முந்தைய பகுதி: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி யாருக்கானது? எதார்த்தத்தை முன் வைக்கும் கள ஆய்வு முடிவுகள்!
பகுதி – 2
6. குறைந்தபட்ச ஊதியம் என வரையறுத்துள்ளதைதருகிறார்களா?
58 சதவீதம் பேர் ஆம் என்றனர். 42 சதவீதம் பேர் இல்லைஎன்றனர்.
அதாவது கல்லூரியில் இருந்து நேரடியாக வேலைக்கு எடுக்கும் பொழுது கார்ப்பரேட் நிறுவனம் அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை தந்து விடுகிறது. அதே நேரம் கார்ப்பரேட்டுகளிடமிருந்து வேலை உத்தரவுகளை (ஜாப் ஆர்டர்களை) வாங்கி உற்பத்தியில் ஈடுபடும் சிறு நிறுவனங்கள் அப்படி குறைந்தபட்ச ஊதியத்தை தருவது இல்லை. இங்கு தொழிலாளர் நல சட்டம் எதுவும் செயல்பாட்டில் இல்லை.
7.உங்களுக்கு தரப்படும் சம்பளம் போதுமானதாக உள்ளதா?
ஆம் என்று 32 சதவீதம் பேரும், இல்லை என்று 68 சதவீதம் பேரும் சொல்லி உள்ளனர்.
அதாவது பெரும்பாலான தொழிலாளர்கள் தமது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்து வேண்டா வெறுப்பாகத்தான் பணிக்கு செல்கின்றனர். வேறு வழியில்லை என்பதால் தான் இந்த வேலையில் நீடிக்கின்றனர். குடும்பத்தின் கடனை, கல்விக்காக வாங்கிய கடனை அடைத்தாக வேண்டுமே என்ற நிர்ப்பந்தத்தில் இருப்பதால்தான் ஏதோ ஒரு வகையில் வேலையை தொடர்கிறார்கள்.
8. தற்போது குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி தரக்கோறி தொழிலாளர்கள் சில மாநிலங்களில் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த செய்தியை கேள்விப்பட்டீர்களா?
ஆம் என்று 39 சதவீதம் பேர் தெரிவித்தனர். இல்லை என்று 61% பதில் தந்தனர்.
தனது வாழ்நிலையோடு தொடர்புடைய செய்திகளை கூட தெரிந்து கொள்ளாதவர்களாகத்தான் இளம் தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். அவர்களின் கைகளில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் இருக்கின்றனதான். இணையதள வசதியும் இருக்கிறதுதான். ஆனால் அவர்களைப் பற்றி, அவர்களின் வர்க்கத்தின் நலன்களைப் பற்றிய எந்த தகவலும் அவர்களுக்கு எட்டுவதில்லை. அவர்களின் ஓய்வு நேரமும் கூட கார்ப்பரேட்டுகள் ஏவி வரும் விளையாட்டுக்களால் (கேம்களால்) பறிக்கப்பட்டு வருகிறது.
9. விலைவாசி உயர்வுக்கு ஏற்றபடி சம்பளமும் கட்டாயம் ஏற்றப்பட வேண்டுமா?
21% பேர் இல்லை என்றனர். 79 சதவீதம் பேர் ஆம் ஏற்றப்பட வேண்டும் என்றனர்.
அதாவது தாங்கள் வாங்கும் சம்பளம் தனது தேவைக்கும், தனது குடும்பத்தின் தேவைக்கும், தனது உழைப்பிற்கு பொருத்தமானதாகவும் இல்லை என்கின்றனர். கண்ணை மூடிக்கொண்டு அந்நிய முதலீடுகளை, தொழில்துறை வளர்ச்சியை, ஜிடிபி யின் பெருக்கத்தைக் கொண்டாடும் “படித்த அறிவாளிகள்” இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
10. குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் ரூபாய் மாதம் தோறும் தரப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் போராடுவது தெரியுமா?
56 சதவீதம் பேர் தெரியும் என்றனர். 44 சதவீதம் பேர் தெரியாது என்றனர்.
தெரியக்கூடாது என்பதில் கார்ப்பரேட்டுகளும், கார்ப்பரேட்டுகளின் அடியார்களாக அவதாரம் எடுத்துள்ள காண்ட்ராக்ட் முதலாளிகளும் தெளிவாகவே இருக்கின்றனர். இவர்கள் யாருடனும் தொடர்பு கொண்டு விடக்கூடாது என்பதற்காக இவர்களை பராமரிக்க தனி நகரங்களை உருவாக்கியுள்ளனர். இவர்களே பல மாடி கட்டடங்களைக் கட்டி பல நூறு அறைகளை தொழிலாளர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இவர்களே பெரும்பாலும் உணவகங்களையும் நடத்துகின்றனர்.
தெருக்களிலும் வீடுகளிலும் அறைகளுக்குள்ளும் கூட சிசிடிவி கேமராக்களையும், என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்கக் கூடிய மைக்குகளையும் வைபையுடன் இணைத்து பொருத்தியுள்ளனர். 24 மணி நேரமும் கண்காணிக்கிறார்கள். அதனால் இந்த தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் அணுகுவது அவ்வளவு எளிதானதாக இல்லை. களஆய்வுக்கு சென்றவர்கள் கூட இதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான், அதாவது சிகப்பு சட்டையுடன் செல்லாமல், கொடியுடன் செல்லாமல், சாதாரண தொழிலாளிகளை போல அணுகித்தான் ஆய்வையே நடத்தி முடிக்க வேண்டியிருந்தது.
11. நீங்கள் செய்யும் வேலைக்கும், தற்போதைய விலைவாசிக்கும் பொருத்தமாக எவ்வளவு சம்பளத்தை கேட்பீர்கள்?
25 ஆயிரம் ரூபாய் வரை என்றவர்கள் 27%. 35 ஆயிரம் ரூபாய் வரை என்றவர்கள் 38 சதவீதம் பேர்.
சுமார் 60 சதவீதம் பேர் 35 ஆயிரம் போதும் என்கின்றனர். இது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் ஊதியங்களுடன் ஒப்பிட்டால் மிகவும் சொற்பமான தொகை தான். உலக தரத்திலான உற்பத்தி; உலக சந்தைக்கான உற்பத்தி; ஆனால் கூலி மட்டும் உள்ளூர் கொத்தடிமைக்கு பொருந்தக் கூடிய ஒன்றே. பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைக்கு மேல் சலுகைகளாக அள்ளிவிடும் ‘நம்’ ஆட்சியாளர்களை பெருமைப்படுவதா? நாம் அவர்களை போற்றி புகழ வேண்டுமா? அல்லது முகத்தில் காரி உமிழ வேண்டுமா?
12. எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு செல்கிறீர்கள்?
மாதம் ஒருமுறை என்றவர்கள் 43 சதவீதம் பேர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்றவர்கள் 28% பேர். ஐந்து மாதங்களுக்கு ஒரு முறை என்றவர்கள் 28% பேர்.
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து தங்கி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இப்படி மாதம் ஒரு முறையோ, 3 மாதத்துக்கு ஒரு முறையோ, 5 மாசத்துக்கு ஒரு முறையோ ஊருக்கு செல்கின்றனர். ஆனால் வட மாநில தொழிலாளர்கள் அடிக்கடி ஊருக்குச் செல்வதில்லை. குறிப்பாக மிகவும் வறுமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் ஆண்டு கணக்கில் ஊருக்கே செல்லாமல் இங்கு வேலை செய்து வருவதையும் பார்க்க முடிந்தது.
13. திருவிழா, பண்டிகைகளுக்கு ஊருக்கு செல்கிறீர்களா?
68 சதவீதம் பேர் ஆம் என்றனர். 32 சதவீதம் பேர் இல்லை என்றனர்.
திருவிழா அல்லது பண்டிகைகளுக்கு ஊருக்கு செல்லும் பொழுது ஊரில் உள்ள அனைவரும் வீட்டில் இருப்பர். தனது நண்பர்களையோ, உறவினர்களையோ ஒரே நேரத்தில் பார்க்கவும் பேசி மகிழவும் முடியும். இதெல்லாம் தெரிந்தும் அப்படிப்பட்ட வாய்ப்பை தவற விடுகிறார்கள் என்றால், அவர்களின் வாழ்நிலை எத்தகையதாக மாற்றப்பட்டுள்ளது? திருவிழா காலங்களில் பஸ்ஸையோ ரயிலையோ பிடித்துச் சென்று வருவது என்பது நரக வேதனை என்பது வேறு விஷயம். ஆனாலும் அடித்துப் பிடித்து படிக்கட்டுகளில் தொங்கிய படியோ, கழிவறைக்குள் நின்றபடியே கூட ஊருக்கு செல்வதை நாம் பார்க்கவே முடிகிறது.
14. இந்த ஊர், இங்குள்ள கம்பெனிகள் இந்த வேலை உங்களுக்கு பிடித்துள்ளதா?
32 சதவீதம் பேர் ஆம் என்றனர். 68% பேர் எங்களுக்கு பிடிக்கவில்லை என்றனர்.
முதுகை ஒடிக்கும் வேலை; புறாக் கூண்டு போல மேன்சன்கள்; காற்றோட்டமே இல்லாத புழுங்கும் அறைகள்; வேலைக்குச் சென்று வந்த களைப்பு இருந்தாலும் கூட ஹோட்டலில் சாப்பிட்டால் வீட்டிற்கு காசு அனுப்ப முடியாது என்று கூட்டாக சேர்ந்து சமைத்து சாப்பிடும் வடமாநிலத்தவர்கள். இப்படி ஒரு நரக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், எப்படி இந்த ஊரையும் கம்பெனிகளையும் பிடிக்கும்?
15. குடும்பமாக இங்கேயே நிரந்தரமாக தங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
37% பேர் ஆம் என்றனர். 63% பேர் இல்லை ஊருக்கு சென்று விடுவோம் என்றனர்.
இளைஞர்கள் உடல் உழைப்பிற்கோ, மூளை உழைப்புக்கோ தயங்குபவர்கள் அல்ல; சோம்பேறிகள் அல்ல. அவர்கள் உழைத்து வாழவே விரும்புகின்றனர். எனினும், அவர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காததால் தான், படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால்தான் மன வருத்தத்திலும், அல்லது விரக்தியுடனும்தான் தனது படிப்புக்கு பொருந்தாத, கிடைத்த வேலையை செய்கின்றனர். அந்த வகையில் கொத்தடிமை கூடாரங்களாக, நவீன தொழில் பண்ணைகளாக இயங்கி வரும் இத்தகைய தொழில் பிராந்தியங்களில் வாழ்வதற்கு பெரும்பான்மையினருக்கு விருப்பமே இல்லை.
16. கான்ட்ராக்ட் எனும் ஒப்பந்த முறை வேலை உங்களுக்கு உதவியாக உள்ளதா?
ஆம் என்று 27 சதவீதம் பேர் தெரிவித்தனர். இல்லை என்று 73 சதவீதம் பேர் பதில் தந்தனர்.
பின்தங்கியுள்ள மாநிலங்களையோ மாவட்டங்களையோ தேடிப் பிடித்துச் சென்று, அங்கு இருக்கும் இளைஞர்களை வலை வீசி பிடிக்கின்றனர். உனக்கு நான் மாத சம்பளமாக 12,000 வாங்கித் தருகிறேன்; 15,000 வாங்கித் தருகிறேன் என்று அவர்கள் வாழ்க்கையில் ஓர் ஒளியை பாய்ச்சுபவர்களாகவே காண்ட்ராக்ட் முதலாளிகள் திகழ்கின்றனர். அப்படி முதல் முறையாக தனது குக் கிராமத்திலிருந்து தொழில் நகரங்களுக்குள் கால் வைப்பதற்கு உதவும் ஒப்பந்ததாரர்களை தமக்கு உதவுபவர்களாகத்தான் முதலில் பார்க்கின்றனர்.
ஆனால் இங்கு வந்த பின்னர், தனது உழைப்பை மாதம்தோறும் வருடம் தோறும் எப்படி இத்தகைய காண்டாக்ட் முதலாளிகள் உறிஞ்சி கொழுக்கின்றனர் என்பதை பார்க்கும் பொழுது, உண்மை புரியும் பொழுது, அவர்கள் மீது கோபம் வருகிறது. ஆனாலும் எதிர்த்துக் கேட்க முடியாது என்ற எதார்த்தம் அவர்களை கட்டுப்படுத்துகிறது.
17. தற்போதைய உங்களின் வேலை நிலைமையானது போதுமான கூலியை தராமல் சுரண்டப்படுவதாக உள்ளதா?
ஆம் என்று 57 சதவீதம் பேரும், இல்லை என்று 43 சதவீதம் பேரும் பதில் தந்தனர்.
அதாவது தொழிலாளர்களிடம் வர்க்க கோபம் கனன்று கொண்டு தான் இருக்கிறது. குடும்பத்தின் நிலையை கருதியோ, வேறு வழியில்லை என்ற அவநம்பிக்கையாலுமோதான் சகித்துக் கொண்டு வேலை செய்கின்றனர்.
18.போனஸ் என்று ஏதாவது தருகிறார்களா?
48 சதவீதம் பேர் ஆம் என்றனர். 52 சதவீதம் பேர் இல்லை என்றனர்.
போனஸ் என்பது தனது உழைப்பில் இருந்து எடுத்து வைக்கப்பட்ட ஒன்று. லாபமாக கார்ப்பரேட்டுகள் குவித்து வைத்துக் கொண்டதிலிருந்து தமக்குரிய பங்கில் ஒரு சிறு தொகையை மீண்டும் பெறுவது தான் போனஸ். அப்படி குறைந்தபட்ச தொகையை வருடத்திற்கு ஒரு முறையோ, இருமுறையோ தருவதைக் கூட இன்றைய தொழில் சாம்ராஜ்யங்கள் மறுக்கின்றன.
அரசு ஊழியர்களுக்கு, அதிகாரிகளுக்கு, குறிப்பாக ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு போனஸ் எதுவும் தரப்படுவதில்லை. ஏனென்றால் அவர்கள் லட்சங்களை தொடும் சம்பளங்களை மாதம்தோறும் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் இங்கு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களோ கடும் உழைப்பை தந்துவிட்டு 14,000, 15,000 என்று அற்ப கூலிகளை தான் வாங்குகின்றனர். இவர்களுக்கு போனசும் கிடையாது என்பது எவ்வளவு பெரிய கொடுமை.
19. போனஸ் என்று அதிகபட்சமாக எவ்வளவு தந்தார்கள்?
15 ஆயிரம் ரூபாய்க்குள் என்றவர்கள் 30% பேர். 20,000 வரை என்றவர்கள் 12% பேர். முப்பதாயிரம் வரை என்றவர்கள் 15% பேர்.
கார்ப்பரேட் முதலாளிகள் ஒரு நாளில், தனது ஒரு வேளை உணவுக்கு செலவிடும் தொகையைக் கூட ஒரு தொழிலாளிக்கு ஓராண்டுக்கான போனஸ் ஆக தர முன் வரவில்லை. மேட்டுக்குடியினரின் செல்லப்பிராணிகளுக்கு செய்யும் செலவை விடவும் மிக மிக மலிவானதாகத்தான் தொழிலாளர்களின் தேவைகளுக்கு ஒதுக்குகின்றனர்.
இதுதான் தற்போதைய ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் படப்பை உள்ளிட்ட பகுதிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கள எதார்த்தமாக உள்ளது. சுமார் 100 தொழிலாளர்களை சந்தித்து அவர்களிடமிருந்து பெறப்பட்ட பதில்களையே தொகுத்து தந்துள்ளோம். இந்த எதார்த்தம் ஓசூருக்கும், திருப்பூர், கோவைக்கும்கூடப் பொருந்தும்.
(ஆய்வுக் குழு உதவியுடன்)
- இளமாறன்







