நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தங்கள் போராட்டத்தின் கவன ஈர்ப்பு நிகழ்வாக நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணியாகச் செல்ல இருந்தனர். கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடந்து வருகின்ற அவர்களின் போராட்டம் ஜந்தர் மந்தருக்குள் முடங்கிவிடும் என்றும், மைய நீரோட்ட ஊடகங்களில் செய்தியை கொண்டு வராமல் அமுக்கி விட்டால் வெளியில் தெரியாது என்றும் பாசிச பாஜக கனவு கண்டு கொண்டிருந்தது.
நீட் தேர்வை ரத்து செய் என்ற கோரிக்கையை எழுப்பி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றிய திமுக இந்த போராட்டத்தை நேரடியாக ஆதரிக்காமல் பாசிச பாஜகவின் மனம் கோணாமல் நடந்து கொண்டது.
லடாக் பகுதியில் சமூக செயல்பாட்டாளரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி 20 நாட்கள் ஆன பிறகும், அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு கொண்டிருந்த போதிலும் கூட பாசிச பாஜகவிற்கு எதிராக செயல்படுகிறோம் என்று சொல்லிக் கொள்கின்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வாயையும், சர்வ உறுப்புகளையும் மூடிக் கொண்டிருந்தனர்.
உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக்குக்கு உடல்நிலை மிகவும் பாதிப்படைந்த நிலையில் அவரது கோரிக்கையை பற்றி கடுகளவும் கண்டுகொள்ளாத பாசிச பாஜக, ‘ ஜனநாயகத்தை வெள்ளை திரையின்’ மூலம் மூடி மறைத்து அவரை கைது செய்தது கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தது.
இதனால் மாணவர்களின் போராட்டம் நாடாளுமன்றத்தை முற்றுகையிட போவதாக முன்வைத்து தீவிரமடைந்தது. வேறு வழி இன்றி அவர்களின் கோரிக்கைளுக்கும், பேரணிக்கும் எதிர்க்கட்சிகள் ஆதரவாக இருந்தன. இதன் காரணமாகவே நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, நாடாளுமன்றத்துக்கு உள்ளே எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை எதிர்கொள்வதைவிட, நாடாளுமன்றத்துக்கு வெளியே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தை எதிர்கொள்வது ஆர் எஸ் எஸ் பாஜக கும்பலுக்கு பெரிய சவாலாக இருந்தது.
எனவே, இந்தப் போராட்டத்தை நசுக்குவதற்கு டெல்லி போலீஸ் மட்டுமின்றி மத்திய துணை ராணுவப்படை, பாசிச பாஜகவின் குண்டர் படையினரான ஆர்எஸ்எஸ் பஜ்ரங்கள் போன்ற அமைப்பை சார்ந்தவர்கள் நீல நிற யூனிபார்ம் உடன் இறக்கி விடப்பட்டனர்.
“நாங்கள் மனது வைத்தால் இரண்டு நாளில் ஒரு ராணுவத்தை கட்டியமைப்போம்” என்று ஆர்எஸ்எஸ் பாசிச குண்டர் படையின் தலைவனான மோகன் பகவத் கூறியதை இதனுடன் இணைத்து பார்க்கும் போது தான் உண்மை புரியும்.
படிக்க:
🔴 ஜனநாயகன் படத்துக்கு அனுமதி! நீட்டுக்கு எதிரான போராட்டத்துக்குத் தடை!
🔴 நீட் எனும் ஆட்கொல்லித் தேர்வை ஒழித்துக் கட்டுவோம்!
போலீஸ் ராணுவத்துடன் இணைந்து ஆர்எஸ்எஸ் குண்டர் படையினர் சீருடை மற்றும் சீருடை அணியாமல் நடத்திய தாக்குதல் காரணமாக டெல்லி மிகப்பெரும் கலவரக் காடாக மாறியது. தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டத்தை தான் இவ்வாறு ஒடுக்குவார்கள்; நமது மீது இவ்வாறெல்லாம் அடக்குமுறை நிகழாது என்று கருதிக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தினர் பலரும் நாடு முழுவதும் திகைத்துக் கொண்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகி கொண்டுள்ளது.
இந்தியாவில் இன்னமும் இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் முன்வைக்கின்ற அடிப்படையில் போலி ஜனநாயக ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது என்று கருதிக் கொண்டுள்ள அல்லது அதன் மீது சத்தியம் செய்து கொண்டு உலா வருகின்ற ‘ பாசிச எதிர்ப்பு போராளிகளின்’ உறக்கத்தை டெல்லியில் நடந்த போலீசு, ராணுவம் ஆர்எஸ்எஸ் குண்டர் படை ஆகிய முக்கூட்டு இணைந்து நடத்திய தாக்குதல் கலைத்துள்ளது.
ஆர்எஸ்எஸ் பாஜக அதிகாரத்திற்கு வந்த பிறகு பாராளுமன்ற, சட்டமன்ற நடைமுறைகளில் நிலவி வந்த போலி ஜனநாயக ஆட்சி வடிவமானது படிப்படியாக பாசிச உள்ளடக்கம் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது என்பதால் போலீஸ், ராணுவம், நீதிமன்றம், அதிகார வர்க்கம் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டமைப்புகளும் ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர் படையினரால் நிரப்பப்பட்டுள்ளனர் என்பதும் அவை இயல்பாகவே பார்ப்பன பாசிச மதவெறி தன்மை கொண்டதாக இயங்குகிறது என்பதும் தொடர்ச்சியாக அம்பலப்பட்டு கொண்டுள்ளது.
இருந்த போதிலும் எமர்ஜென்சி காலத்தில் வந்ததைப் போல ஒரே நாளில் பாசிச அடக்குமுறை வந்தால் தான் இந்தியாவில் பாசிச ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக ஏற்றுக் கொள்வோம் என்று, ‘ பாசிச எதிர்ப்பு அணியினர்’ தொடர்ச்சியாக ஒரே பாட்டை பாடி கொண்டுள்ளனர்.
சிபிஐ, சிபிஎம், சிபிஐ எம்.எல் போன்ற இடது போர்வையில் உலவுகின்ற நாடாளுமன்ற இடது சாரியினர்., இந்தியாவில் பாசிசம் இல்லை, நவ பாசிசம் என்றெல்லாம் பாசிசத்திற்கு பல்வேறு விளக்கங்களை கொடுத்து வருவதுடன், தேர்தல் அரசியலின் மூலமாகவே, பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலமாகவே பாசிசத்தை தூக்கி எறிந்து விட முடியும் என்று அணிகளையும் நம்ப வைத்து மக்களையும் ஏய்த்து கொண்டுள்ளனர். .
கம்யூனிச போர்வையில் உலவுகின்ற பல வண்ண திருத்தல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கின்ற வகையில் ஆளும் வர்க்கத்தின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக அரங்கேரி கொண்டுள்ளது. சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகம், போலி ஜனநாயகம் போன்ற பம்மாத்துகளை உதறி எறிந்து அப்பட்டமான, முழுமையான பாசிச சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியை நோக்கி இந்திய ஒன்றியமானது சென்று கொண்டிருப்பதை தான் சமீபத்திய டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதல் நிரூபித்துள்ளது.
படிக்க:
🔴 நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா?
🔴 கரப்பான் பூச்சிகளின் நாடாளுமன்ற முற்றுகையும், சோனம் வாங்சுக்கின் போராட்டமும்!
அரசு இயந்திரத்தின் மூலம் போராடுகின்றவர்களின் நசுக்குவது, முடக்குவது என்பதை தாண்டி சொந்த வகையில் சித்தாந்த ரீதியாக அணி திரட்டப்பட்டுள்ள, பயிற்றுவிக்கப்பட்டுள்ள பாசிச குண்டர் படையை வைத்து கூட்டங்களை கலைப்பது; தாக்குதல் நடத்துவது என்ற கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளனர் என்பது தான் டெல்லி மாணவர் போராட்டம் உணர்த்தியுள்ள உண்மையாகும்.
கரப்பான் பூச்சி கட்சி தானே என்ன செய்து விடப் போகிறார்கள்?, ஜந்தர் மந்தருக்குள் அடக்கி விட முடியும் என்றெல்லாம் திமிர்த்தனத்துடன் நடந்து கொண்ட; ஏற்கனவே விவசாயிகளில் போராட்டம் ஓராண்டுக்கு மேல் நீடித்த காலத்தில் கூட நேரடியாக விவசாயிகளை சந்தித்து பேசாத பாசிச வெறியரான திருவாளர் மோடி உள்ளிட்டவர்கள் போராட்டம் துவங்கியவுடன் நாடாளுமன்றத்தில் இருந்து பின்வாசல் வழியாக தப்பி ஓடினர்.
இந்த போராட்டம் காரணமாக மத்திய டெல்லியின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி மெட்ரோ நிர்வாகம் இன்று 5 ரயில் நிலையங்களை மூடியது. இதனால் டெல்லியின் பல மெட்ரோ நிலையங்களில் குழப்பமான சூழல் நிலவியதால், ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டதோடு, ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்டப் பகுதிகளில் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது.
ஆயுத பலத்துடனும், போலீசு, ராணுவத்தின் லத்தி கம்புகளுடன் தற்காலிகமாக போராட்டத்தை நசுக்குவதில் வெற்றி பெற்றுள்ளார் பாசிச மோடி. ஆனால் சொந்த கட்சி அணிகளிடமும், இந்திய ஒன்றியத்தின் மாணவர்களிடமும், பாசிச எதிர்ப்பு சக்திகளிடமும் தொடர்ந்து அம்பலப்பட்டு வருகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர் படையினர் மக்கள் எழுச்சியின் மூலம் வீதியில் அடித்து விரட்டப்படுவார்கள் என்பதின் துவக்கம் தான் டெல்லி மாணவர்களின் வீரம் சேர்ந்த போராட்டம்.
தன்னெழுச்சியாக இவ்வாறு நடக்கின்ற போராட்டங்களில் பின்னணி என்ன? அவர்களின் வர்க்கத்தன்மை என்ன என்பதை ஆய்வு செய்து அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு பாசிச எதிர்ப்பு ஜனநாயக கூட்டரசு அமைக்கின்ற திசைவழியில் இவர்களையும் ஒன்றிணைக்க வேண்டியது காலத்தின் தேவையாக மாறி உள்ளது.
- மருது பாண்டியன்
புதிய ஜனநாயம் தினசரி








டெல்லி CJP போராட்டம்: போலீஸ் இராணுவத்துடன் RSS குண்டர் படையும்….எனத் தலைப்பு மாற்றப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.