அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்றைக்கும் வெளியுலக தொடர்பு இல்லாத பழங்குடி மக்கள் சிலர் வசித்து வருகின்றனர். கிரேட் நிக்கோபார் தீவில் ஷோம்பென் மற்றும் நிக்கோபரிஸ் ஆகிய இரண்டு பழங்குடிப் பிரிவினர் வசித்து வருகின்றனர். அத்தீவிற்கே உரித்தான ஏராளமான தாவர மற்றும் விலங்கினங்கள் உள்ள இத்தீவின் பெரும் பகுதி மழைக் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இவை ஜாவா மற்றும் சுமத்ராவை உள்ளடக்கிய தென்கிழக்கு ஆசியா வரை பரவியுள்ள பல்லுயிர் பெருக்கப் பகுதியின் ஒரு அங்கமாகத் திகழ்கின்றன.
இப்படி இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீவில் சுமார் 81,000 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அங்கு வாழும் பழங்குடி மக்களிடம் எவ்வித அனுமதியையும் பெறாமல் அதிகாரத்துவப் போக்குடன், மூர்க்கத்தனமாக அரசு இயந்திரம் அத்தீவில் இறங்கப் போகிறது.
கார்ப்பரேட்டுகளுக்கான சுரண்டல் திட்டம்!
அமித்ஷாவின் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் முன்னெடுப்பில், இத்திட்டத்தின் கீழ் ஒரு சர்வதேச விமான நிலையம், எரிவாயு மற்றும் சூரிய மின்சக்தி ஆலைகள், புதிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் உயர்தர சுற்றுலா வசதிகள் ஆகியவை அடங்கியுள்ளன. மேலும் ஒரு சர்வதேச சொகுசு கப்பல் முனையமும், சரக்கு மாற்று முனையமும்(Transshipment terminal) அமைக்கப்பட உள்ளன.
இத்திட்டங்களை நிறைவேற்ற அதானி, JSW, மேகா இன்ஜினியரிங் போன்ற நிறுவனங்கள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றன. ஏற்கனவே கடந்த 2004 ஆம் ஆண்டில் பேரழிவுகரமான இயற்கையின் சுனாமித் தாக்குதலால் நிலைகுலைந்து, இன்னும் முழுமையாக மீளாத அந்தத் தீவு அடுத்த கட்டமாக கார்ப்பரேட்டுகளின் பேரழிவுத் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இரகசியமாக, அதேசமயம் அடாவடியாக நிறைவேற்றப் போகிற திட்டங்கள்!
இந்தத் திட்டங்கள் குறித்து வெளிப்படையாக எதையும் அறிவிக்காமல், பூடகமாக நிறைவேற்றத் துடிக்கிறது ஒன்றிய அரசு. எனவேதான் இத்திட்டம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுப்பதுடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்படும் தகவல்களையும் வழங்க மறுக்கிறது. இவர்களின் நயவஞ்சகம் இதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதிக்கும் என்பதால் தகவல்கள் மறுக்கப்படுவதாக சட்டப் பிரிவு 8 (1) a- ஐ சுட்டிக்காட்டுகிறது ஒன்றிய அரசு. உள்ளூர் நிர்வாகமும் இது குறித்து மௌனம் சாதிக்கிறது. கிரேட் நிக்கோபார் தீவின் நிர்வாகத் தலைவரோ, வனத்துறை அதிகாரிகளோ இது பற்றி பதில் அளிக்க விரும்புவதில்லை.
இப்படி இந்தத் திட்டங்களை மிகவும் ரகசியமாக, அதேசமயம் அடாவடியாக நிறைவேற்றப் போகின்றனர். எந்தெந்தப் பகுதிகள் கையகப்படுத்தப் படப்போகின்றன என்பது குறித்தோ, அங்கு வாழும் சமூகங்களின் மீது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றியோ எந்த மதிப்பீட்டையும் இதுவரை இவர்கள் செய்யவில்லை. பழங்குடியினரின் பகுதிகளை வரைபடமாக்க எந்த ஒரு முயற்சியையும் இதுவரை இந்திய அரசு எடுக்கவில்லை.
20 ஆண்டுகளுக்கு முன்பு தனிநபரான ஆய்வாளர் மனிஷ் சாண்டி என்பவரால் உருவாக்கப்பட்ட வரைபடம் தான் பயன்பாட்டில் உள்ளது. வரவிருக்கும் இந்த அழிவுத் திட்டத்திற்காக மார்ச் 2021-ல் தயாரிக்கப்பட்ட வரைவறிக்கையில், பழங்குடியினரின் பகுதிகளும், திட்டமிடப் பட்டுள்ள பகுதிகளும் இந்த வரைபடத்தின் படி ஒத்துப் போகின்றன.
பூர்வகுடிகளை பிடுங்கி எறியப் போகிறார்கள்!
இந்தத் திட்டம் மாபெரும் பேரழிவை ஏற்படுத்தப் போகிறது என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தீவின் நிர்வாகம் தனது ஊழியர்கள், வெளியாட்கள் மற்றும் பத்திரிகையாளர்களை கழுகுப் பார்வை கொண்டு கண்காணித்து வருகிறது. பழங்குடியினரின் குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்ல பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. சரக்கு மாற்று முனையம் அமையவிருக்கும் இடத்துக்கும் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
பழங்குடி மக்களான ஷோம்பென்கள் தீவின் அடர்ந்த காடுகளில் வேட்டையாடி உணவு சேகரிக்கும் சமூகத்தினர் ஆவர். அவர்கள் பெரும்பாலும் தீவில் உள்ள மற்ற மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். ஆனால் நிக்கோபாரிஸ் பழங்குடியினர் ஓரிடத்தில் குடியேறி வசிக்கின்றனர். வேட்டையாடுதல் தவிர மீன்பிடித்தல் மற்றும் தினக்கூலி வேலைகளையும் செய்யத் தொடங்கியுள்ளனர்.
“வரவிருக்கும் இத்திட்டம் தங்கள் நிலங்களுடனும், காடுகளுடனும் நெருங்கிய வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள இவ்விரு பழங்குடியினரை இடம்பெயரச் செய்யும்” என்கிறார் மனிஷ் சாண்டி தயாரித்த வரைபடத்தை தனது அலுவலக சுவரில் ஒட்டி வைத்திருந்த கிரேட் நிக்கோபார் மற்றும் லிட்டில் நிக்கோபார் பழங்குடியின சபைகளின் தலைவரான பர்னபாஸ் மஞ்சு. மேலும் “திட்டங்கள் வரும்போது இந்த கிராமங்கள் இல்லாமல் போகும்” என்று வரைபடத்தில் சில பகுதிகளை குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
எங்கள் காடுகளைத் தொடாதீர்கள்!
இந்தத் திட்டத்திற்கான அறிக்கையை நிதி ஆயோக்கால் நியமிக்கப்பட்ட ஆலோசனை நிறுவனமான AECOM தயாரித்துள்ளது. இதில் பழங்குடியினர் பகுதிகளும் கையகப்படுத்தப்படும் என்ற உண்மையை மறைத்து, சுற்றுச்சூழல் அனுமதிக்காக சில பகுதிகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் சுரண்டல் திட்டத்திற்கு இத்தீவில் 166 சதுர கிலோமீட்டர் நிலம் கையகப்படுத்தப்படப் போகிறது. இதில் 130 ச.கி. மீட்டர் வன நிலமும், பழங்குடியினர் காப்பகத்துக்காக அதில் ஒதுக்கப்பட்ட 84 ச.கி மீட்டர் பகுதியும் அடங்கும். இந்த நிலப் பகுதிகளில் பழங்குடி மக்களின் குடியிருப்புகள் மற்றும் உணவு சேகரிக்கும் இடங்களும் உள்ளன. அதோடு பஞ்சாப், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து குடியேறியவர்கள் வசிக்கும் பகுதிகளும் அடங்கியுள்ளன. இப்படி அந்தத் தீவில் சுமார் 6,500 பேர் குடியேறியுள்ளனர்.
படிக்க:
♦ நிக்கோபார் காடுகளை அழித்து கார்ப்பரேட்டுகளுக்கு விருந்தளிக்கும் மோடி அரசு!
♦ காடு : குறுக்குவழியில் பறிக்கப்படும் காடுகள்!
இத்திட்டங்களால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து, சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் பழங்குடி சமூகங்களின் பொருளாதார, மொழி, கலாச்சார மற்றும் சமூக வாழ்க்கையை பாதுகாக்கும் வகையில் முடிந்தவரை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அதே போன்ற சூழலியல் மண்டலங்களில் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் இதைச் செயல்படுத்துவார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. சுற்றுலா வசதிகள் மற்றும் சரக்கு மாற்று முனையம் அமைப்பதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மேலும் அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த அறிக்கையில் தகவல் ஏதுமில்லை. அங்கு வசிப்பவர்கள் தங்களின் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டால் “எங்கே போவோம்?” என்று அச்சத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். “எங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க எங்கள் நிலம் எங்களுக்கு அவசியம்” என்று வலியுறுத்துகின்றனர். நிக்கோபரைச் சேர்ந்த மானுடவியலாளரான அன்ஸ்டிஸ் ஜஸ்டின், “தீவை மேம்படுத்துவதும் பாதுகாப்பை உறுதி செய்வதும் முக்கியம்தான். ஆனால் நீண்ட காலப் போக்கில் பழங்குடி மக்களுக்கு இந்த இடமே இருக்காது என்று தோன்றுகிறது” என்று தனது அச்சத்தை வெளிப்படுத்துகிறார்.
இன்றைய நிலையில் அந்தமான் தீவில் உள்ள பழங்குடி சமூகத்தினரான ஜராவாக்கள், அவர்களது நிலத்தின் பெரும் பகுதியை இழந்துள்ளனர். அவர்கள் சட்டவிரோத வேட்டை மற்றும் மரம் வெட்டுதலில் ஈடுபடுவதாகக் கூறி தடுக்கப்படுகின்றனர். அவர்களது பாரம்பரிய வாழ்க்கை முறையே இதனால் கேள்விக்குறியாகி, ஒரு சிறிய இடத்தில் முடக்கப்பட்டுள்ளனர். இதே நிலை அத்தீவுகளில் வாழும் மற்ற பழங்குடிகளுக்கும் ஏற்படப் போகிறது.
ஷோம்பென் பழங்குடி மக்கள், “எங்கள் குன்றுகளின் அருகே வராதீர்கள்; காடுகளை அழிக்க விரும்பினால், கடற்கரை ஓரமாக அதைச் செய்யுங்கள், எங்கள் காடுகளைத் தொடாதீர்கள்” என்கின்றனர். இந்தக் குரல்கள் எதையும் இந்திய ஒன்றிய அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை. கார்ப்பரேட் நலன் மட்டுமே முக்கியம் எனக்கருதும் அரசிடம் இதைத்தானே எதிர்பார்க்க முடியும். இதை வீழ்த்தி அமையும் ஜனநாயகக் கூட்டரசால்தான் ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடிகளின் வாழ்வைப் பாதுகாத்திட முடியும்.
குரு






