கர்நாடகாவில் சமீபத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.கே.சிவக்குமார், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் டெல்லி சென்ற அவர், பிரதமர் மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்த மேகேதாட்டு அணை திட்டத்திற்கான அனுமதியை விரைந்து அளிக்குமாறு வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை பறிக்கத் துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. கர்நாடகமானது காவிரி நீரை மற்ற மாநிலங்களுடன் பங்கிட்டுக்கொள்வதில் நேர்மையுடன் நடப்பதில்லை. தமிழ்நாடு தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படுவதுதான் வரலாறாக உள்ளது.
காவிரிப் பிரச்சினை என்ன?
கர்நாடகாவில், மேற்குத்தொடர்ச்சி மலையின் குடகின் தலைக்காவிரியில் பிறப்பெடுக்கும் காவிரியானது சுமார் 805 கி.மீ. பயணித்து தமிழ்நாட்டின் பூம்புகாரை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கர்நடகாவில் கிருஷ்னராஜ சாகர், கபினி, ஹாரங்கி போன்ற அணைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் காவிரியின் குறுக்கே மேட்டூர், கல்லணையும், துணைநதிகளில் பவானி சாகர், அமராவதி அணை உள்ளிட்டவையும் விவசாயத்துக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. ஒப்பீட்டளவில் காவிரியில் நான்கு முக்கிய அணைகளை கட்டியுள்ள கர்நடகா தொடர்ந்து தனது பாசனப்பரப்பை விரிவாக்கியுள்தோடு, மேகேதாட்டுவிலும் புதிதாக அணை கட்டுவேன் என தொடர்ந்து அடாவடிதனமாக முயற்சித்தும் வருகிறது.
மேகேதாட்டுவில் அணை கட்ட வேண்டும் என்ற திட்டம் முதன்முதலாக 1948இல் முன்வைக்கப்பட்டது. தேசிய நீர் மின் கழகம், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் 400 மெகாவாட், சிவசமுத்திரத்தில் 345 மெகாவாட், தமிழக எல்லைக்குள் ராசிமணலில் 360 மெகாவாட், ஒகேனக்கலில் 120 மெகாவாட்டிற்கும் நீர்மின் நிலையங்களை உருவாக்கலாம் எனவும் முன்வைத்தது. எனினும் இவையெல்லாம் அன்றைய அரசியல் நிலைமைகளால் – கன்னட இனவெறியர்கள் தூண்டிய மோதல் கலவரங்களால் நடைமுறைக்கு வரவில்லை.
தற்போது கர்நாடக ஆட்சியாளர்கள் மேகேதாட்டுவில் 9,000 கோடி ரூபாய் செலவில் அணை கட்டடி 67.16 டிஎம்சி நீர் தேக்கப்படும் என்றும், இந்த அணையில் 400 மெகாவாட் நீர் மின் நிலையமும் அமைக்கப்படும் என்று மீண்டும் அறிவித்துள்ளனர்.
பெங்களூருவுக்கு குடிநீர் தரத்தான் மேகதாதுவாம்!
மேகேதாட்டு திட்டத்தின் மூலம் பெங்களூருவுக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப் போவதாக கர்நாடக அரசு கூறுகிறது.
1961 ஆம் ஆண்டு வரை பெங்களூருவில் 262 ஏரிகள் இருந்தன. இது ஏரிகளின் நகரம் என்றும் கொண்டாடப்பட்டது. அத்தகைய நகரில் வீட்டுமனைத் திட்டங்களை உருவாக்குவதற்காக, பல ஏரிகள் ரியல் எஸ்டேட் தொழிலால் அழிக்கப்பட்டு தற்போது வெறும் 33 ஏரிகள் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கின்றன என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
கார்ப்பரேட்டுகள் லாபவெறிபிடித்து பெங்களூரின் குடிநீர் ஆதாரங்களை அழித்துவிட்டு இன்று காவிரியில் கை வைக்கிறார்கள். நாளை அணை கட்டப்பாட்டலும் தண்ணீர் விற்பனையின் மூலம் இவர்கள்தான் கோடிகளை குவித்து ஆதாயமடைவார்கள். கார்ப்பரேட் ஆதரவாளராக அரசியல் ஆதாயத்துடன் காவிரி நீரில் கைவைத்து டி.கே.சிவக்குமார் போராட்ட நெருப்பை பற்றவைக்கிறார்.
படிக்க:
♦ இந்தியாவில் அமைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்கள் – தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?
♦ காவிரிக்கு தண்ணீரை தமிழகமா தருகிறது?
காவிரி நீர் பங்கீட்டில் நேர்மையாக நடந்த வரலாறே கர்நாடக ஆரசுக்கு இல்லை. ஆட்சிகள் மாறினாலும் அணுகுமுறை மாறியதில்லை. தமிழகத்திற்கு வரும் ஆறுகளை தமது மாநிலத்தின் கழிவுநீரை வெளியேற்றும் சாக்கடையாகவும், வெள்ளத்தின்போது உபரி நீரை வெளியேற்றும் வடிகாலாகவும்தான் கர்நாடகா பயன்படுத்துகிறது. ஆனால் ஆட்சியாளர்களோ மேகேதாட்டுவால் தமிழகத்துக்கும் நன்மை வரும் என கதை விடுகின்றனர்.
இந்த மேகேதாட்டு அணையைக் கட்டினால், நடுவர் மன்றம் அளித்த ஆணையில் உள்ளதுபோல ஒவ்வொரு மாதமும் அணையைத் திறந்து நீரைச் சரியாக வழங்க முடியும் என கூறும் கர்நாடகா, இந்தத் திட்டத்திற்கு “சமநிலை நீர்த்தேக்கம்” Mekedatu Balancing Reservoir cum Drinking Water Project என்றும் பெயர் சூட்டியுள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்கவேண்டும் என 2022ம் ஆண்டு மே 30ஆம் தேதியன்று கர்நாடக மாநிலத்தின் இரு அவைகளும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றின. இதற்கு கர்நாடக மாநில அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில்தான் காங்கிரசின் சித்தராமையா தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு, டி.கே.சிவகுமார் இந்தத் திட்டத்தில் வேகம் காட்ட ஆரம்பித்தார். தற்போது டி.கே. சிவக்குமாரே முதலமைச்சரான பின்னர் மேகேதாட்டு அணை விவகாரம் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.
காவிரி நீர் பங்கீடு!
காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக 1990இல் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், 1991இல் தமிழ்நாட்டுக்கு காவிரி மூலம் 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டுமென்று இடைக்கால உத்தரவிட்டது.
நீதிபதி என்.பி. சிங் தலைமையிலான நடுவர் மன்றம் 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி இறுதி உத்தரவு வந்தது. மொத்த நீரில் தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி. வழங்கப்பட்டது. ஆனால், அந்த 419 டிஎம்சியில், கர்நாடக மாநிலம் வழங்க வேண்டியது 192 டிஎம்சி நீர் மட்டும்தான். மீதமுள்ள 227 டிஎம்சி நீரானது தமிழகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கிடைக்குமென நடுவர் மன்றம் கூறியது. தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நீரில் 7 டிஎம்சியை புதுவைக்குத் தர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
படிக்க:
♦ மேகதாது அணை தீர்ப்பு எதிர்த்து போராடுவோம்!
♦ காவிரி நீரைத் தருவதில் கர்நாடகா தொடர்ந்து அடாவடி! தன்னுரிமை கேள்!
இந்த இறுதி ஆணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நீர், 192 டி.எம்.சியில் இருந்து 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. இதற்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைமையகம் டெல்லிக்கு மாற்றப்பட்டது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே நீர்மின் திட்டங்கள் கட்டப்பட்டாலும் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நீரின் அளவு மாறக்கூடாது எனக் கூறப்பட்டது. இதைச் சுட்டிக்காட்டும் கர்நாடக அரசு, தமிழ்நாட்டிலிருந்து பெருமளவு காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதாகவும் மேகேதாட்டுவில் அணையைக் கட்டுவதன் மூலம் நீர் வீணாகாமல் தடுக்கப்படும் என்றும் கூறுகிறது. மேகேதாட்டு அணை திட்டத்தால் தமிழகத்துக்கு அதிக நன்மை ஏற்படும் என்று கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
“மேகேதாட்டு அணை திட்டத்தால் பெங்களூருவின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தியாகும். அதிலிருந்து 400 மெகாவாட் மின்சாரம் தயாரித்து பெங்களூருவுக்கு பயன்படுத்துவோம். விவசாய தேவைக்கு கர்நாடக அரசு அந்த நீரை பயன்படுத்தாது. அதேவேளையில் அந்த திட்டத்தின் வாயிலாக கர்நாடகாவை விட தமிழகத்துக்கே அதிக நன்மை ஏற்படும். தற்போது உபரி நீரை தேக்கி வைக்க முடியாமல் கடலில் வீணாகக்கலக்க விடுகிறோம் ” என்கிறார்.
ஆடு நனைகிறதாம் – ஓநாயின் கவலை!
வறட்சி காலங்களில் நீர் இல்லாமல் இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. வறட்சி காலங்களில் நீரை அங்கு தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு எளிதாக நீரை திறந்துவிட முடியும்.” என்று கூறியுள்ளார். இதன்மூலம் தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் நடிக்கிறார். பயிர்கள் கருகுவதாக தமிழகம் கதறியும்கூட கர்நாடகா அணையின் நீரை ஒப்பந்தப்படி, நடுவர் மன்ற தீர்ப்பின்படி திறந்ததில்லை என்பதை ராமலிங்க ரெட்டி மறைக்கிறார். முதல்வர் சிவக்குமாரோ இன்னும் ஒருபடி மேலே போய், பெங்களூருவின் குடிநீர் தேவைகளைத் தவிர, “ஒரு வாளி தண்ணீர் கூட நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தப்படாது” என்கிறார். இந்த திட்டம் காவிரி நீரின் தமிழ்நாட்டின் பங்கை பாதிக்காது என்றும், “உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, 177 டி. எம். சி தண்ணீரை தர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தமிழக விவசாயிகளை நாம் பாதுகாக்க வேண்டும்” என்றும் கர்நாடக முதல்வர் ஆடுகளுக்காக அழுகிறார். அதே நேரம் ஓநாய் அவதாரமும் எடுக்கிறார்.
“தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அல்லது எந்தக் கட்சி அங்கு இருந்தாலும் சரி, அவர்கள் இந்த விவகாரத்தை வைத்துத் தங்களின் அரசியலைத் தொடர்ந்து செய்யவே செய்வார்கள்” தமிழக அரசியல் கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாக காவிரி பிரச்சினையை சுற்றி வருகிறது என்றார். இதன்மூலம் தமிழக கட்சிகளின் மீது அவதூறை பரப்பி, கன்னட ரக்ஷின வேதிகேயின் நாராயண கவுடா, கன்னட சளுவளியின் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட இன வெறியர்களை பாதுகாக்கிறார். ஒநாயில் வாயில் உரைந்துள்ளது ஆடுகளின் ரத்தம்.
படிக்க:
♦ மேகதாதுஅணை பிரச்சினை: (பகுதி -1)
♦ மேகதாதுஅணை பிரச்சினை: (பகுதி -2)
ஒரு டிஎம்சி அடி நீரால் 6,000 ஏக்கருக்குப் பாசனம் செய்ய முடியும் என்பதே பொதுவான விதி என்று சுட்டிக்காட்டுகிறார் காவிரி நூலாசிரியர் நடராஜன். “தமிழ்நாட்டின் மொத்த ஆயக்கட்டமான 28.2 லட்சம் ஏக்கருக்கு, 470 டிஎம்சி அடி நீர் தேவைப்படுகிறது. ஆனால், நம்மிடம் 400 டிஎம்சி அடி நீர் கூட இருக்காது என்கிறார். எனவே தமிழகத்துக்கு நீரை தேக்கவேண்டிய அவசியம் அதிகம். கர்நாடகத்திற்கு கூடுதலாக குடிநீர் மட்டும்தான் தேவை என்றால் இரு மாநிலமும் பயன்பெரும் வகையில் மாற்று திட்டத்திற்கு வாய்ப்புள்ளது. தமிழக எல்லைக்குள் ராசிமணலில் தமிழகமோ அல்லது இரு மாநிலமும் கூட்டாக இணைந்தோ அணையை கட்டினால், அதன்மூலம் கர்நாடக பகுதியிலும் நீர் தேங்கும். அதிலிருந்து குழாய் போட்டு தேவையான குடிநீரை எடுத்துக்கொள்ள கர்நாடகமும், காங்கிரசின் சிவக்குமாரும் முன்வர வேண்டும். ஆனால் இது நடக்காது.
ஏனென்றால், தொட்டலஹள்ளி கெம்பேகவுடா சிவகுமார் நேர்மையான அரசியல்வாதி கிடையாது. எந்த எல்லைக்கும் போகக்கூடியவர். 2018 தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தபோது, ₹ 840 கோடி சொத்திருப்பதாக கணக்கு காட்டியவர். காவி பாசிஸ்ட்டுகளையே கர்நாடக தேர்தலில் தோற்கடித்தவர். போட்டி கட்சிகள் சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதைத் தடுப்பதற்காக, அவர்களைத் தனிமையான ஆடம்பர விடுதிகளில் பாதுகாத்து வைக்கும் நெருக்கடி மேலாண்மை மற்றும் “விடுதி அரசியலை” முன்னெடுப்பவர். இவர் ரிசாட்டை நடத்தும் கார்ப்பரேட் முதலாளியும் கூட. பணமோசடியில் ஈடுபட்டு திகார் ஜெயிலையும் பார்த்துள்ளார்.
தடிக்கு வலிக்காமல் பாம்பை அடிக்கும் த.வெ.க அரசு!
தமிழக முதல்வர் விஜய் கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை திட்ட அறிக்கையை நிராகரிக்குமாறு மத்திய அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையத்தில் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதாவது கர்நாடகத்தில் கன்னட இனவெறியை தூண்டி அரசியல் செய்துவரும், கர்நாடக காங்கிரஸ் அரசின் திட்டங்களில் அரசியல் ஆதாயம் தேடும், தமிழ்நாட்டின்மீது தீராப்பகையுடன் சுற்றும் காவி பாசிஸ்ட்டை மயிலிறகால் வருடுகிறார். உச்ச நீதிமன்றம் 16.02.2018 தேதியிட்ட தனது தீர்ப்பில், நீர்ப்பிடிப்புப் பகுதியின் மேல்பகுதியில் அமைந்துள்ள மாநிலமானது, கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மாநிலத்திற்குத் திட்டமிடப்பட்ட நீர் விநியோகத்தைப் பாதிக்கும் வகையிலான எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று அறுதியிட்டுத் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகமும் (MoJS) மற்றும் மத்திய நீர்வள ஆணையமும் (CWC) தமிழ்நாடு அரசின் கோரிக்கையைப் பரிசீலிக்காமலேயே, கர்நாடகாவின் மேகேதாட்டு திட்ட முன்மொழிவை ஏற்றுப் பரிசீலித்து வருவது முதல்வர் விஜய்க்கு வியப்பளிக்கிறதாம். இச்சூழலில், மேகேதாட்டு திட்ட முன்மொழிவின் விரிவான திட்ட அறிக்கையானது (DPR), காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதி ஆணைக்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் முரணாக அமைந்திருப்பதால், அத்திட்ட அறிக்கையை நிராகரிக்குமாறு ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையம் (CWC) ஆகியவற்றில் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்கிறார்.
தமிழக சட்டமன்றத்தில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளும், விவசாய சங்கங்களும் கர்நாடக அரசை கண்டித்து போராட்டங்களை அறிவித்து நடத்துகின்றனர்.
பாஜக-வை உண்மையில் எதிர்க்க பி-டீமான த.வெ.க. முன்வராது. அதேபோல் கூட்டணியில் தமிழக காங்கிரசின் இருப்பதன் மூலம் இனமோதலை தூண்டப்பார்க்கும் டிகே சிவகுமாரையோ, இடத்திற்கு ஒன்றாக சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை எடுக்கும் ராகுலையோ முதல்வர் விஜய் கண்டிக்க மாட்டார். எனவே த.வெ.க.வை மாற்றத்துக்கானதாக நம்பியிருப்பவர்களை – ஜென்சிக்களை விழிப்படைய வைப்போம்.
தமிழன், கன்னடன் என்று உழைக்கும் மக்கள் தமக்குள் அடித்துக்கொள்ள வேண்டும் என பாசிஸ்ட்டுகள் காய்களை நகர்த்துகின்றனர். காங்கிரசின் சிவக்குமாரும் இதில் உடன்படுகிறார். “அகண்ட பாரதத்தை, இந்துராஷ்ட்டிரத்தை ஏற்காதவர்கள் நாட்டை விட்டு பாகிஸ்தானுக்கோ, வங்கத்திற்கோ ஓடுங்கள்” என்று கூவும் மோடி அமித்ஷா கும்பலுக்கு உரைக்கும்படி தமிழகம் எதிர்வினையாற்ற வேண்டும். “தமிழத்தின் காவிரி நீர் உரிமைக்காக, கர்நாடக காங்கிரஸ் அரசை, ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து போராட முன்வராத அனைவரும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என்று களம்காண வேண்டும்.
இயற்கை விதிகளின் அடிப்படையிலும்; சர்வதேச நதிநீர் பங்கீடு விதிகளின் அடிப்படையிலும்; காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு ஒரு நூற்றாண்டாக நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (CWRC) தீர்ப்புகள், தீர்வுகள் அடிப்படையில் காவிரியின் மீதான தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்பட வேண்டும்.
இந்த காவிரி சிக்கலை வைத்துக்கொண்டு இரண்டு தேசிய இனங்களுக்குள் நிரந்தரமாக முரண்பாட்டை உருவாக்குகின்ற இந்திய ஒன்றிய அரசின் சதித்தனங்கள் முறியடிக்கப்பட வேண்டும்.
கர்நாடகாவிற்கு நிர்ப்பந்தம் கொடுக்கின்ற வகையில் நெய்வேலி மின்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் நிறுத்தி நிர்பந்திக்க வேண்டும். பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட இந்திய ஒன்றியத்தில் தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கின்ற, தேசிய இனங்களுக்குள் உண்மையான ஒற்றுமையை உருவாக்க வழிவகுகின்ற ஜனநாயகக் கூட்டரசு அமைவதற்கு போராடுவோம்!
கரிகாலன்
புதிய ஜனநாயகம்
(மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)
2026 ஜூலை இதழ்






