷ் சந்திர ஆர்யா இந்த நிறுவனத்தின் முதுகெலும்பாக உள்ளவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மாவட்டத்திலுள்ள சனந்த் (Sanand) நகரில் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (Corporate Social Responsibility (CSR) programme) திட்டத்தை சுரேஷ் சந்திர ஆர்யா தொடங்கி வைத்த ஒரு நிகழ்ச்சியில் இவரின் மகன் வினீத் ஆர்யாவும் குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் பட்டேலின் மகள் அனார் பட்டேல் (Anar Patel) போன்றவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
2018 ஆம் ஆண்டில் சர்வதேசிக் ஆரிய பிரதிநிதி சபாபாவால் ஏற்பாடு செய்யப்பட்ட ( International Arya Maha Sammelan என்ற) நான்கு நாள் நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி அந்நாளைய ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றியவர் பிராடு கம்பெனியான எடுடெஸ்ட் நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ் சந்திர ஆர்யா.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உத்தரப்பிரதேச காவலர் பணி இடத்திற்கான தேர்வை நடத்தும் பொறுப்பை எடுடெஸ்ட் நிறுவனத்திடம் யோகி அரசு வழங்கியிருந்தது. அந்த தேர்விலும் வினாத்தாளை கசிய விட்டு இந்த நிறுவனம் பிராடுத்தனம் செய்து விட்டது என்ற செய்தி வெளிவந்து நாடு முழுக்க நாறிப்போனது. எனவே வேறு வழியின்றி இந்த ஜூன் மாத்தில் எடுடெஸ்ட் நிறுவனத்தை தடுப்பு பட்டியலில் (blacklist) சேர்த்து விட்டது உத்தரப்பிரதேச அரசு.
அது மட்டுமா? இந்த முறைகேட்டை விசாரிப்பதற்காக சிறப்பு படையையும் (Special Task Force) உத்தரப்பிரதேச அரசு அமைத்தது. விசாரணையில் கலந்து கொள்ளுமாறு வினித் ஆர்யாவுக்கு பலமுறை இந்த சிறப்பு படை அழைப்பு விடுத்தும் அவர் கலந்து கொள்ளவில்லை. அது மட்டுமா? இந்த சிறப்பு படை அமைக்கப்பட்ட பிறகு வினித் ஆர்யா வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. ஆகா எவ்வளவு விழிப்போடும் சிறப்போடும் செயல்பட்டு இருக்கிறது காவிகள் அமைத்த இந்த சிறப்பு படை?
தேர்வு நடத்துவதில் முறைகேடுகள் செய்ததற்காக பலமுறை பிடிபட்டுள்ள போதிலும் அந்த நிறுவனத்திற்கே மீண்டும் மீண்டும் தேர்வு நடத்துவதற்கான ஒப்பந்தங்கள் பல அரசுகளால் வழங்கப்பட்டுள்ளன. பிராடு கம்பெனியின் இயக்குனர்களான சுரேஷ் சந்திர ஆர்யா மற்றும் (அவரது மகனான) வினித் ஆர்யாவுடன் பல விழாக்களில் கூடி குலவகின்றனர் பிரதமர் உள்ளிட்ட காவி ஃபாசிஸ்டுகள்.
இவ்வளவுக்குப் பிறகும் போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை பாசிச பாஜக அரசு தடுத்து நிறுத்தி விடும் என்பதை நம்புபவர்களை அறிவிலிகள் என்பதா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதா?
— குமரன்
செய்தி ஆதாரம்: Thewire